செல்வாம் தோழி
ஒல்வாங்கு நடந்தே.
[செல்வோம் தோழி,
இயன்ற அளவுக்கு நடந்து.]
- ஐயூர் முடவன், குறுந்தொகை.
‘நெஜமாவாப்பா?” என்றார் என் தாத்தா.
அவர் அப்படிக் கேட்டபிறகுதான் அது நிஜமாக இருப்பது சந்தேகத்துக்கு இடமே இல்லாத இயல்பான விஷயம் கிடையாது என்பது உறைத்தது. பாட்டி தெருமுனைக் கடையிலிருந்து வாங்கிவந்து எவர்சில்வர் டம்ளரில் ஊற்றித்தந்த டீயை இரண்டு கரங்களிலும் சிறு தூண் போலப் பற்றிக்கொண்டு நான் தாத்தாவின் சந்தேகத்தைப் பற்றி யோசித்தேன்.
“இப்பல்லாம் சில ஜனங்க வேல எதுவுமே இல்லன்னாலும் நடக்கணும்னே நடந்துபோயிட்டு சும்மா திரும்பி வீட்டுக்கு வருவங்களாமே? அப்படியா? நெஜமாவாப்பா?” என்ற அவருடைய கேள்வி ஒரு புதையல் பெட்டியா? பாம்புப் புற்றா? அல்லது செருப்புக்குத் தவமிருந்த என் பிஞ்சுக் கால்களின் காலத்துக்கு என்னை இழுத்துச் செல்லும் நினைவு நீர்ச்சுழலா?
நான் அப்போது ஹாங்காங்கிலிருந்து விடுமுறையில் சென்னைக்கு வந்திருந்தேன். சென்னைக்கு வரும்போதெல்லாம் தாத்தா பாட்டியை (அவர்கள் இருந்தவரை) போய்ப் பார்ப்பேன். பாட்டியின் மீன்குழம்பு சோறு சாப்பிட்டுவிட்டுப் பாயை விரித்துப் படுத்துத் தூங்கி சாயங்காலம் வீட்டுக்குத் திரும்பியதும் உண்டு. அப்படி ஒரு சந்திப்பில்தான் தாத்தா அதைக் கேட்டார்.
அதற்கு ஏறத்தாழ ஓர் ஆண்டுக்கு முன் ஒரு மருத்துவரும் இது தொடர்பாக ஒரு கேள்வி கேட்டார். என் தலைச்சுற்றல், மயக்கம், அடிக்கடிக் கீழே விழுவது போன்ற உணர்வு என்னும் பெரும் பட்டியலுடன் அவரைச் சந்தித்தபோது, “ஒரு நாளைக்கு எவ்வளவு நேரம் உடற்பயிற்சி செய்கிறீர்கள்?” என்று கேட்டார். நான் உடற்பயிற்சி எதுவும் தொடர்ந்து செய்வதில்லை என்று சொன்னதும், “ரியலி?” என்று கவலையும் ஆச்சரியமுமாய் நிமிர்ந்து பார்த்தார்.
என் வேலை, பணிச்சுமை, தூங்கும் நேரம் என்று விசாரித்தார். இந்தியத் துணைத் தூதரகத்தில் வணிகத் துறைப் பொறுப்பு. பல பில்லியன் டாலர்களில் இருதரப்பு வணிகம். குறைந்த நபர்களைக் கொண்ட அலுவலகம் என்பதால் மூழ்கடிக்கும் தொடர் வேலை அலைகள். பல வணிகக் கண்காட்சிகள். முதலீட்டுக்கான சந்திப்புகள். வணிகக் குழுக்களின் வருகை, அரசியல் தலைவர்களின் வருகை. வீடு, குடும்பம், வாசிப்பு...மருத்துவரின் வாய் இதற்கு மேல் பிளக்க முடியாத என்னும் நிலை வந்தபோது நிறுத்தினேன்.
