வலது காதில போனை வச்சுப் பேசிக்கிட்டே கோடு போட்ட மாதிரி காலையிலேயும் சாயுந்தரமும் நடந்து போவாரே ஒரு வளர்ந்த ஆளு, அவரையா சொல்லுதீங்க கதை எழுதுகிறவர்ணு’ என்று பெருமாள் புரத்தில் அடையாளம் சொல்கிற அளவுக்கு நான் இருந்தேன்.
1999 முதல் 2021 வரை அவ்வளவு உயிர்ப்புள்ள நடைக்காலங்கள் எனக்கு. பொதுவாக எல்லோரும் உடலுக்காக நடப்பார்கள். நான் நடந்தது எல்லாம் மனதுக்காக. நடந்துவிட்டு வீட்டு நடை ஏறுவதற்குள் சொளு சொளு என்று வேர்த்து, சட்டை எல்லாம் உடம்போடு ஒட்டிப் போயிருக்கும். அவசரத்துக்கு வருகிற வழியில் காய்கறிக் கடையில் நின்றால் , வாங்க வந்திருக்கும் மற்றவர்கள் எல்லோரும் என்னை விநோதமாகப் பார்ப்பார்கள். ஒரு நடுத்தர வயதுப் பெண் என்னைக் கிண்டலாகக் கேட்டிருக்கிறது, ‘ எங்களுக்கு எல்லாம் வெயில் கொழுத்துது. உங்களுக்கு மட்டும் மழை பெஞ்சிருக்கு போல. இப்படி நனைஞ்சுட்டு வந்திருக்கிய?’ என்று.
முதல் நான்கு வருடங்கள் சி.24, சி காலனி வீட்டில் இருந்தோம். அப்போதைய நடைப் பாதை தனி. சங்கரா புரம் தெருவில் மயில் அகவும் சத்தம் கேட்கும். நான் பார்த்தவைகளிலேயே மூத்த, கனத்த மயில் ஒன்று ஒரு வீட்டின் மேல் நிலைத் தண்ணீர்த் தொட்டியின் விளிம்பில் தோகை தொங்க உட்கார்ந்திருக்கும். முக்கு ரெட்டியார் வீட்டில் மகிழம்பூ உதிர்ந்து தரையில் கிடக்கும். நான் நடை போகும் நேரத்துக் கடிகார நகர்வில் மிகச் சரியாக அந்தப் பெண் வாசல் தெளித்துக் கோலம் போட்டுக்கொண்டு இருப்பார். நான் மிகவும் செல்ல விரும்பிய, ஒரு பெண் ஓவியரின் வீடு என்னைத் திரும்பத் திரும்ப அழைக்கும். அரைக்கால் சட்டையுடன், கையில் பூண் வைத்த பிரம்புடன் இரண்டு பங்களாக்காரர்கள் பிரத்தியேக நடைக் காலணிகளுடன் நடந்து போவார்கள்.
தெரு முடிகிற இடத்தின் வலது பக்கத்து வீட்டில் அந்த வீட்டின் சொந்தக்காரரான காவி வேட்டி உடுத்திய பெரிய தேவர் தன் மிக ஊட்டமாக வளர்க்கப்பட்ட அல்சேஷியன் நாய்களின் குரைப்புக்கு மத்தியில் தினசரித் தாள் படித்துக் கொண்டு இருப்பார். டென்னிஸ் கோர்ட்டில் விளையாடுகிறவர்கள் என்னைப் போல நடந்து செல்கிறவர்களுக்கு என்று ப்ளக் ப்ளக் என்று மஞ்சட் பந்துகளின் சத்தத்தைத் தெருவில் வீசிக்கொண்டு இருப்பார்கள். நான் இன்றைக்கு எந்த விநோதப் பறவை தன்னுடைய நீள் பழுப்புச் சிறகை உதிர்த்திருக்கும் என்று பன்னீர் மரங்களின் கீழ் பார்த்துக் கொண்டே போவேன்.
