நவீன் பட்நாயக்: பதவிக்காலத்தின் முதல் 150 நாள்கள்

நவீன் பட்நாயக்: பதவிக்காலத்தின் முதல் 150 நாள்கள்
Published on

நவீன் பட்நாயக், 2000ஆம் ஆண்டு மார்ச் 5ஆம் தேதி, ஒடிசா மாநிலத்தின் முதலமைச்சராக பொறுப்பேற்றார். அவர் அரசியலுக்குப் புதியவர். ஊழல், நிதி குழப்பம் மற்றும் 1999 ஆம் ஆண்டில் பேரழிவை ஏற்படுத்திய பெரும் புயலின் தாக்கம் போன்ற பிரச்சினைகளால் பாதிக்கப்பட்ட ஒரு மாநிலத்தைப் பொறுப்பேற்றார்.

அவரது பதவிக்காலத்தின் முதல் 150 நாட்கள், அவரது ஆட்சியின் திசையை நிர்ணயிக்கும் வகையில் மிக முக்கியமானதாக இருந்தன. நிதி நெருக்கடி மற்றும் உடனடி நடவடிக்கைகள்

மாநில அரசின் பொருளாதாரம் தள்ளாட்டத்தில் இருந்தது. சர்வதேச நிறுவனங்களிடமிருந்து பெற்ற கடன்கள் மற்றும் சுமார் ₹18,000 கோடி கடன் சுமையால் மாநிலம் பாதிக்கப்பட்டது. அரசு ஊழியர்களுக்குச் சம்பளம் வழங்குவதற்கே சிரமம் ஏற்பட்டது. இந்த நிலையை வெளிப்படையாக காட்டுவதற்காக, நவீன் பட்நாயக் மாநிலத்தின் நிதிநிலையைப் பற்றிய வெள்ளை அறிக்கையை வெளியிட்டார். கூடுதல் கொடுப்பனவுகள் மற்றும் சலுகைகள் குறைக்கப்பட்டன. அமைச்சர்கள் மற்றும் மூத்த அதிகாரிகளுக்கான வெளிநாட்டு பயணங்கள் மற்றும் அரசு செலவில் நடைபெறும் சுற்றுப்பயணங்கள் கட்டுப்படுத்தப்பட்டன.

நவீனின் முதல் அமைச்சரவையில் சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சராக இருந்த தேவி பிரசாத்மிஸ்ரா, “அப்போது முதியோர் ஓய்வூதியம் வெறும் ₹100 மட்டுமே இருந்தது. அதை உயர்த்த வேண்டும் என்று நான் நவீன் பாபுவிடம் கேட்டேன். ஆனால் நிதித் தட்டுப்பாடு காரணமாக அரசு அதற்கு தயாராக இல்லை என்று அவர் கூறினார். ஓய்வூதியம் குறைந்தது ₹1,000 ஆக இருக்க வேண்டும் என்பது தன் கருத்து என்றார். பின்னர், அவர் அதை ₹300 ஆக உயர்த்தினார்,” என்கிறார்.

முதல் 150 நாட்களில் முக்கிய முடிவுகள்

ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளான உயர்மட்ட அதிகாரிகள் மற்றும் அரசு ஊழியர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன.

பேரிடர் மேலாண்மை மறுசீரமைப்பு

1999 புயலுக்குப் பிறகு, ஒடிசா மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் (OSDMA) வலுப்படுத்தப்பட்டது. அணைகளைப் பழுது பார்க்கவும், மழைக்காலத்திற்கு முன் புயல் பாதுகாப்புத் தங்குமிடங்களை அமைப்பதற்கும் அவசர நிதி விடுவிக்கப்பட்டது.

நீர் பஞ்சாயத்துகளின் அடித்தளம்

விவசாயிகளை அதிகாரமளிக்கவும், பாசன மேலாண்மையை பகிரங்கப்படுத்தவும் “நீர் பஞ்சாயத்து” என்ற கருத்து அறிமுகப்படுத்தப்பட்டது. பின்னர் 2002இல் இது சட்டமாக்கப்பட்டது.

