பழம்பெரும் நடிக - இயக்குநர்கள்!

பழம்பெரும் நடிக - இயக்குநர்கள்!
Published on: 

தமிழ் சினிமா உருவான காலத்தில் இருந்தே நடிகராகவும் இயக்குநராகவும் இரு பொறுப்புகளை ஏற்று திரையுலகில் உலாவியவர்கள் பலர் உண்டு. ஆரம்பகாலத்தில் இருந்து 1960கள் வரையிலான காலகட்டம் வரையில் இடம்பெற்ற அத்தகைய திரைச் சிற்பிகளை கோடிட்டுக் காட்ட முயல்வதே இக்கட்டுரையின் நோக்கம்.

கே. சுப்ரமணியம்:

தமிழகத்தில் கலை, கலாச்சாரத்துறையில் புதிய உத்வேகத்தைப் புகுத்தியவர் கே. சுப்ரமணியம். அதிலும் குறிப்பாக திரைப்பட உலகில் ஒரு முன்னோடியாகத் திகழ்ந்தவர். சமுதாய சிந்தனைகள், சீர்திருத்தங்களை திரைப்படத்துறையில் பரீட்சார்த்தமாக புகுத்தி வெற்றி கண்டவர்.

ஏழிசை மன்னர் எம்.கே. தியாகராஜ பாகவதரை அறிமுகப்படுத்தி மீனாட்சி சினிடோன் சார்பில் ‘பவளக்கொடி’ என்ற திரைப்படத்தை இயக்கி 1934-ஆம் ஆண்டில் வெளியிட்டார்.

இப்படம் பாகவதருக்குப் புகழையும், சுப்ரமணியத்துக்குப் பெருமையையும் அளித்தது. அதனால் படத்தயாரிப்புக்காக மெட்ராஸ் யுனைடெட் ஆர்டிஸ்ட் கார்ப்பரேஷன் (எம்.யு.எ.சி.) என்ற நிறுவனத்தை இவர் உருவாக்கினார்.

இந்நிறுவனத்தின் வெளியீடாக 1935ஆம் ஆண்டில் ‘நவீன ஸதாரம்’ என்ற திரைப்படம் வந்தது. சுப்ரமணியம் இப்படத்தை இயக்கினார். எம்.யு.எ.சி. நிறுவனத்தைத் தவிர பல்வேறு தனியார் நிறுவனங்களின் படங்களையும் இயக்கினார்.

கே. சுப்ரமணியம்
கே. சுப்ரமணியம்கே. சுப்ரமணியம்

குசேலா (1936), நவீன சாரங்கதாரா (1936), பாலயோகினி (1937), சேவாசதனம் (1938), தியாகபூமி (1939), கச்ச தேவயானி (1941), காமதேனு (1941), கீதகாந்தி (1949) போன்ற படங்கள் இவரது இயக்கத்தில் வெளிவந்து வெற்றிமுத்திரை பதித்தன.

இவர் இறுதியாக இயக்கிய திரைப்படம் மொராக் லிமிடெட் கம்பெனியின் தயாரிப்பான ‘பாண்டித்தேவன்’ என்ற திரைப்படமாகும். இப்படம் 1959-ஆம் ஆண்டு திரையிடப்பட்டது.

இயக்குநராக வெற்றிக்கொடி நாட்டிய சுப்ரமணியம் 1942-ஆம் ஆண்டில் ‘அனந்தசயனம்’ என்ற திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்தார் என்பதுதான் இக்கட்டுரையில் இவர் இடம்பெறக் காரணம்.

எம்.யு.எ.சி. இப்படத்தைத் தயாரித்தது. திருவாங்கூர் மஹாராஜா பேராதரவில் இப்படம் தயாரிக்கப்பட்டது. படத்தை சுப்ரமணியமும் இ.எஸ்.வி. அய்யரும் இணைந்து இயக்கினர். சுப்ரமணியத்துடன் ஜி.பட்டு ஐயர், வித்வான் சீனிவாசன், எஸ்.டி. சுப்புலட்சுமி, எம்.வி. ராஜம்மா ஆகியோரும் நடித்தனர். படத்தின் முக்கிய அம்சமான இசையை வி.எஸ்.பார்த்தசாரதி அய்யங்கார் கையாண்டார். படத்தில் சுப்ரமணியம் பாடிய பாடல்களுக்குப் பின்குரல் கொடுத்தவர் வி.எஸ்.ராம அய்யங்கார். படம் தோல்வி. இப்படத்தில் தொழில்நுட்பக் கோளாறுகள் வேறு படத்தின் தோல்விக்கு வலுவாக துணைநின்றன.

2) ஒய்.வி.ராவ்:

யாராகுடிபதி வரதா ராவ் (ஒய்.வி.ராவ்) தென்னிந்திய சினிமாவின் முக்கிய பிரபலங்களில் ஒருவர். ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்தவர். தெலுங்கு, கன்னடம், தமிழ்த் திரையுலகில் இயக்குநராக, நடிகராக புகழ் பெற்றவர்.

இவரது மனைவி யையும் மகளையும் நாம் நன்கறிவோம். ஆம். குமாரி ருக்மணி மனைவி. மகள் நடிகை லட்சுமி. ஒய்.வி.ராவ் இயக்கத்தில் 1937ஆம் ஆண்டில் வெளிவந்த மகத்தான வெற்றிப்படம்தான் எம்.கே.டி. பாகவதர் நடித்த ‘சிந்தாமணி’. தமிழ் சினிமா உலகில் முதன்முதலாக வணிகரீதியில் வசூலை வாரிக்குவித்த படமிது.

