வெகு சில பார்வையாளர்கள் போதும்!

வெகு சில பார்வையாளர்கள் போதும்!
வை.ராஜேஷ்
Published on

முருகபூபதியின் புதிய நாடகமான இடாகினி கதாய அரத்தம் அரங்கேற்றப்பட்ட அன்று கோவில்பட்டிக்குச் சென்றிருந் தோம். பிரபஞ்சமெங்கும் புலம்பெயர்ந்தவர்களின் காலடித்தடங்களின் வரைபடத்தைப் பின் தொடர்கிறது இந்நாடகம்.

வரலாற்றுப் பெருந்துயரமான சயாம் மரண ரயில் பாதையில் வலியோடு புதைக்கப்பட்ட பல்லாயிரக் கணக்கான புலம்பெயர் தமிழர்களின் கண்ணீர் பாடல்களை அரங்கு வெளிக்குள் முதன்முறையாக தமிழில் நிகழ்த்திய நாடகம் இதுவென்று கூறலாம்.

மணல்மகுடி நாடகநிலக் கலைஞர்களின் இயக்குநர் ச. முருகபூபதியிடம் அந்திமழைக்காக பேசியதிலிருந்து:

‘‘இடாகினி எனும் அணங்கு சிலப்பதிகாரத்தில் வருகிறது. இந்த அணங்கு தெய்வத்திற்கு  நீண்ட வேர் இருக்கிறது. இதைத்தான் நாடகத்தின் பெயராக சூட்டி இருக்கிறோம். ‘புலம்பெயர் உலகு' என்ற ஒரு சொல்லை இலக்கியமாக, வரலாறாக, செய்தியாக பார்ப்பது போல நாடகநிலத்தில் இருந்து எப்படி பார்க்கலாம்? என்று யோசித்தேன். நாடகவெளியில் புலம்பெயர்தலின் வலியை எப்படி காண்பிப்பது, அதற்கான பொருட்களை எவ்வாறு தேர்ந்தெடுப்பது, எப்படி பயன்படுத்துவது என்று யோசனை காற்றில் ஊதிய பலூன்தான் இந்த நாடகம். வரலாற்றில் தொடர்ச்சியாக மக்கள் கூட்டம் கூட்டமாக புலம்பெயர்ந்து போய்க் கொண்டிருக்கும் போது குழந்தைகள் மட்டும்தான் கையில் பொம்மைகளையும், பூனைக்குட்டியையும் தூக்கிக்கொண்டு போகிறார்கள்.

இந்நாடகத்தில் குழந்தைகளின் பொம்மைகளை ஒரு குறியீடாகப் பயன்படுத்தியிருக்கிறோம். முதலில் இருந்து கடைசிவரை குழந்தைகள் பொம்மைகளைத் தேடிக்கொண்டும், அதற்கு அவர்களே பதில் சொல்லியும் பார்ப்பார்கள்.

முதல் அலை கொரானா பொதுமுடக்கத்தில் 50 கவிதைகள் எழுதினேன். இதன் வழியாக ஒரு வடிவத்தைக் கண்டுபிடித்தேன். அந்த வடிவம் திரைக்கதையாக உருவாகிய பின்பு அதற்கான பொருட்களைத் தேடி ஆறுமாதம் அலைந்தேன். பிறகு மெல்ல நாடக உருவாக்கத்திற்குத் தயாரானோம். இப்படிதான் எங்களுடைய ஒவ்வொரு நாடகமும் ஏதோ ஒன்றாகத் தோன்றி வண்ணத்துப்பூச்சியாக நாடகநிலத்தில் கடந்த 25 வருடமாக பறந்துக்கொண்டிருக்கிறோம்.

பொதுவாக எங்கள் நாடகங்களில் பொருட்களுக்கு ரொம்ப முக்கியத்துவம் கொடுத்து வருகிறோம். ஒவ்வொரு நாடகத்திற்கும் ஒரு பொருளைக் கண்டுபிடிக்கிறோம். ஒரு குறிப்பிட்ட இனக்குழுவைப் பார்க்கும்போது அவர்களுக்கென்று குலக்குறி இருக்கும். அந்த குலக்குறியை வைத்து ஒவ்வொரு இனக்குழுவையும் அடையாளம் கண்டுகொள்ளலாம். அப்படிதான் ஒவ்வொரு நாடகத்திற்கும் ஒரு பொருளைக் கண்டுபிடித்து அந்தப் பொருட்கள் எங்களுடைய நாடகத்தில் கதாபாத்திரமாக பயணம் செய்கின்றன.

மணல்குடி நாடக நிலத்தில் கூட்டு வாழ்க்கைமுறையை முயற்சி செய்துகொண்டிருக்கிறோம். கலைஞர்களே சோறு பொங்குவது, தட்டு கழுவுவது, கழிவறையை சுத்தம் செய்வது என இங்குள்ள வேலைகளை அவர்களே பகிர்ந்து செய்கிறார்கள். அதுபோல எங்களுடைய நாடகத்தில் புழங்கும் பொருட்களும் நடிக்கும் கலைஞர்களே செய்ததுதான். இதற்காக வெளியில் இருந்து தச்சரைத் தேடுவதில்லை. அதனால்தான் எங்களுடைய நாடகக் கலைஞர்கள் இங்கேயே தங்கியிருந்து நாடகப் பயிற்சி பெறுகிறார்கள். அவரவர் வேலையை அவர்களே பார்த்துக் கொள்ளவேண்டும். இதற்குள் கூட்டு சிந்தனையும், உழைப்பும் உள்ளன.

