"யாருப்பா அது? மாமனா? “
மச்சானா?''

"யாருப்பா அது? மாமனா? “ மச்சானா?''

ஜி ண்பதுகளை ஒட்டி மதுரையில் உள்ள இறையியல் கல்லூரிக்குப் பேசவந்திருந்தார் அப்போது பிரபலமாக இருந்த எழுத்தாளரான சுஜாதா. கிறித்துவர்கள் அதிகம் நிறைந்திருந்த அந்தக் கூட்டத்தில் அவருடைய பேச்சு தனித்திருந்தது.

கிறித்துவ எழுத்தாளரான ஐசக் அருமைராஜனை மற்ற பேச்சாளர்கள் புகழ்ந்து கொண்டாடியபோது ‘என்னால் அவ்வளவு சரளமாக மேடையில் பேச முடியாது,' என்ற முன்குறிப்புடன் பேச வந்த சுஜாதா பல சம்பிரதாயங்களை உடைத்தார் தன்னுடைய பேச்சில்.

பேச்சு முடிந்து அரங்கை விட்டு வெளியே வந்தபோது அவரைச் சூழ்ந்து கொண்டது கூட்டம். ஒரே நெரிசல். இரைச்சல்.

‘'ஆ''-திடீரென்று கத்தினார் சுஜாதா.

கத்தியபோது தலையில் ஒரு கையை வைத்திருந்தார். முகம் சுளித்திருந்தார்.

‘‘யாரு..என் தலை முடியைப் பிடுங்கியது? யாருப்பா.. அது? என் மாமனா? மச்சானா?'' என்று கத்திய போது ஒரு வாசகர் நெரிசலில் இருந்து விடுபட்டு சுஜாதாவிடம் தாழ்ந்த குரலில் சொன்னார்.

‘‘நான் தான் முடியைப் பிடுங்கினேன். தப்பா நினைக்காதீங்க.. உங்க ஞாபகமா வைச்சுருக்க ஒரு முடியைப் பிடுங்கினேன் சார்..''

முகம் இயல்பாகி நார்மலான நிலையில் சுஜாதா சொன்னார்.

‘‘என்ன பழக்கம்ப்பா இது. இப்படியே வாசகர் ஒவ்வொருத்தரும் நினைச்சா என் முடி என்னாகும்ப்பா? அதை யாராவது யோசிச்சிங்களா?'' 

புன்சிரிப்புடன் அவர் சொன்னபோது கூச்சப்பட்ட அந்த வாசகரின் கையில் இருந்தது சுஜாதாவின் சுமாரான நீளமுள்ள கருமையான முடி.

எனக்கு இருபது வயதிருக்கும் போது சுந்தர ராமசாமியை முதலில் மதுரையில் சந்தித்தது, டவுன்ஹால் ரோட்டிற்கு அருகில் உள்ள ஹோட்டலில். குளிர்சாதன வசதியில்லாத விசாலமான அறை. வயதில் மூத்த வாசக நண்பர்கள். அவரைச் சந்தித்து என்னை அறிமுகப்படுத்திக் கொண்டபோது சு.ரா முகத்தில் காட்டிய பாவம் அவ்வளவு ரசமானதாக இருந்தது.

நிறையக் கேள்விகள். படிப்பு பற்றி, நூல் வாசிப்பு பற்றி, குடும்பம் பற்றி&இப்படிச் சின்னச்  சின்னக் கேள்விகள். அவருடைய நாவல், சிறுகதைகள் படித்த அனுபவத்தை அந்த வயதிற்குரிய இயல்புடன் சொல்லிக் கொண்டிருந்தேன்.

சற்று நேரத்தில் அவரிடம் கேள்விகள் கேட்க ஆரம்பித்தேன். அவருடைய எழுத்தைப்பற்றிக் கேட்டபோது ஒரே குதூகலம். சந்தோஷம் பரவியிருந்தது அவருடைய குரலில். கைகளைப் பிடித்துக் கொண்டார். இன்னும் கேட்பதற்கு உற்சாகப் படுத்தினார்.

‘‘ஏற்கனவே ‘ஒரு புளிய மரத்தின் கதை'' படிச்சிருக்கிறதாச் சொன்னீங்கள்லே.. அடுத்து ஒரு நாவல். அதன் பெயர் ‘ஜே ஜே.சில குறிப்புகள்'. அதன் பிரதியை இங்கே எடுத்துட்டு வந்திருக்கேன். நண்பர்களுக்கு முன்னால் அதை வாசிக்க இருக்கேன். நீங்க விரும்பினா அதில் கலந்துக்கலாம். இரண்டு, மூன்று நாட்கள் ஆகலாம். முடிச்ச பிறகு நீங்களும் உங்க கருத்தைச் சொல்லலாம். என்ன சொல்றீங்க?''

மகிழ்ச்சியுடன் தலையாட்டினேன். சி.மோகன், என்.சிவராமன், சுரேஷ்குமார், ஐ.சி.பாலசுந்தரம், பாலகிருஷ்ணன் என்று நீண்ட நண்பர்கள் வரிசையில் வயதில் இளையவனாக நானும்.

