லேபிள் இல்லாத பட்டாசுகள்

லேபிள் இல்லாத பட்டாசுகள்

‘நான் சொல்கிற இத்தகவல் இந்நேரம் 40 லட்சம் பேருக்குப் வாட்ஸப் கார்டுகளாகப் போய்ச்சேர்ந்திருக்கும்' அண்மையில் ஒரு முக்கியத் தகவலை மேடையில் வெளியிட்ட தலைவர் வெளியிட்ட கையுடன் இதைச்சொன்னார். இது ஆச்சர்யமாக இருந்தது என்று நாம் சொன்னால்தான் ஆச்சர்யப்படவேண்டும் என்ற நிலைதான் உண்மை.

தகவல் தொடர்பு கீழ்மட்டத்தில் இருந்து மேல்மட்டத்துக்குச் செல்வதை விட மேல்மட்டத்தில் இருந்து கீழ்மட்டத்துக்குச்

செல்வதையே பெருநிறுவனங்கள் தங்கள் முக்கிய அணுகுமுறையாக வைத்துள்ளன. கட்டளைகளும் வழிகாட்டல்களும் மின்னஞ்சல் கள் மூலமாக நொடியில் பரிமாறப்பட்டு பெருநிறுவனங்களின் செயல்பாடுகள் வழிநடத்தப்படுகின்றன.

இதே பாணிதான் கட்சிகளிலும் கடைபிடிக்கப்படுகிறது.

உதாரணத்துக்கு திமுகவை எடுத்துக் கொண்டால் இந்த தகவல் பரப்புதலை பிரதானமாக மேற்கொள்வது அவர்களின் சமூக ஊடக அணி. மாவட்டம்தோறும் பொறுப்பாளர்கள் உள்ளனர். ஒவ்வொரு மாவட்ட அளவிலும் வட்ட அளவிலும்

கட்சிக்காரர்கள், பொறுப்பாளர்கள், பொதுமக்கள் கொண்ட வாட்ஸப் குழுக்கள் உள்ளன. இந்த வாட்சப் குழுக்களின் அட்மின்களைத் திரட்டி மாநில அளவிலான சில குழுக்கள் உருவாக்கப்பட்டிருக்கும்.

அந்தக் காலம் என்றால் காலையில் செய்தித்தாளைப் புரட்டிப்பார்த்துக் கட்சித் தலைமை உடனேயோ அல்லது மதியமாகவோ ஒரு பதிலுரையை அல்லது எதிர்வினையைத் தயார் செய்யும். பின்னர் தொலைக்காட்சிகள் வந்தன. அப்போது சற்று வேகமாக எதிர்வினை செய்யவேண்டிய சூழல் உருவானது. ஆனால் இப்போது வாட்ஸப் போன்ற சமூக ஊடகங்கள் வந்தபின்னர், ஒவ்வொருவரின் உள்ளங்கைக்கும் தகவல்களைக்கொண்டு சேர்க்க முடிகிறது. எனவே இதை நன்றாகப் பயன்படுத்திக்கொள்ளவேண்டும் என கட்சிகள் முடிவு செய்திருக்கின்றன.

கட்சித் தலைமை அன்றாடம் எந்த செய்தி தொடர்பாகப் பகிரலாம் என ஒரு கோடிட்டுக்காட்டும். அதை கண் டெண்ட் (content) என்பார்கள். அத்தோடு அரசியல் கட்சித் தலைமையின் பணி முடிகிறது. இதை எப்படிச் செய்யலாம் என்பதெல்லாம் தொழில்முறைப் பணியாளர்கள் கையில் விடப்பட்டு விடுகிறது. எப்படி இதை வடிவமைக்கவேண்டும் என ஒரு குழு திட்டமிட்டு, கணினி வல்லுநர்கள் குழுவிடம் அளிக்கப்படுகிறது. அவர்கள் தேவையான படங்கள், வாசகங்களை உள்ளிட்டு காட்சி அட்டையாகவோ, அல்லது அசையும் காட்சிகளைக் கோர்த்து காணொலியாகவோ உருவாக்குகிறார்கள். இதில் ‘மீம்'கள் எனப்படும் கேலி வடிவமைப்புகளும் அடங்கும். இறுதிக் கட்டம் பெற்ற வடிவத்தை அளிப்பதுடன் இந்த கிரியேட்டிவ் குழுவினரின் பணி முடிந்தது. அதன் பின்னர்தான் இந்த வடிவமைக்கப்பட்ட அட்டை முதலில் அட்மின் குழுக்களில் பகிரப்பட்டு, அடுத்த நொடி அவர்களின் மூலமாக உள்ளூர் குழுக்களில் பகிரப்பட்டு, காட்டுத்தீப் போல மாநிலமெங்கும் நாடெங்கும் உலகமெங்கும் போய்ச் சேர்கிறது.

