எதிரியைத் தாக்க பொறுமை அவசியம்!

குத்துச் சண்டை வீரர் தேவராஜன்
குத்துச் சண்டை வீரர் தேவராஜன்
Published on

 விளையாட்டு வீரர்கள் வேகமாகச் செயல்பட வேண்டியவர்கள் என்று நாம் நினைத்துக்கொண்டு இருக்கிறோம். ஆனால் அந்த விளையாட்டில் சாதிக்கவும் பொறுமை மிக அவசியமான விஷயம் என்கிறார் தமிழகத்தைச் நேர்ந்த பிரபல குத்துச்சண்டை வீரரான தேவராஜன்.

 சென்னையைச் சேர்ந்த குத்துச்சண்டை வீரரான தேவராஜன், 1994-ம் ஆண்டு பாங்காக் நகரில் நடந்த உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்றவர். இதன்மூலம் சர்வதேச குத்துச்சண்டை போட்டியில், வெளிநாட்டு மண்ணில் பதக்கம் வென்ற முதல் வீரர் என்ற பெருமையை பெற்றவர். 1992-ம் ஆண்டு நடந்த ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவுக்காக பங்கேற்ற இவர் மத்திய அரசின் அர்ஜுனா விருதையும் வென்றுள்ளார். விளையாட்டில் பொறுமை எந்த அளவுக்கு முக்கியம் என்பதைப் பற்றி அவர் சொல்கிறார்…

”பொறுத்தார் பூமி ஆள்வார் என்று சொல்வார்கள். விளையாட்டில், அதுவும் குறிப்பாக குத்துச்சண்டையில் பொறுமை மிகவும் அவசியம்.  பார்ப்பதற்கு வேகமான ஆட்டத்தைபோல போல குத்துச்சண்டை இருக்கலாம். ஆனால் அதில் ஒருவர் ஜெயிக்க வேண்டும் என்றால், பொறுமையாகக் காத்திருந்து எதிரியைத் தாக்க வேண்டும். அதாவது உடல் சுறுசுறுப்பாக இருந்தாலும் மனம் பொறுமையாக இருக்கவேண்டும். சண்டை ஆரம்பித்ததும் எதிரியை சரமாரியாக தாக்க வேண்டும் என்று நினைத்து, வேகமாக தாக்குதல்களை நடத்தினால்  சோர்ந்து போவீர்கள். அதனால் முதல் சில வினாடிகளில்  எதிரி எப்படி தாக்குகிறான் என்பதை கணித்து, அவன் பலவீனத்தை அறிந்து பின்னர் தாக்க வேண்டும்.

விளையாட்டுத் துறையில் ஒருவர் சாதிக்க வேண்டுமென்றால் பொறுமை மிகவும் முக்கியம். அதற்கு ஆண்டுக்கணக்கில் பயிற்சிகளைச் செய்ய வேண்டும். ஆனால் இப்போது சில வீரர்களும்,  பெற்றோரும் பயிற்சியைத் தொடங்கிய குறுகிய காலத்துக்குள்ளேயே வெற்றிபெற வேண்டும் என்று நினைக்கிறார்கள். சில போட்டிகளில் தோற்றாலும், உடனே மனமுடைந்து முயற்சிகளை விட்டு விடுகிறார்கள். சில பெற்றோர் தங்கள் குழந்தைகள் தோற்றால் உடனே அந்த விளையாட்டே வேண்டாம் என்று சொல்லி, முழு நேரம் படிப்பில் தள்ளிவிடுகிறார்கள். இது தவறான விஷயம். நாம் நினைப்பதுபோல் எப்போதும் நடந்துவிடாது. சில சமயம் நாம் நினைத்ததற்கு நேர் எதிராக நடக்கும். நமக்கு நல்லது செய்ய மட்டும்தான் ஆட்கள் இருப்பார்கள் என்று இல்லை. நமக்கு தொந்தரவு கொடுக்கவும் சிலர் இருப்பார்கள் சிலர் இருப்பார்கள். அவர்கள் நமக்கு இடையூறுகளைத் தருவார்கள். இதுபோன்ற காலகட்டங்களில் நாம் பொறுமையைக் கடைப்பிடிக்க வேண்டும். பயிற்சி முகாம்களுக்குச் செல்லும்போது பல பின்னணிகளைச் சேர்ந்தவர்கள் இருப்பார்கள். அதையெல்லாம் பொறுத்துக்கொள்ளத்தான் வேண்டும்.

