சிங்க நடை போட்டு...

Walking
Published on

நான் பிறந்து வளர்ந்த கிராமம் திருவண்ணாமலையிலிருந்து நாலுமைல் தொலைவில் உள்ளது. எங்கள் ஊர்ப்பள்ளிக்கூடத்தில் ஐந்தாம் வகுப்புவரை மட்டுமே. திருவண்ணாமலைக்கு ஆறாவது படிப்பதற்கு அந்தக் காலத்தில் அனுப்பப்பட்டவர்களில் நானும் ஒருவன். காலையில் நாலுகல், மாலையில் நாலுகல் எனத் தினந்தோறும் எட்டுமைல் பி.யு.சி. படிப்புவரை ஏழாண்டுகள் நடந்தேசென்று படித்தவன்நான் என்று மார்தட்டிக்கொள்வதுண்டு. மேல்படிப்புக்கு வந்தபோதும் பஸ்ஸுக்கு செலவழிப்பதை மிச்சம் பிடிக்கவேண்டி அவ்வப்போது நடந்தே செல்வது வழக்கம். நடப்பது என்பது அனிச்சைச்செயல்போல என்கால்களுக்கு மிகவும் பழகிப்போன ஒன்று.

பிரச்சினையே 1996ஆம் ஆண்டின் மத்தியில் நான் சென்னை கலைஞர் கருணாநிதி நகரில் உள்ள சொந்த வீட்டில் குடிபுகுந்த பின்புதான் ஆரம்பித்தது. கே.கே.நகர் அதாவது சென்னை மாநகரின் மேற்குப்பகுதியில் உள்ள ஒருவித்தியாசமான குடியிருப்புப் பகுதியாகும். இங்கு ஓரிரு தெருக்கள் தவிர மற்றவை பல தரப்பட்ட வீடுகளும், அகலம் குறுகலானவை.

எங்களுக்கு இங்கு லட்சுமணசாமி, ராமசாமி சாலைகளையும், விட்டால் வேறுவழியில்லை. இந்த இரண்டு தெருக்கள்தான் நடைப்பயிற்சித் 'தடகள'மாகும். சுயநிதிக்கல்லூரிகள், மென்பொருள் நிறுவனங்கள் பெருகிவிட்ட-நிலையில், இந்த இரண்டு தெருக்களிலும் ஐந்துமணிக்கே பேருந்துகள் புற்றீசல்போல வரத்தொடங்கிவிடும். இவற்றின் புயல்வேகத்தைக் கண்டுமிரண்டு, உயிரைக்கையில் பிடித்தவண்ணம்தான் நாம் நடக்கவேண்டும்.

எனவே பெரிய தெருக்களை விட்டுவிட்டு, சிறிய தெருக்கள் வழியாக நடக்க ஆரம்பித்தோம். இதிலும் பிரச்னைகள் வந்தன. முதலில் தெருநாய்கள். ஒவ்வொரு சந்துக்கும் ஒருவர் அதிகாரம் வகிப்பார். நாம் அந்த சந்தில் நுழைந்தவுடனே நம்மை அச்சுறுத்தும் பார்வையோடு பின்தொடர்வார். தண்டுவடம் சில்லிட நாம் எவ்வித சலனமும் இல்லாமல் நடந்துசென்று அடுத்ததெருவுக்குள் நுழைந்தவுடன் நம்மை எச்சரித்து அனுப்புவதுபோல் அவர்பார்வை இருக்கும். அடுத்த தெருவில் வேறுஒருவர் இல்லாதுபோவது நமது அதிர்ஷ்டம். இந்த மிரட்டலுக்கு வீட்டிலேயே முடங்கிக்கிடப்பது உசிதம் எனத்தோன்றும். தெருநாய்கள் இல்லாத சிறிய தெருக்கள் அடங்கிய அங்கு ஒருபகுதியைக் கண்டுபிடித்து நடைப்பயிற்சியைத் தொடர்ந்தோம். அங்கும் ஒரு விநோதமான பிரச்சினை தோன்றியது. காலையில் ஆறுமணிவாக்கில் நாங்கள் நடந்துசெல்லும்போது, சிறிய தெருக்களில் வீட்டுக்கெதிரே வாசற்கோலம் போடும் பெண்கள் எங்களை சந்தேகக்கண்ணோடு பார்த்தனர். அது எங்களுக்கு ஒருமாதிரியாகப் போய்விட்டது. நடப்பதையே நிறுத்திவிடலாமா என்றுகூட எனக்குத் தோன்றியது.