‘இதெல்லாம் லேபிள் இல்லாமல் செய்யப்படும் பட்டாசுகள் போன்றவை. யார் செய்தார்கள், யார் பரப்புகிறார்கள் என்றெல்லாம் அதில் இருக்காது. ஆனால் ஊர்முழுக்கப் போய் வெடிக்கும். சில ஊசிப்பட்டாசுகள் போல் இருக்கும். சில பெரிய அணுகுண்டுகள் போல வெடிக்கும். நாங்கள் வேலை செய்யும் இடம் லேபிள் இல்லாத பட்டாசுகள் தயாரிக்கும் சிவகாசிப் பட்டாசுன்னு வெச்சுக்கோங்களேன்... ஆனால் ஒரு கட்சிக்காக இதையெல்லாம் உருவாக்கும் நபர்கள் கட்சிக்காரர்களாக இருக்கவேண்டியதே இல்லை. சம்பளம் வாங்கிக்கொண்டு கேட்பதைச் செய்து தரும் ஊழியர்கள் தான் நாங்கள். இந்த கட்சி இல்லன்னா அந்த கட்சியோட கிரியேட்டிவ் டீம்ல வேலைக்குச் சேர்ந்திடுவோம். இதில் முக்கியமான விஷயம் நல்ல சம்பளம் கிடைக்கும். மரபான ஊடகங்களில் குறைந்த காலத்தில் எண்ணிப்பார்த்தாலும் கிடைக்காத சம்பளம். ஆனால் நிரந்தரமில்லாத வேலைதான்' என்கிறார் இம்மாதிரி கட்சி ஒன்றின் கிரியேட்டிவ் குழுவில் வேலைபார்க்கும் பெயர் சொல்ல விரும்பாத பணியாளர் ஒருவர்.

வாட்ஸப் குழுக்கள் ஒருபுறம் இருக்க இன்னொரு புறம் எக்ஸ் தளம் மிக சுறுசுறுப்பான தளம். இதில் எல்லா சக்திகளும் விளையாடுகின்றன. அனைத்துகட்சிகளின் உறுப்பினர்களும் தங்கள் இயல்புக்கு ஏற்றமாதிரி பரப்புரைகளில் ஈடுபடுகின்றனர். காலையில் தங்கள் வாட்சப்புக்கு வந்து விழும் வடிவமைக்கப்பட்ட அட்டையையோ காணொலியையோ அவர்கள் எக்ஸ் தளத்தில் பகிர்வர். அல்லது தங்கள் கட்சி ஐடி விங் பகிர்ந்துள்ளதை மீள் பதிவு செய்வார்கள். அதிகமான ஆட்களைச் சென்றடையவேண்டும் என்பதுதான் நோக்கம். இதில் குறிப்பிட்ட ஹேஷ்டாக்குகளில் எதிரணியினரைப் போட்டுத்தாக்குதல் அதை அகில இந்திய அளவில்

ட்ரெண்டிங் செய்யவைத்தல் என்பவற்றில் நடக்கும் போட்டி தனி புத்தகமே போடும் அளவுக்கு சுவாரசியமானது. இந்த ட்ரெண்டிங்களை உருவாக்குவதிலும் தொழில்முறை நிபுணர்களின் ஆலோசனைகள் பெறப்படுகின்றன. இது கட்சி அல்லது தனிப்பட்ட நபர்களின் செல்வாக்கைப் பெருக்க அவற்றை மட்டுமே பரப்பும் ப்ராண்டிங் தளங்களாகவும் உள்ளன. இந்த ப்ராண்டிங் பற்றி தனிக்கட்டுரையில் பார்ப்போம். இந்த கட்டுரை தகவல் தொடர்பு, பிரச்சாரம் பற்றி மட்டுமேயானது.

