மாநில கல்விக் கொள்கை!

மாநில கல்விக் கொள்கை!

சந்தையின் தேவையை நிறைவேற்று-வதற்காகத்தான் தேசிய கல்விக் கொள்கை - 2020 கொண்டுவரப்பட்டுள்ளது என்கிறார், மத்திய கல்வி அமைச்சர் ரமேஷ் பொக்ரியால். பத்திரிகை ஒன்றுக்கு அவர் எழுதிய கட்டுரையில், சமூகத்திற்கு கார்பெண்டர்கள் தேவைப்படுகிறார்கள்,

ஆனால் அவர்களை நம்முடைய பள்ளிகள் உருவாக்கித் தரவில்லை. புதிய கல்விக் கொள்கை வந்தால் கார்பெண்டர்களை உருவாக்கிக்கொடுக்கும்.' என்று எழுதியிருக்கிறார். 66 பக்கங்கள் கொண்ட தேசியக் கல்விக் கொள்கையை சரியாக தமிழில் மொழிபெயர்த்து நம் மாநிலத்து மக்களிடமும், தொழிலாளர்களிடம் விளக்கிச்சொல்லட்டுமே..  ‘உங்கள் பிள்ளைகள் எட்டாம் வகுப்பு முடித்து வெளிவரும்போது வேலை பெறக்கூடிய திறனோடு வெளிவருவான்; இதுதான் புதிய கல்விக்கொள்கை' என்று சொன்னால் அதற்கு மக்கள் என்ன சொல்கிறார்கள் என்று பார்க்கட்டுமே.

சமத்துவத்திற்கு எதிரான கல்விக் கொள்கையைக் கொண்டுவரும் மத்திய அரசு, சமூகநீதி என்னும் கோட்பாட்டைத் தகர்த்து, நம்மைப் பின்னுக்கு இழுக்கப் போகிறது. இதுதான் நம் முன்னால் இருக்கும் மிகப்பெரிய அச்சம். இந்த அச்சத் திலிருந்து தமிழக சட்டப்பேரவை தேர்தலைப் பார்க்கிறோம். இந்தத் தேர்தல் என்பது வழக்கம்போல ஒரு எம்.எல்.ஏ.வைத் தேர்ந்தெடுக்கும் தேர்தல் கிடையாது. தேசிய கல்விக் கொள்கை -2020 ஐ நிராகரிக்கிறோம் என தமிழக மக்கள் வாக்கு கொடுக்கின்ற தேர்தல், இது.

அமையப்போகும் புதிய ஆட்சியின் முன்னால் உள்ள முக்கிய கடமை இது. இந்தியாவின் பன்முகத்தன்மையைப் பிரதிபலிக்கும்விதமாக மொழிவழி மாநிலங்கள் உருவாக்கப்பட்டது, தெரிந்ததே. தமிழக மக்களுக்கு சமமான கற்றல் வாய்ப்பை தமிழக அரசு வழங்கவேண்டும்.

தேசிய கல்விக் கொள்கை தமிழகத்தின் மீது எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாமல் தடுக்கவேண்டும் என்றால், இந்திய அரசியலமைப்புச் சட்டம் தந்திருக்கின்ற மாநில அரசுக்கான உரிமைகளைப் பயன்படுத்தி, மாநிலத்திற்கென்று தனி கல்விக் கொள்கையை உருவாக்க வேண்டும். அதற்காக, தமிழ்நாட்டைச் சேர்ந்த கல்வியாளர்களைக் கொண்ட ஒரு வல்லுநர் குழுவை அமைக்கவேண்டும். அந்தக் குழுவில் தேசிய கல்விக் கொள்கைக்கு மாற்றாக சமூகக் கல்வி என்ற முறையை முன்வைத்த, ஜவகர்நேசன் போன்ற புகழ்பெற்ற கல்வியாளர்கள் இடம்பெறவேண்டும். அந்தக் கல்விக் குழுவின் அறிக்கையை வைத்து மாநில கல்விக் கொள்கையை வகுக்கவேண்டும்.

* முதலமைச்சராகப் பதவி ஏற்பவர், தன்னுடைய முதல் கையெழுத்தாக மாநில கல்விக் கொள்கையை வகுப்பதற்கான ஆணையில் கையெழுத்திட வேண்டும்.

