கன்னியாகுமரி மாவட்டம் தெரிசனந்தோப்பில் உள்ள ஸ்ரீசாரதா ஆயுர்வேத மருத்துவமனையின் தலைமை மருத்துவர் மகாதேவன். எழுபதுக்கும் மேற்பட்ட ஆயுர்வேத நூல்களை எழுதியுள்ளார். நம் பாரம்பரிய வைத்தியர்களின் குணங்களாகச் சொல்லக்கூடிய 'ரகசியத்தன்மையை' கடந்து வெளிப்படையாக தனக்கு தெரிந்த ஆயுர் வேத மற்றும் சித்த மருத்துவ முறைகளை மாணவர்களுக்குக் கற்றுகொடுப்பவர். '' நோயாளிக்கு தனது நோய்க்கான சிகிச்சை சித்தாவா ஆயுர்வேதமா அலோபதியா என்பது எல்லாம் பார்க்கத் தெரியாது. தனது நோய் எப்படியாவது சீர் ஆகவேண்டும் என்றுதான் நம்மை தேடி வருகிறான். அவனுக்கு நாம் சரியான வழிகாட்டியாக இருக்கவேண்டும் அதுதான் அவனுக்கு நாம் செய்யும் மிகபெரிய உதவி'' என தன்னடக்கத்துடன் பேச ஆரம்பித்தவரிடம் அந்திமழையின் உணவு சிறப்பிதழுக்காகப் பேசினோம். அவருடைய உணவுப் பழக்கங்கள் மற்றும் சில குறிப்புகளை அளித்தார்.
''நான் சைவ உணவுக்காரன். சம்பாசோறுடன். காய்கறிகள் நிறைய சாப்பிடுகிறேன். நீர்மோர் நிறைய குடிப்பேன். அவித்த பாசிபருப்பு நிறைய சாப்பிடுவேன். ஒருவேளை சுண்டல். தினமும் பால் குடிப்பேன். தினமும் மூன்று தேக்கரண்டி நெய் சாப்பிடுவேன். நினைவாற்றலுக்கு ரொம்ப நல்லது. நெய் கொழுப்பு என்பதை நான் பெரியளவில் ஏற்றுக்கொள்ளுவதில்லை. ஆயுர்வேத மருத்துவப்படி நெய் சாப்பிடுவதும், எண்ணெய் தேய்த்துக்குளிப்பதும் ரொம்ப நல்லது அதில் மாற்றுக்கருத்தே கிடையாது. வாதத்தையும் நரம்பு மண்டல இயக்கத்தையும் சீராக்கும். தேங்காய் எண்ணெயும் ரொம்ப நல்லது. தினமும் நடைப்பயிற்சி மற்றும், உடற்பயிற்சி செய்கிறவர்கள்... ஓரளவுக்கு உடம்பை சீராக வைத்துள்ளவர்களுக்கு நெய் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் நிறைய நோய் எதிர்ப்பு தன்மையை கூட்டும் நினைவாற்றலை அதிகரிக்கும், ஞாபகமறதி மற்றும் மன
அழுத்தத்தைக் குறைக்கும்
ஒரு நாள் உணவை ஐந்து வேளையாகப் பிரித்து சாப்பிடுவது என் வழக்கம். காலையில் ஐந்து இட்லி சாப்பிடுவதற்கு பதிலாக இரண்டு இட்லி சாப்பிடுகிறேன். 11 மணிக்கு மேல் மூன்று இட்லி. ஒரு மணிக்கு கொஞ்சம் சம்பா சோறு. நான்கு மணிக்கு ஏத்தம்பழமும் கொஞ்சம் அவலும். இரவில் 2 சப்பாத்தி. மாதத்திற்கு ஒருநாள் உண்ணாவிரதம். ஒருமுறை பேதிக்கு மருந்து. ஆறு மாதத்திற்கு ஒருமுறை வாந்தி எடுப்பதற்கு மருந்து சாப்பிடுவேன். மூக்கில் மருந்துவிடக்கூடிய சிகிச்சை செய்வேன். வாரந்தோறும் சனிக்கிழமை எண்ணெய் தேய்த்து குளிப்பேன். இப்படி நான் செய்வதனால் என்னுடைய வாழ்க்கையை சிறப்பாக பார்த்துகொள்கிறேன் என்றும் சொல்லமுடியாது. ஓரளவுக்குப் பரவாயில்லை. வேலையின் நிமித்தமாக வரும் மனஅழுத்தம் கொஞ்சம் குறைகிறது. அவ்வளவுதான். ஆனால் இதை எல்லோரும் கடைப்பிடிக்க முடியுமா என்று தெரியவில்லை. என்னுடைய வாழ்க்கையை நான் இப்படி அமைத்துக்கொண்டேன் என்றுதான் சொல்லமுடியும்.