திமுகவில் அக்கட்சியின் ஐடிவிங் டிஆர்பி ராஜாவின் தலைமையில் 72 கட்சி மாவட்டங்களாகப் பிரிக்கப்பட்டு செயல்படுகிறது. 23, 329 நிர்வாகிகள் இருப்பதாகக் அதன் இணையதளம் சொல்கிறது. மாவட்ட அளவில்கூட சில இடங்களில் சம்பளத்துக்கு வேலைபார்க்கும் தொழில்நுட்பப் பணியாளர்களைக் கொண்டு இந்த அணி செயல்பட்டுவருவதாகவும் சொல்லப்படுகிறது.

அதிமுகவில் சமீபத்தில் ஐடி அணி மாற்றி அமைக்கப்பட்டு ராஜ் சத்யன் அதற்கு செயலாளராக உள்ளார். கோவை சத்யனும் பாஜகவில் இருந்து வந்து சேர்ந்த சிடிஆர் நிர்மல் குமார் இதன் துணைச்செயலாளர்கள். சிங்கை ராமச்சந்திரன் இதன் தலைவராக இருக்கிறார். சமீபத்தில் புரட்சித் தமிழரின் மாஸ்டர்கிளாஸ் என்ற தலைப்பில் எடப்பாடி பழனிசாமி இந்த அணி நிர்வாகிகளிடம் உரையாற்றும்போது யாரையும் தரக்குறைவாகப் பேசவேண்டாம் என்று கேட்டுக்கொண்டது குறிப்படத்தக்கது. இந்த அணியை 12 மண்டலங்களாகப் பிரித்து நிர்வாகிகள் அறிவித்துள்ளனர்.

பாஜகவைப் பொருத்தமட்டில் அக்கட்சியின் ஐடிவிங் என்பது அக்கட்சி மாநிலத் தலைவர் அண்ணாமலையின் கட்டுப்பாட்டில் வார் ரூம் என்ற பெயரில் இயங்குகிறது. ஆனால் சமூக ஊடகங்களில் அக்கட்சியின் செயல்பாடு என்பது பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பாகவே இந்திய அளவில் தொடங்கிவிட்டது. மிகுந்த திட்டமிட்டு செய்திகளைப் பரப்புவதில் அக்கட்சி உறுப்பினர்கள் போட்டுக்கொடுத்த பாதையில்தான் மற்ற கட்சிகள் பின் தொடர்ந்து செல்கின்றன என்று

சொல்லவேண்டும். காங்கிரஸ் கட்சியும் இதற்கான கட்டமைப்பை உருவாக்கி தீவிரமாக செயல்பட்டு வருகிறது.

இடதுசாரிகள் உட்பட்ட பிற தமிழக கட்சிகளும் சிறிய அளவில் சமூக ஊடகக் குழுக்களை வைத்துள்ளன. பெரும்பாலும் அவை கட்சி தன்னார்வலர்களால் கவனிக்கப்படுகின்றன. இதில் நாம் தமிழர் கட்சி உறுப்பினர்கள்  முன்பிலிருந்தே கூடுதல் ஆர்வம் காட்டிச் செயல்பட்டு வருகின்றனர். பெரிய கட்சிகளைவிட இவர்கள் சில சமயம் மிகுந்த வேகத்துடன் பணியாற்றுவதையும் பார்க்க முடிகிறது.

Related Stories

No stories found.
logo
Andhimazhai
www.andhimazhai.com