நடந்தாய் வாழி என் கால்களே!

காஞ்சிப் பெரியவர்
காஞ்சிப் பெரியவர்
Published on

மடத்துக்காரர்கள் கொடுத்த பாய்களை விரித்து படுப்பதற்குத் தயாராகி விட்டோம் பரணிதரன் அவர்களும் நானும். ‘அவருக்கும் விரித்து வை’ என்று பரணிதரன் கூற, ‘படுத்தாச்சா?’ என்றவாறு வந்தார் ஜெயகாந்தன். அது கார்வெட் நகர். பெரிய குளத்தை ஒட்டி போடப்பட்ட கீற்றுக் கொட்டகை அது. இன்னொரு புறம் காஞ்சிப் பெரியவர் இருக்கிறார், கயிற்றுக் கட்டிலில் படுத்து இருக்கிறார். தரிசனம் முடிந்து வருகிறார் ஜே கே., உள்ளே ஒரு மணி நேரமாக…!

பாயில் அமர்ந்தார், கால்களை நீட்டி நீவி விட்டுக் கொண்டார். காலையில் எழுந்தவுடன் ’கராகரே வஸதே’ என்று சொல்வது உண்டு அல்லவா குழந்தையாக இருந்தபோது.

படுக்கும் முன் இரவில் நான் கால்களை நீட்டி தடவி விடுவேன். ‘மனம் போன போக்கில் போக சில சமயம் கால்கள் தயங்குவதை கவனித்து இருக்கிறீர்களா?’ என்றார் இளம் மீசையை முறுக்கி, செப்புவாயில் அழகான பற்கள் சிரிக்க! எதை ஜே.கே. கவனிக்கவில்லை?

 அதற்குப் பின் அந்தப் பழக்கம் என்னிடமும். என் கால்கள் எத்தனை நடந்திருக்கின்றன? பொறுத்தது போதும் என்று இப்போது பாதங்கள் எரிச்சலை காட்டினாலும்!

 பள்ளிக்கால கோடை விடுமுறையில் தெரு நண்பர்களுடன் எங்கள் ஊர் குத்தாலத்தில் இருந்து தேரெழுந்தூர் வரை மாலையில் நடப்போம். சுந்தரேச வாண்டையார் - எங்கள் பள்ளி ஆசிரியர் - சில நாள்கள் கூடவே வருவார்... வழி நெடுகிலும் இருபுறமும் இருக்கும் மரங்களைப் பற்றி கூறியபடி!

 ‘சாலையின் இரு புறங்களிலும் புளிய மரங்கள் ஏன் நட்டிருக்கிறார்கள் தெரியுமா? அவை தூசுகளை வாங்கிக் கொள்ளும்! பிராண வாயுவை அதிகம் வெளியே விடும் இலைகள்’ என்பார்.

ஒரு முறை அப்படி நடந்து சென்ற போது நீல நிற பெரிய வில் வண்டி மயிலைக் காளைகள் பறக்க வந்தது. குடிசைகள் நிறைந்த பகுதிக்கு வந்த போது சர் சர் என்று கற்கள் பறந்தன. மாடுகள் மீதும் வண்டி மீதும் கற்கள் விழ, ‘யாரடா அது’ என கத்தியவாறு வண்டி ஓட்டியவர் கீழே குதித்தார்! கட்டுக்குடுமி கலைய, பண்ணையாரும் கீழே குதித்தார். நாங்கள் மரத்தின் பின்னால்!

‘தைரியம் இருந்தால் எதிரே வாங்கடா’ என்றார் பண்ணையார். யார் வருவார்கள்? அவர் ஒரு பயங்கர பண்ணையார். அவரது அட்டகாசங்களுக்கு எதிரான முதல் எதிர்ப்பு. பிறகு அவரது வைக்கோல் போர் சில நாட்களில் எரிந்தது! விவசாய புரட்சி எட்டிப்பார்ப்பதை மரத்தின் பின்னால் இருந்து நாங்கள் எட்டிப் பார்த்தோம்!

கல்லூரிப் பருவத்தில் பூதான இயக்கம் கவர்ந்தது! காஞ்சிபுரத்தில் நடந்த விழாவுக்குப் பிறகு விடியற்காலை நேரத்தில் வினோபா பாவே, அங்கிருந்து சென்னைக்கு நடக்கிறார் அவருடன் நடந்த மாணவர்களுடன்!

மார்கழி மாதம் அது. லேசான குளிர் காற்று; வழி எங்கும் இருந்த வீடுகளில் வாசலில் பெண்மணிகள் வண்ணக் கோலங்கள் வரைந்திருந்தார்கள்! குடிசைவாசல்களிலும்! நமக்கு வழக்கமானது அந்த காட்சி. ஆனால் வினோபா பரவசத்துடன் பார்த்தார்! பின்னணியை விசாரித்தார். குடிசைப் பெண்களைப் பார்த்து கும்பிட்டார்!

டாக்டர் மு.வ. அவர்கள் நடந்து வந்தார். அவரது சீடர்களாக இருந்ததால் நாங்களும் அதில்! பூதான இயக்கம் எங்கள் மனதை மிகவும் தொட்டது! அங்கே நடந்து வந்தவர்களில் – சோமசுந்தரம் - பின்னாளில் சோலை… இளைஞராக! இன்னொரு இளைஞர் பாலதண்டாயுதம்! கம்யூனிஸ்ட் தலைவர் அல்ல; முரசொலி அடியார் என்று பிறகு புகழ் பெற்றவர்! சர்வோதய இயக்கத்தில் இருந்திருக்கிறார்!

