
பாளையங்கோட்டையில் உள்ள தூய சவேரியார் கல்லூரி... சிறிய அறையில் அன்றைய முதல்வர் பாக்யராஜ், துணை முதல்வர் அந்தோணி, நாட்டார் வழக்காற்றியல் துறைத் தலைவர் லுார்து, பேராசிரியர்கள் இராமசந்திரன் தனஞ்செயன், செல்வபெருமாள், எம்.டி. முத்துக்குமாரசாமி ஆகியோர் ஆர்வமுடன் காத்திருந்தனர். அமெரிக்காவின் ஃபோர்டு அறக்கட்டளையின் பிரதிநிதிகளுடன் சந்திப்பு அது. பேராசிரியர் லூர்து, தம் துறையின் கீழ் நாட்டார் வழக்காற்று மையத்தை ஆரம்பிப்பதற்கும், விரிவுபடுத்துவதற்குமான கோரிக்கைகளை போர்டு அறக்கட்டளையிடம் வைக்க இருந்தார். சற்று தாமதமாகவே ஃபோர்டு பிரதிநிதிகள் வந்து சேர்ந்தனர்.
அந்த ஆலோசனைக் கூட்டத்தின் முடிவில் நாட்டார் வழக்காற்று ஆய்வுக்களப்பணிக்கு ஆட்களை தேர்வு செய்து அவர்களுக்கு சம்பளம் கொடுப்பது, மூன்று சர்வதேசக் கருத்தரங்கு நடந்துவது, உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவது, தளவாடங்களை ஆவணப்படுத்துவது ஆகியவற்றுக்கு நான்கு கோடி நிதி தருவதாக ஒப்புக்கொண்டார்கள். இறுதியில் “ நூல் வாங்குவதற்கு ஏதாவது நிதி கிடையாதா”? என்று கொஞ்சம் சத்தமாக லுார்து கேட்டுவிட்டார். முதல்வர்கள் கலவர முகத்துடன் பார்த்தனர். அறக்கட்டளையினர் ”நூல் வாங்குவதற்கு நிதி கிடையாது” என்றனர் கறாராக. ஆனாலும் ”நாட்டார் வழக்காறு குறித்து ஆய்வு செய்வதற்கு நூல்கள் வேண்டாமா? தளவாடங்களை வைத்துகொண்டு நாங்கள் என்ன செய்வோம்? எங்களுக்கு நூல்கள் வாங்குவதற்கு கண்டிப்பாக பணம் தரவேண்டும்,” என அடம்பிடித்தார் லுார்து. இறுதியில் நூலகம் உருவாக்குவதற்கும் நிதி தருவதாக ஒப்புக்கொண்டனர் அந்த அறக்கட்டளையினர்.
இந்த சம்பவத்தை நினைவுபடுத்தினார் லுார்துவின் முன்னாள் மாணவரும் நாட்டார் வழக்காற்றியல் துறையில் பணியாற்றி ஓய்வுபெற்ற துறைத் தலைவருமான இராமச்சந்திரன். தென் தமிழகத்தில் முக்கியமான பழங்கால நூல்களை சேகரிப்பில் வைத்திருக்கும் நூலகம் இந்தக் கல்லூரியில் அமைந்த பின்னணி இதுதான்.
“ தற்போது புகழ்பெற்று விளங்கும் சவேரியார் கல்லூரி நாட்டார் வழக்காற்றியல் துறை தொடங்குவதற்கு முன்பே 1960 களில் அதற்கான சூழலை தென்தமிழகத்தில் உருவாக்கி அடிதளமிட்டவர் பண்பாட்டு ஆய்வாளர் நா.வானமாமலை. இவரது தாக்கத்தினால்தான் பேராசிரியர் லுார்துவுக்கு நாட்டார் துறையில் ஆர்வமே வந்தது என்றால் மிகையில்லை. ‘நாட்டார் வழக்காற்றியல் அறிமுகம்’ என்ற நூலை லுார்து முனைவர் பட்டம் பெறுவதற்கு முன்னரே தமிழ்துறையில் பணிபுரியும் போது எழுதியிருந்தார். இன்றும் நாட்டார் விசயங்களைஆய்வு செய்வதற்கும் அந்த நூல் கைவிளக்காக ஜொலிக்கிறது. லுார்து, முனைவர் பட்டம் பெற்று முதலில் தமிழ்த் துறையில் துறைத் தலைவராக வேலை பார்த்தார். பிறகு 1987-இல் நாட்டார் வழக்காற்றியல் துறை ஆய்வு மையம் மற்றும் நாட்டார் வழக்காற்றியல் துறை ஆரம்பிக்கும்போது துறைத்தலைவராகப் பணியில் சேர்ந்து 1996-இல் பணிஓய்வு பெற்றுவிட்டார்.