ஒருநாள் காலை நண்பர் பாலமுருகன் வீட்டின்அருகில் ஒரு திருப்பத்தில் நான் ஏதோ சிந்தனையில் சென்றுகொண்டிருந்தபோது சைக்கிளில் வந்த ஒருசிறுவன் என்மேல்மோதினான். சுதாரித்து எழுந்து பார்த்தபோது எனக்கு ஒன்றும் அடிபடவில்லை என்பதை உணர்ந்தேன். ஆனால், ஒருசில மணிநேரத்தில் என் இடதுகால் மரத்துப்போனதை அறிந்து டாக்டரைப் பார்த்தேன். கீழே விழுந்ததில் என் இடுப்புப்பகுதியில் முதுகுத் தண்டுவடத்தின் ஒரு வில்லை (disc) சற்று விலகியிருப்பதாக டாக்டர் என்னிடம் சொன்னார். கிட்டத்தட்ட நாலுவாரம் படுக்கையிலேயே கிடந்தும் பலனளிக்காததால் வேறு வழியின்றி, தண்டுவடத்தில் அறுவைச்சிகிச்சை செய்யப்பட்டது. அதோடு என் நடைப்பயிற்சிக்கும் முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது.

ஆனால் இந்த 'நடைபந்தம்’ என்னை விட்டபாடில்லை. பூரண ஓய்வுக்குப்பின், முன்புபோல் ஓடியாடி சுறுசுறுப்பாக இருக்கவேண்டுமென்றால் தினமும் நீண்டதூரம் நடக்கவேண்டும் என்று டாக்டர் வலியுறுத்திச் சொன்னதால் சிறிய இடைவேளைக்குப்பின் நான் மீண்டும் நடக்கத்தொடங்கினேன். இப்போது என் நடைக்களத்தை அசோக்நகருக்கு மாற்றிக்கொண்டேன். அசோக்நகரில் பத்தாவது அவென்யூ நடைப்பயிற்சிக்காரர்களுக்கு ஒரு வரப்பிரசாதமாகும். நீண்ட, அகண்ட அந்த சாலை காலாற நடப்பதற்கு மிகவும் வசதியாக இருந்தது.

எங்கள் நடைப்பயிற்சி வழித்தடத்தில் நண்பர் ராமகிருஷ்ணனின் வீடு உள்ளது. அதற்கெதிரே சாலைக்கு மத்தியில் ஒரு சிறிய விநாயகர் கோவில் உள்ளது. மூர்த்தி சிறியதென்றாலும் அதன் கீர்த்தி பெரியது. தினசரி பூஜைகள் நடத்தப்பட்டு, அப்பகுதி மக்களிடையே பேரும் புகழும் பெற்ற கோயிலாக அது விளங்கிவருகிறது. நாங்களும் அந்தக் கோயிலைத் தாண்டும்போதெல்லாம், “அப்போதைக்கு இப்போதே சொல்லி வைத்தேன் நாராயணா" என்பது போல விநாயகப் பெருமானுக்கு ஒரு கும்பிடு போட்டுவைப்போம்.

ஒரு நாள் நான் அவ்வாறு கும்பிடுபோட முயல்கையில் என்பிடரியை யாரோ பலமாகத் தட்டித் தள்ளியதை உணர்ந்தேன். சுதாரித்துக்கொண்டு கோபத்துடன் திரும்பிப்பார்த்தால் யாருமில்லை. ஆனால், எனக்கு மேலே ஒரு காகம் பறந்து சென்று கொண்டிருந்ததைப் பார்த்தேன். அது வேகமாகவந்து என் பின்னந்தலையில் தன்கால்களால் மோதியதைத் தான்பார்த்ததாக என்னுடன் வந்த நண்பர் தர்மதாசன் என்னிடம் சொன்னபோது நான் பெரிதும் அதிர்ச்சியடைந்தேன். “சனி பகவானின் வாகனம் காகமாயிற்றே; அது நம்மைத் தாக்கினால் அந்த சனீஸ்வரனே நம்மைத் தாக்கியதாகத்தானே அர்த்தம்?" என்றெல்லாம் என் மனம் அலைபாய்ந்தது. திடீரென என்மனம் சோர்வடைந்து, என் கால்கள் ஓய்ந்துபோனதுபோல் ஆகிவிட்டன. நடைப்பயிற்சியைப் பாதியிலேயே முறித்துக்கொண்டு வீடு திரும்பினோம். வீட்டில் மனைவியிடம் காகத்தின் தாக்குதல் பற்றி சொன்னபோது அவளும் சற்று திடுக்கிட்டாள். இருந்தபோதும் அதை வெளிக்காட்டிக்கொள்ளாமல் 'கோயிலுக்குப் போய் அர்ச்சனை செய்யலாம், எல்லாம் சரியாகிவிடும்' என்று சமாதானப்படுத்தினாள். நானும் வேலை மும்முரத்தில் மூழ்கிப்போய் இந்த சம்பவத்தை மறந்துவிட்டேன்.