இன்றைய வாழ்க்கைச் சூழலில் நவீன வாழ்க்கை சார்ந்த நோய்கள்தான் அதிகமாக இருக்கிறது. சர்க்கரை நோய், திடீரென்று உடல் எடை அதிகரிப்பு, புற்றுநோய், ஞாபகமறதி,, மாதவிடாய் பிரச்னை, மனஅழுத்தம், இடுப்பு வலி, கழுத்துவலி, இவை எல்லாமே வாழ்க்கை முறையின் ஒழுங்கின்மையால் வரக்கூடிய நோய்கள். இவைகளை தொற்றா நோய்கள் என்றும் கூறுகிறார்கள். இதில்தான் ஆயுர்வேதம் மற்றும் சித்தமருத்துவம் அதிகம் பங்களிக்கிறது. இதற்குக் காரணம் தவறான உணவுப்பழக்கம், உடற்பயிற்சி இல்லாத வாழ்க்கை, நீர் அம்சம் உள்ள மாவுபொருட்கள் உணவுகளை அதிகமாக சாப்பிடுவது, மன அமைதியின்மை, வாழ்க்கையைப்பற்றிய உன்னத கருத்துக்கள் இல்லாமல் இருப்பது, பாரம்பரிய மருத்துவ கருத்துபடி தன்னை உணர்தல் என்பதில் இருந்து விலகி விடுவது, போன்றவைகள் இதற்கு காரணம். ஆயுர்வேத தத்துவப்படி கபம் அதிகமாகி இந்த நோய்கள் எல்லாம் வருகிறது. இதைதான் வாழ்க்கை முறை மாற்றத்தினால் வருகின்ற நோய்கள் என்று சொல்லுகிறோம். இதற்கு நாம் நம்முடைய வாழ்க்கை முறையை ஒழுங்குசெய்தல் மற்றும் உடலை சுத்தி செய்தல் போன்றவற்றின் மூலமாக குணப்படுத்தலாம்.
இப்போது யாரைப் பார்த்தாலும் வைட்டமின் டி குறையாகத்தான் இருக்கிறார்கள். பத்திற்கு எட்டு பேருக்கு சராசரி அளவைவிட குறைவாகத் தான் இருக்கிறது. வெயிலில் நின்று வேலைசெய்யும் தொழிலாளிகளுக்குக் கூட குறைவுதான். பல நோயாளிகளுக்கு இந்த வைட்டமின் டி குறையைச் சரிசெய்ய மருந்துகள் கொடுக்கும்போது கைகால் வலியெல்லாம் சரியாகிவிடுகிறது என்றே சொல்லுகிறார்கள். ஆனால் சர்க்கரை நோய்க்கு இது முக்கியக்காரணம் என்று நான் சொல்லமாட்டேன். ஆனால் சர்க்கரை நோய் உள்ளவங்களுக்கு வைட்டமின் டி சீர்படுத்தும்போது உடல் ஆரோக்கியம் மேம்படுகிறதைக் காண்கிறேன். வைட்டமின் டி பெற, 11&மணியில் இருந்து மூன்று மணி வரை வெயிலில் நிற்கவேண்டும். ஆனால் தற்போது அதற்கான சாத்தியங்கள் குறைவுதான்
மக்கள்தான் தங்களை மாற்றிக்கொள்ளவேண்டும். பலவிதமான நோயாளிகளுக்கு சில குறியீடுகள் என்னவென்று புரிந்துகொள்ளமுடியாத நிலைமையில் வைட்டமின் டி&யை பார்த்து அதை சரிசெய்து கொடுக்கும்போது அவர்களின் ஆரோக்கியம் மேம்படுகிறது என்பது உண்மைதான்.
நாங்கள் இதற்கு எள், பிரண்டை, கேழ்வரகை உணவில் சேர்க்கச்சொல்லுவோம். இதுபோக சூரிய நமஸ்காரம் பண்ணுவது, வெயிலில் நிற்பதும் கூடுதல் பலனைக் கொடுக்கும். நெருப்பின் சார்பு இல்லாமல் உடலை வியர்க்கச்செய்வது என்று எங்களுடைய ஆயுர்வேதத்தில் சொல்லுவோம்.
பாதார்த்த சிந்தாமணி என்ற புத்தகத்தில் கருணைக்கிழங்கு சேனைக்கிழங்கை தவிர பூமிக்கடியில் விளையும் கிழங்குகள் எதுவும் சாப்பிட வேண்டாம் என்று குறிப்பு இருக்கிறது. வேர்க்காய்கறிகள் என்ற ஒன்று இருக்கிறது. உருளைக்கிழங்கு சேனைக்கிழங்கு, கேரட், பீட்ரூட் வெங்காயம், பூண்டு இவை எல்லாமே வேர் காய்கறிகள்தான். சிலருக்கு ஒத்துகொள்ளும் சிலர் உடம்புக்கு சேராது. உருளைக்கிழங்கில் வாயு என்று பொதுவாக எல்லோருக்கும் தெரியும். அது தொடர்பாக சித்தர் பாடல்களும் இருக்கின்றன. ஆனால் உருளைக்கிழங்கு 16ம் நூற்றாண்டில்தான் நம்மிடம் வருகிறது. ஆனால் அதற்கு முற்பட்ட காலம் சார்ந்த சித்தர்பாடல் நம்மிடம் இருக்கிறது. அந்த பாட்டே இடைசெருகலோ என்ற சந்தேகம் எனக்கு உண்டு. சில நாடுகளில் உருளைக்கிழங்குதான் பொதுவான உணவாக இருக்கிறது. அதனால் ஒருவனுக்கு ஒரு உணவு எல்லா காலத்திலும் நன்மை பயக்கும் என்றும் எல்லா காலத்திலும் தீமை பயக்கும் என்று சொல்லமுடியாது. அவரவர் வாழ்வைப் பொருத்துதான் உணவு சாப்பிடவேண்டும். அசைவ உணவு சாப்பிடுவது என்னுடைய கலாசாரத்தில் இல்லை. ஆனால் ஆயுர்வேதம் ஒன்றும் சைவம் இல்லை. ஆட்டு மாமிசம் சேர்ந்த மருந்துகளும் ஆயுர்வேதத்தில் உள்ளன,'' என்று முடித்தார்.
அக்டோபர், 2019.