பதவியேற்கும் முதலமைச்சர் இப்படி செய்யும்போது, அவர் அயோத்திதாசரில் தொடங்கி காமராஜர்வரை அனைத்து தலைவர்களின் கனவுகளையும் மெய்யாக்குகிறார் என்று பொருள். இதன் மூலம் அம்பேத்கர், பெரியாரின் கொள்கைகளும் நடைமுறைக்கும் வரும்.

புதியதாக உருவாகும் மாநிலக் கல்விக் கொள்கையில் இடம்பெற

வேண்டிய இன்னொரு அம்சம் பொதுப்பள்ளி முறை. கோத்தாரி கல்விக் குழுவில் தொடங்கி, ஆச்சாரியா கல்விக் குழு, யஷ்பால் கல்விக்குழு, முத்துக்குமரன் சமச்சீர் கல்விக்குழுவரை அனைத்து கல்விக்குழுக்களும் பரிந்துரைத்த ஒரு விசயம், பொதுப்பள்ளி முறையை நடைமுறைப்படுத்த வேண்டும் என்பது!  முத்துக்குமரன் அறிக்கையில், பொதுக்கல்வி சமூகத்தில் ஊடுருவி சமூகத்தை மேம்படுத்தும் என்பார்.

பொதுப்பள்ளியில் அனைத்து வசதிகளும் இருப்பதுதான் பொதுப் பள்ளி முறைமை.  உலக அளவில் வளர்ந்துள்ள நாடுகள் அனைத்தும் பொதுக் கல்வியைக் கொடுத்துள்ளது. மக்களாட்சி மலர்ந்த நாடுகளில் கல்வி அனைவருக்கும் கொடுக்கப்பட்டது. அதன் காரணமாகத்தான் அவற்றில் பல வல்லரசு நாடுகளாக வளர்ந்துள்ளன. ஆனால்

சுதந்திரம் பெற்ற இந்தியாவில் கல்வி கொடுப்பதற்குப் பணம் இல்லை என்று சொன்னார்கள். மக்களாட்சி மலர்ந்த பிறகு ஓர்

அரசால் இப்படிச் சொல்லமுடியுமா? அதை எதிர்த்த போராட்டம்தான் தமிழ்நாட்டுடைய போராட்டம். 

தமிழகத்தில் கல்விமுறையை வலுப்படுத்த மாநில அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளை இனி மூடமாட்டோம் என அரசு அறிவிக்கவேண்டும். அதேபோல், கல்லூரிகளை மூடுவது, பல்கலைக்கழகத்துடன் இணைப்பது போன்ற நடவடிக்கைகளை மேற்கொள்ள மாட்டோம் எனவும் அறிவிக்க வேண்டும்.

கற்றல் கற்பித்தல் முறையில் மாணவர்கள் வலுப்பெற்று, உயர்கல்வி செல்வதற்கான அனைத்து பணிகளையும் மேற்கொள்ள வேண்டும். அதேபோல, பள்ளிக்கல்வியை வலுப்படுத்துவதற்கு தாய்மொழிவழியில் அருகமைப்பள்ளி அமைப்பில்  ஆரம்பக்கல்வி முதல் மேல்நிலைக்கல்வி வரை இலவசமாக வழங்க வேண்டும். இதை அரசு உடனடியாக அறிவிக்கவேண்டும்.

அதேபோல நீட் தேர்வால் தமிழகத்தில் மருத்துவப் படிப்புக்கான கனவு சிதைந்துவிட்டது. 2016ஆம் ஆண்டிற்குப் பிறகு உயிரியல் பாடப்பிரிவுகளைத் தேர்வு செய்து படிக்கும் பதினோராம் வகுப்பு மாணவர்களின் எண்ணிக்கை வெகுவாகக் குறைந்துவிட்டது. இந்தியாவில் உள்ள எந்த வல்லுநர் குழுவும் தேசிய தகுதித் தேர்வு என்பதை பரிந்துரைக்கவில்லை. மாறாக பொது மருத்துவ நுழைவுத்தேர்வு என்பதைத்தான் ரஞ்சன் ராய் சௌத்ரி குழு பரிந்துரைத்தது. இதை விரும்பாத மாநிலங்களுக்கு விலக்கு அளிக்கலாம் என்றும் ரஞ்சன் ராய் சௌத்ரி குழு தெரிவித்திருந்தது.