அடுத்தநாள் காலை நண்பர் தர்மதாசன் வழக்கம்போல் ஆஜரானார். எனக்கு நேற்றைய காக்கையடி நினைவுக்கு வந்தது. ஒருவிதத் தயக்கத்துடன் வீட்டைவிட்டு வெளியேவந்தபோது ஒருகாகம் என் தலைக்குமேல் தாழ்வாகப் பறந்துசென்று, சாலையோரத்தில் இருந்த குப்பைத்தொட்டியின்மீது அமர்ந்து இரை தேடும் முயற்சியில் இறங்கியது. என்னை மீண்டும் தாக்குவதற்காகவே இந்தக் ்காக்கை வந்திருக்குமோ என்ற அச்சத்தில் உடனே காருக்குள் சென்று அமர்ந்து கார்க்கண்ணாடியை உயர்த்திவிட்டேன். அன்றைய நடைபயிற்சி அவ்வளவுதான்! அடுத்த சிலநாள்களுக்கு எனக்கு உடல்நிலை சரியில்லாமற்போகவே அசோக்நகர்சென்று நடப்பது தானாக நின்றுபோனது;

இதற்கிடையில், எங்கள் கே.கே.நகர் பகுதி விநாயகர் கோயில் அருகில் உள்ள சிவன்பூங்காவை மாநகராட்சியினர் மிக்க அழகுபடுத்தி, அதற்குள் ஒருநல்ல, நீண்ட நடைதளத்தையும் ஏற்படுத்தினர். அங்கு சென்றபோதும் ஒரு காக்கை என்தலைமீது 'விர்' ரென்று பறந்து சென்றது. அது பறந்தவேகமும், என்னை உராய்வதுபோல வந்தவிதமும் என்தலைமுடியைக் கலைத்துவிட்டன. இது தற்செயலாக நடந்த ஒரு சம்பவம் என்றாலும், இந்தக் காகங்கள் ஏன் என்னைக் குறிவைத்துத் துரத்துகின்றன என்ற என் கவலைக்கு விடையில்லை. என்‘தலைவிதி’யை நொந்தவண்ணம் பாதியிலேயே நடையை நிறுத்திவிட்டு, வீடுதிரும்பினேன்.

இது நடந்த சிலநாள்களில் புதிதாகக்கட்டிய எங்கள் வீட்டில் இரண்டாவது மாடிக்கு நாங்கள் குடியேறினோம். அதில் மொட்டைமாடியில் நடக்கலாம் என முடிவு செய்தேன். நான் நடையைத் தொடங்கிய அன்று  மீண்டும் காக்கைகள் தாக்கின.  ஒரு காக்கை, 'விர்ர்' என்று என் தலைக்குமேல் உராய்ந்துகொண்டு பறந்து போனது. மேலும் சில காக்கைகள் காம்பவுண்டு சுவர்மேல் அமர்ந்துகொண்டு என்னைநோக்கிக் கத்தின. சத்தம் கேட்டு ஒரு சிறிய காக்கைக்கூட்டமே வந்து சேர்ந்தது.