இந்தப் படத்தை இயக்கியது மட்டுமின்றி எம்.கே.டி.யின் உற்ற தோழனாக ‘மனோஹர்’ என்ற பாத்திரத்தில் சிறப்பாக நடித்திருந்தார். கேலியும் கிண்டலும் கோபமும் கலந்த கலவைப் பாத்திரமிது.

ஒய்.வி.ராவ்:
ஒய்.வி.ராவ்:

ராயல் டாக்கி டிஸ்ட்ரிபியூட்டர்ஸ் தயாரித்தது. இதையடுத்து அவர் நடிப்பில் வெளிவந்த படம் ‘பக்த மீரா’. சிந்தாமணி பிக்சர்ஸ் தயாரிப்பில் இப்படம் 1938-ஆம் ஆண்டில் வெள்ளித்திரை கண்டது. இந்தப் படத்தில் மான்சிங், கிருஷ்ணன் என இருபாத்திரங்களில் ஒய்.வி.ராவ் நடித்தார்.

இதுதவிர ஒய்.ஹெச்.ராவ், வசுந்தராதேவி முக்கிய பாத்திரமேற்றிருந்தனர். இப்படத்தில் நடிப்பைத் தவிர ஒய்.வி.ராவ் படத்தை இயக்கியுமிருந்தார்.

மூன்றாவது முக்கியமான படம் 1941-ஆம் ஆண்டில் வெளிவந்த ‘சாவித்திரி’. இந்தப் படத்தில் வட இந்திய நடிகை சாந்தே ஆப்தே சாவித்திரியாகவும், ஒய்.வி.ராவ் கதாநாயகன் சத்தியவானாகவும் நடித்தார். எம்.எஸ். சுப்புலட்சுமி நாரதராக ஆண்வேடப் பாத்திரமேற்றிருந்தார்.

ராயல் டாக்கீஸ் டிஸ்ட்ரிபியூடர்ஸ் தயாரித்த இப்படம், ரசிகர்களை குறிப்பாக பெண் ரசிகர்களின் உள்ளங்களைக் கொள்ளை கொண்டது.

3) வீணை எஸ். பாலச்சந்தர்:

வீணை எஸ். பாலச்சந்தர், கலைத்துறையில் அறிவுஜீவியாக திகழ்ந்தார். குரு இன்றி சுயமாகவே வீணை வாசிப்பால் கற்றுத் தேர்ந்தவர். பல்வேறு படங்கள் அவரைத் தேடி வந்தன.

மதறாஸ் மாகாண சங்கீத சங்கம் அவருக்கு ‘கலாசிகாமணி’ என்ற பட்டத்தை வழங்கி கெளரவித்தது. அனைத்திந்திய இசைக் கலைஞர்கள் குழு ‘வீணாவரப்பிரசாதி’ என்று 1968-ஆம் ஆண்டில் நடந்த நிகழ்வில் பட்டமளித்தது.

வீணை வாசிப்பது மட்டுமின்றி திரைத்துறையில் திரைக்கதை, நடிப்பு, இசை, இயக்கம் என எல்லாத் துறைகளிலும் தனது நேர்த்தியால் ஜொலித்தவர் வீணை எஸ். பாலச்சந்தர்.

இவரது திரைப்பயணம் ‘சீதாகல்யாணம்’ என்ற திரைப்படத்திலிருந்து தொடங்குகிறது. 1934-ஆம் ஆண்டில் வெளிவந்த பிரபாத் பிலிம் கம்பெனியின் தயாரிப்பான இப்படத்தில் பாலச்சந்தரின் மொத்தக் குடும்பமே பங்காற்றியிருந்தது.

வீணை எஸ். பாலச்சந்தர்
வீணை எஸ். பாலச்சந்தர்

இவரது தந்தை வி.சுந்தரம் ஜனகராகவும், சகோதரர் மாஸ்டர் ராஜம் ராமனாகவும், சகோதரி ஜெயா சீதையாகவும் நடித்திருந்தனர். படத்தில் அரசவைக் கச்சேரியில் ஜால்ரா வாசிக்கும் சிறுவனாக பாலச்சந்தர் நடித்தார். வனப்புமிகு வாலிபனாக அவர் பரிமளித்தபோது அவர் கதாநாயகனாக நடித்த படம் தான் ‘ராணி’ (1952).

ஜூபிடர் பிக்சர்ஸ் தயாரிப்பான இப்படத்தில் நடிகை பி. பானுமதி அவருக்கு ஜோடியாக நடித்தார். இயக்கம் எல்.வி. பிரசாத்.

முன்னதாக 1948-இல் அஜீத் பிக்சர்ஸ் தயாரிப்பில் ‘என் கணவர்’ என்ற திரைப்படத்தில் நந்தினி என்ற நடிகையுடன் நடித்தார். தவிர இந்தப் படத்தை பாலச்சந்தர் இயக்கியிருந்தார்.

இதே ஆண்டில் வெளிவந்த மற்றுமொரு முக்கியமான படம் கே.ஆர். புரோடக்சன்ஸ் தயாரித்த ‘இது நிஜமா? ’ . இந்தப் படத்தில் பாலச்சந்தர் மாது, கோபால் என்ற இரட்டை வேடமேற்றிருந்தார்.

‘அந்தநாள்’ – அவர் கதை எழுதி இயக்கிய புதுமைச் சித்திரம். பாடல்கள், நடனம், சண்டைக்காட்சிகள் இல்லாத முதல் தமிழ்ப்படம். இப்படிப்பட்ட நூதன முயற்சியை மேற்கொண்டு வெற்றிகண்டு தனித்துவமான பெருமை பெற்றவர் பாலசந்தர். ஏ.வி.எம். தயாரிப்பான இப்படத்தில் சிவாஜி கணேசன், பண்டரிபாய் இணைந்து நடித்திருந்தனர்.