இந்தக் குழுவின் அறிக்கையை நாடாளுமன்றத்தின் 92ஆவது  நிலைக்குழு அறிக்கையில்கூட பொது மருத்துவ  நுழைவுத்தேர்வைத்தான் பரிந்துரை செய்திருக்கிறது. நீட் தேர்வு வல்லுநர் குழுவாலேயே, நாடாளுமன்ற நிலைக்குழுவாலேயே பரிந்துரை செய்யப்படவில்லை. பிறகு, தகுதி என்பது எங்கிருந்து வருகிறது? பன்னிரண்டாம் வகுப்பு என்பது இனி தகுதி இல்லை என்பதுதானே பொருள்.

பன்னிரண்டாம் வகுப்பு படித்துமுடித்தால் கல்லூரிக்குச் செல்லமுடியும். அதிலும் பெண்கள் கல்லூரிக்குச் சென்று பட்டப்படிப்பை முடித்துவிட்டார்கள் என்றால், அவர்களுக்கு கல்வி உதவித்தொகை, திருமணத்தின் போது தாலிக்குத் தங்கம் தருவதால் பெற்றோர்களும் பெண் குழந்தைகள் படிக்கட்டுமே என நினைக்கின்றனர். கல்வி என்பது அரசியல் என்பார் பாவ்லோ ஃபிரைரே. கல்வி மூலம் அதிகாரத்தைப் பெறும் நிலைக்கு பெண்கள் வந்துள்ளனர். கல்வியால் அனைத்து சமூகத்தினரும் முன்னுக்குவந்துள்ள நிலையில், தேசிய கல்விக் கொள்கை என்ன

சொல்கிறது என்றால், பள்ளிக்கூடங்கள் வேலைபெறுவதற்கான திறன்களை பெற்றுக்கொடுக்கும் என்கிறனர்.

சுதந்திரத்துக்கு முன்னர் பம்பாய் சட்டப்பேரவையில் நிதிநிலை அறிக்கை விவாதத்தில் பேசிய அம்பேத்கர், ‘மாணவர்களுக்காக செலவுசெய்யும் தொகையை நீங்கள் வசூலித்தால் அது வணிகம் இல்லையா?‘ என்றார். தேசிய கல்விக் கொள்கையோ, அரசியல்சாசனத்தைத் தந்த அம்பேத்கரின் கொள்கைக்கு எதிராக மாணவர்களிடம் செலவுத்தொகையை வசூலிக்கலாம் என்கிறது.

பணம் கட்ட முடியாத 25 சதவீத மாணவர்களுக்கு இலவசமாக கல்விகொடுக்கவேண்டும் என்கிறது, கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம். அப்படி எனில் 25 மாணவர்களின் தொகையை யாரிடமிருந்து பெறுவார்கள்? கட்டணம் செலுத்தி படிக்கும் மற்ற மாணவர்களிடம் தானே? சந்தையில் வரவுக்கு ஏற்ற செலவு என்ற வணிகக் கோட்பாட்டின் படி கல்வி இயங்கமுடியுமா?

காலம்காலமாக இங்கே செங்கல்வராய நாயக்கர், பச்சையப்ப முதலியார், கீழ்பெண்ணாத்தூர் சுப்பிரமணிய ஐயர், பிட்டி தியாகராயர், தெய்வநாயகம் போன்றவர்கள் எல்லாம் தங்களுடைய வீட்டை, நிலத்தை கல்விக்காகக் கொடுத்தார்களே? அதைச் சிதைப்பதற்கான வேலையை தேசிய கல்விக் கொள்கை செய்கிறது.

மத்திய அரசு கொண்டு வரும் தேசிய தகுதித்தேர்வுகள் மாணவர்களை மன உளைச்சலுக்கு உள்ளாக்குகின்றன. இந்த தேர்வுகளுக்காக மாணவர்கள் தங்களை தயார்படுத்திக்கொள்ள லட்சக் கணக்கில் செலவுசெய்கிறார்கள்.

தகுதித்தேர்வில் வெற்றிபெற்றால்தான், உயர் கல்வி பெறமுடியும் என்றால், தமிழகத்தில் உள்ள பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடி சமூகங்களைச்

சேர்ந்த மாணவர்கள் பாதிக்கப்படுவார்கள். மருத்துவப் படிப்பிற்கான நீட் தேர்வைத் திரும்பப்பெறு என்று அனைத்துக் கட்சிகளும் எதிர்ப்பு தெரிவிக்கும் சூழலில், தேசிய தேர்வு முகமை பிஎஸ்சி நர்சிங், பிஎஸ்சி லைப் சயின்ஸ் ஆகிய இளநிலை படிப்புகளுக்கும் நீட் தேர்வை அறிவித்திருக்கிறது.

