ஒலிம்பிக் பதக்கத்தைக் குறிவைக்கும் சஞ்சனா

ஒலிம்பிக் பதக்கத்தைக் குறிவைக்கும் சஞ்சனா
Published on

வில்வித்தையில் இளம் வீராங்கனையான சஞ்சனாவுக்கு இப்போது வயது 10. ஆனால் இந்த 10 வயதுக்குள் வில்வித்தையில் பல்வேறு சாதனைகளை படைத்துள்ளார் சஞ்சனா.

முதல் முறையாக கடந்த 2018-ம் ஆண்டில் தனது 3 வயதிலேயே மூன்றரை மணி நேரத்தில் 1,111 அம்புகளை துல்லியமான இலக்கில் செலுத்தி சாதனை படைத்திருக்கிறார் சஞ்சனா. இதைத்தொடர்ந்து 2021-ஆம் ஆண்டில் 13.15 நிமிடங்களில் 11 அம்புகளை துல்லியமாக இலக்கில் செலுத்தி சாதனை படைத்திருக்கிறார். இதற்காக டாக்டர் பட்டம் உள்ளிட்ட பல்வேறு விருதுகளை வென்றுள்ள சஞ்சனா, பள்ளி கல்லூரிகளுக்கு சென்று அங்குள்ள மாணவிகளுக்கு நம்பிக்கையளிக்கும் வகையில் சொற்பொழிவுகளையும் ஆற்றி வருகிறார்.

அவர் இத்தனை சாதனைகளையும் படைக்க காரணமாக இருந்தவர், சில மாதங்களுக்கு முன் காலமான கராத்தே வீரரும், வில் வித்தை பயிற்சியாளருமான ஹிசைனி. அவர்தான் சிறுவயதில் இருந்தே சஞ்சனாவுக்கு பயிற்சி கொடுத்துள்ளார்.

“சிறுவயதில் என் அப்பாவின் நண்பர் எனக்கு ஒரு வில்-அம்பை பரிசாக கொடுத்தார். அது ஒருநாள் உடைந்துவிட்டது. அதேபோல் ஒரு வில் அம்பு வேண்டும் என்று நான் அடம்பிடித்திருக்கிறேன். வில் அம்பைத் தவிர வேறு எந்த விளையாட்டுப் பொருளையும் நான் ஏற்கவில்லை.

இதனால் எனக்கு இந்த விளையாட்டில் ஆர்வம் இருக்கலாம் என்று நினைத்து வில்வித்தை பயிற்சியாளரான ஷிஹான் ஹுசைனியிடம் அப்பா அழைத்துப் போனார். என் கண்களில் ஒரு லட்சிய வெறி இருப்பதாக சொன்ன ஹு (ஷிஹான் ஹுசைனியை இப்படித்தான் அழைக்கிறார்) எனக்கு பயிற்சி கொடுக்க தொடங்கினார்” என்று தான் வில்வித்தையில் நுழைந்த கதையை சொல்கிறார் சஞ்சனா.

அன்றிலிருந்து வில்வித்தையில் பல்வேறு சாதனைகளை படைக்கத் தொடங்கியுள்ளார் சஞ்சனா. கொரோனா காலத்தில் ஆணி மீது நின்று கீழே இருக்கும் தண்ணீரைப் பார்த்து மேலே இருக்கும் கொரோனா பொம்மை மீது அம்புகளை எய்தது, ஆணி மீது நின்றுகொண்டே இலக்குகளை தாக்கியது என்று பல்வேறு சாதனைகளைச் செய்துள்ளார் சஞ்சனா. இதனால் பல பள்ளிகளில் அவரை சொற்பொழிவாளராகவும் அழைத்துள்ளனர்.

“நான் 4 வயது குழந்தையாக இருந்தபோது என் அப்பா என்னை ஒரு பணக்கார பள்ளியில் சேர்க்க நினைத்தார். ஆனால் அவர்கள் கேட்ட நன்கொடையை என்னால் அவரால் கொடுக்க முடியவில்லை. பின்னாளில் நான் அதே பள்ளியில் நடந்த ஒரு நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டேன்’ என்ரு மகிழ்ச்சியோடு சொல்கிறார் சஞ்சனா.

இந்தியா ஒலிம்பிக் போட்டியில் வில்வித்தையில் ஒரு பதக்கத்தையாவது வெல்ல வேண்டும் என்பதே மறைந்த ஷிஹான் உசைனியின் கனவு. அந்த கனவை நிறைவேற்ற 2032-ஆம் ஆண்டில் தான் நிச்சயம் பதக்கம் வெல்வேன் என்று உறுதியாக சொல்கிறார் சஞ்சனா. சஞ்சனாவின் கனவு நிறைவேற, இப்போதைக்கு அவரது படிப்பு செலவுகளை ஏற்றுக்கொண்டுள்ளார் கல்வியாளர் ஐசரி கணேசன்.

தனக்கு கிடைக்கும் பொன்னாடைகளை வைத்து ஏழைக் குழந்தைகளுக்கு உடை தைத்துக் கொடுப்பது, அனாதை பிணங்களை எடுத்து அடக்கம் செய்வது போன்ற பணிகளையும் தந்தை பிரேம்நாத் உதவியுடன் செய்துவருகிறார் சஞ்சனா. 10 வயது பெண்ணான சஞ்சனாவின் ஊக்கத்துக்கும், தயாள குணத்துக்கும் ஒரு சல்யூட்.

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடரFacebookTwitterYoutubeInstagram

logo
Andhimazhai
www.andhimazhai.com