அவர் நிதானமாக மெல்லிய குரலில் சொன்னார்: “நீங்கள் செய்து கொண்டிருப்பது ஒரு மெதுவான தற்கொலை. தினம்தினம் கொஞ்சம்கொஞ்சமாகச் செய்துகொண்டிருப்பதால் உங்களுக்குத் தெரியவில்லை. போக, மூளைக்கு உடற்பயிற்சி தான் உணவு. அதையும் பட்டினிபோட்டு வாட்டுகிறீர்கள்.” இன்னும் பல விஷயங்களை விளக்கினார். ஸ்டெதெஸ்கோப்பைக் கூட கையில் எடுக்கவில்லை. அன்று மாலை ஒரு நண்பருடன் ஹாங்காங்கின் ஜிம் ஒன்றில் சேர்ந்தேன்.
என் தாத்தாவின் கேள்விக்கு, “ஆமா தாத்தா, நெஜம் தான். நானும் ஜிம்மில் சேர்ந்திருக்கேன்,” என்று சொன்னால் போதுமா? என்று யோசித்தேன். அவர் கையில் இருக்கும் வரைபடம் (மேப்) அவருடைய உலகத்துக்கானது. என் கையில் இருப்பது வேறு படம்—வேறு ஓர் உலகத்தில் பயன்படுத்தவேண்டியது. வெவ்வேறு உலகங்கள் சிறு ஜன்னலைத் திறந்து ஒன்றையொன்று எட்டிப்பார்க்கும்போது ‘நெஜமாவா?’ என்றுதான் இருக்கும்.
நானும் தாத்தாவின் உலகத்திலிருந்து வந்தவன்தான். சின்னஞ்சிறு வயதில் பள்ளிக்கூடத்துக்குப் பல கிலோமீட்டர்கள் நடந்து, அரைநாள் லீவு விட்டால் கொளுத்தும் வெய்யிலில் பனைமர நிழலுக்குக் கெஞ்சும் வெற்றுக் கால்களில்தான் என் வரைபடமும் தயாரானது. கோடைவிடுமுறைகளில் கூடைக்கு இவ்வளவு என்று காட்டாமணக்கு, கருவேல முட்புதர்களில் சாணி பொறுக்கிய தூரங்கள் கிலோமீட்டரில் கணக்கெடுக்க முடியாதவை.
இதற்குப் பிறகு, நடத்தல் என்னும் செயலே மனத்துக்குப் பிடித்த இளமைக்காலமும் வந்தது. நிறைய நடை. திருப்பெரும்புதூரில் இருந்த அண்ணனின் வீட்டுக்கு திருவள்ளூரிலிருந்து நடந்துசென்ற ஞாயிறு காலையும் காதலியுடன் கதைக்கும் சுகத்துக்காக சைதாப்பேட்டையிலிருந்து சென்ட்ரல் ரயிலடிக்கு நடந்துபோன பொன்னிற மாலையும் வாழ்க்கைக்கதையில் ஏதோ ஒரு பக்கத்தில் உண்டு. ‘பயணி’ என்று புனைபெயர் வைத்துக்கொண்டு கதை எழுதத் தொடங்கிய காலத்திலும் வாழ்க்கைப் பயணத்தில் நடைக்கான இடம்குறித்து கவனம் இருந்தது. ஆனால், அப்போதும் நான் என் தாத்தாவின் உலகத்தின் விளிம்பில்தான் இருந்திருக்கிறேன் என்பது பின்னால்தான் புரிந்தது.
ஏனென்றால், இதற்குப் பிறகுதான் இன்னொரு உலகம் அறிமுகம் ஆனது.
“நிற்காதே, உட்காராதே,” என்று அடித்த கங்காணிகளும் சாட்டைகளும் “உங்க சீட்டிலே நீங்க இல்லையே?” என்று வினவும் அதிகாரிகளாகவும் CCTV கேமராக்களாகவும் உருமாறிவிட்ட உலகம். உடல் சுரண்டலுக்கு உடல் இயங்க வேண்டும். மூளை சுரண்டலுக்கு உடல் இயங்கக் கூடாது—அது உறைந்து, பலவீனமாகி, அழிந்தாலும் பரவாயில்லை.