1955-இல் கணேஷ் மூவிடோன் தயாரிப்பான ‘கோடீஸ்வரன்’ திரைப்படத்தில் கோமாளி பைத்தியக்கார டாக்டராக வந்து ரசிகர்களை குலுங்க குலுங்க சிரிக்க வைத்தார்.

பிறகு, எஸ்.பி. கிரியேஷன்ஸ் என்ற பெயரில் சொந்தமாக ஒரு திரைப்பட நிறுவனத்தை உருவாக்கி சுதந்திரமாக பல புதுமைச் சித்திரங்களை வணிக நோக்கமின்றி எடுத்து வெளியிட்டார். எஸ்.பி. கிரியேஷன்ஸ் தயாரிப்பில் 1962இல் வெளிவந்த படம் ‘அவனா இவன்! ’ . இந்தப் படத்தை இயக்கி நடித்தார் பாலச்சந்தர்.

பிரபல பியானோ இசைக்கலைஞர் ஹாண்டல் மானுவல் படத்தின் டைட்டிலுக்கான இசையை அமைத்துக் கொடுத்தார். 1964-ஆம் ஆண்டில் எஸ்.பி.கிரியேஷன்ஸ் சார்பில் இவர் தயாரித்து வெளியிட்ட படம் ‘பொம்மை.’ ஒரு பொம்மையை மையமாக வைத்து படம் முழுக்க பார்ப்போரைத் தவிக்கவிட்ட திறன் யாருக்கு வரும்? படத்தின் கதை, தயாரிப்பு, இசை, நடிப்பு மற்றும் இயக்கம் என திரைப்படத்தின் அத்தனை பரிமாணங்களையும் தன் தோளில் ஏற்றிக்கொண்டு தன் முயற்சியில் வெற்றி பெற்றார் பாலச்சந்தர். 1970-இல் எஸ்.பி.கிரியேஷன்ஸ் சார்பாக வெளிவந்தது நடுஇரவில் என்ற திகில் திரைப்படம். இப்படத்திற்கு கதை, இசை, தயாரிப்பு, இயக்கம் ஆகிய பொறுப்புகளை ஒரு பாத்திரத்தில் நடிக்கவும் செய்தார். எஸ். பாலச்சந்தர்.

4) டி.ஆர். சுந்தரம்:

தமிழ் சினிமாவின் லெஜண்ட். ‘முதலாளி’ என்று கெளரவத்தோடு அழைக்கப்பட்ட தயாரிப்பாளர், ஸ்டுடியோ நிர்வாகி , இயக்குநர். கண்டிப்புக்கு பேர் போன கறார் மனிதர். சேலம் மாடர்ன் தியேட்டர்ஸ் என்ற ஸ்டுடியோவை நிறுவி பல படங்களை மக்களின் ரசனைக்குப் பரிசாக தந்தார்.

1937-ஆம் ஆண்டில் ‘சதிஅகல்யா’வைத் தயாரித்த இந்நிறுவனம் தொடர்ந்து பல்சுவை கொண்ட திரைப்படங்களைத் தயாரித்து 1982-ஆம் ஆண்டில் வெளிவந்த ‘வெற்றி நமதே’ என்ற படத்துடன் தன் பணியை முடித்துக்கொண்டது.

இதுதவிர இந்த ஸ்டுடியோவில் வேறு தயாரிப்பாளர்களின் படங்களும் உருவானது. அவ்வகையில், மாடர்ன் தியேட்டர்ஸ் 138 படங்களைத் தயாரித்த பெருமையைப் பெற்றது. இதில் தமிழ்(104 படங்கள்) தவிர, தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி, ஆங்கிலம், சிங்களம் ஆகிய மொழிப்படங்களும் அடங்கும்.

மாடர்ன் தியேட்டர்ஸ் அதிபர் டி.ஆர். சுந்தரம் தயாரிப்பில் இயக்குநராக அவரது பங்களிப்பை குறிப்பிட்டுச் சொல்லக்கூடிய மிக முக்கியமான படங்களில் சில:

உத்தமபுத்திரன் (1940)

மனோன்மணி (1942)

ஆயிரம் தலைவாங்கிய அபூர்வ சிந்தாமணி (1947)

ஆதித்தன் கனவு (1948)

மந்திரிகுமாரி (1950)

திரும்பிப்பார் (1953)

அலிபாபாவும் 40 திருடர்களும் (1956)

இவற்றில் எம்.ஜி.ஆர். நடித்த ‘அலிபாபாவும் 40 திருடர்களும்’ திரைப்படம் தமிழ்நாட்டில் தயாரித்து வெளிவந்த முதல் கேவா கலர் படம் என்ற பெருமையைப் பெற்றது.

டி.ஆர். சுந்தரம்
டி.ஆர். சுந்தரம்

இயக்குநராக கோலோச்சிய டி.ஆர்.சுந்தரம், நடிப்பையும் விட்டுவைக்கவில்லை. அந்த தருணமும் வந்தது.

இரண்டாம் உலகப்போரின்போது எல்லா படத்தயாரிப்பாளர்களும் ஆங்கில சர்க்காரை ஆதரித்து ஒரு படம் எடுக்க வேண்டுமென்று சர்க்கார் ஆணையிட்டது. இதன் தொடர்பாக எடுத்தபடம்தான் ‘பர்மாராணி’ (1945).