மூன்று நாட்கள் வரை நீண்டது அவருடைய நாவல் வாசிப்பு. குரல் வழியே சில ஜாலங்கள் காட்டியது மாதிரி இருந்தது அந்த வாசிப்பைக் கேட்கும்போது. குரல் ஏற்ற இறக்கங்களோடு சொற்களால் ஆன மாயவித்தையை அனுபவித்தேன்.

தட்டச்சு செய்யப்பட்ட நாவல் பிரதியை வாசித்து முடித்ததும் நண்பர்களிடம் அபிப்பிராயத்தைக் கேட்டார். பலர் தங்களுடைய பார்வையில் விமர்சனங்களை முன்வைத்தார்கள். நண்பர்கள் கிளம்பிப்போய்க் கொண்டிருந்தார்கள்.

‘‘நீங்க இருங்க.. சாப்பிடப் போகலாம்'' என்றார் சு.ரா.

பக்கத்தில் இருக்கிற ஹோட்டல் ஒன்றிற்குப் போகிறபோது என்னிடம் அபிப்பிராயத்தைக் கேட்டபோது சொன்னேன்.‘‘குரலில் நீங்க வாசிச்சப்போ நாவலில் ஈர்ப்பு இருக்கிறதை உணர முடிஞ்சது. நிறுத்தி நிதானிச்சு வாசிக்கிறப்போ நாவலை இன்னும் செறிவாப் புரிஞ்சுக்கிற முடியும்ன்னு நினைக்கிறேன். நண்பர்கள் நாவல் பற்றிச் சொன்ன விமர்சனத்தைப் பற்றி நீங்க என்ன நினைக்கிறீங்க?'' 

மௌனமாக நடந்து கொண்டிருந்தோம். பிறகு சொன்னார்.

‘‘ஒரு பெரிய வட்டம். அதிலே ஒரு கரும்புள்ளியை வைச்ச மாதிரி நண்பர்கள் சொல்லிட்டுப் போயிருக்காங்க. நீங்க எல்லோரும் சுற்றி உள்ள பெரிய வட்டத்தைப் பார்த்துக்கிட்டிருக்கீங்க. நான் நடுவில் உள்ள கரும்புள்ளியையே பார்த்துக்கிட்டிருக்கேன்.''

எங்கேயோ பார்த்தபடி அவர் சொன்னவிதம் பிடித்திருந்தது. அன்று மதுரையில் உருவான நட்பு அவர் மறையும்வரை கால இடைவெளியின்றி நீடித்திருந்தது.

‘நாளை மற்றொமொரு நாளே' ‘குறத்தி முடுக்கு' உள்ளிட்ட சில நாவல்களையும், சிறுகதைகளையும் எழுதியவரான ஜி.நாகராஜனைப் பார்த்தபோது பெரும்பாலும் ஏதாவது போதையிலோ, அல்லது போதைக்குச் செல்கிற வழியிலோ இருப்பார். 

ஒருமுறை நண்பர் மு.ராமசாமியிடம் குடிக்க அவர் பணம் கேட்டபோது மறுக்க முடியாத நிலையில் ‘ சரி..கொடுக்கிறேன். ஒரு கதை எழுதிக் கொடுக்கிறீங்களா?' என்று கேட்டிருக்கிறார் ராமசாமி.

வடக்கு வெளிவீதியில் உள்ள அச்சகத்திலேயே உட்கார்ந்து அவராக விதித்துக் கொண்ட காலக்கெடுவுக்குள் நாகராஜன் எழுதிய கதை, ‘‘ஓடிய கால்கள்''. 

கதையை அவ்வளவு அவசரமாக எழுதிக் கொடுத்துவிட்டு ராமசாமியிடம் பணத்தை வாங்கிவிட்டு விரைந்து போய்விட்டார் ஜி.நாகராஜன்.

அந்தக்கதை ராமசாமி நடத்தி வந்த ‘'விழிகள்'' இதழில் வெளிவந்தது. பண அவசரத்திற்காக எழுதப்பட்ட அந்தக் கதையில் நிறைவான கலைஞனுக்கான ஜீவன் இருந்தது.

‘‘ கண்ணாடியுள்ளிருந்து'', ‘‘ கைப்பிடியளவு கடல்'' போன்ற தொகுப்புகள்,கோடரி போன்ற கதைகள், நட்சத்திரவாசி போன்ற நாடகங்கள், கூரான விமர்சனங்கள் மூலம் சிறுபத்திரிகையுலகில் அப்போது பெரும் கவனிப்புக்கு ஆளாகியிருந்தவர் தருமு சிவராமு என்கிற பிரமிள்.

முகஸ்துதி என்பதையே விரும்பாத மனநிலை கொண்ட அவரை மதுரையில் சந்தித்தபோது ஆரவாரமில்லாத நட்புடன் பழகினார். வயது இடைவெளி இருந்தாலும், பல நூல்களின் சாரத்தை பூங்கா அமர்வுகளில் விளக்கியிருக்கிறார். சிறந்த நேர்காணல்கள் எப்படி இருக்க வேண்டும் என்று நோபல்பரிசு பெற்ற எழுத்தாளர்களின் நேர்காணல்களை வாசிக்கச் சொல்லியிருக்கிறார். கவிதையின் நுட்பத்தை உணர்த்தியிருக்கிறார். டி.எஸ்.எலியட்டின் கவிமனத்தைச் சிலாகித்திருக்கிறார். சார்த்தரையும், போர்ஹேவையும் அன்றே கொண்டாடியிருக்கிறார். 