இந்த உலகத்தில் நாம்தான் சுதாரித்துக்கொள்ளவேண்டும். ஏன் சுதாரிக்க வேண்டும் என்கிற தெளிவு இருந்தால், உடல் இயக்கத்துக்கான செயல் சலிக்காது.
நான் கடந்த 25+ ஆண்டுகளாய் தொடர்ந்து நடைப்பயிற்சியை ஒரு கூறாகக் கொண்ட உடற்பயிற்சி செய்வதைக் கடைப்பிடிக்கிறேன். உலகின் பல நகரங்கள், பல சூழல்கள்,
பல தட்பவெப்பங்கள். ஆனாலும் பழக்கம் தொடர்கிறது.
நடைப்பயிற்சி செய்வதோடு, அதுபற்றிய புரிதலையும் அதிகரித்துக்கொண்டேன். ஆயிரமாயிரம் ஆண்டுகளாக நம்மை மாற்றிய ஒரு திறன் இது. உடல் நலனைக் கடன் வாங்கமுடியாது, மனத்திடத்தால் மலை ஏற முடியாது போன்றவை ஒவ்வொரு நாளும் அர்த்தம் கூடும் தொடர்களாக மாறின. ஹாங்காங்கில் எங்கள் வீட்டிலிருந்து விக்டோரியா மலையுச்சிக்கு ஏறுவது பிடித்திருந்தது. தில்லியில் வீட்டிலிருந்து அரைமணி நேர நடை தூரத்தில் இருந்த அலுவலகத்துக்கு நடந்தே போகத் தொடங்கினேன். அங்கே அலுவலக சந்திப்புகளில் எட்டாவது மாடியில் இருந்த என் அலுவலகத்துக்கு லிப்ட் பயன்படுத்தாத ஒரே ஆள் என்று அறிமுகப்படுத்தப்பட்டேன். அயலுறவுத் துறை அதிகாரிகளுக்கான அடுக்குமாடிக் குடியிருப்பின் உள்ளேயே இருந்த ஆரச்சாலையும் நடைப்பயிற்சிக்காகவே அமைத்ததுபோல இருந்தது. பெய்ஜிங்கின் சீனப்பெருஞ்சுவரின் சிதிலமடைந்த பகுதிகளில் கடும்பனிக் காலத்தில் காலை முதல் மாலை வரை முழங்கால் அளவுப் பனியில் பல கிலோமீட்டர்கள் ஏறி இறங்கும் நடைப் பயணங்களில் பங்குபெற்றேன் (“நான் செத்தால் நானே பொறுப்பு” என்கிற படிவத்தில் கையெழுத்திட வேண்டும்). பிஜி, டோங்கா போன்ற பசிபிக் தீவு நாடுகளின் மயக்கும் நீலக் கடற்கரைகளில் பிள்ளைகளுடன் காலாற நடந்தேன். ஒரு மாதக் காலம் இமயமலையில் நீடிக்கும் ‘கைலாஷ் யாத்திரை’யில் 5,600 கிலோமீட்டர் உயரத்தில் ஆக்ஸிஜனுக்குக் கெஞ்சும் நுரையீரலுடன் நடந்தேன். வாஷிங்டனின் சாலையோரங்களில் இளையராஜாவின் தாளகதிக்கு நடந்தால் நேரமோ தூரமோ பொருட்டாகவே இருக்காது. தாய்வானில் என் மனைவியும் நானும் காலைவேளைகளில் கிளம்பி ஒரு குறிப்பிட்ட கடையில் (எங்களைப் பார்த்ததும் அவர்கள் தயார்செய்து வைத்திருக்கும்) பழத் தேநீரை இதமான சூட்டில் பருகியபடி நடப்பது பழக்கமானது. நம் ஊர் மாரியம்மன் போல தாய்வானின் மழைத்தெய்வம் மா ட்ஸு அம்மனுக்கு லட்சக்கணக்கானவர்கள் பங்குபெறும் ஒன்பது நாள் நடைப்பயணத்தில் கலந்துகொண்டேன். இப்போது அஜர்பைஜானிலும் வீட்டின் பின்புறம் உள்ள