சிம்ஃபொனி நாயகன்! - எப்பவும் நீ ராஜா!

இளையராஜாவுக்கு நடந்த பாராட்டுவிழா... ஓர் இசை அனுபவம்
சென்னையில் சிம்பொனி
சென்னையில் சிம்பொனி
Published on

1993ல் லண்டன் போய்ச் செய்த சிம்ஃபொனி முயற்சியைத் தவிர்த்து விட்டுப் பார்த்தால் இந்த‌ Valiant-தான் இளையராஜாவின் அதிகாரப்பூர்வமான முதல் சிம்ஃபொனி (Ilaiyaraaja’s Symphony Number 1). அதை இவ்வாண்டு மார்ச் 8 அன்று லண்டன் ஈவென்டிம் அபோல்லோ அரங்கில் ராயல் ஃபில்ஹார்மோனிக் ஆர்கெஸ்ட்ராவால் அரங்கேற்றம் செய்யப்பட்டது. 90களிலேயே நடந்திருந்தால் அச்சாதனையை நிகழ்த்திய முதல் ஆசியர் என்ற பெயர் கிடைத்திருக்கும். இன்று சிம்ஃபொனி செய்த‌ முதல் இந்தியர் ஆகிறார் இளையராஜா.

இந்தப் பெருஞ்சாதனையின் நிமித்தமும் இளையராஜா திரைப்படத்துறையில் நுழைந்த பொன் விழா ஆண்டு இது என்பதன் பொருட்டும் தமிழக அரசு இளையராஜாவுக்கு ஒரு பாராட்டு விழாவை நேற்று மாலை சென்னை நேரு உள்விளையாட்டரங்கில் நடத்திய‌து. இந்த நிகழ்வில் Valiant சிம்ஃபொனி நிகழ்த்தப்படலாம் என்ற என் உள்ளுணர்வை ஒட்டி சற்றே முயன்று நுழைவுச் சீட்டை (Pass) செல்வாக்கான மனிதர் ஒருவர் மூலம் பெற்றேன்.

சொன்ன‌ நேரத்திற்கு மிகச் சில நிமிடங்கள் மட்டுமே தாமதமாகத் தொடங்கிய நிகழ்வு சுமார் நான்கரை மணி நேரம் மிகச் சிறப்பாக நடந்தேறியது என்றே சொல்ல வேண்டும்.

நிகழ்வு மூன்று பகுதிகளாகப் பிரிந்திருந்தது எனலாம். இளையராஜாவின் பாடல்களை எஸ்பிபி சரண், விபாவரி ஆப்தே ஜோஷி முதலான பலர் பாடிய கச்சேரி முதற் பகுதி. லண்டனிலிருந்து வந்த‌ இசைக் கலைஞர்கள் நிகழ்த்திய Valiant சிம்ஃபொனி மற்றும் இன்ன பிற இசைக் கோர்வைகள் இரண்டாம் பகுதி. முக‌ ஸ்டாலின், உதயநிதி, ரஜினி, கமல், இளையராஜா கலந்து கொண்டு உரையாற்றிய பாராட்டு விழா இறுதிப் பகுதி.

முதல் பகுதி கச்சேரியின் பாடல்களைத் தேர்வு செய்தது முதல்வர் என கமல்ஹாசன் சொன்னார். ராக்கம்மா கையத் தட்டு, ராஜா கைய வெச்சா என‌ப் பெரும்பாலும் ரஜினி - கமல் பாடல்கள். பாசத்தில் உன்னை நினைச்சு நினைச்சு என்ற சைக்கோ படத்தின் பாடலும் சேர்த்திருந்தார். முதற்பகுதி கச்சேரியின் உச்சம் விபாவரி பாடிய சின்னத் தாயவள் தந்த ராசாவே பாடல்தான். வாலி கதைக்கும் பொருத்தமாக (சின்னத்தாய் - பதின்ம வயதில் கர்ப்பம்), இளையராஜாவையும் புகழ்ந்து (அவரது தாய் சின்னத்தாய்) எழுதியதை மொழியறியா விபாவரி கண்மூடி ரசித்து உணர்வுப்பூர்வமாகப் பாடினார்.

