பாராய் நீ பாராய்!

பாராய் நீ பாராய்!

சமீபமாக மலையாளத் திரையுலகில் நிறையவும் சிறப்பாகவும் படங்கள் வருகின்றன. பெருந்தொற்றுக் காலத்தில் நானும் மனைவியும் ஓ.டி.டி தளத்தில் பார்த்த மலையாளப் படங்கள், பெயர்களை நினைவில் வைத்துக் கொள்ள முடியாத அளவு கணக்கிலடங்காதவை.

சத்யன், பிரேம் நசீர்,  சாரதா,  ஷீலா, ராமு காரியத், தோப்பில் பாசி, வின்சென்ட் காலத்திலேயே சிறந்த மலையாளப்படங்கள் வருவதுண்டு.  ‘நடுவுல கொஞ்சம் பக்கத்தைக் காணும்' வெளியான சமயத்தில் தங்களை மறந்து தமிழ் சினிமாத் தயாரிப்பாளர்கள் பிட்ஸா, சதுரங்க வேட்டை, சூது கவ்வும், என்று டார்க் காமெடி படங்களை நம்பிக்கையூட்டும்படி எடுத்தனர். அப்புறம் அவையும் காணாமல் போன பக்கங்களில் ஒளிந்து கொண்டு விட்டன.

விஜய் சேதுபதி, விமல், பாபி சிம்ஹா என்று நல்ல நடிகர்கள் அப்படி வித்தியாசமான ரோல்களைச் செய்ய உருவாகியிருந்தார்கள். ஆனால் அவர்களுக்கு அதே ரோல்களையேதான் தருவேன் என்று பிடிவாதமோ என்னவோ மீண்டும் பழைய கதையே திரும்பி விட்டது. அதே சமயம், மலையாளத்தில், பஹத் ஃபாஸில், துல்கார் சல்மான், சூரஜ் வெஞ்சரமூடு, பாஸில் ஜோசப், சௌபின் ஷாஹிர் போன்றவர்களின் அருமையான படங்கள் எளிமையான கதையமைப்புடன் வருகின்றன. இதில் சௌபின், ஸ்ரீனிவாசன், பாஸில் ஜோசப் போன்றவர்கள் நல்ல கதாசிரியர்களாகவும், இயக்குநர்களாக, தயாரிப்பாளர்களாகவும் உள்ளனர். வினீத் சீனிவாசன், நிஜமாகவே சகலகலா வல்லவராக உள்ளார்.

கிரேட் இண்டியன் கிச்சன், ஜய ஜய ஜய ஜெய ஹே இரண்டும் ஆர்ப்பாட்டமில்லாமல் வந்து அசத்திக் கொண்டிருக்கின்றன. இதில் சமீபத்திய வெற்றிப்படம், ஜய ஜய ஜய ஜயஹே. அது

சொல்லும் செய்தி -நான் நாம் வாழும் சமூகத்திற்கான செய்தியைக் குறிப்பிடவில்லை திரைச்சமூகத்துக்கான செய்தியைக் குறிப்பிடுகிறேன்- அதன் அழகான திரைக்கதையாக்கம்தான். இந்தப் பத்தில் ‘படம் பண்ணப்பட்டிருக்கும் விதம்‘ (Making of the movie)தான் முக்கியம். கதநாயக நடிகரே ஓர் இயக்குநர் ஆனால் அவர் நடிகராக மட்டுமே, கதாபாத்திரத்திற்கேற்ப, அல்லது இந்தப் படத்தின் இயக்குநர்  சொல்வதற்கேற்ப அடக்கி வாசிக்கிறார்.

தமிழில் நடிகர்கள் தங்களுக்கு ஆகி வந்த நடிப்பென்று ஒன்று வைத்திருப்பார்கள், எந்த ரோலுக்கும் இயக்குநர் சொல்வதை மீறி அதைத்தான் செய்வார்கள். சில குட்டி இயக்குநர்கள், துணைப் பாத்திரங்களில் நடிக்கும் போது பண்ணுகிற அழும்பு தாங்க முடியவில்லை. யாரையும் குறை சொல்வது என் நோக்கமில்லை. ஆனால் ஓர் உதாரணமாக, சமீபத்தில் வந்த செம்பி படத்தில் கண்டக்டராக வரும் குட்டி இயக்குநர் தன் போக்கில் நடித்திருக்கிறார்.

அதை விட்டு விடலாம். ஜய ஜய ஜய ஜயஹே படத்தின் கதை புதுமையானதா. அப்படிச் சொல்வதற்கில்லை. ‘சாது மிரண்டால் காடு கொள்ளாது ரக' கதைதான். அப்படியும் ஜெயாவாக நடிக்கிற தர்ஷனா ராஜேந்திரன் முதலிலிருந்தே சாதுவாகவும் இல்லை. அவர் புது மருமகளாக வரும் போதே வீட்டுக்குள் உடைந்து ஒட்டுப்போட்ட ‘அறைக்கலன்கள்' மறைமுகமான வரவேற்பை வழங்குவதில் இயக்குநரின் அமுக்கமான திறமை பளிச்சிடுகிறது. ராஜேஷின் பிடிவாதமும் முன் கோபமும், பளார் பளார் அடிகளும் ஜெயாவின் இருப்பை இன்னும் ‘இடியாப்ப'ச் சிக்கலாக ஆக்குகிறது. பொறுத்தது போதும் பொங்கி எழு என்று ஜெயா களத்தில் இறங்கும் போது படத்தில் வேகம் துவங்கி விடுகிறது.