எங்கள் புல்வெளித் தோட்டத்தில் ப்ளூடூத் ஒலிபெருக்கியில் மெதுவான கித்தார் இசையுடன் நாங்கள் நடக்கிறோம். சொல்ல மறந்தது, கேட்க மறந்தது, சொல்லவேண்டும் என்று தோன்றுவது என்று எல்லாவற்றையும் பேசிக் கதைத்தபடி நடக்கும் வாய்ப்பு பிடித்திருக்கிறது. கூடவே, வெய்யில், மழை, பனி, காற்று என்கிற காரணங்களின் தடுப்புகளைத் தாண்டிக்குதிக்க, பதினைந்து ஆண்டுகளாக வீட்டில் ட்ரெட்மில் இருக்கிறது. தொடர்ந்து பயன்படுத்துகிறோம். இப்போது இருப்பது மூன்றாவது ட்ரெட்மில். எதிரே டிவியோ லேப்டாப்போ வைத்துவிட்டால் நடக்கும்போதே வாரம் இரண்டு படங்கள் பார்த்துவிடலாம். எது எப்படியோ, நடந்துவிடவேண்டும். அது தான் முக்கியம். முடிந்தவரை நடந்துவிடவேண்டும்.
இவை போக, மூளைக்கும் உடற்பயிற்சிதான் உணவு என்பது இன்னும் ஈர்ப்பு கூட்டியது. அரிஸ்டாட்டில் நடக்கும்போvது பாடம் கற்பித்த Peripatetic school (கிரேக்க வார்த்தை peripatētikós என்பதிலிருந்து வந்தது) முதல், ஆப்பிள் கணினி நிறுவனர் ஸ்டீவ் ஜாப்ஸ் கடைப்பிடித்த நீண்ட நடைப்பயணச் சந்திப்புகளில் வந்த நல்விளைவுகள் வரை இந்தக் கதைக்குத் தொடர்ச்சி உண்டு என்பதைக் கண்டேன். அனுபவமும் உறுதிப்படுத்தியது. எங்கள் வீட்டு ட்ரெட்மில் பக்கத்தில் தண்ணீர் பாட்டில் இல்லை என்றாலும் சின்னக் குறிப்பேடும் பென்சிலும் கட்டாயம் இருக்கும்.
‘உடற்பயிற்சி செய்யாத நாள் நன்றாக அமையாது,’ என்கிற அனுபவத் தெளிவு எனக்கு உண்டு. இந்த அறிவே காலையில் என்னை முடுக்கும். ‘ஒரு மணி நேர உடற்பயிற்சி செய்யத் தவறி ஒரு நாளையே பாழாக்குவதா?’ என்று கருங்கூந்தல் கலைந்தோடி மேகங்களாகும் வெள்ளைப்புடவை அணிந்த தேவதை என் காதருகில் இடித்துரைப்பாள். உடற்பயிற்சியால் மட்டுமே கிடைக்கக்கூடிய மகிழ்ச்சி தரும் வேதி பொருட்கள் அன்றைக்குக் கிடைக்காமல் போகும் என்னும் இழப்பு மிரட்டும். உடற்பயிற்சியால் மூளைக்கு உணவு கிடைத்து, அது சுறுசுறுப்பாகக் கைகளைத் தேய்த்துக்கொண்டு அந்த நாளுக்குத் தயாராகும் அனுபவத்தைத் தவறவிடத் தோன்றாது. உடற்பயிற்சி செய்த நாட்களில் நம் புன்னகை ஒரு கால் இன்ச் அதிகம் விரியும் மாயம் அன்று நடக்காதோ என்று பதற்றம் வரும். உடற்பயிற்சிக்காக ஷூவுக்கு லேஸ் கட்டும்வரை நமநமவென்று நிந்தனை தொடரும். கடைசியில் உடற்பயிற்சி முடிந்து வியர்வையில் உடலுடன் ஒட்டிய டீ-சட்டையைக் கழற்றும்போது தலையில் அன்றைக்கான குட்டி கிரீடம் ஏறும்.
