என் உள்ளம் அழகான வெள்ளித்திரை

என் உள்ளம் அழகான வெள்ளித்திரை

பேசாம, கலாப்ரியாங்கிற பேரை, சினிமாப்ரியான்னு மாத்தி வச்சிரலாம் போல. மதுரையில் சினிப்ரியா மினிப்ரியான்னு தியேட்டர்கள் இருக்கற மாதிரி. உண்மையில் அந்த தியேட்டர் முதலாளி என் நண்பருக்கு நண்பர். 1973-74 இல் அது கட்டப்பட்டுக் கொண்டிருக்கும் போது நான் போயிருக்கிறேன். முதலில் மினிப்ரியாவில்தான் படம் போட ஆரம்பிச்சாங்க.

சினிப்ரியாவில் கொஞ்சம் ‘ஃபைனல் டச்சிங் நடந்துக்கிட்டு இருந்தது என்று நினைவு. தியேட்டர், டாக்கீஸ் சினிமாக் கொட்டகைன்னு பல பெயர்கள் திரையரங்குகளுக்கு உண்டு. திரையரங்குங்கிற பேரெல்லாம் திராவிட ஆட்சியின் பாதிப்பில் வந்தது.

திருநெல்வேலியின் முதல் டாக்கீஸ் பாப்புலர் டாக்கீஸ். அது முதலில் நாடகக் கொட்டகையாகத்தான் ஆரம்பிக்கப் பட்டது. ‘நெல்லை கணபதி விலாஸ் தியேட்டர்' என்பது அதன் பெயர். ரொம்ப நாளா தியேட்டர் முகப்பின் உச்சியில் ‘N G V T' என்று எழுதப்பட்டிருக்கும். இப்போ அந்த எழுத்துகள் இருக்கற மாதிரி தெரியலை. காலம் எல்லாவற்றையும் அழித்து விடுகிறது. இப்போது அதன் பெயரே கணேஷ் தியேட்டர். ஆனால் அதுவும் இயங்கவில்லை.

பாப்புலர் டாக்கீஸுக்கு உடப்பிறந்தா மாதிரி நெல்லை ராயல் டாக்கீஸ். கொஞ்சம் முன்னப்பின்ன கட்டிருப்பாங்கன்னு நினைக்கிறேன். ஆனா பாப்புலரில்தான், ‘MDT 1‘ என்று கார் நம்பர் ப்ளேட் மாதிரி சிறிய தகரவில்லை சுவரில் அடிச்சிருப்பாங்க. அதுவும் பின்னால 1960களில்தான் ஒட்டி வைச்சாங்க. ராயல் டாக்கீஸ் இடிச்சு ரீ மாடல் பண்ணிக் கட்டப்பட்டது. ரீமாடலுக்கு முன்னால என் சிறிய வயதில், அஞ்சு ஆறு வயசில், ராயலில் தண்டவாளத்தை நிறுத்தின மாதிரி இரும்புத் தூண்கள் உண்டு அதில்தான் தகரக் கொட்டகை போட்டிருக்கும், அங்கே, அப்படித் தூண் மறைக்க மறைக்க, ‘கணவனே கண்கண்ட தெய்வம்' பாத்திருக்கேன். அன்னைக்கி நூறாவது நாளோ என்னவோ. டிக்கெட்டுக்கு குலுக்கல் முறையில் பரிசு கொடுத்தாங்க. எனக்கு ஒரு எவர்சில்வர் தூக்குச் சட்டி கிடைச்சுது. ஆனால் பக்கத்து வீட்டு அக்கா கூடப் படம் போயிருந்தேன். டிக்கெட் அந்த அக்கா கையில் இருந்துச்சு அவ எனக்குத்தாம்லே விழுந்திருக்குன்னு வச்சுக் கிட்டா. அப்பவே அஞ்சு வயசிலேயே பிரைஸ் விழுதுறதுல நம்ம யோகம் எப்படி இருக்குன்னு பாத்தீங்களா.