பொதுவாக நாடகங்களை நாம் குரலாகத்தான் புரிந்து வைத்திருக்கிறோம். ஒரு நாடகத்தை வசனங்களை வைத்து புரிந்துகொள்வது பொதுவான பார்வை என்று சொல்லுவதைவிட மேலாட்டமான பார்வைதான். குரல் எங்கிருந்து வருகிறது என்று பார்த்தால் முகத்தைத்தான் பார்ப்போம். ஒரு நடிகர் என்றால் முகம் மட்டுமே கிடையாது. மொத்த உடலும்  சேர்ந்துதான் புனைவாக எழுகிறது. ஒரு நடிகன் அந்தப் பாத்திரத்தின் அனைத்துமாக இருக்கவேண்டும். அதற்காக எங்களுடைய நாடகங்களில் முகத்தை துணியால் கட்டி பரிசோதனை முயற்சியாகவும் நிகழ்த்தியிருக்கிறோம். முகத்தில்தான் பிம்ப அரசியல் உருவாகிறது. அதைக் கலைப்பதுதான் மணல்மகுடி நாடக பாணி என்றும் சொல்லலாம்.

எங்களுடைய நாடகங்களில் உடல் ஒரு முக்கிய பங்கு வகிக்கிறது. உடலை நாடகநிலத்தில் கலைத்துப் போட்டு, அந்த உடல் சேர்ந்து, பிரிந்து, விலகி, ஒரு வடிவத்தை உருவாக்கும். அந்த வடிவமும் எங்களுடைய நாடகத்தின் கதைசொல்லும் ஒருபாணிதான். நிலத்தில் நடிகன் உடம்புதான் கதை சொல்லுகிறது. நடிகன் இல்லாமல் நாடகம் சாத்தியமில்லை. நாடகத்தில் ஒருத்தர் குறைந்தாலும் மொத்தநாடகமும் கலைந்துவிடும். அதனால் நாடகத்தின் உயிர்மூச்சு அவன்தான். அதனால் குரலைத்தாண்டி வேறு ஒன்றைப் பார்ப்பதற்கு நாம் பார்வையாளர்களைப் பழக்கவேண்டியுள்ளது. அதற்கான முயற்சிகளை நோக்கி நகர்கிறோம். நவீன நாடகம் புரியவில்லை என்று நிறைய குற்றச்சாட்டுகள் இருக்கின்றன. இந்த உலகத்தில் எதையுமே புரிந்துக்கொள்ள முடியாது. உணரத்தான் முடியும். புரிந்துக்கொள்வது என்பதே பாடத்திட்டத்திற்காக உருவாக்கப்பட்ட வார்த்தை.

ரஷ்ய திரைப்பட ஆளுமை தர்காவ்ஸ்கி தன்னுடைய (Sculpting in time) புத்தகத்தில் கலையில் புரிதல் குறித்து பார்வையாளர்களின் அணுகலைப் பற்றிக் குறிப்பிடுக்கிறார். அவருடைய Mirror திரைப்படத்திற்கு வந்த ரசிகர்களின் கடிதங்களைப் படிக்கும் அவர், அதில் பெரும்பாலானவற்றில் படத்தை எங்களால் புரிந்துகொள்ளமுடியவில்லை என்ற குரல் அதிகமிருப்பதைக் குறிப்பிட்டு, பின்வரும் வரிகளைச் சொல்கிறார்,

‘‘நீங்கள் ஒரு கலைப்படைப்பை எளிமையாகப் பார்க்க வேண்டும். பாக்(bach) இசையைப் போல, கவிதைகளைக் கேட்பதைப்போல, நிலப்பரப்பை ரசிப்பது போல, நட்சத்திரங்களை அல்லது கடலைப் பார்ப்பதைப் போலவே கலையையும் பாருங்கள். இங்கே எந்த கணித தர்க்கமும் இல்லை'' என்கிறார். இயற்கையையும், இசையையும், சடங்குகளையும், மனித நுண் கூறுகளையும் எவ்வாறு உணர மட்டுமே முடியுமோ அதைப்போலவே படைப்பையும் உணர மட்டுமே முடியும். செய்திகளைக் கடத்தி கலையை புரியவைப்பது பார்வையாளனை அவமதிப்பதற்குச் சமம். ஆகையால் மணல்மகுடி நாடக நிகழ்வுகளை பார்க்கையில் உங்களால் உணரமட்டுமே முடியும். இதற்குள்ளே இருந்து புரிந்துக்கொண்டு எதையும் எடுத்துக்கொண்டு போகமுடியாது.

ஒவ்வொரு பார்வையாளருக்கும் தனக்கு என்ன தேவையோ அதை எங்கள் நாடகம் உணர்த்தும்.

எங்களுடைய நாடகத்தைப் பெருங்கூட்டம் பார்க்கவேண்டும் என்று நாங்கள் ஆசைப்படுவது கிடையாது. தேடல் கொண்ட வெகுசில பார்வையாளர்கள் அரங்கத்திலிருந்தாலே போதும். குறைவான பார்வையாளர்கள் பார்ப்பதன் மூலமாகத்தான் எங்கள் நாடகத்தின் மொத்த சாரத்தையும் மற்றவர்களுக்கு கைமாற்றி விடுவது எளிது. பார்வையாளர்கள் ஒருவரையொருவர் எங்கள் நாடகங்களை பார்ப்பதற்கு மற்றவர்களை தூண்டுவார்கள். அதன் மூலமாக பரந்துப்பட்ட பார்வையாளர்களை நாடகம்  சென்றடையும். இப்படித்தான் மணல்மகுடி கலைஞர்கள் நாடகக்கலையை சுமந்தபடி அலைந்து கொண்டிருக்கிறோம்,'' என்று சொல்லிவிட்டு சிரித்தார் முருகபூபதி. அணங்கு சிரிப்பதுபோலவே இருந்தது.

அக்டோபர், 2021

logo
Andhimazhai
www.andhimazhai.com