கிட்டத்தட்ட 2015-இல் இருந்து ஓடிடி வருகையை நான் கவனித்துவருகிறேன். 2010 இல் சினிமா வியாபாரம் என்ற நூலை எழுதியபோதே அதில் எதிர்காலத்தில் இன்னும் பத்து ஆண்டுகளில் சினிமாவும் டிவியும் செல்போன்கள் வழியாகப் பார்க்கப்படும் என்று கூறினேன். ஆனால் இது எப்படி சாத்தியம்? ஒரு ஜிபி 250 ரூபாய் 300 ரூபாய் என இருக்கும்போது எப்படி இணையம் மூலம் பார்க்கமுடியும் என கிண்டல் செய்தார்கள். பத்து ஆண்டுகளில் அதுதான் நிகழ ஆரம்பித்துவிட்டது. திரை அரங்குகளில் சென்று படம் பார்ப்பது என்பது நல்ல அனுபவம். ஆனால் மல்டிப்ளக்ஸ் வருகைக்குப் பின் ரசனைக்கு ஏற்ற படங்களைப் பார்ப்பது என்கிற போக்கு உருவானது. அந்த படங்கள் குறைவான நாட்கள் மட்டுமே ஓடத் தொடங்கியபோது தேவையான நேரத்தில் பார்ப்பதற்கான தேவை உருவாகியது. தொலைக்காட்சிகளில் ஓடும்போது, விளம்பரங்களுடன் பார்க்கவேண்டி இருந்தது. இந்த நேரத்தில்தான் இணையம் மூலம் வீடியோ வர ஆரம்பித்தது. விரும்பும்போது பார்ப்பதுதான் இதன் அடிப்படை. இது உலகம் முழுக்க வரவேற்பு பெற்றபோது ஓடிடி தளங்கள் தோன்றின.
இது பெரிய வரவேற்பு பெறும் என்று நான் கருதினேன். இதன்மூலம் சினிமா வர்த்தகத்தில் புதிய வணிக வாய்ப்பு உருவாகி உள்ளது. இரண்டாயிரமாவது ஆண்டுக்கு முன்பே சுமார் 500 குறும்படங்களை வைத்து இணையதளம் நடத்தினேன். அது காலத்தால் முற்பட்ட யோசனை. அதுவும் யூட்யூபுக்கு முற்பட்டது. எனவே எனக்கு இழப்புதான் ஏற்பட்டது. அதை மூடிவிட்டேன் என்பதையும் இங்கே குறிப்பிட விரும்புகிறேன்.
இந்த ஓடிடி வருகையில் என் பழைய யோசனையை மீண்டும் தூசி தட்டி எடுத்து மூவிவுட் என்ற பெயரில் ஓடிடி தளத்தை நானும் என் நண்பர் ரமேஷும் சேர்ந்து நடத்தி வருகிறோம். ஆறுமாதமாக சுமார் 200 வீடியோக்கள் போட்டு வைத்திருக்கிறோம்.
அமேசான் ஓடிடி தளத்தில் வெகுஜன மக்களை ஈர்க்கும் படங்களை வைத்துள்ளனர். அதே சமயம் சில தரமான படைப்புகளும் அதில் உள்ளன. நெட்ப்ளிக்ஸ் தளத்தை எடுத்துக்கொண்டால் உலகத்தில் எல்லா மொழிகளின் படைப்புகளும் அதில் உள்ளன. சிறந்தவையும் உள்ளன. மொக்கைகளும் உள்ளன. முபி என்ற தளம் உலகளாவிய கிளாசிக் படங்களை வைத்துள்ளனர்.
எங்கள் தளம் சிறுமுதலீட்டுப் படங்களுக்கு முக்கியத்துவம் தருகிறோம். ஆண்டுக்கு 365 ரூபாய்தான் சந்தா வாங்குகிறோம். சில ஆயிரம் சந்தாதாரர்கள் உள்ளனர். சில படங்களை இலவசமாகப் பார்க்க வழி செய்துள்ளோம். புதிய கலைஞர்களுக்கு வாய்ப்பு உருவாக்கி தருதல், சுயாதீனப் படங்களுக்கு களம் அமைத்துக் கொடுத் தல் ஆகியவையே இதன் இலக்கு.