ராயல் டாக்கீஸ், சினிமா தயாரிப்புக் கம்பெனியும் கூட. அவங்க எடுத்ததுதான், ஹரிதாஸ், சிந்தாமணி படங்கள். ‘சிந்தாமணி‘ படம் ஓடிக் கிடைத்த வசூலில் மதுரையில் கட்டப்பட்டதுதான் ‘சிந்தாமணி டாக்கீஸ்'. நெல்லை ராயல் டாக்கீஸ் மேனேஜர் அறையில் மதுரை சிந்தாமணி தியேட்டரின் உட்புறப் புகைப்படம் பெரிய அளவில் மாட்டப்பட்டிருக்கும். அதைப் பார்த்து விட்டு மதுரைக்குப் போன போது அதுக்கென்றே அங்கே ஒரு படம் பார்த்தேன், கண்ணன் என் காதலன் என்று நினைவு. இடுக்குப் பிடிச்ச தியேட்டர். சீட்டுகளுக்கு இடையே நடக்கவே முடியலை. அதை விட மோசம் மதுரை நியூ சினிமா. அதுக்கு தங்கம் தியேட்டர்தான். டாப். சிலாவத்தா நடக்கலாம். மதுரை சிந்தாமணி தியேட்டரை சுத்தமா இடிச்சுட்டாங்க. தங்கம் தியேட்டரையும்தான், எவ்வளவு பெரிய தியேட்டர் எப்படி இடிச்சு அப்புறப்படுத்தினாங்களோ. எந்த ஊர்க் குளத்தை நிரப்பினாங்களோ.

திருநெல்வேலி ராயல் மாதிரி பாலஸ் டி வேல்ஸ் டாக்கீஸிலும் தூண்கள் உண்டு. ரத்னா டாக்கீஸ்லயும் பெஞ்சு சேர் டிக்கட் போறவங்களுக்கு ரெண்டு பெரிய தூண்கள் தும்பம் போல பாதிப்படத்தை மறைக்கும். பாப்புலரில் தூண் கிடையாது, மறைக்காது. எல்லா வகையிலயும் குறை சொல்ல முடியாத தியேட்டர் பார்வதிதான். பச்சைப் புள்ளைக்கு கூட மறைக்காது. 1960இல் கட்டியது. அதை இப்ப கல்யாண மண்டபமாக்கிட்டாங்க.

சினிமா வெள்ளைக்காரங்க காலத்தோட தொடர்ச்சிதானே, அதனால பல பழைய தியேட்டர்களோட பேர் இங்கிலீஷிலதான் இருக்கும். இந்த அடிமைப் பாரம்பரியம் ‘மெட்ராஸ்‘ (இப்ப சென்னை) தொடங்கி நாகர்கோயில் வரை நீளும்.கல்கத்தா பாம்பேயில் கூட அப்படித்தான். பல ஊர்லயும் ராயல்ங்கிற பெயரில் தியேட்டர்கள் பொதுவா இருக்கும். ஏன்னா நாம எல்லாரும் ராயல் ஃபேமிலியோட வாரிசுல்லா. நாலணா எட்டணா குடுத்தா தியேட்டரே நமக்குத்தானே மூணு மணிநேரத்துக்கு சொந்தம்.

அதுலயும் தியேட்டரை ‘ஆடம்பரமா' உபயோகிக்கவே முப்பது பைசா குடுத்து தரை டிக்கட்டுக்குப் போவாங்க. சிலர் தியேட்டர்ல நுழைஞ்சதும் நுழையாதுமா கக்கூஸ் போயிருவாங்க. வீட்ல எல்லாம் அப்போ எடுப்புக் கக்கூஸ்தான். பாப்புலரிலும் எடுப்புக் கக்கூஸ்தான். ரத்னா, பார்வதியில் பாம்பே கக்கூஸ். அதாவது வெஸ்டர்ன் டாய்லட். அப்புறம் வெயிலில் நின்னு அடிபிடி போட்டு டிக்கட் எடுத்து வியர்வையில் குளிச்சது மறந்திரும். கொட்டகைக்குள் நுழைஞ்சதும் வேற மாதிரி வியர்த்து விடும். சட்டையக் கழற்றி விட்டு, ‘ஃபேனைப் போடு'ன்னு கூச்சல். சில பழைய தியேட்டர்களில் சுவிட்ச் இருக்கும் இடம் தெரிஞ்சு அவங்களே போட்ருவாங்க.

