தினமும் வாக்கிங் போனால் முப்பதே நாள்களில் உங்கள் தொப்பையெல்லாம் குறைந்துவிடும், நீங்கள் பார்க்க ஹ்ரித்திக் ரோஷன் போல சிக்கென ஆகிவிடுவீர்கள். உங்களுக்கு ஐந்து நாள்களுக்கு ஒரு பேக்காக முப்பது நாளில் ஆறு பேக்கும் வயிற்றில் வந்துவிடும். ஆள் பார்க்க ஸ்மார்ட்டாக ஆகிவிடுவீர்கள். தலையில் முடி இல்லையென்றால் முடி முளைத்துவிடும். அதற்குப் பிறகு வாக்கிங் போகும்போது அழகிய பெண் ஒருவர் உங்களைப் பார்த்து உங்களை சைட் அடிப்பார். ஒருவர் அல்ல பல அழகிய பெண்கள் சைட் அடிப்பார்கள். அவர்களில் பெஸ்ட் பெண்ணைத் தேர்ந்தெடுத்து நீங்கள் அவரோடு நெருங்கிப் பழகுவீர்கள். இருவருக்கும் காதல் மலரும். அப்புறம் என்ன.. டும்டும்தான்… என்ன ஒரே பிரச்னை இந்த விஷயம் உங்கள் மனைவிக்குத் தெரிந்தால் பெரிய பிரளயமாகிவிடும் என்பதால் நீங்கள் ஜாக்கிரதையாக இருக்கவேண்டும்…
இப்படியெல்லாம் யாராவது அட்வைஸ் கொடுத்தால் அவர் உங்கள் ஆசையைத் தூண்டி உங்களை ஏமாற்ற பிளான் போடுகிறார் என்று அர்த்தம். ஏன் என்றால் வாக்கிங் போனால் இதெல்லாம் நடக்காது. வாக்கிங் போனால் உடலின் ரத்த ஓட்டம் சீராகும். கால்கள் வலுப்பெறும். உங்களுடைய மூச்சு சீராகும். இதயம் வலிமை பெறும். உடல் ஆரோக்கியமாக இருக்கும். அவ்ளோதான். வாக்கிங்கை எதோ சர்வரோக நிவாரணி என நினைத்துக்கொள்ள வேண்டாம். ஆனால் அது உங்களை, நோயை எதிர்த்துப் போராடக்கூடியவராக ஆரோக்கியமானவராக மாற்றும். ஆகவே வாக்கிங் போனால் சிக்ஸ்பேக் வராது, கேர்ள் பிரண்ட் கிடைக்கமாட்டார், ப்ரியமானவர்களே!
சரி அப்படிப்பட்ட வாக்கிங்கை எப்படி முறையாகப் போகவேண்டும் என்று உங்களுக்கு தெரியுமா? ஏன்…டாப்பா ரைட்டர் எங்களுக்கு நடக்கத் தெரியாதா நாங்க என்ன பச்சைப்பிள்ளையா என்று நீங்கள் கேட்பது கேட்கிறது.
வாக்கிங் போக நமக்குத் தெரியாதுதான். நடப்பது வேறு, நடைபயிற்சி வேறு இரண்டுக்கும் வேறுபாடு உண்டு. நடைபயிற்சியின்போது கடைப்பிடிக்கவேண்டிய சில வழிமுறைகளும் செய்யக்கூடாதவையும் உண்டு. அதை மட்டும் நோட் பண்ணிக்கோங்க!
முதலில் வாக்கிங்தானே போகிறோம் என கண்டகண்ட செருப்பு, ஷூவெல்லாம் போட்டுக்கொண்டு நடக்கக்கூடாது. உரிய காலணி முக்கியம். சரியான காலணி அணியாவிட்டால் கால்வலி முட்டிவலி எல்லாம் வந்து படுத்திவிடும். ஆகவே நல்ல ஷூவாகப் பார்த்து வாங்கிப் போடவும். ’இல்லைங்க நான் வெறுங்கால்லதான் நடக்கப்போறேன்’ என்று சொன்னால் பார்க்கில் மட்டும் வெறுங்காலில் நடக்கவும் ரோட்டில் வேண்டாம். ரெண்டு விஷயம் ஒன்று கண்ணாடி, கல் மாதிரி ஏதாவது காலில் ஏறிவிடலாம மற்றொன்று கிருமிகள் கால்வழியே தொற்றி உடலைப் பாதிக்க வாய்ப்பு அதிகம். தெரு நாய்கள் அதிகரித்துவிட்ட காலத்தில் ரோடெல்லாம் மலம்தான்! ஆகவே நல்ல ஷூ கட்டாயம்!
