தொகுதி வரையறை : பல்டி அடித்ததா தி.மு.க.?

தொகுதி வரையறை : பல்டி அடித்ததா தி.மு.க.?
Published on: 

பா.ஜ.க. மோடி அரசாங்கம் மீண்டும் கொண்டுவரவுள்ள தொகுதி மறுவரையறை மசோதாவுக்கு ஆதரவு எனும் முடிவை தி.மு.க. அறிவித்ததிலிருந்தே, அதன்மீது முன்னாள் கூட்டணிக் கட்சிகள் பாய்ந்து சீறிவருகின்றன.

சென்னையில் இன்று காலையில் கூடிய தி.மு.க. நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது என முன்னாள் மைய அமைச்சர் ஆ.இராசா வெளியில் வந்து செய்தியாளர்களிடம் சொன்னார்.

அவரையடுத்து, மாலையில் முன்னாள் மாநில அமைச்சர் தங்கம் தென்னரசும் கூடுதலாக ஊடகத்தர்களுக்கு விளக்கம் அளித்தார்.

இதனிடையே, தி.மு.க.வின் முடிவு மீது பல தரப்பினரும் கடுமையான விமர்சனங்களை வெளிப்படுத்தினர். வி.சி.க. அமைச்சர் வன்னியரசு தி.மு.க. செய்தது இரட்டைத் துரோகம் என்கிற அளவுக்கு காட்டமாக வார்த்தைகளை வீசினார். அவரின் கட்சித் தலைவர் திருமாவளவன் பேரதிர்ச்சி அளிப்பதாகச் சொன்னார்.

மார்க்சிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பெ.சண்முகமும் கடுமையாக விமர்சனத்தை முன்வைத்திருந்தார்.

எதிர்வினைகளுக்கு அடுத்து, மு.க.ஸ்டாலின் பெயரில் வெளியான ஓர் அறிக்கையில், முன்னாள் கூட்டணிக் கட்சிகளின் பெயர் குறிப்பிடாமல், அவரும் தன் பங்குக்குச் சாடியிருந்தார்.

இது ஒரு பக்கம் இருக்க, தி.மு.க.வுக்கு அதன் தாய்க்கழகமான தி.க.வின் தலைவர் கி.வீரமணியும் அறிவுரை ஒன்றை வழங்கியிருந்தார். பிறகு என்ன நடந்ததோ, காலை தி.மு.க. கூட்டத்து முடிவை வரவேற்பதாக இன்னொரு அறிக்கை வெளியிட்டு மறக்காமல் அறிவுரையையும் கூறிவைத்தார்.

சரி...

தி.மு.க. என்னதான் சொல்கிறது?

தொகுதி மறுவரையறையில் தங்களின் நிலையில் எந்த மாற்றமும் இல்லை என்பதுதான் அதன் அழுத்தமான வாதம்.

அதாவது, ஆறு மாதங்களுக்கு முன்னர், தாங்கள் சொன்னதையே இப்போது பா.ஜ.க. புதிய மசோதாவில் சேர்த்திருக்கிறது. அனைத்து மாநிலங்களுக்கும் 50% இடங்களை அதிகரித்திருக்கிறது; ஒவ்வொரு மாநிலத்துக்குமான இப்போதைய இட ஒதுக்கீட்டை மாறாமல் உறுதிசெய்யப்பட்டுள்ளது; 1971 மக்கள்தொகைப்படி அடுத்த 25 ஆண்டுகளுக்கு மறுவரையறையில் மாற்றம் செய்யப்படாது என முன்னர் வாய்மொழியாகச் சொன்னவற்றை இப்போது பா.ஜ.க. மசோதாவில் குறிப்பிட்டுள்ளது என்பதை எடுத்துக்காட்டி, இதனால்தான் நாங்கள் ஆதரிக்கிறோம்; எங்கள் நிலையில் மாற்றமில்லை என்கிறது தி.மு.க.

குறிப்பாக, தமிழ்நாட்டுக்கான இப்போதைய இட ஒதுக்கீடு 7.18 என்பது மாற்றம் வந்தால் 7.21%ஆக அதிகரிக்குமே தவிர குறையாது என்றும் கூறுகிறார்கள்.

ஆனால், காங்கிரஸ் உட்பட்ட இந்தியா கூட்டணி கட்சிகள் சொல்லும் வாதம், தொகுதி மறுவரையறையில் இந்த அம்சங்களை பா.ஜ.க. மாற்றிக்கொண்டிருப்பது ஒரு பொருட்டே அல்ல; மசோதா சட்டமானால் மறுவரையறைக்கு ஓர் ஆணையம் அமைக்கப்படும்; அந்த ஆணையமே புதிய தொகுதிகளை உருவாக்கும்; அதை யாரும் கேள்விக்கு உட்படுத்த முடியாது; அங்குதான் பிரச்னையே எனக் குறிப்பிடுகின்றன.

ஜெர்ரிமாண்டரிங்

இதில், அமெரிக்காவில் புகழ்பெற்ற ஜெர்ரிமாண்டரிங் என்கிற சமாச்சாரம் அடிபடுகிறது. அப்படியென்றால் என்ன? தொகுதிகளை மறுவரையறை செய்யும்போது, குறிப்பிட்ட கட்சிக்குச் செல்வாக்கான இடங்களை ஒன்றாக்கியும், எதிர்க்கட்சி(களு)க்குச் செல்வாக்கான தொகுதிகளைப் பிரித்தும் வேலைசெய்வதுதான்!

அசாமிலும் காஷ்மீரிலும் அண்மையில் நடைபெற்ற பொதுத் தேர்தல்களில் இப்படித்தான் செய்யப்பட்டன என்பதை, தொகுதிவாரியான விவரங்களையும் இந்தியா கூட்டணி முன்வைக்கிறது.

அவற்றில் சில ஊடகப் புலனாய்வுகளிலும் உறுதியானவை.

நாளைமறுநாள் தாக்கலாகும் புதிய மசோதாவில் இப்படியான அம்சங்களைப் பற்றி எதுவும் உறுதியில்லாமல், தி.மு.க. எப்படி இதை ஆதரிக்கலாம் என்பதுதான் அந்தக் கட்சிகளின் கேள்வி.

இதை ஆதரிப்பதன்மூலம் தி.மு.க., பழையபடி பா.ச.க.வுடன் கூட்டுசேரப் போகிறது என்பதும் அவர்கள் முன்வைக்கும் வாதம்.

அதற்குப் பதிலடியாக இன்று இரவு மீண்டும் வெளியிடப்பட்ட தி.மு.க. விளக்கத்தில், எந்தக் காலத்திலும் பா.ஜ.க.வுடன் கூட்டு வைக்கப்போவதில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆனாலும், தி.மு.க. புள்ளிகள் மீதான அமலாக்கத் துறை வழக்குகள் உட்பட வேறு பல விவகாரங்களை இந்தியா கூட்டணியினர் சுட்டிக்காட்டி மறைமுகக் கூட்டு எனும் குற்றச்சாட்டைத் தொடர்கிறார்கள்.

அதற்குப் பதிலாக தி.மு.க. தரப்பில் சிறிதுகூட அலட்டிக்கொள்ளாமல் கடந்துசெல்கிறார்கள்.