எந்தக் கட்டத்துல விட்டோம், ஆமா ராயல் ஃபேமிலி... கோவையிலும் ராயல், பேலஸ், சேலம் பேலஸ், நாகர் கோயில் பயோனியர் பிக்சர் பேலஸ். போல பல ஊர்களிலும் உண்டு. சென்னையில் பாரகன், காஸினோ, வெலிங்டன், பிளாசா, குளோப்,ஸ்டார், சன்,என்று எல்லாமும் காலனியாதிக்கப் பாதிப்பில் வச்ச பேர்கள். தூத்துக்குடியில் ‘காரனேஷன்'னு ஒரு தியேட்டர் உண்டு. மதுரையில் ரீகல், இம்பீரியல். என்று இரண்டு உண்டு.

அதேபோல ஊருக்கு நட்டநடு சென்டரில் இருந்தால் சென்ட்ரல் அல்லது மிட்லேண்ட் என்று பெயர் வைப்பார்கள். அதுவும் பொதுவானது. மதுரை, நெல்லை, திண்டுக்கல், கோவையில் சென்ட்ரல் உண்டு. சென்னை, மதுரையில் மிட்லேண்ட் என்று தியேட்டர்கள் பிரபலம். மாயவரம் பியர்லெஸ். தமிழில் பொதுவான பெயர்கள் லக்ஷ்மி, சரஸ்வதி, மீனாட்சி, சாந்தி, முருகன், சண்முகா போன்றவை (இதுல பாதி வட மொழிதாம்வே)

நெல்லையில் தியேட்டர், சினிமா விநியோகத்தில் முன்னோடிகளான, எஸ்.கல்யாணசுந்தரம் பிள்ளை என் அப்பாவின் நண்பர். அவர் தங்கள் தியேட்டர்களுக்கு இட்ட பெயர் நெல்லையில்,(புளியங்குடியிலும்) பாப்புலர், அஷோக், சென்ட்ரல். அவரது திரைப்பட விநியோகக் கம்பெனிக்கு இந்தியா டாக்கீஸ் என்று பெயர். அவரிடமே இதைப் பற்றிச் சொன்னேன். ‘...ஆமாவே எல்லாரும் இங்கிலீஷ்காரன் பின்னாலேயே போகணுமான்னு ஒரு யோசனைதான், நீரு கண்டுபிடிச்சிட்டேரே , சந்தோசம் வே..' என்றார். பொதுவாகவே நெல்லையைப் பொருத்து சினிமாக் கொட்டகைகள் விநியோக வியாபாரத்தில், முதலில் அய்யர்களும் பிள்ளைமார்களுமே ஈடுபட்டார்கள். அப்புறம் ரெட்டியார், நாடார், என்று விரிவானது. மதுரையில் பல தியேட்டர்கள் யாதவ இனத்தைச் சேர்ந்தவர்களால் ஆரம்பிக்கப்பட்டது என்பார்கள். ஒவ்வொரு ஊரிலும் ஒரு குறிப்பிட்ட இனத்தவர் இதில் முன் நிற்கலாம். இதில் ஒரு இனவரைவியல் அடங்கியுள்ளதாகத் தோன்றுகிறது. அப்போல்லாம் ஒரு சினிமா தியேட்டர் கட்டப்பட்டுக் கொண்டிருக்கும் போதே சைக்கிளில் அங்கே க்ஷேத்ராடனம் போலப் போய்ப் பார்ப்போம். செண்ட்ரல் டாக்கீஸ் கட்டி முடித்து கொஞ்சம் வேலைகள் மிச்சமிருந்த போது அப்பா குடும்பத்தோடு கூட்டிப் போனார். அதன் அதிபர் அப்பாவுக்கு சினேகிதர். பார்த்து விட்டு வந்து நண்பர்களிடம் ரீல் ரீலாகக் கதை விட்டுக் கொண்டிருந்தேன். அது ஒரு காலம் (அறுபது வருசமாச்சு).