பர்மாவை ஆக்கிரமித்திருந்த ஜப்பான் ராணுவத்தை எதிர்த்து பிரிட்டிஷ் அரசாங்கம் போரிடுவதாக கதை அமைப்பு. பர்மாராணியாக கே.எல்.வி. வசந்தாவும், குமார் என்ற பாத்திரத்தில் ஹொன்னப்ப பாகவதரும் நடித்திருந்தார்.

இப்படத்தில் டி.ஆர்.சுந்தரம் வில்லன் பாத்திரமான ஜப்பானிய ராணுவத் தளபதியாக நடித்தார்.

பர்மா ராணியைப் பார்த்த ஆங்கிலப் பிரசார இயக்குநர் ஜி.டி.பி. ஷார்வே என்பவர் இப்படம்தான் யுத்த பிரசாரப்படத்தில் சிறந்த படம் என்று பாராட்டி வீரவாள் ஒன்றை டி.ஆர்.எஸ்.க்கு கொடுத்தார்.

1946-ம் ஆண்டில் சேலம் கணபதி பிக்சர்ஸ் டி.ஆர்.சுந்தரம் இயக்கத்தில் மாடர்ன் தியேட்டர்ஸ், சேலம் ஸ்டுடியோவில் ‘சுபத்திரா’ என்ற திரைப்படம் தயாரிக்க முற்பட்டது.

இந்த படத்தில் பிரபல நடிகர் பி.யு சின்னப்பாவை இந்திரஜித் என்ற கதாநாயகன் பாத்திரத்தில் நடிக்க ஏற்பாடாயிற்று. ஏனோ அது நிறைவேறாமற்போனதால் டி.ஆர். சுந்தரம் அந்தப் பாத்திரத்தை ஏற்று நடித்தார். அவருக்கு ஜோடியாக சுலோசனாவாக கே.எல்.வி. வசந்தா. இப்படி டி.ஆர். சுந்தரம் கதாநாயகன் அந்தஸ்துக்கும் உயர்ந்து நடித்து தன்னை பல்சுவை வித்தகராக நிலை நிறுத்திக்கொண்டார்.

5) ஏ.பி. நாகராஜன்:

தமிழ்த் திரையுலகில் நன்னெறி, பக்தி, பண்பாடு, சமுதாய முற்போக்கு, சீர்திருத்தம் போன்ற பொருண்மைகளைக் குழைத்தெடுத்து செந்தமிழ்ச் சுவையாக ரசிகர்களுக்கு ஊட்டியவர் நடிக – இயக்குநரான ஏ.பி. நாகராஜன். இதுவே மக்கள் ‘அருட்செல்வர்’ என்று அவரை அடைமொழியிட்டு அழைக்க காரணமாயிருந்தது.

ஏ.பி.என். அவர்கள் 13 வயதிலேயே பெண் வேடமிட்டு ஸ்திரீபார்ட்டாக 1941-ஆம் ஆண்டில் வெளிவந்த ‘குமாஸ்தாவின் பெண்’ என்ற படத்தில் நடிப்புப் பயணத்தைத் தொடங்கினார்.

1953-ஆம் ஆண்டில் ‘நால்வர்’, 1954-ஆம் ஆண்டில் ‘மாங்கல்யம்’ என இரு படங்களிலும் கதாநாயகனாக நடித்தார். 1955-ஆம் ஆண்டில் வெளிவந்த ‘நல்லதங்காள்’ என்ற திரைப்படத்தில் நல்லதாங்காளின் அன்புச் சகோதரன் பாத்தி ரமேற்றிருந்தார்.

ஏ.பி. நாகராஜன்
ஏ.பி. நாகராஜன்

ஏ.பி.என். கதாநாயகனாக நடித்த மற்றுமொரு திரைப்படம் ‘பெண்ணரசி(1955)’. இது தவிர 1955ஆம் ஆண்டே மற்றுமொரு திரைப்படம் வெளிவந்தது. இப்படத்தில் ஏ.பி.என். வில்லனாக நடித்தார். நீண்ட இடைவேளைக்குப் பின் 1965-ஆம் ஆண்டில் தான் இயக்கிய ‘திருவிளையாடல்’ என்ற படத்தில் நக்கீரராக நடித்து மழையாக தமிழைப் பொழிந்தார். படம் இமாலய வெற்றி பெற்றது.

இப்போது ஏ.பி.என். இயக்கிய ஒரு சில படங்களைக் கருதிப் பார்க்கலாம். 1962-இல் திரை கண்ட லட்சுமி பிக்சர்ஸின் ‘வடிவுக்கு வளைகாப்பு’ திரைப்படமே இவர் இயக்கிய முதல் திரைப்படம் ஆகும். தொடர்ந்து நவராத்திரி (1964), திருவிளையாடல் (1965), சரஸ்வதி சபதம் (1966), திருவருட்செல்வர் (1967), தில்லானா மோகனாம்பாள் (1968), திருமால் பெருமை (1968), திருமலை தென்குமரி (1970), கண்காட்சி (1971), அகத்தியர் (1972), ராஜராஜ சோழன் (1973), மேல்நாட்டு மருமகள் (1975) முதலானவை.

முடிவாக இவர் இயக்கிய படம் சி.என்.வி. மூவிஸ் ‘நவரத்தினம்’. எம்.ஜி.ஆர்., லதா நடித்த இப்படத்திற்கு குன்னக்குடி வைத்தியநாதன் இசை அமைத்திருந்தார். துரதிஷ்டவசமாக இப்படம் தோல்வியைத் தழுவி, ஏ.பி.என்னுக்கு பொருளாதார சங்கடங்களை ஏற்படுத்தியது. காலம் மாறினும் அவரது திரைப்பணிக்கு அழிவில்லை என்பதே உண்மை. நவராத்திரி, திருவிளையாடல், தில்லானா மோகனாம்பாள், ராஜராஜ சோழன் போன்ற அவரது கலைப்படைப்புகள் காலத்தை வென்று நிற்கின்றன.