நடக்கும்போது நன்றாக நிமிர்ந்து மார்பைவிரித்து இரண்டு கைகளையும் வீசி நடக்கவேண்டும். மூச்சு சீராக இருக்கவேண்டும். கூன் போட்டு நடக்க கூடாது… உடலைக் குறுக்கிக்கொண்டு நடக்கக்கூடாது. Posture ரொம்ப முக்கியம் குமாரு!
வாக்கிங்கைத் தொடங்கியதும் குடுகுடுவென வேகமெடுக்கக் கூடாது. முதலில் பொறுமையாக ஆரம்பித்து போகப்போக வேகமெடுக்க வேண்டும். வாம் அப் பண்ணிவிட்டு நடப்பது இன்னும் நல்லது. வாம் அப் எக்ஸர்ஸைஸ் என்று யூட்டியூபில் தேடினால் நிறைய வரும். அவற்றையெல்லாம் ஒரு முறை பண்ணிவிட்டு நடந்தால் நல்லது.
நிறைய தண்ணீர் வாக்கிங் முன், பின், நடக்கும் போதும் குடிப்பது நல்லது. காரணம் நம் ஊரில் மார்கழியில்கூட இப்போதெல்லாம் வெயில்தான். ஆகவே தண்ணீர் அதிகம் எடுத்துக்கொள்வது உடலுக்கு நல்லது. Hydration முக்கியம்.
வாக்கிங் முடிக்கவும் அப்படியே விட்டுவிடக்கூடாது. உடலைக் குளிர்விக்கவேண்டும். அதற்கு சின்ன சின்ன ஸ்ட்ரெச் பயிற்சிகள் பண்ணலாம். அதெல்லாம் தெரியாது என்றால் சிம்பிள் மெத்தட் ஒரு மூன்று ரவுண்ட் சூர்ய நமஸ்காரம் பண்ணுங்கள். போதும் உடம்பு சில்லுனு ஆகிவிடும்.
உடம்பு சொல்றதைக் கேக்கணும்… ஓவராகப் பண்ணி உடம்பைக் கெடுத்துக்கொள்ளக் கூடாது. ஹார்ட் ரேட் செக் பண்ண வேண்டும். இன்று 500 ரூபாய் ஸ்மார்ட் வாட்ச்சில்கூட ஹார்ட் ரேட் காட்டுகிறார்கள். அதைக் கவனிக்க வேண்டும். அளவுக்கு மிஞ்சினால் வாக்கிங்கும் ஆபத்துதான். உங்கள் லெவல் என்ன என்பதை உங்கள் உடலே சொல்லும். அதைத் தாண்ட விரும்பினால் படிப்படியாகத் தாண்டவேண்டும்.
வேகத்தையோ தூரத்தையோ அதிகப்படுத்தும் போது பொறுமையாகச் செய்வது நல்லது. படிப்படியாக இதை அதிகமாக்கவேண்டும். ஒரே நாளில் உசேன் போல்ட் ஆகமுடியாது குமாரு!
எங்கயாச்சும் உடலில் வலிக்கிறது, முட்டி வலிக்கிறது, பாதம் வலிக்கிறது என்றால் ரெண்டு நாள் காலுக்கு ஓய்வுகொடுங்கள் ஐஸ்பேக் வையுங்கள். அப்போதும் வலி குணமாகவில்லையா மருத்துவரிடம் செல்லுங்கள்… வலியோடு தொடர்ந்து பண்ணுவதால் காயம் இன்னும் மோசமாக ஆகி வாகிங்கைக் கைவிட்டுவிடுவீர்கள்
தினமும் ஒரு குறிப்பிட்ட நேரத்தை பிக்ஸ் பண்ணி அதை கட்அன்ட்ரைட்டாகக் கடைப்பிடியுங்கள். ஒழுக்கமே வெற்றியைத் தரும்!
ஒழுங்கற்ற மேடுபள்ளமாக குண்டுகுழியுமான சாலைகளில் நடக்கக் கூடாது. எட்டுப்போட்டு நடக்கிறேன் என மொட்டைமாடியில் நடக்கக் கூடாது. இதெல்லாம் உங்கள் கால்களை மூட்டுகளைப் பாதிக்கிற விஷயங்கள்!
வெறும் வயிற்றில் நடக்கவே கூடாது. காலையில் ஏதாவது சிறிய அளவில் உணவு எடுத்துக்கொண்டு நடக்கலாம். அதற்காக பஜ்ஜி போண்டாவை விட்டு வெளுக்க வேண்டாம். கொஞ்சம் பயறு கடலை போன்று குறைந்த பட்சம் காபியாவது சாப்பிட்டுவிட்டு செல்லலாம்.
இதையெல்லாம் ஓரளவு மனதில் வைத்துக்கொண்டு நடந்தால் வாக்கிங் சுகமாக இருக்கும்!