எல்லாம் சேர்ந்து என்மீது ஒரு திடீர்த்தாக்குதலை நடத்தத் தயாராக இருப்பதுபோல் தோன்றியது. மெதுவாக மாடிப்படிக்கதவைத் திறந்துகொண்டு படிக்கட்டு அறைக்குள் வந்துவிட்டேன். சிலநிமிடங்கள் கழித்து மீண்டும் நான் தலையை வெளியே நீட்டியபோது காக்கைகள் மறுபடியும் கூடி சத்தம்போட்டு என்னை வீட்டுக்குள் விரட்டிவிட்டன. ஏதோ காரணத்தால் நான் அவர்களுடைய பொதுஎதிரியாகக் கருதப்படுகிறேன் என்பதும் தெரிந்துவிட்டது.

பக்கத்திலுள்ள விநாயகர் கோயில் குருக்களின்ஆலோசனைப்படி சனிபகவானுக்கு சிறப்பு அர்ச்சனைசெய்து அவரை 'ப்ரீத்தி' செய்தேன். குருக்கள் சொன்னபடியே, வாராவாரம் கோயிலிலுள்ள சனிபகவானுக்கு பூஜை செய்வதோடு, வீட்டில் காக்கைக்கு சோறுவைக்கவும் ஆரம்பித்தேன். நடப்பதைவிட, காக்கைகளுக்குத் தின்பண்டம் தருவதற்கே என்னையுமறியாமல் நான் அதிக முக்கியத்துவமும் நேரமும் கொடுத்துவந்தேன் என்பது போகப்போக தெரியலாயிற்று.

இப்படி மிகவும் மந்தகதியில் போய்க்கொண்டிருந்த என் நடைப்பயிற்சி(?) மழைக்காலம் வந்தவுடன், பெட்ரோல் தீர்ந்த மோட்டார் வாகனம் போல நின்றுபோனது.

அமெரிக்காவில் எனது இளையமகளுக்கு குழந்தை பிறந்திருக்கிறது என்ற இனிய செய்தி வந்தவுடன் நானும் என் மனைவியும் உடனே அமெரிக்கா செல்ல ஆயத்தமானோம். அமெரிக்காவில் சாலைகள் எல்லாம் அகலமாகவும், தூய்மையாகவும், தரமுள்ளதாகவும் இருக்கும். என் மகள் வீடு இருக்கும் பகுதி மிகவும் அமைதியான, இயற்கை எழில்வாய்ந்த பகுதி. எனவே நான் என் நடைப்பயிற்சியை எவ்விதத் தடங்கலுமின்றி அமெரிக்காவில் செய்யலாம் என மீண்டும் மனக்கோட்டை கட்டலானேன்.

ஒருவழியாக நாங்கள் இருவரும் சிகாகோ சென்று, அங்கிருந்து கார் மூலம் என் மகள் வசிக்கும் வாகீஷா நகருக்குப் போய்ச் சேர்ந்தோம். ஒரு நாள் மாலை என் நடைப்பயணத்தை துவக்கினேன். சென்னையிலிருந்து நடைப்பயிற்சிக்கு என நான் வாங்கி வந்திருந்த 'ஷூ'வை அணிந்துகொண்டு நடக்கலானேன். அகன்ற சாலைகள், இருபுறமும் பச்சைப் புல்வெளிகள், வழிநெடுக சீராக வளர்ந்த மரங்கள்! ஆனால், சாலைகள் ஆளரவமற்று, பசேலென்ற அங்கொன்றும் இங்கொன்றுமாக மோட்டார் வாகனங்கள் மட்டும் கடந்து சென்றன.

நடந்து வீடு திரும்பியபோது முக்கால் மணிநேரமாகியிருந்தது. நான் மகிழ்ச்சியின் திளைத்துப்போனேன். அன்று முதல் தினந்தோறும் காலையிலோ அல்லது மாலையிலோ தவறாமல் நான் குறைந்தது முக்கால் மணிநேரம் நடக்கலானேன்.