6)பி. பானுமதி:

தமிழ் சினிமாவில் பானுமதியை அறிமுகப்படுத்திய பெருமைக்குரியவர் எம்.கே. தியாகராஜபாகவதர் என்பது ஆச்சரியமான செய்தி. 1948-ஆம் ஆண்டில் நரேஷ் பிக்சர்ஸ் சார்பில் அவர் தயாரித்த ‘ராஜமுக்தி’ என்ற படத்தில் பானுமதி நடித்தார். இதுதவிர மொத்தம் 36 படங்களில் பானுமதி நடித்தார். இவரது கடைசித் தமிழ்ப்படம் 1993-இல் வெளிவந்த ‘பெரியம்மா’ என்ற திரைப்படமாகும்.

திரையுலகப் பெண்மணிகளில் மிகத் திறமைசாலியாகக் கருதப்படுபவர் பானுமதி. அவருக்கு நடிப்புடன், இசை அமைப்பு, டைரக்சன் என்று சினிமாவில் பன்முகத் திறனுண்டு.

பி. பானுமதி
பி. பானுமதி

தன் மகள் பெயரில் ‘பரணி பிக்சர்ஸ்’ சார்பில் பல வெற்றிப்படங்களை உருவாக்கினார். ரத்னகுமார்(1949), நல்லதம்பி(1949), அபூர்வ சகோதரர்கள்(1949), சண்டிராணி(1953), மலைக்கள்ளன்(1954), அலிபாபாவும் 40 திருடர்களும்(1956), தாய்க்குப்பின் தாரம்(1956), மதுரைவீரன் (1956), அம்பிகாபதி(1957), மக்களைப் பெற்ற மகராசி(1957), நாடோடி மன்னன்(1958), அன்னை(1962) போன்ற படங்கள் அவர் நடித்ததில் குறிப்பிடத்தகுந்தன.

இயக்கத்தைப் பொறுத்தமட்டில் 1953-ஆம் ஆண்டில் வெளிவந்த ‘சண்டிராணி’, 1976-இல் வெளிவந்த ‘வாங்க சம்பந்தி வாங்க’, 1975-ஆம் ஆண்டில் வந்த ‘இப்படியும் ஒரு பெண்’, இறுதியாக 1993-ஆம் ஆண்டில் வெளிவந்த ‘பெரியம்மா’ ஆகிய படங்கள் அடங்கும்.

தமிழ்தவிர அவரது தாய்மொழியான தெலுங்கு, இந்தி, கன்னடம் போன்ற மொழிகளிலும் அவர் நடித்த படங்கள் வெளிவந்து சிறப்பித்தன.

நடிக – இயக்குநர்களாக வலம் வந்த வேறு சில கலைஞர்களையும் பார்க்கலாம்.

7) எம்.கே.டி. :

எண்ணிக்கையில் வெறும் 14 படங்களில் மட்டுமே நடித்து கலையுலகில் அழியாப் புகழ்பெற்றவர் ‘ஏழிசை மன்னர்’ எம்.கே. தியாகராஜபாகவதர். 1934-ம் ஆண்டில் ‘பவளக்கொடி’யோடு தொடங்கிய அவர் பயணம் 1960-ல் ‘சிவகாமி’ திரைப்படத்தோடு முடிந்தது.

தியாகராஜ பாகவதர்
தியாகராஜ பாகவதர்

‘சிந்தாமணியில்’ (1937) துவங்கிய அவரது வெற்றிக் கலைப்பயணம் திருநீலகண்டர் (1939), அசோக்குமார் (1941), சிவகவி(1943), ஷரிதாஸ் (1944) வரை நீண்டது. பின் விதியால் சரிந்தது. இழந்த சரிவை மீட்டெடுக்கும் முயற்சியில் 1957-ம் ஆண்டில் சர்வோதையா பிக்சர்ஸ் சார்பில், ‘புதுவாழ்வு’ என்ற பெயரில் தயாரித்தார். எம்.கே.டி.யுடன் அப்போது பிரபல்யமாக இருந்த லலிதா, பாலைய்யா, என்.எஸ்.கே. போன்றோர்கள் நடிக்க ஜி. ராமநாதன், சி.என்.பாண்டுரங்கன் இசையமைக்க, இவையல்லாவற்றுக்கும் மேலாக எம்.கே.டி.தியாகராஜபாகவதரே படத்தை டைரக்டும் செய்தார். ஆனால், துரதிஷ்டவசமாக இப்படம் தோல்வி அடைந்துவிட்டது.

8) சித்தூர் வி. நாகய்யா:

தமிழ் சினிமாவின் பழம்பெரும் பாடக நடிகர் சித்தூர் வி. நாகய்யா. இசைஞானமும் இனிய குரலும் சிறந்த நடிப்புத்திறனும் ஒருமித்தவர் அவர். தெலுங்கில் பல படங்களில் நடித்ததுடன் தியாகய்யா(1946), நா இல்லு (1953), ராமதாசு (1969) ஆகிய படங்களின் இயக்குநராகவும் பணிபுரிந்துள்ளார்.