இத்தனை காலமாக‌ இளையராஜாவின் எந்தக் கச்சேரியும் ஜனனி ஜனனி பாடலுடனே தொடங்கும். ஆனால் அதிலிருக்கும் கொள்கை முரண் காரணமாக பாடல் பட்டியலில் அதை ஸ்டாலின் தவிர்த்திருக்கக்கூடும் எனக் கணிக்கிறேன். எனவே ஜனனி ஜனனி பாடல் இடம் பெறாத ஒரே இளையராஜா கச்சேரியாக அமைந்திருக்க வேண்டியது. ஆனால் உச்சக் காட்சியாக‌ poetic justice போல் சுவாரஸ்யமாக ஒரு விஷயம் நிகழ்ந்தது. இளையராஜாவின் உரையின் இறுதியில் அவர் ஒரு பாடல் பாட வேண்டும் என்றொரு கோரிக்கை எழ, மக்களே ஜனனி ஜனனி என்றும் சொல்ல, அவர் அப்பாடல் பாடினார். அது ஒரு magical moment-தான். இளையராஜாவுக்கே அது நேற்று ஒரு வித நிம்மதியை அளித்திருக்கும். அப்படியெல்லாம் அவர் பாடாதிருந்தால் ஜனனி விட்டு விடுவாளா!

ராஜாவுக்கு மேடையில் பாராட்டு
ராஜாவுக்கு மேடையில் பாராட்டு

நிகழ்வின் மையமும் நாயகமும் Valiant சிம்ஃபொனிதான். அதற்காகத் தமிழக அரசு செலவு செய்து லண்டனில் இருந்து 87 இசைக் கலைஞர்களை வரவழைத்திருந்தது. அதை நிர்வகித்து நடத்திக் காட்டியது தற்போது இளையராஜாவின் சினிமா தாண்டிய ஆல்பங்களைப் பார்த்துக் கொள்ளும் மெர்க்குரி குழுமத்தின் சிஈஓ ஸ்ரீராம் பக்திசரண். (2024ல் இளையராஜா நாலாயிர திவ்யப் பிரபந்தத்தின் தேர்ந்தெடுத்த‌ 8 பாடல்களை திவ்ய பாசுரம்ஸ் என்ற ஆல்பமாகக் கொணர்ந்த போது இந்நிறுவனமே நிர்வகித்தது.)

சிஃம்பொனி நிகழ்த்தல் பிரபல‌ ரஷ்ய இசைக்கலைஞரான டிமிட்ரி ஷோஸ்டகோவிச் 1954ல் வெளியிட்ட Festive Overture என்ற இசைக்கோர்வையுடன் தொடங்கியது. அது ஒரு மேற்கத்திய இசைக் கச்சேரிச் சம்பிரதாயம். ரசிகர்களை உற்சாகமூட்டக்கூடிய இசை என்பதால் எவரது இசை நிகழ்ச்சியாக இருந்தாலும் அம்மாதிரி ஒன்றுடன் தொடங்குவது வழக்கம். 6 நிமிடங்கள் ஒலித்த அது நம் ரசிகர்களை மேற்கிசைக்குத் தயார்படுத்தியது.

அதன் பிறகு இளையராஜா எழுதிய Valiant சிம்ஃபொனி இசை தொடங்கியது. அது நான்கு பாகங்களைக் கொண்டது - அதாவது தனித்தியங்கும் Movements. முதல் பாகம் The Journey - 17 நிமிடங்களுக்கு மேல் ஒலித்தது. இரண்டாம் பாகம் Solace - 10 நிமிடங்களுக்கு மேல் ஒலித்தது. மூன்றாம் பாகம் Frontier - சுமார் ஏழரை நிமிடங்கள் ஒலித்தது. கடைசி மற்றும் நான்காம் பாகம் Triumph - 11 நிமிடங்களுக்கு மேல் ஒலித்தது. மொத்தம் முக்கால் மணி நேரத்திற்கும் சற்று கூடுதலாக‌ அமைந்திருந்தது இளையராஜாவின் இந்த சிம்ஃபொனி.