நான் நடை வெளியில் பறவைகளைப் பார்த்ததை விட, பறவைகளின் உதிர் இறகுகளைப் பார்த்ததே அதிகம். விதம் விதமான உதிர் இறகுகள். இவன் பொறுக்குவதற்கென்றே வந்து அவை உதிர்த்துவிட்டுப் போகும் போல என்று நான் கிண்டல் செய்யப்படும் அளவுக்கு நான் இறகு பொறுக்கினேன். நான் எழுதிய கவிதைகளில் உதிர் இறகுகள் நிரம்பியிருந்தன. என்னை அப்போது படம் எடுத்த யாருக்கும் ஒரு காக்கைச் சிறகை நான் வைத்திருப்பது போல ஒரு படம் எடுக்க வேண்டும் என்று ஏன் தோன்றாமல் போயிற்று. இப்போது மறுபடி வாசிக்க எடுக்கும் புத்தகங்கள் நடுவில் இருந்து ஒரு சிறு மீன்கொத்தி இறகு பறக்கிறது. அதை எங்கே பொறுக்கினேன் என்பதை என்னால் இன்றும் சொல்ல முடியும். சீன/ஜப்பானிய மரச் சாயலில் தெருவில் குடை சாய்ந்திருக்கும் மலை அரளி மரம் உள்ள தெற்குப் புற சர்ச் தெருவின் இடது ஓரத்தில் மினுமினுப்பு மிக்க ஒரு துண்டு வானவில் போல அது ஒரு காலையில் கிடந்தது.
2003 இல் இந்தச் சிதம்பர நகர் வீட்டுக்கு வந்த பின் என் வலசைப் பாதை மாறிவிட்டது. நான் சர்ச் தெற்குத் தெருவழியாகச் செல்லும் போது மிகச் சரியாக எதிரே என்னை விடச் சற்றே வயது குறைந்த அந்தப் பெண் வருவார். ஒரு இலங்கையினர் போல, அல்லது ஆங்கிலோ இந்தியர் போலச் சாயல் உடைய அவர் எனக்குக் குரலற்ற கை உயர்த்தலில் காலை வணக்கம் சொல்வார். சிரிப்பார். அவரை இப்போது காணோம். காணாமல் போகிறவர்களின் சிரிப்பைத்தான் அதிகம் நமக்குத் தேடுகிறது.
இதே தெருவில் தான் எதிரே யாரோ இருப்பது போல, மகா மகா கெட்டவார்த்தைகளில் ஏசிக்கொண்டே வீட்டு வாசல்களைத் ‘தூத்துப் பெருக்கும்’ அந்த வயசாளிக் கிழவியும் நடமாடிக் கொண்டு இருந்தாள். மிகவும் தளர்ந்து போய் பெருமாள்புரம் மக்கள் நலச் சங்க பஸ் ஸ்டாப்பிலேயே கொஞ்ச காலம் தண்ணீர் பாட்டிலும் துணிப் பொட்டலமுமாகப் படுத்துக் கிடந்தாள்.
நீச்சல் குளம் தெரு, சேவியர் தெரு, தாமஸ் தெரு என்று கிழக்கு நோக்கிய ஒரு தெருவில் துவங்குவேன். திட்டம் இடுவதில்லை. அன்றன்றைய மன நிலைகளுக்கு ஏற்ப ‘ட’ வடிவத் திருப்பங்கள் அதுவாகவே அமைந்து கொள்ளும். அம்மாவும் மகளுமாகத் தெரு நாய்களுக்கு உணவு இடும் காட்சி என் கண்ணில் பட்டால் நான் அவர்களுக்குப் பின்னால் இருக்கும் தெருவில் திரும்பிவிடுவேன். அவ்வளவு வசதியான பெரிய பெரிய வீடுகளுக்கு மத்தியில் இருக்கும் ஒரு சிறிய தெருவடி வீட்டில் ஆட்டோவை நிறுத்திவிட்டு, எந்த உடைகளும் அணியாத தன்னுடைய மூன்று வயது, ஒரு வயதுப் பெண் குழந்தைகளுக்குப் பூவரசம் பூவில் பீப்பி செய்து ஊதிக்காட்டும் தகப்பனைத் தேடியது என்றால் இன்னொரு வளைவில் திரும்பி விடுவேன். தாவரவியல் பேராசிரியரின் மெலிந்த மனைவி சிரிக்கச் சிரிக்க கண்ணாடியணிந்த அவருடைய சினேகிதியுடன் பேசிக்கொண்டு செல்லும் பாதை வேண்டும் எனில் இன்னொரு புறமாக.