எழுத்து, இலக்கிய வெளிவட்டம் போன்ற சிறுபத்திரிகைகளின் தொகுப்புகள் அவரிடம் பைண்டிங் செய்யப்பட்ட நிலையில் இருந்தன. அவற்றை வாசிக்கக் கேட்டபோது முதலில் மறுத்தவர் பின்னர் ஒரு நிபந்தனையுடன் கொடுத்தார்.

எழுத்துத் தொகுப்பை வாசிக்கக் கொடுத்துவிட்டு அதை வாசித்திருக்கிறோமா என்பதைப் பரிசோதிக்கும் விதத்தில் கேள்விகள் கேட்பார். அதில் தேறியபிறகு தொடர்ந்து அனைத்துத் தொகுப்புகளையும் எனக்கு வாசிக்கக் கொடுத்தார். தனக்கு உடன்பாடில்லாத நிலையிலும் வானம்பாடி இதழுக்காக விரிவான பேட்டியை சிற்பி மற்றும் என்னுடைய விருப்பத்தின் பேரில் கொடுத்தார்.

அஃ பரந்தாமன் அழகாக வெளிக்கொண்டு வந்த ‘‘கண்ணாடியுள்ளிருந்து'' கவிதைத் தொகுப்பைக் கையெழுத்திட்டு மதுரையை விட்டுக் கிளம்பும்போது கொடுத்தார் சிவராமு.

வாசக மனத்திற்கு அவர் கொடுத்த எதிர்வினை அற்புதமானது!

‘கடலுக்கு அப்பால்', ‘ புயலிலே ஒரு தோணி' ஆகிய தமிழில் குறிப்பிடத்தக்க நாவல்களை எழுதியவரான ப.சிங்காரத்தை முதலில் சந்தித்தபோது மதுரையிலுள்ள ஒய்.எம்.சி.ஏ விடுதியிலுள்ள ஒரு அறையில் தங்கியிருந்தார்.

அவருடைய நாவல்களைப் பற்றி அப்போதுதான் சிறுபத்திரிகைகளில் சி.மோகன் எழுதி சிங்காரம் வெகு தாமதமாகக் கவனம் பெற்றிருந்தார். அவரைத் தேடி சிறுபத்திரிகை சார்ந்தவர்கள் வந்து சென்றதைத் தெரிவித்தார் சிங்காரம்.

சொந்த வாழ்வில் ஏற்பட்ட இழப்புக்குப் பிறகு தனியாக வாழப்பழகிக்கொண்ட சிங்காரம் தினத்தந்தியின் நீண்டகால ஊழியர். அந்த அனுபவம் அவருக்குச் சலிப்பை உருவாக்கவில்லை. சில லட்சம் ரூபாய் அவருடைய சேமிப்பாக இருந்தது.

அவரை இருமுறை சந்தித்து அந்த அனுபவங்களை அவருடைய புகைப்படத்துடன் குமுதம் ஸ்பெஷல் இதழில் எழுதியிருந்தேன். வெளிவந்த இரு தினங்களுக்குப் பிறகு அவரிடமிருந்து தொலைபேசி அழைப்பு.

மாலையில் அவருடைய அறையில் சந்தித்தேன். வார இதழில் வெளிவந்ததை அடுத்து அவருடைய பக்கத்து அறைகளில் நீண்ட காலமாக வசித்தவர்கள் விசாரித்ததை வித்தியாசமாக உணர்ந்ததாகச் சொன்னார்.

வயதான குழந்தையின் சந்தோஷத்தை உணர்த்தியது அவருடைய முகம்.

நீண்ட நேரம் பேசிக் கொண்டிருந்தோம். பக்கத்திலிருந்த ஒரு கடைக்குப்போய் தேநீர் அருந்தினோம். திரும்பிவரும்போது ‘இன்னொரு நாளைக்கு நீங்க வந்து என் கூடச் சாப்பிட வரணும்' என்று அவருக்குப் பிடித்தமான ஹோட்டல் ஒன்றைச் சொன்னார்.

அடுத்தச் சில நாட்களிலேயே நண்பர் ஒருவர் மூலம் மதுரை பேருந்து நிலையத்திற்கு அருகில் உள்ள மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டிருந்தார் சிங்காரம்.

அங்கே போயிருந்தபோது உடலில் பல தரப்பட்ட இணைப்புகளுடன் படுத்திருந்தார் நினைவில்லாமல். சில நாட்களில் அவர் உயிரிழந்த செய்தி அவர் வேலை பார்த்த நாளிதழில் வெளிவந்திருந்தது.

ஜனவரி, 2018.

Related Stories

No stories found.
logo
Andhimazhai
www.andhimazhai.com