நிகழ்ச்சிக்கு வந்த ரசிகர்கள் சிம்ஃபொனியை ஒலி/ஒளிப்பதிவு செய்ய‌ வேண்டாம் என்ற கோரிக்கை இருந்தது. ஒரு முறை கேட்டதை வைத்து மட்டும் பார்த்தால் மிகச் சிறந்த‌ படைப்பாக இருந்தது. யுத்த களச் சூழலில் உள்ள ஒரு நாயகனின் பயணம் என்ற பிம்பம் மனதில் எழுந்தது. சில இடங்களின் instrumentation-ல் 2005ல் இளையராஜா வெளியிட்ட‌ திருவாசகம் Oratorio ஆல்பம் போல் இருந்தது. இன்னும் பல முறை கேட்ட பிறகே அதன் நுட்பங்களை உள்வாங்க முடியும். பிறகே விரிவாக எழுத முடியும். இப்போதைக்கு இந்த சிம்ஃபொனி கேட்க இரண்டு வழிகள்தாம். ஒன்று அக்டோபர் 18 அன்று துபாயில் Valiant சிம்ஃபொனியை மீண்டும் நிகழ்த்துகிறார் இளையராஜா. இரண்டு இந்த சிம்ஃபொனி வினைல் ரெக்கார்டாக விற்பனைக்குக் கிடைக்கிறது (விலை வரிகள், தபால் செலவு சேர்த்து ரூ.6,100 - இதை ஒலிக்க விட இதற்குரிய ப்ளேயர் தனியாக வாங்க வேண்டும்.)

சிம்ஃபொனி தவிர்த்து லண்டன் இசைக் குழு இளையராஜாவின் திரைப்பாடல்கள் சிலவற்றையும் (உதா: ராஜா ராஜாதி ராஜன் இந்த ராஜா, பூவே செம்பூவே, கண்ணே கலைமானே) வாசித்துக் காட்டியது. இறுதியில் ஃப்ரான்ஸ் ஷூபெர்ட் என்ற ஆஸ்திரிய இசையமைப்பாளரின் முடிக்கப்படாத பிரபல‌ சிம்ஃபொனியிலிருந்து புதிய வார்ப்புகள் படத்தில் இடம் பெற்ற‌ இதயம் போகுதே பாடலுக்கான உத்வேகம் கிடைத்ததைப் பற்றி ராஜா குறிப்பிட‌ இரண்டையும் ஒன்றின் மேல் ஒன்று மேவி ஒலித்துக் காட்டியது குழு.

லண்டன் இசைக்குழுவுக்குத் தம் இசை நிகழ்த்தலிலும் சரி, அதற்குக் கிடைத்த பெருத்த கரவொலியிலும் சரி, மிக மகிழ்ச்சியாகவும் திருப்தியாகவும்தான் உணர்ந்திருப்பார்கள்.

உச்சகட்ட சாதனையாக சிம்ஃபொனி
உச்சகட்ட சாதனையாக சிம்ஃபொனி

மூன்றாம் பகுதி பாராட்டு விழா இளையராஜா பற்றிய குறும்படத்துடன் தொடங்கியது. அவரது ஆரம்ப காலத்தை மட்டும் விவரித்த‌ நல்லதோர் ஆக்கம். மேடையில் இரண்டு எம்எல்ஏக்கள் (ஸ்டாலின், உதயநிதி), இரண்டு ராஜ்யசபா எம்பிகள் (கமல், இளையராஜா) இடையே ரஜினி மட்டுமே அரசியலுக்கு வெளியே நின்று இயங்கிக் கொண்டிருப்பவர்.

கமல் தன் உரையை சுருக்கமாக முடித்துக் கொண்டார். அரங்கிலுள்ள அனைவரையும் சுருக்கமாக இளையராஜா ரசிகர்கள் என்றே அழைக்க முடியும் என்று தொடங்கி நீ பார்த்த பார்வைக்கொரு நன்றி பாடலை மாற்றிப் பாடியதுடன் ஸ்டாலினுக்கும், இளையராஜாவுக்கும், தனக்கும் பெயர் வைத்தவர் கலைஞர்தான் என்றார். ரஜினியின் உரை எப்போதும் போல் கலகலப்பாக அமைந்திருந்தது. வெற்றி / தோல்வி, சொந்த வாழ்வின் இழப்புகள் கடந்த இளையராஜாவின் இசை அர்ப்பணிப்பு குறித்த ரஜினியின் பேச்சு சற்று சங்கடமூட்டினாலும் முக்கியமானது. இளைய‌ராஜாவின் Blowing Own Trumpet செயலைக் குறிப்பிட்டு அதற்கு எவ்வளவு தன்னம்பிக்கை வேண்டும் எனச் சிலாகித்தார். உண்மையில் அடுத்தவர் திமிரைக் கொண்டாடவும் அதீதத் தன்னம்பிக்கை வேண்டும்! முன்னாள் மருமகனை மனதிலிறுத்தியோ என்னவோ இளையராஜா biopic சீக்கிரம் வர வேண்டும் என்றார். பழைய எதிர்க்கட்சி, புதிய எதிர்க்கட்சி (விஜய்?!) என எவர் வந்தாலும் பார்த்துக் கொள்ளலாம் 2026 தேர்தலில் என முக‌ ஸ்டாலின் இருப்பதாகக் குறித்தார்.