இதனால்தான், நடைப்பயிற்சியுடன் சைக்கிள் பயணங்கள், மலையேறுதல், பேட்மிண்டன், ஜிம் என்று பல பழக்கங்கள் சேர்ந்துகொண்டன. உடற்பயிற்சியின் பொதுவான அசத்தலான அனுகூலங்கள் போக, இதுபோன்ற செயல்களால் கிடைக்கும் சிறப்பு மகிழ்ச்சி் போனஸ். உடலில் பலனும் தெரிகிறது. 25 ஆண்டுகளுக்கு முன் வாங்கிய உடைகளை இன்னும் அணிய முடிகிறது (ஆமாம், வைத்திருக்கிறேன், பயன்படுத்துகிறேன். அது இன்னொரு கட்டுரைக்கான விஷயம்).
ஆமாம், சமயங்களில் முடியாது. உடல்நிலை, வேலைச்சுமை, நண்பர்களின் வருகை என்று காரணங்களா இல்லை? ஆனாலும், அலமாரியில் இருக்கும் இனிப்புத் தின்பண்டத்தை நோட்டமிடும் சிறுவர்களின் கண்கள் போல என் மனம் அடுத்த உடற்பயிற்சிக்காகத் தருணத்தை எதிர்பார்த்துக் காத்திருக்கும். வியர்வையால் கழுவாத உடல் துருப்பிடிக்கும் மனக்காட்சியால் உந்துதல் அதிகரிக்கும்.
என் தாத்தா கேட்ட, “நெஜமாவாப்பா?” என்கிற கேள்வியும் ஹாங்காங் மருத்துவர் கேட்ட “ரியலி?” என்கிற கேள்வியும் வெவ்வேறு உலகங்களில் கேட்கப்படுபவை. முதல் உலகத்தில் வியர்வை இயல்பானதாகவும் கால்நீட்டி உட்காரும் ஓய்வு சிறப்பானதாகவும் இருக்கின்றன. இரண்டாவது உலகத்தில் அசையாத கால்கள் இயல்பானதாகவும் அசைவும் வியர்வையும் சிறப்பானதாகவும் இருக்கின்றன. அந்தந்த உலகத்துக்கான சிறப்பைச் சேர்த்துக்கொள்வது அவரவர் பாடு.
வேலை எதுவும் இல்லாமல் உட்காருவதன் அவசியம்தெரிந்த உலகத்தில் இருந்த தாத்தாவிடம் வேலை எதுவும் இல்லாமல் நடக்க வேண்டிய அவசியம் இருக்கும் என் உலகத்தைப் பற்றி ஓரளவு எளிமையாகச் சொன்னேன். “நாளெல்லாம் உக்காந்துக்கிட்டு இருந்தா ‘ச்சிய்’ன்னு இருக்காது?” என்றார். “அதே தான், தாத்தா” என்று மகிழ்வுடன் டீயைக் குடித்தேன்.
நான் சீனமொழியிலிருந்து மொழிபெயர்த்த (இலக்கியத்துக்கு நோபல் பரிசு பெற்ற மோ யான் எழுதிய ‘மாற்றம்’ என்கிற) நாவலில் வரும் ஒரு வசனத்தைப் பல நண்பர்களுக்குச் சொல்லியிருக்கிறேன். எனக்கும் அடிக்கடி சொல்லிக்கொள்வேன். இப்போதும் சொல்லிக்கொள்கிறேன்: “மரம் நகர்ந்தால் சாகும். மனுஷன் நகராவிட்டால் சாவான்.”
(பயணி தரன் (ஶ்ரீதரன் மதுசூதனன் IFS) இந்திய அயலுறவுப் பணி அதிகாரி. எழுத்தாளர். மொழிபெயர்ப்பாளர். பயணி. தொடர்புக்கு: dharan@payani.com)