தைவானில் படிக்கும் தேயிலைத் தோட்ட தொழிலாளியின் மகள், நியூயார்க்கில் படிக்கும் ஆட்டோ ஓட்டுநரின் மகள், எளிய கிராமப் பின்னணியை கொண்ட மாணவி ஒருவர் ஜப்பானில் வேலை பெற்று அந்த மொழியிலேயே பேசி அசத்தியது, ஜெர்மனியில் படிக்கும் நெசவுத்தொழிலாளியின் மகன்… இவை எல்லாம் கற்பனைக் கதைகளோ அல்லது சினிமாவில் நாம் காணும் காட்சிகளோ இல்லை! கடந்த சில நாள்களுக்கு முன் தமிழக அரசு நடத்திய ‘கல்வியில் சிறந்த தமிழ்நாடு’ நிகழ்வில் அரசுப் பள்ளி மாணவர்களின் நெகிழ்ச்சி தருணங்கள் இவை!
அரசுப் பள்ளிகள் என்றாலே தள்ளி வைத்துப் பார்க்கும் மனோபாவம் தமிழ்நாட்டில் பெரும்பாலானோருக்கு உண்டு. ஆனால், இந்தக் மனப்பாங்கை உடைத்து தலைநிமிர வைத்துள்ளனர் தமிழக அரசுப் பள்ளி மாணவர்கள். கல்விக்காக தமிழக அரசு செயல்படுத்தி வரும் ‘காலை உணவுத்திட்டம்’, ‘புதுமைப்பெண் திட்டம்’, ‘நான் முதல்வன்’ உட்பட்ட ஏழு திட்டங்களின் சாதனைகளை விளக்கும் வகையிலும், 2025- 2026 ஆம் கல்வி ஆண்டிற்கான தமிழ்ப்புதல்வன், புதுமைப்பெண் திட்டங்களை தொடங்கி வைக்கவும் நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்ற இந்த நிகழ்வில் தமிழக முதலமைச்சர் ஸ்டாலினுடன் தெலங்கானா முதலமைச்சர் ரேவந்த் ரெட்டியும் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார். இதுமட்டுமல்லாது, திரைத்துறையில் இருந்து நடிகர் சிவகார்த்திகேயன், இயக்குநர்கள் வெற்றிமாறன், தியாகராஜன் குமாரராஜா, மாரி செல்வராஜ், மிஷ்கின் உள்ளிட்டப் பலரும் கலந்து கொண்டனர்.
தமிழக அரசு முன்னெடுத்து வரும் நான் முதல்வன் திட்டம், கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம், தமிழ்ப் புதல்வன் திட்டம், புதுமைப் பெண் திட்டம், காலை உணவுத் திட்டம் முதலிய திட்டங்களால் பயனடைந்த மாணவ, மாணவிகள் மேடையேறி, தாங்கள் அடைந்த பலன்களையும், இத்திட்டங்கள் தங்களின் கல்விக்கு எப்படி உதவிக் கொண்டிருக்கிறது என்பதைப் பெருமையுடன் உணர்வுப்பூர்வமாகவும் பகிர்ந்தார்கள்.
நிகழ்வில் பங்கேற்ற சில மாணவர்களின் நெகிழ்வுத் தருணங்களையும் உத்வேக பேச்சுகள் பற்றியும் பார்க்கலாம்.
புதுமைப்பெண் திட்டம் மூலம் பயன்பெற்ற மாணவி ரம்யா தனது காது கேளாத தாய்க்குக் காது கேட்கும் கருவி வாங்கிக் கொடுத்திருக்கிறார். இதுபற்றி அவர் பேசும்போது, “என்னுடைய அம்மாவுக்கு காது கேட்காது. இதனால், நானும் அம்மாவும் பல முறை கேலிக்குள்ளாகி இருக்கிறோம். அது என் மனதில் ஆறாத வடுவாக இருந்தது. இதற்காக நிறைய வருத்தப்பட்டிருக்கிறேன். அந்த சமயத்தில்தான் அரசின் புதுமைப்பெண் திட்டத்திற்கு விண்ணப்பித்தேன். அரசு கொடுக்கும் ஆயிரம் ரூபாயில் மாதந்தோறும் சேமித்து அதன் மூலம் என்னுடைய தாய்க்கு காது கேட்கும் கருவி வாங்கிக் கொடுதேன். எங்களைப் பற்றி நீங்கள் என்ன வேண்டுமானாலும் பேசலாம். ஆனாலும் படிப்பதை ஒருபோதும் நிறுத்த மாட்டேன். என்றைக்கும் என் பெற்றோருக்குத் தேவையானதை செய்வேன்” என்றார். ரம்யாவின் பேச்சைக் கேட்டு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர்கள் அன்பில் மகேஸ், கீதா ஜீவன், மூத்த ஐஏஎஸ் அதிகாரிகள் உட்படப் பலரும் கண்கலங்கினர்.