சமூக வலைதளப் பதிவுகளை மேற்கோள் காட்டி ஸ்டாலினும் உதயநிதியும் பேசினர். ஸ்டாலினின் உரையில் ஒரு கோரிக்கையும் ஓர் அறிவிப்பும் இருந்தது. இளையராஜா சங்கப் பாடல்களுக்கு இசையமைத்து ஆல்பம் வெளியிட வேண்டும் என்றார். ஆண்டு தோறும் இளையராஜா பெயரில் இசைச் சாதனை புரிந்தோருக்கு அரசு சார்பில் விருது வழங்கப்படும் என்றார். (முதல் விருது ரஹ்மானுக்கு தரலாம், அதற்கடுத்து அநிருத்துக்கு!)

கலைஞருக்கும் இளையராஜாவுக்கும் ஒரே நாளில் பிறந்த நாள் என்றாலும் குழப்பம் தவிர்க்கும் நிமித்தம் தன் பிறந்த நாளை ஒரு நாள் முன்னதாக மாற்றிக் கொண்டவர் இளையராஜா என்று சொல்லி அது அவரது நற்குணம் என்று பாராட்டவும் செய்தார் ஸ்டாலின். அது நிஜமாகவே புகழ்வதற்குரிய விஷயமா எனச் சொல்ல முடியவில்லை.

எனக்கு வியப்பளித்த விஷயம் இளையராஜாவைப் பாராட்டுவதால் நமக்குத்தான் பெருமை என்று முக‌ ஸ்டாலின் குறிப்பிட்டதுதான். அது நாம் எல்லோரும் உணர்வதே என்றாலும் ஒரு மாநில முதல்வரே அப்படிச்  சொல்வது நிச்சயம் அரிய நிகழ்வுதான். முத்தாய்ப்பாக இளையராஜாவுக்கு பாரத ரத்னா வழங்கப்பட வேண்டும் என்றார் முக ஸ்டாலின். மத்திய அரசுடன் இளையராஜா ஏற்கெனவே இணக்கமாக இருக்கிறார். இப்போது மாநில அரசிடம் இருந்தும் இந்தக் கோரிக்கை எழுந்திருக்கிறது. எனவே 2026 ஜனவரியிலேயே இளையராஜாவுக்கு பாரத ரத்னா தரப்படும் சாத்தியம் இருக்கிறது.

இளையராஜா சிம்ஃபொனி அமைத்ததன் சிரமங்களைத் தன் உரையில் குறிப்பிட்டார். அதில் கிராமத்துச் சாயல் வந்து விடக்கூடாது, சினிமாப் பாடல் இசையின் சாயல் வந்து விடக்கூடாது, பின்னணி இசையின் சாயலும் கூடாது, இந்திய இசையின் தமிழிசையின் சாயல் வந்து விடக்கூடாது, ஏற்கெனவே வந்திருக்கும் மாஸ்டர்களின் சிம்ஃபொனியின் சாயல் வந்து விடக்கூடாது. நிஜமாகவே சவாலான விஷயம்தான். தான் இசையிலேயே தன் வாழ்வைக் கழித்து விட்டதால் பிள்ளைகளுக்கான நேரத்தைத் தர முடியவில்லை என்ற வருத்தத் தொனியில் தொடங்கி, ஆனால் அதனால்தான் சிம்ஃபொனி போன்ற பெரிய விஷயங்களைச் செய்ய முடிந்தது என அவர்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்றார். இளையராஜா இந்த சிம்ஃபொனியைத் தன் வாழ்வின் உச்ச சாதனையாகக் கருதுகிறார் என்பதை விளங்கிக் கொள்ள முடிகிறது. மனிதர்கள் இம்மாதிரி உயர்ந்த விஷயங்களை நோக்கியே நகர வேண்டும் என்று மானுடத்துக்கே வெளிச்சமிட்டார்.

இளையராஜா நேற்று மிக உணர்ச்சிவசப்பட்டிருந்தார். உண்மையில் அவரை அப்படிக் காண்பது அரிது. தந்தையும் 1988ல் தனக்குப் பாராட்டு விழா நடத்தி இசை ஞானி எனப் பட்டமளித்தார், மகனும் இன்று அரசு சார்பிலேயே விழா எடுத்துப் பாராட்டுகிறார், ஓர் இசைக் கலைஞனுக்கு இப்படி நடப்பது வரலாற்றில் இதுதான் முதல் முறை என்றார்.