அடுத்த கல்வி ஆண்டிற்கான மாணவர் சேர்க்கை இதன்படிதான் நடைபெறும் என்றும் தெரிவித்

துள்ளது. உயிரி அறிவியல் என்றால் அதில், பிஎஸ்சி பையோடெக்னாலஜி, பிஎஸ்சி மைக்ரோபையாலஜி, பிஎஸ்சி தாவரவியல், பிஎஸ்சி விலங்கியல் பாடப்பிரிவுகளும்தானே அடக்கம். அல்லது அப்படி இல்லையா?எனவே, புதிய அரசு இந்த அறிவிப்பை முற்றிலுமாக நிராகரிக்க வேண்டும்.

பொதுப்பட்டியலில் உள்ள விஷயத்தில் மத்திய, மாநில அரசுகளுக்கு இடையே சட்டத்தில் முரண்பாடு இருக்கக்கூடாது; ஆனால் மேம்படுத்தலாம். 1950லிருந்து 1960 வரை மாநில அரசின் வழிகாட்டு நெறிமுறையில்தான் கல்வி இருந்தது. கல்வி பொதுப்பட்டியலில் இருக்கும்போதும் மாநில அரசு சிறப்பாக செயலாற்ற முடியும் என்பதை, 3 கிலோமீட்டருக்கு ஒரு பள்ளிக்கூடத்தைக் கொண்டுவந்து தமிழக அரசு நிரூபித்திருக்கிறது. எனவே, மாநில அரசிடமே கல்வியைக் கொண்டுவர வேண்டும். 

நீட் தேர்வுக்காகத் தனியாகப் பயிற்சி எடுக்க வேண்டும். நீட் தேர்வில் காலம் காலமாக உயர்கல்வியை கற்று வந்த குடும்பங்களைச் சேர்ந்த பிள்ளைகளும், வெளிநாட்டைச் சேர்ந்தவர்களின் பிள்ளைகளும், வெளிநாடு வாழ் இந்தியர்களின் பிள்ளைகளும், தமிழ்நாட்டில் உள்ள முதல் தலைமுறைப் பட்டதாரி மாணவர்களுடன் போட்டிபோடுவார்கள். இந்தப் போட்டி யாருக்கு சாதகமாக இருக்கும்?

குழந்தைகள் படிப்பதற்கான அனைத்து வாய்ப்புகளையும் ஏற்படுத்திக் கொடுங்கள். நீங்கள் கொடுத்த பாடத்திட்டத்தை அந்த குழந்தை கற்றுக் கொண்டதா என மதிப்பிடுங்கள். அதன் பிறகு மற்ற மதிப்பீடுகளை மேற்கொள்ளுங்கள்.

* தேசிய அளவில் நடத்தப்படுகின்ற அனைத்து தேர்வுகளையும் தமிழக அரசு ஏற்காது என்ற முடிவை அறிவிக்க வேண்டும்.

* பள்ளிப் படிப்பை முடித்தவர்கள் அனைவரும் கல்லூரி படிப்பு படிப்பதற்கு ஏற்ற வாய்ப்புகளையும், வசதிகளையும் ஏற்படுத்தித் தரவேண்டும்.

* கற்றல் வாய்ப்புகளை அதிகரிக்க பள்ளி, கல்லூரிகளில் போதுமான ஆசிரியர்களை, பேராசிரியர்களை நியமிக்க வேண்டும்.

* கடந்த பத்து ஆண்டுகளாகக் கண்டுகொள்ளப்படாமல் இருந்த ஆசிரியர்களின் போராட்டங்களை ஜனநாயக வழியில் பேசித்தீர்க்க வேண்டும்.

* கல்வித்துறையில் புதிய பணியிடங்களை உருவாக்கி அவற்றில் பணியாளர்களை நியமிப்பது நடந்தால்தான் சமமான கற்றல் வாய்ப்பு எல்லோருக்கும் கிடைக்கும்.

மாநிலத்திற்கென தனியான கல்விக் கொள்கை உருவாக்கப்பட்டுவிட்டாலே பெரும்பாலான

சிக்கல்களுக்குத் தீர்வுகண்டுவிட முடியும். தமிழகத்திற்கு என்று சிறப்பான பள்ளிக் கல்வி கட்டமைப்பை உருவாக்க முடியும்.

ஏப்ரல், 2021

Related Stories

No stories found.
logo
Andhimazhai
www.andhimazhai.com