இந்தமாதிரி கிட்டத்தட்ட இருபது நாட்கள் ஒழுங்காக நடந்திருப்பேன். ஒருநாள் மாலை சுமார் இருபது நிமிடம் நடந்திருப்பேன். திடீரென்று நான் கையோடு கொண்டு சென்றிருந்த மொபைல் போன் ஒலித்தது. வீட்டிலிருந்து என் மகள்தான் அழைத்தாள். குரலில் லேசான கலவரம் தெரிந்தது. 'வாக்கிங்கை' முடித்துக்கொண்டு நான் உடனே வீடு திரும்பவேண்டும் என்று மகள் தெரிவித்தாள். வெகு தூரம் சென்றிருந்தால் என் மருமகன் காரில் வந்து என்னை அழைத்துப்போகவும் தயாராக இருப்பதாகவும் தெரிவித்தாள். எனக்கு 'திக்' கென்று ஆகி, 'என்ன அவசரம்' என்று கேட்டேன். விஷயம் அவசரம் என்று சொல்லி போனை வைத்துவிட்டாள். 'என்னவோ, ஏதோ' என்று நான் மேற்கொண்டு நடப்பதை நிறுத்திக்கொண்டு வீடு திரும்பினேன். அங்கு என் மனைவி, மகள், மருமகன் ஆகிய மூவரும் டி.வி.முன்பாக எதையோ தீவிரமாகப் பார்த்துக்கொண்டிருந்தார்கள். என்னைப் பார்த்தவுடன் 'அப்பா, இனிமேல் நீங்கள் வெளியில் வாக்கிங் போகவேண்டாம்' என்றாள். எனக்கு ஒரே குழப்பமாக இருந்தது.

என் மகளே தொடர்ந்தாள். 'மில்வாக்கி மிருகக்காட்சி சாலையிலிருந்து ஒரு சிங்கம் தப்பி வெளியில் வந்து அது நாம் இருக்கும் வாகீஷா பகுதியில் தெரிகிறதாம், ஒரு சிலர் அதை நேரில் பார்த்து மிரண்டு போலீசுக்கு போன் செய்திருக்கிறார்கள். டி.வியில் விவரமாக சொல்கிறான், பாருங்கள்' என்றாள்.

பார்த்தேன். ஆனால் எனக்கு இந்த செய்தியில் நம்பிக்கை இல்லை. சிங்கம் எல்லாம் இங்கே வருவதாவது என நான் வீட்டில் உள்ளவர்களின் எச்சரிக்கையை உதாசீனம் செய்துவிட்டு மறுநாள் என் நடையைத் தொடர்ந்தேன். வீட்டை விட்டு வெளியில் வந்தால் தெருக்களில் கார்களைத்தவிர ஒரு ஈ, காக்கையைக்கூடக் காணமுடியவில்லை. என் மகள் குடியிருக்கும் தெருவில் தெற்கு நோக்கிப் போனால் பத்தே நிமிடத்தில் ஓர் அடர்ந்த காட்டுப்புதர் வரும். அங்கு செல்லும்போது எனக்கும் சற்று அச்சம் ஏற்பட்டது. திடீரென்று என் முன்னால் அந்த சிங்கம் தோன்றினால் என்ன ஆவது, எப்படி அதனிடமிருந்து தப்பிப்பது, என்று யோசிக்கலானேன். என் பின்புறம் சிங்கம் வருவதுபோலவே ஒரு பிரமை தொடர, ஒருவழியாக நடைதூரத்தை சுருக்கிக்கொண்டு வீடு திரும்பினேன்.

வீட்டில் என் மகள் டி.வியில் சிங்கத்தை மேலும் சிலர் பார்த்ததாகவும், அந்த மிருகம் நாலைந்து நாட்களாக இரையேதும் இல்லாமல் இருப்பதால் எதை வேண்டுமானாலும் அடித்துக் கொல்லலாம் என்றும் தெரிவித்தனர். நாடு விட்டு நாடு வந்து சிங்கத்துக்கு இரையாக வேண்டுமா என்றாள் என் மனைவி.

அன்று இரவு டி.வியில் பாட்டு கேட்கும்போது முதல் இரண்டொரு பாடல்களுக்குப் பிறகு ஒரு பாட்டு வந்தது. 'சிங்க நடை போட்டு சிகரத்தில் ஏறு' என்பது அந்தப் பாடல். இருக்கிறதா, இல்லையா என்று தெரியாத ஒரு சிங்கம் என் நடையை முடக்கிவிட்டதே என்று நான் வருத்தப்படுவதைத் தவிர என்ன செய்ய முடியும்?

(த.பிச்சாண்டி ஐ.ஏ.எஸ்,  ‘எனக்குள் மணக்கும் எம்ஜிஆர் நினைவுகள்’ என்ற நூலின் ஆசிரியர்)

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடரFacebookTwitterYoutubeInstagram

logo
Andhimazhai
www.andhimazhai.com