ஓடிடி: ‘ஓடாத தமிழ் திரைப்படங்கள்’

ஓடிடி: ‘ஓடாத தமிழ் திரைப்படங்கள்’
Published on

ஓடிடி தளம் மட்டும் கிடையாது, வேறு எது புதியதாக வந்தாலும் அவற்றை நாங்கள் வரவேற்போம். ஆனால், அதேநேரத்தில் நடிகர்கள், இயக்குநர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள் என அத்தனை பேரும் தியேட்டர் மூலமாகத்தான் வளர்ந்தவர்கள். ரஜினி, கமல், விஜய், அஜித், சூர்யா போன்றவர்களை நாங்கள் தான் மக்களிடம் கொண்டு சென்றுசேர்த்தோம்.

ஓடிடி வருகையால் சில ஏற்ற இறக்கங்கள் தியேட்டர்களுக்கு வரலாம். அதனால் தியேட்டர்கள் இல்லாமல் போகாது. தியேட்டர்களுக்கான எதிர்காலம் சிறப்பாகவே உள்ளது. என்னைப் பொருத்த வரை ஓடிடி தளம் என்றால்  அது ‘ஓடாத தமிழ் திரைப்படங்கள்' என்று தான் பொருள். இதுவரை ஓடிடியில் வெளியாகி இருக்கும் திரைப்படங்கள் எதுவும் வெற்றி பெறவில்லை. ஓடிடியில் இதுவரை வெளிவந்திருக்கும் திரைப்படங்கள் தியேட்டரில் வந்திருந்தால் நிச்சயம் தோல்வியை தழுவியிருக்கும். அதேபோல், ஓடிடி தளங்களை வைத்துக் கொண்டிருப்பவர்களே இப்போது என்ன சொல்கிறார்கள் என்றால்? போதுமான அளவிற்கு லாபமும் சந்தாதாரர்களும் வரவில்லை என்று புலம்புகிறார்கள். ஆனால் இந்த கொரோனா பயத்திலும் திரைக்கு வந்த 'மாஸ்டர்', 'கர்ணன்' உள்ளிட்ட திரைப்படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றன.

ஓடிடி தளத்துக்கும் தியேட்டருக்குமான வித்தியாசம் என்னவென்றால். வீட்டில் இருக்கும் வெங்கடாஜலபதி படத்துக்கும் திருப்பதியில் இருக்கும் வெங்கடாஜலபதிக்கும் இடையே உள்ள வித்தியாசம் தான் அது. திருப்பதியில் நம்மால் ஒரு ஆன்மபலம் பெற முடியும், ஆனால் வீட்டில் அதைப் பெறமுடியாது. அதேபோலத் தான் தியேட்டருக்கு வந்து படம் பார்ப்பதும். தியேட்டரில் இருக்கும் சவுண்ட் சிஸ்டம், ஏசி, இருக்கைகள் தரும் உணர்வை ஓடிடி தருமா? ஓடிடியில் படம் பார்க்கும் பெரும்பாலானோர் என்ன கதை என்பதை மட்டும் தான் பார்த்துவிட்டு செல்கின்றனர். இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால் ஓடிடி தளத்தில் கதை திருட்டு என்பது அதிகம், இது என்னுடைய தனிப்பட்ட கருத்து.

ஓடிடி தளங்கள் கொரோனா காலத்துக்கு முன்பிருந்தே இருந்தாலும் அது கொரோனா ஊரடங்கால் தான் அடுத்தகட்டத்துக்கு நகர்ந்துள் ளது. இதற்கு முன்னர், படம் தியேட்டரில் வெளியாகி இரண்டு மூன்று மாதங்கள் ஆன பிறகே ஓடிடியில் வெளியிடுவார்கள். ஆனால் பொன்மகள் வந்தால் திரைப்படம் முதலிலேயே ஓடிடியில் வெளியிட்டுவிட்டார்கள்.  நவம்பரில் தியேட்டர் திறந்த பின்னரும் சூரரைப்போற்று திரைப்படத்தை ஓடிடியில் வெளியிட்டதுதான் தியேட்டர் உரிமையாளர்களுக்கு மனவேதனையைக் கொடுத் தது. பெரிய பட்ஜெட் படங்கள் ஓடிடி தளத்தில் வெளியாவது தியேட்டர் உரிமையாளர்களுக்கு மிகப்பெரிய மனவருத்தத்தை ஏற்படுத்தத் தானே செய்யும்?

நடிகர் கமல்ஹாசன் தன்னுடைய விஸ்வரூபம் படத்தை டிடிஎச் தளத்தில் வெளியிட முடிவு செய்த போது, தியேட்டர் உரிமையாளர்கள் இதனால் கடுமையாகப் பாதிக்கப்படுவார்கள் என்பதை நானும் அபிராமி ராமநாதனும் அவருக்கு எடுத்துக் கூறினோம். இதனால் டிடிஎச்சில் வெளியிடும் முடிவை அவர் திரும்பப் பெற்றார். அப்போது டிடிஎச்சில் விஸ்வரூபம் வெளியாகி இருந்தால் மிகப் பெரிய இழப்பை சந்தித்து இருக்கும். தொழிலில் அனுசரித்து போவதே வெற்றிக்கு வழிவகுக்கும்.

ஒரு சவாலுக்காக, தியேட்டர்களில் ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள், கால்பந்தாட்டம், போன்றவற்றை ஒளிபரப்ப ஆரம்பித்தால் என்ன ஆகும் என்பதை யோசித்துப் பாருங்கள்? அனைவரும் ஒத்துப் போனால் தான் திரைத்துறை நன்றாக இருக்கும். அமெரிக்காவில் ஒரு திரைப்படம் திரையரங்கில் வெளியாகிறது என்றால், அது ஓடிடி தளத்தில் வெளியாக 8 வாரங்கள் ஆகும்.  இதே நடைமுறை தான் இந்தி, மலையாள திரையுலகிலும் உள்ளது. ஆனால் இந்த நடைமுறை ஏன் தமிழ் திரையுலகில் இல்லை என்றால் தயாரிப்பாளர்கள், விநியோகஸ்தர்கள், திரையரங்க உரிமையாளர்களுக்கு இடையே உள்ள போட்டி தான் காரணம்.

மே 2021

logo
Andhimazhai
www.andhimazhai.com