ஆனால் எல்லாச் சாலைகளும் ரோமுக்கு என்பது போல எல்லா கிழ மேல் தெருக்களும் செம்மண் மைதானத்தில்தான் முடியும்..
மழைக்காலம் எனில் அந்த மைதானம் துவங்குவதற்கு முந்திய இடத்தின் தந்திக் கம்பிகளில் / மின் கம்பிகளில் நூற்றுக் கணக்கான பஞ்சுருட்டான் குருவிகள் அமர்ந்திருக்கும். வலசைப் பஞ்சுருட்டான் பறவைகள். எங்கிருந்து வருமோ, இந்தச் செம்மண் மைதானத்தில் அவற்றிற்கு என்ன புழு, பூச்சிகள் கிடைக்குமோ, வருடம் தோறும் வந்துவிடும். நீங்கள் பஞ்சுருட்டான்களை எண்ணுவது ஒரு தியானத்தின் பாற்பட்டது. அப்படியான ஒரு தியானத்தை முடித்துவிட்டு வரும் உங்களைச் செம்மண் மைதானம் அதிகப் பிரியத்துடன் வரவேற்கும்.
உழுது போட்டது போல செம்மண் நெகிழ்ந்து கிடக்கும். அவ்வளவு பெரிய மைதானத்தில் வாகனம் ஓட்டப் பழகுகிறவர்கள் நீள் வட்ட வளையம் இட்டுக் கொண்டு இருப்பார்கள். இருசக்கரம் மகளுக்குச் சொல்லிக் கொடுக்கும் அப்பா, அப்பாவுக்குக் கார் ஓட்டக் கற்றுக் கொடுக்கும் மகள், மனைவிக்கு அருகில் இருந்து ஸ்டீயரிங் திருப்பச் சொல்லிக்கொடுக்கும் கணவர், நாம் வருவதைப் பார்த்ததும், சிரித்துக்கொண்டே அவருடைய நீள் வட்டத்தை மாற்றுவது எல்லாம் ஒரு பெரும் விரி வானத்தின் கீழ் நிகழும். வாழ்வில் எந்த வாகனமும் ஒரு நாளும் ஓட்ட வாய்ப்பில்லாத ஒரு நரைத்த பரட்டைத் தலை மனுஷி அதைச் சந்தோஷமாகப் பார்த்துக்கொண்டு நிற்பாள்.
மைதானத்தின் ஒரு ஓரத்தில், பொன் தீவு போல, கொத்துக் கொத்தாக ஆவாரம் பூ மலர்ந்திருக்கும். நீங்கள் சற்று வலது ஓரமாக ஒதுங்கி நடந்தீர்கள் எனில் ஒரு செம்போத்து உங்களிடம், ‘என்ன இன்றைக்கு லேட்?’ என்று கேட்கும். ஒரு தனித்த, ஒற்றைச் செம்போத்துக்கும் எனக்கும் அவ்வளவு நெருக்கமான ஒரு சினேகிதம் உண்டாகியிருந்தது. அந்தச் செம்போத்தின் கூவலை என்னால் எந்த இரைச்சலிலும் அடையாளம் கண்டுபிடிக்கமுடியும், என் ஆவாரங்காட்டில் ஒரு போதும் அந்தச் செம்போத்து தொலையவே தொலையாது.