குத்துச்சண்டைப் போட்டிகளை பொறுத்தவரை பல்வேறு எடைப்பிரிவுகளில் நடக்கும். நாம் குறிப்பிட்ட எடைப்பிரிவில் போட்டியிடுவதாக இருந்தால், நமது எடை அதற்குள் இருக்குமாறு பார்த்துக்கொள்ள வேண்டும். உதாரணமாக 51 கிலோகிராம் எடைப்பிரிவில் கலந்துகொள்வதாக இருந்தால் நம் எடை போட்டி நடக்கும் நாளில் அதைவிட அதிகமாக இல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். அதற்கு உணவுக் கட்டுப்பாடு மிகவும் முக்கியம். நம்மைச் சுற்றி இருப்பவர்கள் நிறைய சாப்பிட்டாலும், நமது ஆசையை கட்டுப்படுத்திக்கொள்ளும் பொறுமை மிக அவசியம்.

பொதுவாக போட்டி நடக்கும் ஒவ்வொரு நாளிலும் எடை பார்ப்பார்கள். நாம் எடைக்கு ஏற்ற உணவை உண்ண வேண்டும். அப்படி இல்லை என்றால் போட்டியில் இருந்தே வெளியேற்றப்படும் சூழல் ஏற்படும். சமீபத்தில் நடந்த ஒலிம்பிக் போட்டியில், இந்தியாவின் மல்யுத்த வீராங்கனையாக இருந்த வினேஷ் போகட்,  இறுதிப் போட்டி நடக்கும் நாளில் தன் 100 கிராம் எடை அதிகமாக இருந்த காரணத்தால் பதக்கத்தை இழந்தார். விளையாட்டு வீரர்களுக்குப் பொறுமையும் கட்டுப்பாடும் எந்த அளவுக்கு முக்கியம் என்பதற்கு இது ஒரு நல்ல உதாரணம்.  உடல் எடையைக் குறைத்து ஆடும் பொறுமையும் பயிற்சியும் இல்லாதவர்கள் தாம் இருக்கும் எடையிலேயே ஆடுவார்கள். நானெல்லாம் சாதித்திருக்கிறேன் என்றால் உடல் எடையைக் கட்டுப்பாட்டில் வைத்திருந்ததனால்தான்.

குத்துச்சண்டைப் போட்டியில் சாம்பியன்களாக திகழ்ந்த முகமது அலி, மைக் டைசன் ஆகியோர் தங்கள் ஆரம்ப காலத்தில் தோல்விகளை தழுவியவர்கள்தான். ஆனால் அந்த தோல்விகளைக் கண்டு துவளாமல் போராடி, அவர்கள் உலகின் உச்சாணிக் கொம்பை எட்டி இருக்கிறார்கள்.

நான் 16 வயதில் முதலாவதாக தேசிய குத்துச்சண்டைப் போட்டியில் பங்கேற்றேன். ஆனால் அப்போது நான் ஆரம்ப கட்டத்திலேயே தோல்வியைச் சந்தித்தேன். ஆனால் அதற்காக துவண்டு போகாமல் கடுமையாகப் போராடினேன். கூடுதலாகப் பயிற்சி செய்தேன். இதன் விளைவாக அடுத்த முறை நடந்த தேசிய அளவிலான குத்துச்சண்டை போட்டியில் வெள்ளிப் பதக்கத்தை வென்றேன். சர்வதேச அளவிலான போட்டிகளிலும் முதல் முறை ஆரம்ப கட்டத்தில் தோல்வியடைந்த பின்னர்தான் அடுத்த முறை பதக்கத்தை வென்றேன். என் பொறுமையும் விடா முயற்சியும்தான் எனக்கு வெற்றியைத் தேடித் தந்தது. 1992 பார்சிலோனா ஒலிம்பிக்கில் முதல் சுற்றில் கியூபா வீரரை எதிர்கொண்டேன். தோற்றுவிட்டேன். ஆனால் அவரோ உலக சாம்பியன். அவருக்கே நம்மால் ‘டஃப்’ கொடுத்து ஆடமுடிந்திருக்கிறதே என்று நம்பிக்கை வந்தது. அதனால்தான் அதற்கடுத்த உலக சாம்பியன் போட்டியில் வெண்கலப் பதக்கத்தை இந்தியாவுக்காக வெல்ல முடிந்தது.

இளம் வீரர்கள் என்னுடைய வீடியோக்களைப் பார்த்துவிட்டு எப்படி சார் என்று கேட்பார்கள். அது எதுவும் ஒரே நாளில் வந்தது இல்லை. சின்னவயதில் இருந்தே காலையில் பீச் மணலில் செய்த பயிற்சிகள்தான். மாலையிலும் பயிற்சி தொடரும். இத்துடன் வாரத்தில் இரண்டுநாள்கள் பயிற்சி மோதல்கள். எனக்கெல்லாம் ஞாயிற்றுக்கிழமை மாலை தவிர மீதி வாரநாள்களில் வெளியே ஒரு உலகம் இருக்கிறது என்பதே தெரியாது. இந்தப் பொறுமையும் பயிற்சியும் குத்துச்சண்டைக்கு மட்டும் இல்லை. எல்லா விளையாட்டுகளுக்கும் பொருந்தும்!

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடரFacebookTwitterYoutubeInstagram

logo
Andhimazhai
www.andhimazhai.com