மனைவி கணவனைப் பிளந்து கட்டுகையில் “பொம்பளையா இவ' என்றெல்லாம் யாரும் சொல்வதில்லை அந்தக் காலமும் மலையேறி விட்டது. அப்படிப் போடு என்று ரசிக்கும்படியாக அதை நகைச்சுவையோடு கடத்தியிருப்பதில்தான் படமே நிற்கிறது. பாவப்பட்ட கதாநாயகன் அல்லது கதாநாயகியைக் காப்பாற்ற தைரியமான இரட்டை நாயகன் வருவது எம்.ஜி.ஆர் படங்களில்ப் புதியதே இல்லை. அதையே ‘வந்தாளே மகராசி‘ என்று ஜெயலலிதா செய்த போதும் ரசித்தார்கள். அதெல்லாமும் தேவையான அளவு மாற்றப்பட்டு வந்திருக்கிறது ‘ஜெயஹே'. எல்லாவற்றையும் விட பஞ்சிங்காக வந்திருப்பது, இறுதியில் வரும் கோர்ட் சீன்.

நீதியரசியை முதலில் கொஞ்சம் வேடிக்கையாகக் காண்பித்து விட்டு கொஞ்சம் கொஞ்சமாக அவர் தன் அதிகாரத்தை நிலை நாட்டி  நீதி தேவதையாவது படத்திற்குப் பொருத்தமான உச்சக் கட்டம். அதைத்தான் மேக்கிங் ஆஃப் தி மூவி என்கிறேன்.

யோசித்துப் பார்த்தால் முதலில் அடங்கி சில அடிகள் வாங்கி விட்டு, பின்னர் அடைத்த கதவுக்குள் கணவனை உதைக்கும் கோவை சரளா வடிவேலு காமெடி ‘காலம் மாறிப் போச்சு' படத்திலேயே வந்து விட்டது. பெருமாள் உள்ளிட்ட பல படங்களில் சொர்ணாக்கா விவேக் காமெடி போன்றவை வந்து விட்டதுதான். ஏன், 'வாராய் நீ வாராய்...' என்று மலையுச்சிக்கு அழைத்துப் போனவனையே தள்ளி விட்டுக் கொன்ற ‘மந்திரி குமாரி' கதை நமக்குப் புதிதில்லை.ஆனால் அதில், என்னையும் என் காதல் கணவனின் உடலருகேயே புதைத்து விடுங்கள் என்று மனமுருகக் கேட்டுக் கொண்டே உயிரை விடுவாள்., பார்வையாளர்களைச் சமாதானப்படுத்த அந்தப் பண்பாட்டுச் சிக்கல்களைக் கவனமாய்க் கையாள வேண்டிய நிர்ப்பந்தங்கள் எல்லாம் இந்தக் காலத்திற்குத் தேவையில்லை என்று இந்தப்படம் தெளிவாகச் சொல்லியிருக்கிறது.

ஆனால் சிவகங்கைச் சீமை திரைக் காவியத்தில். கணவன் சின்னசாமி சேர்வையை, ‘காட்டிக் கொடுப்பவன் கணவனாயினும் அவனை வாட்டியெடுக்கும் தேவி நான்' என்று மனைவி கண்ணாத்தாள் குத்திக் கொன்று விடுவாள்.அதைப் படத்தில் நேரடியாகக் காட்ட மாட்டார்கள். அது வேறு தடம். வேறு கால கட்டம். ஆனால் எப்போதும் பெண்ணுக்குள் இப்படி ஒரு புலி விழித்துக் கொண்டேதான் இருக்கும். இதே புலிதான் ‘காவியத் தலைவி‘ படத்தில், கணவனால் மகளுக்கு ஆபத்து என்கிற போது சௌகார் ஜானகியிடம் வெளிப்பட்டு எம்.ஆர்.ஆர்.வாசுவை சுட்டுக் கொல்லும். ஆனால் அதெல்லாம் மெலோ டிராமாக்கள் வகையறா.

 ‘க்ரேட்  இண்டியன் கிச்சன்' இன்னொரு நல்ல மலையாளப் படம். நிமிஷா

சஜயன், சூரஜ் வெஞ்சரமூடு நடித்த படம். நாயகியுடைய அபிலாஷைகளைப் புறக்கணித்து அவளை சமையல் இயந்திரமாக்கி விடுகிற சமூகக் கட்டமைப்பை உடைத்தெறிந்து விட்டு வெளியேறி, வாழ்ந்து காட்டுகிறேன் என்று ஒரு பெண் சொல்லும் கதை. இதிலும் ட்ரீட்மெண்ட் தான் படத்தைத் தூக்கி நிறுத்துகிறது.

வீட்டை விட்டு வெளியேறுவது - ‘படி தாண்டாதவதான் பத்தினிங்கிறது அந்தக் காலம் படி தாண்டினாத்தான் பத்தினிங்கிறது இந்தக் காலம்‘என வசனம் பேசி விட்டு & வீட்டைத் துறந்து பெண் வெளியேறுவது பாரதி ராஜாவின் புதுமைப்பெண் செய்த ஒரு காரியம்தான். இது ஒரு மிகவும் விலகலான ஒற்றுமை மட்டுமே. மற்றபடி படத்தை எடுத்திருக்கும் விதமே அதைச் சிறப்பாக்குகிறது. அதை இரண்டு படத்திலும் இயக்குநர்கள்

சிறப்பாகச் செய்திருக்கிறார்கள். பாராய் நீ பாராய் என்று பாடிக் கொண்டு நிபந்தனையில்லாமல் அவற்றை வரவேற்கலாம்.

மார்ச், 2023

Related Stories

No stories found.
logo
Andhimazhai
www.andhimazhai.com