உலகம் முழுக்க ஓடிடி எனப்படும் ஓவர் தி டாப் ப்ளாட்பார்ம் அனைத்துமே வெப் தொடர்களையே பிரதானமாக கொண்டிருக்கும். இதன் மூலமாக தொடர்சியாக பார்வையாளர்களை தக்கவைக்க முயற்சிப்பதே அவர்களின் நோக்கமாக இருக்கும்.
தற்போதைய கொரோனா காலகட்டத்தில் திரைப்படங்களை திரையரங்குகளில் வெளியிடுவதில் பல சிரமங்கள் இருப்பதனால் சில புதுப் படங்களை ஓடிடியில் வெளியிடுகிறார்கள். மற்றபடி திரைப்படங்களை வெளியிடுவதென்பது ஓடிடி தளங்களின் பிரதான நோக்கமாக இருக்காது. ஆனால் வெளியான திரைப்படங்களை, தவறவிட்ட டிவி நிகழ்ச்சிகளை விரும்பும்போது பார்ப்பதற்கான டிஜிட்டல் சினிமா நூலகமாக இந்த தளங்கள் இருக்கும். இந்தியா மட்டுமல்ல உலகமெங்கிலுமே கடந்த சில வருடங்களில் தான் இந்த ஓடிடி தளங்கள் பிரபலமாகத் தொடங்கி உள்ளன. வேகமான இணைய சேவையும் அதனுடன் பிரபலமான இயக்குநர், நடிகர் நடிகைகள் பங்கேற்பும் கிடைக்கும்போது வருங்காலங்களில் இதனுடைய வீச்சும் தாக்கமும் பிரமாண்டமாக இருக்கும்.
வெப் தொடர்களுக்கான பட்ஜெட்டை தீர்மானிப்பது கதையும் அந்த குறிப்பிட்ட ஓடிடி தளத்தின் பார்வையாளர்களும்தான். எங்களுடைய ட்ரீம் கேட்சர்ஸ் நிறுவனம் அல்லு அர்விந்தின் ஆஹா தளத்திற்காக தயாரித்த அத்தம் தொடர் தெலுங்கு பார்வையாளர்களுக்கானது. அதைப் பொறுத்தே பட்ஜெட்டும் முடிவு செய்யப்பட்டது.
எங்களுக்கான முதல் வாய்ப்பு ஆஹாவின் துணைத் தலைவர் சூரிய நாராயணன் மூலமாகக் கிடைத்தது. இவர் இயக்குநர் கௌதம் மேனனிடன் உதவி இயக்குநராக இருந்தவர். நாங்கள் ஏற்கெனவே கௌதம் மேனனுடன் இணைந்து பல புராஜக்ட்களை செய்துள் ளோம். தெலுங்கில் முதல் வாய்ப்பு என்று யோசிக்கவில்லை. ரேடியோ மிர்ச்சியை ஹைதராபாத்தில் தொடங்கி வைத்தது முதல் சில விளம்பர படங்களை அங்கு செய்துள்ளோம். உடனடியாக வேலையைத் தொடங்கி விட்டோம். மிர்ச்சியில் சந்தித்த தேவசேனாவும் நானும் சேர்ந்து ஆரம்பித்த கம்பெனிதான் ட்ரீம் கேட்ச்சர்ஸ் (ஈணூஞுச்ட் இச்tஞிடஞுணூண்). ஏற்கெனவே விளம்பரப்படங்கள் எடுத்து இந்த துறையில் இருந்ததனால் வாய்ப்பு கிடைப்பது எளிதாக இருந்தது. வெப் தொடர்களை தயாரிக்க விரும்புபவர்கள் ஏற்கெனவே பிரபலமாக இருக்கும் தயாரிப்பு நிறுவனங்கள், இயக்குநர்களைத் தான் அணுகுவார்கள். அதுதான் இயல்பாக நடக்கும். புதிதாக கதை வைத்திருப்பவர்கள், தயாரிப்பு நிறுவனத்தை தொடங்குபவர்கள் இந்த தளங்களை அணுகுவதற்கு சற்று சிரமமாகத்தான் இருக்கும்.
ஓடிடி தளங்களில் கதை,இயக்குநர்,தயாரிப்பு நிறுவனங்களை முடிவு செய்யும் இடத்தில் இருப்பவர்களுக்கு இதைப்பற்றிய சரியான புரிதலும், எதிர்கால திட்டமிடலுடன் கூடிய பார்வையும் இருப்பது அவசியம். மக்களிடம் பரவலாக சென்று சேரக்கூடிய தரமான தயாரிப்புகளை அவர்கள் அளிக்கும் போதுதான் அவர்கள் நிலைத்து நிற்க முடியும்.
எங்களுடைய ட்ரீம் கேட்சர்ஸை பொறுத்தவரை சிறப்பான எழுத்தாளர் குழுவை உருவாக்க வேண்டும் என்பதே எங்களுடைய விருப்பம். ஓடிடி தளங்கள் நூலகம் போன்றவை. ஆக்ஷன், குடும்பம், திரில்லர் என்று பார்வையாளர்களுக்கு என்ன தேவையோ அந்த வகையிலான தொடர்களையோ, திரைப்படங்களையோ அவர்கள் தேர்ந்தெடுத்துப் பார்க்கலாம். இதனால் பல தரப்பட்ட கதைகள், பரிசோதனை முயற்சிகள் செய்வதற்கான வாய்ப்பு இருக்கிறது. இதில் இருபது எபிசோடுகள், முப்பது எபிசோடுகள் என்று வரும்போது எழுத் தாளர்களுக்கும், திரைக்கதை ஆசிரியர்களுக்கும் அதிக முக்கியத்துவம் கிடைக்கிறது.
சிலர் நல்ல கதை மட்டும் வைத்திருப்பார்கள். சரியான திரைக்கதை அமையாது. சில திறமையான இயக்குநர்கள் நல்ல கதை தேடுவார்கள். இவர்களை இணைக்கும் புள்ளியாக ட்ரீம் கேட்சர்ஸ் இருக்க வேண்டுமென்பது எங்கள் விருப்பம். கதாசிரியர், எழுத்தாளர், இயக்குநர்களைக் கொண்ட தேர்ந்த குழுவினைக் கொண்டு சிறந்த படைப்புகளைத் தர விரும்புகிறோம்
மே 2021