அரசியல், சினிமா, நீதி, ஊடகம் என சகலத் துறையினரும் நேற்று குவிந்திருந்தார்கள். வைகோ, ஆ.ராசா, துரைமுருகன், பிரபு, சத்யராஜ், கார்த்தி, கிருத்திகா உதயநிதி, லதா ரஜினி, சௌந்தர்யா ரஜினி, ஆர்கே செல்வமணி, விக்ரமன், மிஷ்கின், கார்த்திக் ராஜா, யுவன் ஷங்கர் ராஜா நிகழ்ச்சிக்கு வந்திருந்ததைப் பார்க்க முடிந்தது. தமிழ் வளர்ச்சி & செய்தித் துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் நிகழ்ச்சி ஏற்பாடுகள் செய்திருக்கிறார்.

நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கிய இருவரில் அர்ச்சனாவை எல்லோரும் அறிவார்கள், இரண்டாவது ஆள் யார் எனக் கேட்க வைத்தார் திவ்யா நாதன். அரசியல் வேறுபாடுகள் இருந்தும் இளையராஜாவுக்காக இந்நிகழ்ச்சியை முன்னெடுத்த ஸ்டாலின் பாராட்டுக்கு உரியவர். பெரிய அளவில் முதல்வர், உபமுதல்வர் துதிபாடும் செயல்கள் இல்லை. எதன் பொருட்டு இல்லையென்றாலும் இந்த நிகழ்ச்சிக்காக ஸ்டாலின் நினைவுகூரப்படுவார்.

உலகத்தின் எண்ணூறு கோடி மக்களையும் இரண்டு வகையாகப் பிரிக்கலாம். ஒன்று இளையராஜாவின் சிம்ஃபொனியைக் கேட்டவர்கள், இரண்டு அதைக் கேட்காதோர். Valiant-ஐக் கேட்ட சில ஆயிரம் பேர்களுள் இணைந்தவர்கள் எல்லோருக்கும் பெருமை!

என் தனிப்பட்ட கணிப்பு மேற்கத்திய செவ்வியல் இசைக்குப் பழகாத தமிழ்க் காதுகள் பொதுவாக நேற்று சிம்ஃபொனியைக் கேட்ட பின் சற்று குழப்பமாகவே உணர்ந்தன‌. அது இயல்பே. நம்மிடம் கர்நாடக சாஸ்திரிய சங்கீதம் குறித்தும் இதே உள்வாங்க‌லே உள்ளது. ஆனால் இது முதல் முறை, ஒரே முறை கேட்டதன் எதிர்வினை. அது மாறும். சிஃம்பொனியைத் தமிழகத்தில் நடத்துவதற்கான அரசு தரப்பிலான‌ ஒத்துழைப்பை, உதவியை முதல்வரிடம் கேட்டார் இளையராஜா. அது விரைந்து நடந்தேற வேண்டும்.

சினிமாப் பாடல் ஒரு சிறுகதை என்றால், சினிமா ஆல்பம் ஒரு தொடர்கதை என்றால், சினிமா அல்லாத ஆல்பம் ஒரு நாவல் என்றால் சிம்ஃபொனி காவியத்திற்கு ஒப்பானது. இளங்கோ போல், கம்பர் போல் இளையராஜா ஒரு காவியத்தை அரங்கேற்றியுள்ளார். இதுதான் ஓர் எளிய ரசிகனின் பார்வை. காவியங்கள் பண்டிதர்களுக்கானது; பொதுவாக அவை பாமரர்களை அதிகம் சேர்வதில்லை. ஆனால் Valiant-க்கு அப்படி நடக்கக்கூடாது.

இதை முதலில் சகலருக்கும் கொண்டு சேர்க்க வேண்டும். இதில் மூழ்கித் திளைத்து இந்த நிலமும் இதன் மக்களும் இளையராஜாவை மேலும் ஆரத் தழுவி அணைத்துக் கொள்வ‌ர். “நேற்று இல்லை, நாளை இல்லை, எப்பவும் நீ ராஜா” என்ற முதல்வர் குரல் நிறைவேறும்!

***

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடரFacebookTwitterYoutubeInstagram

logo
Andhimazhai
www.andhimazhai.com