தமிழ் சினிமாவில் 1941-இல் வெளிவந்த ‘அசோக்குமார்’ திரைப்படத்தில் அறிமுகமானார். தொடர்ந்து தமிழில் மீரா(1945), ஏழைபடும்பாடு (1950), தாய்உள்ளம்(1952), எதிர்பாராதது(1954), அமரதீபம்(1956) போன்ற பல்வேறு படங்களில் தன் நடிப்பின் முத்திரையைப் பதித்தார். தமிழில் அவர் இந்தியா தயாரிப்பில் 1953-இல் வெளிவந்த ‘என் வீடு’ என்ற திரைப்படத்தை இயக்கினார். காலத்தை வென்ற கானங்கள் கொண்ட கலைப்படைப்பு இது.

9) டி.ஆர். மகாலிங்கம்:

அக்கால சங்கீத சாம்ராட்டான எஸ்.ஜி. கிட்டப்பாவுடன் ஒப்பிடுமளவிற்கு குரல்வளம் படைத்தவர் டி.ஆர். மகாலிங்கம். சோழவந்தானுக்கு தெற்கே உள்ள தென்கரை இவரது ஊர். 1938-ஆம் ஆண்டில் வெளிவந்த நந்தகுமார் என்ற திரைப்படத்தில் யுகதர்ம முறையே என்ற பாடலைப் பாடியவாறே திரையில் அறிமுகமானவர் இவர்.

1945-ஆம் ஆண்டில் ஏ.வி.எம். தயாரிப்பில் வெளிவந்த ‘வள்ளி’ இவரைப் பிரபலப்படுத்தியது. நாம் இருவர்(1947), ஞானசெளந்தரி(1948), மாலையிட்டமங்கை (1958), திருவிளையாடல் (1965) போன்ற படங்கள் இவர் நடிப்பில் குறிப்பிடத்தக்க ஒரு சில படங்களாகும்.

டி.ஆர். மகாலிங்கம்
டி.ஆர். மகாலிங்கம்

மேலும், சுகுமார் புரொடக்ஸன்ஸ் என்ற படக் கம்பெனி உருவாக்கி திரைப்படங்களை தயாரித்தார்.

மச்சரேகை(1950), மோகனசுந்தரம்(1951), சின்னதுரை (1952) மற்றும் விளையாட்டு பொம்மை (1954) ஆகிய படங்களை தயாரித்தார். ஆனால், எல்லா படங்களும் தோல்வியைத் தழுவின. இதில் 1952-ஆம் ஆண்டில் வெளியிட்ட சின்னதுரை திரைப்படத்தை இவர் இயக்கினார்.

எஸ். வரலட்சுமியுடன் இணைந்து இவர் நடித்த இப்படம் வடுவூர் துரைசாமி அய்யங்காரின் நாவலைத் தழுவி எடுக்கப்பட்டது. ஆனால், பலனளிக்காமல் போயிற்று.

10) கெம்ப்ராஜ் அர்ஸ்:

கன்னட மாநிலத்தைச் சார்ந்த கெம்ப்ராஜ் அர்ஸ் தமிழிலும் சில படங்களில் நடித்ததுடன் டைரக்டும் செய்திருந்தார். இவரது கெம்ப்ராஜ் புரோடக்சன்ஸ் சார்பில் ராஜவிக்ரமா(1950), கற்கோட்டை (1954), அழகர் மலைக்கள்ளன் (1959), மற்றும் நளதமயந்தி (1959) என்ற படங்களை தயாரித்து வெளியிட்டார்.

கெம்ப்ராஜ் அர்ஸ்
கெம்ப்ராஜ் அர்ஸ்

இதில் அழகர் மலைக்கள்ளன் படத்தைத் தவிர மற்ற படங்களில் எம்.வி.ராஜம்மா, கிருஷ்ணகுமாரி, பானுமதி ஆகியோரோடு ஜோடி சேர்ந்து நடித்ததுடன் படங்களை இயக்கியுமிருந்தார். அழகர் மலைக்கள்ளன் படத்தைப் பொறுத்தமட்டில் பாலாஜி, மாலினி, விஜயகுமாரி நடிக்க கெம்ப்ராஜ் இயக்கியிருந்தார்.

‘நிலவும் தாமரையும் நீயம்மா’ என்ற வாலியின் முதல்பாடல் இப்படத்தில்தான் இடம்பெற்றது

11) ஜெமினி கணேசன்:

தமிழ் சினிமா உலகில் ‘காதல் மன்னன்’ என்ற பட்டம் பெற்றவர் நடிகர் ஜெமினி கணேசன். 1947-இல் ‘மிஸ்மாலினி’ திரைப்படத்தில் சிறிய பாத்திரமேற்று அறிமுகமானார். திரையுலகில் நீண்டநெடும் பயணமாக 1998 வரை நடித்தார். 1998-இல் வெளிவந்த ‘நாமிருவர் நமக்கிருவர்’, ‘கொண்டாட்டம்’ ஆகிய இருபடங்களுமே அவர் நடித்த கடைசி படங்களாகும். மனம்போல மாங்கல்யம் (1953), மிஸ்மாலினி(1955), கணவனே கண் கண்ட தெய்வம்(1955), பெண்ணின் பெருமை(1956), மாயாபஜார் (1957), வஞ்சிக்கோட்டை வாலிபன் (1958), கல்யாணப்பரிசு(1959), கொஞ்சும் சலங்கை(1962), பணமா பாசமா(1968), குறத்திமகன் (1972) போன்ற பல படங்களில் முக்கியமாக சொல்லலாம்.