அந்த மைதானத்தில் பெய்த மழையை என்னால் மறக்கவே முடியாது. அப்படி ஒரு மழை அன்றைக்கு மாலை. மழைக்கு நான் ஒரு சர்ச்சில் ஒதுங்கினேன். அப்போதுதான் அந்தச் சர்ச்சின் கட்டுமானம் ஆகி உள்ளே வேலை நடந்துகொண்டு இருந்தது. வளைவு வளைவான, உயரமான சன்னல்கள் உடைய, பாதிக் கட்டுமானத்தில் இருக்கிற அந்த சர்ச்சின் ஒரு சன்னல் வழியாக அடர்ந்து பெய்கிற மழையை நான் வெகுநேரம் பார்த்துக்கொண்டே இருந்தேன். அப்படி ஒரு ஆழ்ந்த பிராத்தனையை என்னைப் போல, அதற்குப் பிறகு அங்கே யாரும் செய்திருக்க வாய்ப்பில்லை.
மைதானத்தில் இருந்து திரும்பினால் தென்றல் நகர். தென்றல் நகருக்கு அப்புறம் ஒரு திருப்பம். அங்கிருந்து பாரதி நகர் மூன்றாவது தெருவின் கிழக்கு நுனி துவங்கும். தென்றல் நகரில் எனக்குப் பிடித்தவை எருக்கலஞ் செடிகள். இன்னும் அகற்றப்படாமல் சாம்பல் பூத்த கருநீலப் பூக்களும் மொட்டுகளுமாக இருந்த எருக்கலஞ் செடிகளுக்கு அருகில் ஒரு சின்ன வேப்பங் கன்று. அந்த வேப்ப மர நிழலில் மூன்று நாய்கள் புரண்டு புரண்டு விளையாடுகின்றன. இல்லாத ஒரு நான்காவது நாயுடன் அவை அந்த விளையாட்டை நிகழ்த்தின. ஒரு கவிதையாகக் கூட அதை எழுதினேன். இன்னும் கூட , இல்லாத ஒரு நான்காம் நாயுடன் புரண்டு விளையாடும் மூன்று நாய்கள் என்பது என் வாழ்வு குறித்த கருத்தாக்கங்களில் ஒன்றாக இருக்கிறது.
அதே தென்றல் நகரில் இன்னொரு கற்றலும் அடைந்தேன். வீட்டு வேலைக்கு, அதாவது வீடு கூட்டி, ஏனம் கழுவிக் கொடுப்பதற்குச் செல்லும் இரண்டு பெண்களில் மூத்தவரிடம், தன் துயரை எல்லாம், படுகிற பாட்டை எல்லாம் சொல்லி அழுகிற இளையவரிடம், அந்த மூத்த மனுஷி , ’ என்னத்தையாவது நினைச்சுக்கிட்டுப் பைத்தியாரத்தனம் எதுவும் பண்ணீராத. ரெண்டு பொட்டப் பிள்ளைகள் நண்டும் சிண்டுமா இருக்கு பார்த்துக்க’ என்பதற்கு முன்னும் பின்னும் சொன்ன வார்த்தைகள் எனக்கு வேதம் போல.
பாரதி நகர் மூன்றாவது தெரு மருதாணிப் பூ வாசனையோடு துவங்கும். கிழக்கில் இருந்து மேற்காகச் சரிந்து இறங்கும் மிக அழகான தெரு . அது வரை நடந்த ஒருவனை வேறு ஒருவனாக மாற்றும் ரசவாதம் செய்ய வல்லது. எனக்கு ஒரு ஒடுக்கமான ஆறு, பிரவாகம் எடுத்துச் சரிந்து ஓடுவது போலவே இருக்கும் அந்தத் தெருவைப் பார்க்கையில். பாபநாசம் தண்ணீர் போல மீன் புரள்வது தவிர எல்லாம் அப்படியே இருப்பதாக நினைத்துக் கொள்வேன்.