இந்த ஆய்வு மையத்திற்கு நூல்கள் வாங்குதற்கு நானும் அவரும் கடை கடையாக ஏறி இறங்கினோம். அக்காலகட்டத்தில் அவரது பார்வை திறன் சற்று மங்கிவிட்டது. எனவே அவரிடம் நூல்களின் தலைப்புகளைப் படித்துக் காட்டி வாங்கினோம். அதிகமான நூல்கள் வாங்கினால் கழிவு கொடுப்பார்கள்தானே. அந்தக் கழிவில் வரும் மீதிப் பணத்துக்கும் சேர்த்து புத்தகம் வாங்கிவிடுவார்.
இந்நூலகத்தில் நாட்டார் பாடல்கள், கதைகள் இவற்றை ஆய்வு செய்வதற்கு இலக்கிய நூல்கள், மானிடவியல், சமூகஅறிவியல், மனவியல், வரலாறு உட்பட்ட நூல்களையும் தனித்தனியாக அந்தந்த தலைப்பின் கீழ் பிரித்து வைத்திருக்கிறோம். ஆய்வு மாணவர்களுக்கு எல்லா புலங்களும் ஒருசேரக் கிடைக்க வழிவகை செய்துள்ளோம். நாட்டார் வழக்காற்றியலில் ஆய்வு செய்வதற்கு பல தலைப்புகளின் நூல்களை ஒருசேர படிப்பதற்கு ஏற்ற நூலகம் என்றால் தமிழ்நாட்டில் இதுமட்டும்தான்,” என்கிறார் இராமச்சந்திரன.
புகழ்பெற்ற எழுத்தாளர்கள், ஆய்வாளர்கள், மாணவர்கள் என பல்துறை சார்ந்தவர்கள், இந்த நூலகத்தைத் தொடர்ந்து பயன்படுத்தி வருவதாகவும் 20,000க்கும் மேற்பட்ட நூல்கள் இருப்பதாகவும் அவர் குறிப்பிடுகிறார்.
தற்போதைய துறைத்தலைவர் கார்மேகம், “ஞான அலாய்சியஸின் அயோத்திதாசர் தொகுப்புகளை இந்த நாட்டார் வழக்காற்றியல் ஆய்வு மையம் வெளியிட்ட பிறகுதான் தமிழ்நாட்டில் அயோத்திதாசரின் சிந்தனைகள் தமிழ்நாட்டில் பெரும்தாக்கத்தை ஏற்படுத்தின. மேலும் பண்பாட்டு வேர்களைத் தேடி, சடங்குகளும் சாமிகளும், மீனவர்கள் வாழ்க்கை சார்ந்த நூல்கள், யாழ்நூல்கள் முதலிய ஐம்பதுக்கும் மேற்பட்டவை இங்கு வெளியிடப்பட்டுள்ளன. இதுபோக சிறு சிறு நூல்களும் வெளியிட்டு வருகிறோம். சமீபத்தில் நாட்டார் துறைக்கு லுார்துவின் பங்களிப்பு குறித்தான நூல் வெளியிட்டுள்ளோம்,” எனக்கூறுகிறார்.பேராசிரியர் லூர்து மரணத்துக்குப் பின்னால் அவரது பெயரையே இந்த நூலகத்துக்கும் வைத்து மரியாதை செய்துள்ளனர்.
“பேராசிரியர் லூர்து ஓய்வு பெறும்போது தன்னுடைய நூல்கள் அனைத்தையும் நன்கொடையாக நூலகத்திற்கு வழங்கினார். அருட்தந்தை ஜெயபதி சில நூல்களை வழங்கினார். பண்பாட்டு அறிஞர் தொ.பரமசிவத்தின் கிட்டத்தட்ட1200 நூல்களை அவரது குடும்பத்தினர் வழங்கியுள்ளனர். அதேபோல என்னுடைய 700 நூல்களை நன்கொடையாக கொடுத்திருக்கிறேன்,’’ என்று சொல்லி புன்னகைத்தார் இராமச்சந்திரன். அதேபோல தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை அதிகாரி கழுகுமலை கணபதி குடும்பத்தினரும் 350 நூல்கள் கொடுக்கச் சம்மதித்துள்ளதாக துறைத்தலைவர் கார்மேகம் கூறினார். இன்னும் அதிகமான நூல்கள் வந்தால் வைப்பதற்கு இடமும் குறைவாகதான் உள்ளது. ஏதாவது செய்யவேண்டுமே என்று இருவரும் ஒரே அலைவரிசையில் யோசிப்பதும் புரிந்தது.
படங்கள்: வை.ராஜேஷ்