ஜெமினி கணேசன்
ஜெமினி கணேசன்

இப்படங்கள் ஜெமினி கணேசனின் நடிப்பாற்றலுக்கு கட்டியம் கூறுகிறது. 1976-ஆம் ஆண்டில் ஜெமினி கணேசுக்கு டைரக்டராகும் வாய்ப்பு கிடைத்தது. இவ்வாண்டில் ஜயேந்திரா மூவிஸ் இதயமலர் என்ற திரைப்படத்தை எடுத்து வெளி யிட்டது.

இப்படத்தின் கதையை தாமரை மணாளன் எழுதியிருந்தார். ஜெமினி கணேசன் கதாநாயகனாகவும் செளகார்ஜானகி, கமலஹாசன் முதலானோர் அவருடன் சேர்ந்து நடித்தார்கள். இந்தப் படத்தை ஜெமினி கணேசன், தாமரை மணாளனுடன் சேர்ந்து இயக்கினார். இவர் இயக்கிய முதலும் முடிவுமான படமிது.

12) எஸ்.எஸ். ராஜேந்திரன்:

பராசக்தி(1952) தொடங்கி அன்பின் முகவரி (1985) முடிய 74 படங்களில் எஸ்.எஸ். ராஜேந்திரன் நடித்தார். இதுதவிர ராஜாளி உட்பட 5 படங்களில் கெளரவ வேடமேற்றிருந்தார். பராசக்தி (1952), மனோகரா (1954), ரத்தக்கண்ணீர் (1954), தை பிறந்தால் வழி பிறக்கும்(1958), சிவகங்கைச் சீமை(1959), தெய்வப்பிறவி (1960),குமுதம்(1961), மணப்பந்தல் (1961), ஆலயமணி(1962), வானம்பாடி (1963),பூம்புகார் (1964), அவன் பித்தனா(1966), போன்றவை எஸ்.எஸ். ராஜேந்திரனின் பேர் சொல்லும் படங்களாக அமைந்தன. இப்படங்களில் உணர்ச்சிபொங்க நடித்து ரசிகர்களின் பேராதரவைப் பெற்றவர். நடிகராக மட்டுமில்லாது இரு படங்களுக்கு இயக்குநராகவும் இருந்திருக்கிறார்.

எஸ்.எஸ். ராஜேந்திரன்
எஸ்.எஸ். ராஜேந்திரன்

இவ்விருபடங்களுமே இவரது சொந்தத் தயாரிப்பாகும். 1960-இல் எஸ்.எஸ்.ஆர் பிக்சர்ஸ் எஸ்.எஸ். ராஜேந்திரன், விஜயகுமாரி, பிரேம் நஜீர், எம். என். ராஜம் ஆகியோரைக்கொண்டு ‘தங்கரத்தினம்’ என்ற பெயரில் ஒரு திரைப்படத்தைத் தயாரித்து திரையிட்டது. இப்படத்தை எஸ்.எஸ். ராஜேந்திரன்தான் இயக்கினார். அடுத்து ‘மணிமகுடம்’ என்ற திரைப்படத்தை எஸ்.எஸ்.ஆர் பிக்சர்ஸ் தயாரித்து 1966-இல் வெளியிட்டது. இப்படத்தில் எஸ்.எஸ்.ஆர்-உடன் விஜயகுமாரி, ஜெயலலிதா, எம்.என்.நம்பியார் முதலியோர் நடித்தனர். இந்தப் படமும் எஸ்.எஸ். ராஜேந்திரன் இயக்கத்தில்தான் வெளிவந்தது.

13) எம்.ஜி.ஆர்:

ஒரு நடிகராக எம்ஜிராமச்சந்திரனின் திரையுலக நெடும்பயணம் அளப்பரியது, ஆற்றல் மிக்கது. நடிப்பு, இசை, பாடல், கதை, எடிட்டிங், கேமரா என்று திரையுலகில் சகல நுணுக்கங்களையும் தன் விரல் நுனியில் வைத்திருந்த ஒரு அசாதாரணமான கலைஞர் அவர்.1947-இல் ‘ராஜகுமாரி’ திரைப்படத்தில் கதாநாயகனாக உயர்ந்து கடைசியாக அவர் அவர் நடித்து 1978-இல் வெளிவந்த ‘மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன்’ வரை அவர் புகழ் நீடித்தது.

எம்.ஜி.ஆர். நடித்த 133 படங்களில் 115 படங்களில் கதாநாயகனாகவே நடித்தார். நடிப்பைத் தவிர தன் திறனை டைரக்சன் துறையிலும் வெளிப்படுத்தினார் எம்.ஜி.ஆர்.

1958-ஆம் ஆண்டில் எம்.ஜி.ஆர். பிக்சர்ஸ் என்ற தன் சொந்த நிறுவனத்தில் ‘நாடோடி மன்னன்’ என்ற திரைப்படத்தைத் தயாரித்தார். இப்படத்தை பிரபல இயக்குநர் கே. ராம்நாத் இயக்குவதாக இருந்தது. அவர் இறந்ததால் எம்.ஜி.ஆர். அந்த பொறுப்பை ஏற்று படத்தை இயக்கினார். படத்தின் முதல் கதாநாயகியாக பி. பானுமதியும் இரண்டாம் கதாநாயகியாக பி. சரோஜாதேவியும் நடித்தனர். எம்.ஜி.ஆர். நாடோடி மற்றும் மன்னனாக இருவேடங்கள் ஏற்றார். உணர்வு பூர்வமான நாடோடி வீரனாகவும் அலட்சியப் போக்குடைய ஆனால் நல்ல மனம் உடைய மன்னன் மார்த்தாண்டனாகவும் அற்புதமாக எம்.ஜி.ஆர். நடித்திருந்தார். மார்த்தாண்டன் பாத்திரத்தில் நாசியை விரல்களால் நீவி உறிஞ்சும் அவரது ஸ்டைல் ரசிகர்களை லயிக்கச் செய்தது. இப்படம் எம்.ஜி.ஆருக்கும் பெரும் பணச்செலவை ஏற்படுத்தியது. படம் வெற்றி பெற்றால் நான் மன்னன்,தோல்வி அடைந்தால் நாடோடி என்று எம்.ஜி.ஆர். சொன்னதாக ஒரு பத்திரிக்கைத் தகவல் உண்டு. எம்.ஜி.ஆரின் அனுபவமும், பட்டறிவும், உழைப்பும் சேர்ந்து படத்தை மகத்தான வெற்றி பெறச் செய்தது. தமிழ்த்திரை வானில் இன்று வரையில் பட்டொளி வீசி பறந்து கொண்டிருக்கிறது ‘நாடோடி மன்னன்’ தந்த வெற்றிக்கொடி.