எத்தனையோ முறை அந்தத் தெருவின் வழியாக யானையும் பாகனும் செல்வதைப் பார்த்திருக்கிறேன். தெருவின் ஆரம்பத்தில் நுழைகையில் யானை தெருவின் மத்தியில் போய்க்கொண்டிருக்கும் தூரத்துக் காட்சியும் மணிச்சத்தமும் உண்டாக்குகிற சித்திரம் மாயம் நிரம்பியது. கோவில் யானைக்குக் கூடப் பயப்படுவேன். ஆனால் அதன் மேல் ஏறி உட்கார்ந்து, சத்தியக் கயிற்றுக்குள் காலைச் செருகிக் கொண்டு உட்கார்ந்து ஒரு அலை போலத் தாழ்ந்தும் உயர்ந்தும் செல்வதாக நினைத்துக் கொள்வேன்.
கோடைக் காலங்களில் வேப்பம் பூ உதிர்ந்து கடல் நுரை போலத் தெருவின் இரண்டு பக்கமும் ஒதுங்கிக் கிடக்கும். அந்தத் தெருவின் வீட்டு ஆண்கள் ஒரு தூம்பாவை வைத்து வேப்பம் பூக்களைக் கூட்டிக்கொண்டு நிற்பார்கள். பெரும்பாலான வீடுகளின் வாசலில் மீன்காரரை எதிர்பார்த்து, தளர்வாடையும் மீன் வாங்கும் ஏனங்களுடன் நிற்கிற காட்சி ஓவியத்தனமானது. மீன் அரிந்து தருகிறவருடன் அவர்கள் சிரித்து உரையாடிக்கொண்டு இருக்க, மீன் துண்டுக்காக வளைய வந்து செல்லமான மியாவில் கோரிக்கை வைக்கும் வளர்ப்புப் பூனைகள் அந்தச் சாய்வெயில் அடிக்கும் பாரதி நகர் மூன்றாம் தெருவை வேறு உலகத்துடன் இணைத்து விடும்.
ஒரு சாயலில் காந்தி போலவும் இன்னொரு சாயலில் ஓவியர் பிக்காஸோ போலவும் இருக்கிற, எண்பது வயதைத் தொடும் முதியவர் அரைக்கால் சட்டையும் உயர்தரப் பழைய மேல் சட்டையுமாக பையில் உணவுப் பொட்டலம் வாங்கிக் கொண்டு வருவார். என்னைப் பார்த்துச் சிரிப்பார். வாசல் மரத்தில் தபால் பெட்டி தொங்குகிற வீடுதான் அவர் வீடு என்றும் வெகு காலமாகக் கிடையில் கிடக்கும் அவருடைய மனைவியை அவர்தான் பார்த்துக் கொள்கிறார் என்றும் சொன்னார்கள். நான் அப்படி நினைக்கக் கூடாதுதான். ஆனால் அவர் இறந்து போவது போலவும் அவர் மனைவி கட்டிலில் ஆளற்றுக் கிடப்பது போலவும் நினைத்துக் கொள்வேன். அல்லது அந்த அம்மாள் இறந்த துக்கம் விசாரிக்க தபால் பெட்டி தொங்கும் அந்த வீட்டுக்கு நான் போவதாகவும், அவர் தனியாக ஒரு பழைய கிராமஃபோனில் இசைத்தட்டைக் கேட்டுக்கொண்டு இருப்பதாகவும் நினைத்துக் கொள்வேன்.