அந்த்யோதயா மற்றும் மானிய அரிசி திட்டங்கள்

அதிக வறுமையில் உள்ள மக்களுக்கு உணவு பாதுகாப்பு வழங்க, அந்த்யோதயா அண்ணா யோஜனா மற்றும் மானிய அரிசி விநியோகம் தீவிரமாக நடைமுறைப்படுத்தப்பட்டது, குறிப்பாக காலஹந்தி,–போலாங்கிர்–கோராபுட் (KBK) பகுதிகளில் பட்டினி மரணங்களைத் தடுக்க, சாலை மற்றும் குடிநீர் திட்டங்களுக்கு மத்திய அரசிடமிருந்து சிறப்பு நிதி பெற்றார்.

தாதுப்பொருள் கொள்கை சீரமைப்பு

பழைய சுரங்க ஒப்பந்தங்களை மறுபரிசீலனை செய்ய குழு அமைக்கப்பட்டது. மாநில வருவாயை அதிகரிக்கவும், வளங்களை பாதுகாக்கவும் இது உதவியது.

வெளிப்படைத் தன்மை

அரசு அலுவலகங்களில் கோப்புகள் நகரும் முறையில் வெளிப்படைத்தன்மை உறுதி செய்யப்பட்டது. சேவைகள் வழங்குவதில் தாமதம் ஏற்பட்டால் அதிகாரிகள் பொறுப்பேற்க வேண்டிய நிலை உருவாக்கப்பட்டது.

சட்டம் மற்றும் ஒழுங்கை மீட்டெடுத்தல்

முந்தைய ஆட்சியில் நிர்வாகமும் காவல்துறையும் அரசியல் தலையீட்டால் பாதிக்கப்பட்டிருந்தன. இதனால் சட்டம் மற்றும் ஒழுங்கு நிலைமைகள் மோசமடைந்தன. நவீன் பட்நாயக், பதவியேற்றதும் நிர்வாகத்தையும் காவல்துறையையும் அரசியல் அழுத்தத்திலிருந்து விடுவிக்கும் நடவடிக்கைகளை எடுத்தார். இதனால் நிர்வாகத்தில் தொழில்முறை தன்மையும் பொறுப்புணர்வும் மீண்டும் நிலைநிறுத்தப்பட்டது.

செயலக சீர்திருத்தங்கள்

அமைச்சர்கள் மற்றும் செயலர்கள் நிர்ணயிக்கப்பட்ட நேரத்தில் அலுவலகத்தில் இருக்க வேண்டும் என்றும் நிலுவை கோப்புகளை விரைவாக முடிக்க வேண்டும் என்றும் கட்டாயப்படுத்தப்பட்டது. நவீன் தானும் நேர்த்திக்கான முன்னுதாரணமாக இருந்தார்.

“நவீன் பட்நாயக் அவர்களின் முதல் 150 நாட்கள், அவரது பார்வையும் தலைமையியல் தத்துவத்தையும் வெளிப்படுத்தியது. நிதி ஒழுங்கு, ஊழல் எதிர்ப்பு நடவடிக்கைகள், பேரிடர் தயார்ப்பு, வறியோருக்கான கொள்கைகள் மற்றும் நிர்வாக சீர்திருத்தங்கள் ஆகியவற்றை இணைத்த அணுகுமுறை, ஒடிசாவை நெருக்கடியான காலத்தில் நிலைநிறுத்துவதோடு, அவரது நீண்டகால ஆட்சிக்கான அடித்தளத்தையும் அமைத்தது,” என்று தேவிபிரசாத் மிஷ்ரா கூறுகிறார். (திருதிகம் மொகந்தி, மூத்த பத்திரிகையாளர், ஒடிசா)

logo
Andhimazhai
www.andhimazhai.com