எம்.ஜி.ஆர்
எம்.ஜி.ஆர்

1978-இல் சோளீஸ்வரர் கம்பைன்ஸ் என்ற திரைப்பட நிறுவனம் ‘மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன்’ என்ற படத்தை உருவாக்கி வெளியிட்டது. அகிலன் எழுதிய ‘கயல்விழி’ என்ற நாவலே படக்கரு. எம்.ஜி.ஆர்., எம்.என். நம்பியார், பி.எஸ்.வீரப்பா, லதா, பத்மப்ரியா ஆகியோர் நடித்திருந்தனர் இந்தப் படத்தை எம்.ஜி.ஆர்.தான் டைரக்ட் செய்தார். ‘தாயகத்தின் சுதந்திரமே எங்கள் கொள்கை’ என்று எம்.ஜி.ஆர். பாடுவதாக அமைந்த காட்சி படத்தின் ஹைலைட்டாக அமைந்தது. இப்படம் வளர்ந்துவந்த காலத்திலேயே எம்.ஜி.ஆர். தமிழ்நாட்டு அரசியலில் முழுகவனம் செலுத்த வேண்டிய நிலை இருந்தது. எனவே படத்தை முடித்துக்கொடுத்து திரையுலகில் இருந்து பிரியாவிடை பெற்றார். இப்படம் திரையிடப்படும் போது எம்.ஜி.ஆர். சென்னை கோட்டையில் முதலமைச்சராக பதவியேற்று விட்டார்.

சாந்தாராம் (ஸ்திரி)
சாந்தாராம் (ஸ்திரி)

14) வட இந்திய நடிக – இயக்குநர்கள்:

வட இந்தியாவின் ஈடற்ற தயாரிப்பாளர் - இயக்குநர் வி. சாந்தாராம், பூனேயில் பிரபாத் பிலிம் கம்பெனி என்ற ஸ்டூடியோவை நிறுவி உலகையே திரும்பிப் பார்க்க வைக்கும் திரைப்படங்களைக் கொடுத்தார். திரையுலக முன்னோடியான வி. சாந்தாராம் பர்ச்சாயின்(1952), ஜனக் ஜனக் பாயல் பஜே (1955), தோ ஆங்க்கேன் பாரஹ் ஹாத் (1957), ஸ்திரி (1961) போன்ற பிரபாத் பிலிம் கம்பெனி தயாரிப்பில் கதாநாயகனாக நடித்ததுடன் வெற்றிகரமாக இயக்கவும் செய்தார்.

வட இந்தியா மட்டுமின்றி தென்னிந்தியத் திரை உலகிலும் தன் காலடியைப் பதித்தது பிரபாத் பிலிம் கம்பெனி. இந்நிறுவனம் 1935 -ஆம் ஆண்டில் தமிழில் சந்திரசேனா (ராவணன்) என்ற புராணப்படத்தை தயாரித்தது. இப்படத்தை வி. சாந்தாராம் இயக்கியிருந்தார். மேலும், 1949-ஆம் ஆண்டில் தனது ராஜ்கமல் கலா மந்திர் லிமிடெட் சார்பில் ‘நம் நாடு’ என்ற படத்தைத் தயாரித்து இயக்கி வெளியிட்டார்.

அல்பேலா(1951), சோரி சோரி (1956) போன்ற பல இந்திப் படங்களில் நடித்தும் இயக்கியும் புகழ்பெற்றவர் பகவான். தென்னிந்திய யுனைடெட் ஆர்டிஸ்ட் கார்ப்பரேஷன், பம்பாய் ‘ஜயக்கொடி’ என்ற திரைப்படத்தைத் தயாரித்தது. இந்தத் தமிழ்ப்படத்தை பகவான்தான் டைரக்ட் செய்தார்.

மேலும் இதே பம்பாய் படக் கம்பெனி 1941-இல் ‘வனமோகினி’ என்ற திரைப்படத்தை வெளியிட்டது. இந்தப் படத்தை பகவான்தான் இயக்கினார். படத்தில் எம்.கே. ராதாவுடன் அந்த காலத்து வசீகர நடிகை தவமணி தேவி வனமோஹினியாக நடித்தார்.

திரைப்பட ஆய்வின் ஒரு பகுதியாக இக்கட்டுரையும் அமைவதில் எனக்கு மகிழ்ச்சி. நினைவில் இந்தப் பாட்டு அலை மோதுகிறது. ‘காலம் சிறிது, கனவுகள் பெரிது கவலைப்படுவதேன் மனது...’ கட்டுரையை முடிக்கிறேன்.

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடர: Facebook, Twitter, Youtube, Instagram

logo
Andhimazhai
www.andhimazhai.com