ஒரு தடவை சேவியர் தெரு வழியாகப் போகும் போது தோளில் முருங்கைக் காய்களின் கட்டு ஒன்றை வைத்திருக்கிற மீசைக்காரர் என் தோளைத் தொட்டுக் கூப்பிட்டார். ‘ எங்க வீட்டு எலிஸபெத்தைப் பார்த்தீங்களா. ரெண்டு நாளைக்கு முன்னால உங்க பொறத்தாலேயே தான் அது போனதாச் சொன்னாங்க’ என்றார். எலிஸபெத் என்பது அவர்கள் வீட்டில் வளர்க்கும் வெள்ளாட்டுக் குட்டியாம். அவரே இன்னொரு நாள் சுபாஷ் சலூன் பக்கத்தில் பார்க்கையில் ‘எலிஸபெத் கிடைச்சுட்டா’ என்று சொன்னார். மனம் நிறைந்து சிரிக்கும் போது, கன்னத்தில் மீசை ஒதுங்கிய அந்த முகம் அவ்வளவு அழகாக இருந்தது.
அதே தெருவில் தான் இரண்டு கீரிப் பிள்ளைகள் ரோட்டின் இடது பக்கத்தில் இருந்து வலது பக்கத்து ஓடி, அந்த வீட்டில் நிறுத்தப்பட்டிருந்த காருக்கு அடியில் போய் நின்றுகொண்டு என்னையே பார்த்தன. எந்தக் களங்கமும் அற்ற அந்த இளம் கீரிப் பிள்ளைகளின் பார்வையை வெகு நாட்களுக்கு என்னுடன் வைத்திருந்தேன். அப்படி வைத்திருப்பதன் மூலம் என்னைச் சுத்திகரித்துக்கொண்டேன்.
எஸ்.ட்டி.சி ரோட் நிறைய மனிதர்களைத் தந்துகொண்டே இருப்பது. ஆட்டோ ஸ்டாண்டில் இருக்கிற ஓட்டுநர்கள் அடித்துப் பிடித்து விளையாடிக் கொண்டு, எதிர்த்த டீக் கடையில் நிற்கிற மருத்துவ மனைச் செவிலியரிடம், ‘பாருங்க சிஸ்டர்’ என்று பஞ்சாயத்து வைப்பார்கள். எஸ்.ட்டி.சி கல்லூரிச் சுவர் முழுவதும் அப்பியது போல ஒரு இளஞ்சிவப்புச் சிறு பூக்கள் பூத்துக் கிடக்கும். நான் பார்த்துக்கொண்டே இருந்த ஒரு பொழுதில், ஈரானியப் படங்களில் இருந்து நழுவி வந்த தோற்றத்தில் ஒரு தலைப்பாகையும் தாடியுமான முதியவர், திகைத்துத் திகைத்து நிற்கிறார். அவருக்கு அவர் வீடு எங்கிருக்கிறது என்பது மறந்துவிட்டிருந்தது. நான் கேட்ட அடிப்படை அடையாளங்களை அவரால் ஒன்று கூடச் சொல்ல முடியவில்லை. இதுவரை எழுதப்பட்டவை எல்லாம் அழிந்து போன ஒரு கரும்பலகை போல அவர் முகம் இருந்தது.
என் காலை நடைகளில் தவறவே தவறாத ஒரு நிறுத்தமாக இருந்தது அதியரசன் என்ற அந்த இளைஞனின் இடம் தான். பத நீரும் நுங்கும் இளநீரும் பனங்கிழங்கும் கருப்பட்டியுமாக அவன் சிரித்த முகத்துடன் செய்கிற வியாபாரம் அவ்வளவு பிடித்தமானது. நான் முதன் முதலில் பார்க்கும் போது அவன் ஒரு பதினேழு பதினெட்டு வயதுப் பையன். ஆங்கிலம் பேசுவது எப்படி? என்ற ரேபிடெக்ஸ் புத்தகத்தை, பதநீர் வியாபாரம் முடிந்த நிலையில் படித்துக் கொண்டு இருக்கையில் நான் பேச்சுக் கொடுத்தேன். அப்படி ஆரம்பித்த பழக்கம் அதியரசனுக்கும் எனக்கும் கொரோனா காலம் வரைக்கும், கிட்டத்தட்ட பதினேழு ஆண்டுகள் நீடித்தது.
