கொரோனா காலம் பலரது வாழ்க்கையை அழித்திருக்கிறது. அதேநேரத்தில் சிலருக்கு நல்லதையும் செய்திருக்கிறது. இதில் செஸ் வீராங்கனையான சர்வாணிகா இரண்டாவது ரகத்தைச் சேர்ந்தவர்.
கொரோனா காலகட்டத்தில் வீட்டில் பரபரவென ஏதாவது செய்துகொண்டிருந்த சர்வாணிகாவை அமைதிப்படுத்த அவரின் அம்மா அன்புரோஜா செஸ் விளையாட்டை கற்றுக்கொடுத்துள்ளார். அதைக் கெட்டியாக பிடித்துக்கொண்ட சர்வாணிகா, இப்போது 10 வயதுக்கு உட்பட்டோருக்கான பிரிவில் உலக சாம்பியன் பட்டத்தை வென்றிருக்கிறார். இந்த வகையில் சர்வாணிகாவுக்கு மட்டுமின்றி இந்தியாவுக்கே நல்லது செய்திருக்கிறது கொரோனா.
சர்வாணிகாவின் சொந்த ஊர் அரியலூர் மாவட்டத்தில் உள்ள சிறிய கிராமம். அவருடைய அக்கா ரட்ஷிகா மாவட்ட அளவிலான செஸ் வீராங்கனை என்பதால் அவருக்கு கொரோனா காலத்தில் வீட்டில் பயிற்சி அளித்துள்ளார் அம்மா அன்புரோஜா. அப்போது அடிக்கடி பல்வேறு விஷயங்களைக் கேட்டு குறுக்கே வந்து சர்வாணிகா தொந்தரவு செய்ய, அவரது கவனத்தை திசைதிருப்ப ரட்ஷிகா செஸ் விளையாட்டை கற்றுக்கொடுத்துள்ளார்.
சில நாள்களிலேயே தன் அக்காவைவிட சிறப்பாக ஆடத் தொடங்கியுள்ளார் சர்வாணிகா. இதைத்தொடர்ந்து அரியலூரில் சசிகுமார் என்பவரிடம் அவருக்கு முதலில் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. பிறகு மதுரையில் உள்ள கோல்டன் நைட் செஸ் அகாடமியிலும், ஹட்சன் செஸ் அகாடமியிலும், பெரம்பூர் துளிர் செஸ் அகாடமியிலும் அப்பா சரவணனும், அம்மா அன்புரோஜாவும் அவரைச் சேர்த்துள்ளனர். இந்தப் பயிற்சிகளால் மெருகேறிய சர்வாணிகாவின் வெற்றிப் பயணம் 10 வயதுக்கு உட்பட்டோருக்கான செஸ் போட்டியில் உலக சாம்பியனாகும் வரை தொடர்ந்திருக்கிறது.
செஸ் விளையாட்டில் ராணியை எதிர்த்துவரும் காய்களை வெட்டித் தள்ளுவதுபோல் தன் எதிராளிகளை வெட்டிச் சாய்த்து வெற்றி மகுடம் சூடி நிற்கிறார் சர்வாணிகா. 7 வயதுக்கு உட்பட்ட ஆசிய செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் சாம்பியன், ஜார்ஜியாவில் நடந்த 8 வயதுக்கு உட்பட்டோருக்கான போட்டியில் மூன்றாம் இடம், துபாயில் நடந்த ஏஷியன் யூத் சாம்பியன்ஷிப் போட்டியில் வெள்ளிப் பதக்கம், ஜார்ஜியாவில் நடந்த உலகக் கோப்பை போட்டியில் ராபிட் பிரிவில் சாம்பியன் பட்டம் என்று சர்வாணிகாவின் வீட்டில் உள்ள அறை, அவர் சர்வதேச அளவில் வாங்கிவந்த பதக்கங்களாலும், கோப்பைகளாலும் நிரம்பி வழிகிறது.
”எனக்கு கொடிகள்னா ரொம்ப பிடிக்கும். சின்ன வயசுல எங்க அம்மா எனக்கு எல்லா நாட்டு கொடிகளையும் அறிமுகப்படுத்தி இருக்காங்க. அந்தக் கொடிகளுக்கெல்லாம் மேல இந்தியாவோட கொடி பறக்கணும்னு ஆசைப்படுவேன். ஒலிம்பிக் போட்டியில தங்கம் ஜெயிச்ச நாட்டோட கொடி மேல பறக்க, வெள்ளி. வெண்கலம் ஜெயிச்ச நாடுகளோட கொடி கீழ பறக்குமில்லையா. அதேமாதிரி நானும் ஜெயிச்சு இந்தியக் கொடியை மேல பறக்க விடணும்கிறதுதான் எனக்கு ஆசை” என்று 10 வயதிலேயே தன் கனவை தெளிவாகச் சொல்கிறார் சர்வாணிகா.
சர்வாணிகாவுக்கு மற்றொரு கனவும் இருக்கிறது. அது குகேஷைப் போல் சிறிய வயதிலேயே செஸ் சாம்பியன் பட்டத்தை வெல்ல வேண்டும் என்பது. குகேஷ் படிக்கும் வேலம்மாள் பள்ளியில் சர்வாணிகா படிப்பதுகூட இதற்கு ஒரு காரணமாக இருக்கலாம்.
“குகேஷ் அண்ணா உலக சாம்பியன்ஷிப் போட்டிக்காக போகும்போது நான் காமன்வெல்த் போட்டியில் பங்கேற்கச் போயிருந்தேன். அதற்கு முன் பள்ளி நிகழ்ச்சியில் அவரைச் சந்தித்தேன். அப்போது அவர் வெற்றி பெற வாழ்த்துச் சொன்னேன். பதிலுக்கு அவரும் என்னை வாழ்த்தினார். அது எனக்கு புது உத்வேகத்தை அளித்தது” என்கிறார் சர்வாணிகா.
செஸ் விளையாட்டுக்கு அடுத்ததாக சர்வாணிகாவுக்கு மிகவும் பிடித்த விஷயம் பேனா. எந்த ஊருக்குப் போனாலும் அந்த ஊரில் விற்கும் விசேஷமான பேனாக்களை வாங்கி பையை நிறைத்துவிடுவாராம்.
சர்வதேச அளவில் நடக்கும் போட்டிகளின்போது செஸ் விளையாட்டைவிட சர்வாணிகா எதிர்கொள்ளும் முக்கிய பிரச்னை உணவு. பல நாடுகளில் அரிசி உணவு கிடைக்காமல் ஏங்கிப்போயிருக்கிறார் சர்வாணிகா.
அவர் சந்திக்கும் மற்றொரு சவால் ஸ்பான்சர்களை பிடிப்பது. இந்தியா சார்பாக கலந்துகொள்ளும் போட்டிகளுக்கு அரசு செலவு செய்தாலும், ஃபிடே ரேங்குக்கான போட்டிகளுக்கு சொந்த செலவில் செல்லவேண்டி இருக்கிறது. அதற்கு போதுமான ஸ்பான்சர்கள் கிடைக்காததால் அவரது பெற்றோருக்கு அந்தச் செலவு பெரும் சவாலாக இருக்கிறது.
கிரிக்கெட் போன்ற விளையாட்டுகளுக்கு பெரும் அளவில் செலவு செய்யும் நிறுவனங்கள், இதுபோன்ற இளம் சாம்பியன்களின் பயணம் தொடர வழி செய்தால் நன்றாக இருக்கும்.