எஸ்.பி.பி.சரண் தயாரிப்பில் அதிகாரம் என்ற வெப்சீரீஸ் அமேசனுக்காக தயாராகிறது. அதன் கிரியேட்டர் ரைட்டராக நான் பணி புரிகிறேன். அரசியல் கதையான அது மூன்று சீரீஸ் வர உள்ளது. என்னுடைய நாவல்களை ஓடிடி தளங்களுக்கு எழுதி இயக்க உள்ளேன்.
ஒரு படத்தை எடுத்தபின் அதை ஓடிடி தளங்களை அணுகி விற்பது என்பது ஒருவிதம். அந்த படத்தை தியேட்டரில் வெளியிட்டு,ஓரளவுக்கு வரவேற்பு இருந்தாலே போதும் அதை ஓடிடி தளங்களில் விற்றுவிட முடியும். அதே அந்த தளங்களின் தயாரிப்பில் நீங்கள் படம் எடுக்க விரும்பினால் அது நீண்ட காலம் பிடிக்கும் வழி. நாம் அனுப்பும் கதைச்சுருக்கம் அந்த தளத்தின் நிர்வாகிகளுக்குப் பிடிக்கவேண்டும். எல்லாவற்றையும் விரிவாக எழுதி அனுப்பி, அதன்பின் அதை அவர்கள் ஏற்ற பின் நாம் படம் எடுக்க ஆரம்பிக்கலாம். அப்போதுதான் பட்ஜெட் அவர்கள் ஒதுக்குவார்கள். இதற்கே ஒன்றரை ஆண்டு ஆகிவிடும். அதுவரை தொடர்ச்சியாக நாம் காத்திருக்கவேண்டும்.
இது அல்லாமல் நிறையபேர் வெப்சீரீஸ் எடுத்து வைத்து, அதை எங்கே விற்பது என்று அலைந்துகொண்டுள்ளனர். இந்த வெப் சீரீஸ் என்பதே மிகவும் மாறானது. சினிமா, டிவி தொடர், வெப் சீரீஸ்& இவை மூன்றுக்கும் வெவ்வேறு முறைகளில் எழுத வேண்டி இருக்கும். பெரும்பாலான ஆட்கள் வெப்சீரீஸுக்கு எழுத இன்னும் தயாராக இல்லை. சினிமாவுக்கான கதையை ஆறு ஏழு புள்ளிகளில் பிரித்து வைத்துகொண்டு அதை வெப்சீரிசாக சில எபிசோடாக எழுதுகிறார்கள். இதனால்தான் தமிழில் நல்ல வெப்சீரீஸ் எதுவும் வரவில்லை என சொல்லப்பட்டு வருகிறது. சமீபத்தில் நான் பார்த்த தமிழ் வெப்சீரீஸ்களில் ஆட்டோ சங்கர், குயீன், வதம் ஆகிய மூன்றையும் தான் சிறந்த வெப் சீரீஸ்களாக சொல்வேன். மீதி எல்லாம் சினிமாவுக்கு எழுதப்பட்டவையே வெப்சீரீஸ்களாக வந்துள்ளன.
இதனால் தமிழில் திரைக்கதை எழுத்தாளர்கள் இல்லை என்ற கருத்து பொதுவாக உலவுகிறது. எழுத் தாளர்கள் உள்ளனர். அவர்கள் தங்கள் கதைகளை நாவல்களாக எழுதுகின்றனர். இதை வெப்சீரீஸ் வடிவில் மாற்றக்கூடிய, அதற்கு காட்சிகள் யோசிக்கக் கூடிய, திரைக்கதை எழுத்தாளர்கள் குறைவு. எழுதக்கூடிய ஆட்களும் தங்களை இன்னும் நிரூபிக்கமுடியாமல் இருக்கிறார்கள்.