ஸ்மார்ட் சிட்டி வந்து. சீர் மிகு நெல்லை நகரத்தில் தெருவுக்கு இரண்டு பூங்காக்கள் திறக்கப்பட்ட போது, நான் பக்கத்தில் இருக்கிற உழுவைச் சாலையில் இருக்கும் பெரிய பூங்காவில் நடக்க ஆரம்பித்தேன். எனக்கு எல்லாப் பூங்காக்களிலும் ஞாபகமாக எஞ்சுவது போல, அள்ளப்படாமல் குவிந்து கிடக்கும் சருகுகளும், ஊஞ்சல்களில் வீசி வீசி ஆடுகிற நடுத்தர வயதுப் பெண்களுமே இங்கும் நடந்தது. எப்போதும் போல, யாரும் விரும்பி உட்காரப் பிரியப்படாத ஒரு இடத்தில் உள்ள பெஞ்ச்சில் நான் உட்கார்ந்திருக்கும் போது, கிட்டத் தட்ட என் வயதும், ஓய்வூதிய வாழ்வுமாக இருக்கும் ஒருவர், நான் எழுதுகிற இன்னார்தானா என்ற கேள்வியுடன் துவங்கி, ஐந்தாவது நிமிடத்தில் இருந்து அவருடைய துயரங்களைச் சொல்ல ஆரம்பித்திருந்தார்.
பாலு மஹேந்திரா தொப்பி அணிந்து கொண்டு புனித தோமா சர்ச் பக்கம் நின்று யாசகம் கேட்கிற அந்தப் பைத்தியம் போன்ற பெண்ணின் பழக்கம் யாசகம் கொடுக்காதவரைக் கண்டமானைக்கு ஏசுவது, சாபம் இருவது. எத்தனையோ முறை கொடுத்தும், ஒரு முறை கொடுக்காத நிலையில், நான் அவரால் ஏசப்பட்டிருக்கிறேன், சபிக்கப்பட்டிருக்கிறேன்.
தெற்கு சர்ச் தெருவில் இருந்து எங்கள் சிதம்பர நகர் வீட்டை நோக்கி நடக்கும் ஒவ்வொரு முறையும், வாய் ஓரத்தில் எச்சில் நுரைக்கச் சாபமிடும் அவரைத் தேடாமல் இருக்க மாட்டேன். அந்த இடத்தின் ஆட்டோ ஸ்டாண்டில் நிற்கிற ஒரு ஆட்டோக்காரர் சொன்னார், ‘ அது போய்ச் சேர்ந்துட்டு சார்’.
போய்ச் சேர்கிறவர்களையும் என்னிடம் வந்து சேர்கிறவர்களையும், என்னுடைய காலை, மாலை நடைப் பொழுதுகளே தந்துகொண்டு இருந்தன. நான் எழுதிய முக நூல் பதிவுகள், அல்லது கவிதைகள் எல்லாம் அந்த நடைப் பொழுதுகள் தந்தவையே.
இந்தக் கடைசி வரியை எழுதும்போது ஒன்று நினைவுக்கு வருகிறது. நடந்து போகும் போது ஒரு குறிப்பிட்ட திருப்பத்தில் தான் தரையோடு தரையாக ஒரு பெரிய இலந்தம் புதர் படர்ந்து இருந்தது. கட்டிட வேலைக்கு, பெயிண்ட் அடிப்புக்குப் போய்விட்டு வருகிற, அனேகமாக நாகர்கோவில் பக்கத்து இள வயதினர் நான்கைந்து பேர் இலந்தம் பழம் பறித்துத் தின்கிறார்கள். அவர்களைத் தாண்டிப் போக இருந்த என்னுடைய கைகளிலும் சில பழங்களைத் தந்தார்கள்.
நன்றாகப் பழுத்துத் தோல் சுருங்கிய இலந்தம் பழங்கள் , எவ்வளவு இனிப்பாகவும் புளிப்பாகவும் இருக்கின்றன. இந்த வாழ்வைப் போல.