நடப்பது என்னோடு பின்னிப் பிணைந்ததற்கு முக்கியக் காரணம் உண்டு. எனக்கு சைக்கிள் விடவே தெரியாது! பத்திரிகையில் பொறுப்பான பதவி வந்த போது கார் கொடுத்தார்கள். முதலாளியே கார் ஓட்ட கற்றுத் தருவதாக முன்வந்து, அவர் வண்டியில் ஏற்றி பயிற்சி தர, நான் காரை நேராக பிளாட்பாரத்தில் ஏற்றிவிட்டேன். கிறீச்… இரண்டு நாய்கள் கத்திக்கொண்டு ஓடின. நானாவது கார் ஓட்டுவதாவது? உதட்டைப் பிதுக்கினார் முதலாளி! நடையே நமக்கு உரித்தானது!

எழுத்தாளர் பரணிதரனும் கிட்டத்தட்ட என் கேஸ் தான்! பெரும்பாலும் அலுவலகத்திற்கு நடந்தே போயிருக்கிறோம்! காஞ்சிப் பெரியவர் உடன் நாங்கள் நடந்து போன அனுபவங்கள் நிறைய; அவருடன் திருப்பதி மலை ஏறி இருக்கிறோம்!

மயிலாப்பூரில் இருந்து ஏதோ ஓர் இடத்துக்கு போக காலை நேரத்தில் கடற்கரை ஓரமாக காஞ்சிப்பெரியவருடன் நீண்ட தூரம் நடந்திருக்கிறோம்! ஓர் இடத்தில் காஞ்சி பெரியவர் நின்றார். தூரத்தே கடல் அலைகள் மேலே சூடு இல்லாத சூரியன் எழுந்து கொண்டிருந்தான்!

வயதான மீனவர் ஒருவர், இரு கைகளையும் உயர்த்தி சூரியனை வழிபடுவதை நின்று பார்த்தவாறு இருந்தார் காஞ்சிப் பெரியவர். ‘பாருங்கள் நன்றாக! இதுதான் உண்மையான பக்தி!’ என்றார் அந்த எளிமை மிக்க துறவி.

ஒரு முறை ஆசிரியர் குழுவோடு காஞ்சிப் பெரியவரை சந்திக்க சத்தாரா சென்றோம். விகடன் ஆசிரியர் பாலசுப்பிரமணியன் தமது பிறந்தநாள் அன்று மகாப் பெரியவரை தரிசிக்க செல்வது உண்டு. உதவி ஆசிரியர்களையும் இந்த முறை அழைத்துச் சென்றார்! காலையில் தரிசனம் முடிந்தது. அங்கு இரவு தங்கினோம்.

அன்று மாலை காஞ்சி பெரியவர் திடீரென அங்கிருந்து புறப்பட்டு விட்டார். ‘போய் வேடிக்கை பார்க்கலாம்’ என்று பரணிதரனும் நானும் அவர் பின்னால் நடந்தோம்; உண்மையில் ஓடினோம்! அவர் நடை அவ்வளவு வேகம். இரண்டு மணி நேரத்துக்கு பின் ஒரு கோயில் அருகே கிராம மக்கள் வரவேற்க, படிகளில் அமர்ந்தார். கிராம மக்கள் அழைப்பை ஏற்று வந்திருக்கிறார்! மேளதாளத்துடன் வரவேற்பு.

இருள் சூழ, நாங்கள் தங்கி இருந்த ஓட்டலுக்கு திரும்ப முடிவு செய்து நடத்த ஆரம்பித்தோம்! நடந்தோம்.. நடந்தோம்... நடந்தோம்... தங்கி இருந்த இடம் வந்தபாடில்லை! ஒரு கார் வந்தது! காரில் வந்தவர்கள் ‘பரணிதரன் சார்’ என்று அழைத்து காரில் ஏற்றிக் கொண்டு வந்து விட்டார்கள்! காஞ்சி மகா பெரியவர் 12 கி.மீ.  நடந்திருக்கிறார்! படுத்தபோது அன்று இரவு பரணிதரன் கால்களை நான் பிடித்து விட்டேன்! காஞ்சிப்பெரியவர் எப்படித்தான் நடந்தாரோ?

எம்ஜிஆர் ஆட்சியில் நீதி கேட்டு கலைஞர் நடந்தார் அல்லவா? மதுரை டூ திருசெந்தூர்! அவரோடு செய்தி சேகரிக்க நானும் நடந்தேன்! புகைப்படக்காரர் ஏ. சுந்தரம் சற்றும் துவளாமல் படங்களை எடுத்துத் தள்ளினார்! பாடிக்கொண்டும் ஆடிக்கொண்டும் தொண்டர்கள். ஒருகட்டத்தில் முண்டாசு கட்டிக்கொண்டு நடந்த கலைஞர்... மறுநாள் அவர் கால்களில் வலி; லேசாக ரத்தம்! கவலையின்றி நடந்தார் தலைவர்!

தொண்டர்கள் ‘உற்சாகமாக’ இருந்தாலும் கலாட்டா எதுவும் செய்யவில்லை! தலைவர் இருக்கிறார் என்ற மரியாதை அவர்களிடம்! ஆச்சரியம் தான் கலைஞர் கட்சியை கட்டுக்குள் வைத்திருந்த மாட்சி!

நடந்த கதை நிறைய இருக்கிறது. இன்னும் நடக்கிறேன். சில சமயம் ஒழுங்கில்லாத பிளாட்பாரத்தால் தடுக்கி விழுவது உண்டு! பேப்பர் கடைக்காரர்கள் ஓடிவந்து தூக்கி விடுகிறார்கள்!

நடையில் வேகம் குறைவது தெரிகிறது... எனக்கு முன்னால் மின்னல் வேகத்தில் - காலம் நடக்கிறதே!

 (கட்டுரையாளர் ராவ், மூத்த பத்திரிகையாளர்)

logo
Andhimazhai
www.andhimazhai.com