கொஞ்ச நாள் முன்பு, காலங்காத்தால மருமகன், திரைப்பட இயக்குநர் சுகா கூப்பிட்டு ‘‘மாமா, திர்நெவேலி சென்ட்ரல் டாக்கீஸை மூடிட்டாங்களாமே மாமா'ன்னு வருத்தப் பட்டான். ஏதோ மாடு கண்ணு செத்துப் போன விவசாயி மாதிரி புலம்பிட்டான். அப்புறம் என்னையும் புலம்ப வச்சுட்டான்.

அவ்வளவு பெரிய தியேட்டர். நானெல்லாம் சொந்தத் தியேட்டர் போல நடமாடுவேன். திரைக்குப் பின்னால் கூடப் போய் அங்கே உள்ள சவுண்ட் சிஸ்டம் ஸ்பீக்கர்களை எல்லாம் பார்ப்பேன். படம் இட வலமாய்த் தெரியும். அதைத்தான் திரைப்படம் எடுக்கையில் பேக் ப்ரொஜக்‌ஷன் உத்தியாகப் பயன் படுத்துவார்கள் என்று பின்னால் தெரிந்து கொண்டேன்.. அந்தக் காலத்தில் அவ்வப்போது வெள்ளைத் துணித்திரையைக் கழற்றி டினோபால் போட்டுக் கழுவிக் காய வைப்பார்கள். இதை யாராவது பார்த்து விட்டு வந்து சொல்லுவார்கள், ‘‘ஏல பார்வதி டாக்கீஸ்ல திரையைக் கழுவிக் காய வச்சிருக்காங்கன்னு. பிடி ஓட்டம்ன்னு ஓடிப் போய் பார்த்தோம் ஒரு சமயம். அப்புறம் சிந்தட்டிக்கோ ப்ளாஸ்டிக்கோ திரையெல்லாம் வந்து விட்டது. இப்பவும் இதை எழுதும் போதும் திர்நெவேலித் தியேட்டர்களைப் பூரா சுத்திச் சுத்தி வருது நினைவுகள்.

திரையில் படம் ஓடத்தொடங்கியதும் அனிச்சையாய் அதன் வெண்மையை மறந்து விடுவோம். படம் முடிந்ததும் மனசே திரையாகிக் கொஞ்ச நேரம் படக்காட்சிகள் ஓடிக் கொண்டேயிருக்கும். இப்போதைக்கு சினிமாத் தியேட்டர் பக்கம் போய் கிட்டத்தட்டட ஆறு ஏழு வருட காலமிருக்கும். ஆனா மனத்திரையில் அந்தப் பழைய காலம் பூரா ஓடிக்கிட்டே இருக்கு. மனம் விரித்து வைக்காத வெள்ளித்திரை, அது ஒரு நாளும் வெறுமையாகவே இருக்காது. தியேட்டரை வச்சே ‘மாக்காளை'ன்னு ஒரு நாவல் எழுதின பிறகும் எனக்கு சினிமாக் கொட்டகைகள் மீதான அபிமானம் குறையவே குறையலை. (அந்திமழை ஆசிரியர்கள் குறையவும் விடமட்டாங்க போல)

மே, 2022

Related Stories

No stories found.
logo
Andhimazhai
www.andhimazhai.com