திரைப்படம் ஒன்று எழுதப்படும்போது அக்கதை ஒரு நாயகன் அல்லது நாயகி மீது ஏற்றிச் சொல்லப்படும். உதாரணத்துக்கு நான் எழுதிய அதிகாரம் என்ற வெப்சீரிஸ் முதலில் சினிமாவுக்காக எழுதப்பட்ட அரசியல் திரைக்கதை. 2016 இல் பணமதிப்பிழப்பு நடந்ததால் படம் எடுக்கப்படாமல் நின்றுவிட்டது. எனவே வெப்சீரீஸாக எழுத முனைந்தேன். திரைப்படத்துக்காக நான் 134 காட்சிகள் எழுதி இருந்தேன். அதே காட்சிகளை வெப்சீரீஸுக்கு வைக்க முடியாது. வைக்கவும் கூடாது. அந்த
சினிமா ஒரு நாயகனின் பார்வையில் சொல்லப்பட்ட கதை. ஆனால் வெப்சீரீஸில் நிறைய பாத்திரங்கள், நிறைய விஷயங்களை விவரித்துச் சொல்ல வாய்ப்புகள், நேரம் கிடைக்கும். இதன் முதல் சீசனில் மொத்த கதையில் 30 சதவீதம்தான் பயன்படுத்தி உள்ளேன். இதற்காக புதிதாக 97 காட்சிகளை எழுதி உள்ளேன்.
ஆக இதற்காக எழுதும் முறையே வேறு என்பதைப் புரிந்துகொள்ளலாம். பல பாத்திரங்கள், பல அடுக்குகள்கொண்ட உணர்வுகள் எல்லாவற்றையும் காண்பிக்கக் கூடிய இடமாக வெப்சீரீஸ்கள் உள்ளன.
சினிமாவின் தொழில்நுட்பத்தை அப்படியே கிரகித்துக் கொண்டு அதைத் தாண்டி நிறைய செய்யக்கூடிய இடமாக வெப்சீரீஸ்கள் உள்ளன. இங்கு திரைக்கதை எழுதுவது மிக முக்கியம். எதையும் விவரமாக சொல்லக்கூடிய பார்வை இங்கு தேவைப்படுகிறது.
எதிர்காலத்தில் எங்களை மாதிரி சிறு நிறுவனங்களையும் சேர்த்து ஓடிடி தளங்கள் என்று எடுத்தால் சுமார் 100 தளங்கள் உருவாகி இருக்கும். இவ்வளவு பேருக்கும் என்ன வருமானம் கிடைக்கும்? இந்தியா போன்ற பெரிய நாட்டில் எல்லாவிதமான வணிகத்துக்கும் வாய்ப்பு உண்டு. ஆனால் முறையான மார்க்கெட்டிங் தேவை. ஓடிடி தளங்கள் எதிர்காலத்தில் டேட்டா தரப்போகும் நிறுவனங்களின் குடையின் கீழ் வரும். டேட்டா வாங்கினால் போதும். இந்த தளங்களின் செயலிகள் இலவசமாகவோ எளிமையான பேக்கேஜிலோ கிடைக்கும். இப்போதே அது கொஞ்சம் தொடங்கி விட்டது. இன்னும் ஓரிரு ஆண்டுகளில் இது முழுமை அடையும். எதிர்காலங்களில் எல்லா படங்களையும் விலைக்கு வாங்க மாட்டார்கள். பெரிய ஸ்டார் படங்கள் மட்டுமே வாங்கப்படும். மற்றபடி மக்கள் பார்க்கவேண்டிய முக்கிய சிறு படங்கள் என்றால் வருவாய் பகிர்வு என்ற அடிப்படையில் அவை ஓடிடி தளங்களால் வாங்கப்படும். எங்கள் தளத்திலும் இப்போதே வருவாய் பகிர்வு என்ற அடிப்படையில்தான் படங்களை ஒப்பந்தம் செய்து வைத்திருக்கிறோம்.
(நமது செய்தியாளரிடம் பேசியதில் இருந்து)
மே 2021