அதேபோல, நான் முதல்வன் திட்டத்தில் பயனடைந்த தென்காசி மாணவி பிரேமா பேசியது நிகழ்வின் ஹைலைட் தருணமாக மாறியது. "எங்கள் உறவினர்கள், ஊரில் எல்லாம் ’உனக்கு இருக்கற கஷ்டத்துக்கு பெண் பிள்ளையை ஏன் படிக்க வேண்டும்? அதெல்லாம் வேண்டாம்’ என்று சொன்னார்கள். ஆனால், என் அப்பா வறுமையிலும் என்னைப் படிக்க வைத்தார். லட்சக்கணக்கில் செலவு செய்து படிக்க வேண்டிய சிப் தொடர்பான பயிற்சியை நான் முதல்வன் திட்டத்தின் கீழ் இலவசமாகப் பெற்றுள்ளேன். அதனால் சென்னையில் உள்ள பெரிய நிறுவனத்தில் எனக்கு இன்று வேலை கிடைத்துள்ளது. என்னைப் படிக்க வைக்க வேண்டாம் என்று சொன்னவர்களுக்கு இன்று பதிலடி கொடுத்துள்ளேன். என்னுடைய முதல் மாத சம்பளத்தை இந்த மேடையில் என் அப்பாவிடம் கொடுக்க வேண்டும்" என கண்ணீர்மல்க அவர் பேசினார். கூட்டத்தில் அமர்ந்திருந்த அந்த தந்தையின் மேடை நோக்கிய நடை பல விஷயங்களைச் சொல்லாமல் சொல்லியது!
நான் முதல்வன் திட்டம் மூலம் பயனடைந்த மற்றொரு மாணவி கன்னியாகுமரியை சேர்ந்த ஜாலிஜா. இந்தத் திட்டத்தின் மூலம் ஆண்டுக்கு ரூ. 21 லட்சம் சம்பளம் கொடுக்கும் ஜப்பான் நிறுவனத்தில் வேலை வாய்ப்பு பெற்றிருக்கிறார். அவர் பேசுகையில், “நான் முதல்வன் திட்டம் மூலம் ஜப்பானில் உள்ள நெகஸ்டன் என்ற நிறுவனத்தில் இண்டர்ன்ஷிப் செய்யும் வாய்ப்பு கிடைத்தது. அங்கு சிறப்பான அனுபவம் கிடைத்தது. நிறைய விஷயங்கள் கற்றுக் கொண்டோம். இண்டர்ன்ஷிப் முடித்ததும் அந்த நிறுவனத்திலேயே ஆண்டுக்கு ரூ. 21 லட்சம் சம்பளத்தில் வேலை செய்யும் வாய்ப்பும் எனக்குக் கிடைத்தது. தற்போது ஜப்பானிய மொழி கற்று வருகிறேன். என்னுடன் அந்த நிறுவனத்திற்கு வந்திருந்த அனைவருமே பெண்கள்தான். இப்படி ஒரு வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்த தமிழக முதல்வருக்கும் நான் முதல்வன் திட்டத்திற்கும் நன்றி” என்றார். மேலும், நிகழ்வுக்கு வந்திருந்த அனைவருக்கும் மிக சரளமாக ஜப்பானிய மொழியில் நன்றி தெரிவித்து ஆச்சரியப்படுத்தினார் ஜாலிஜா.
புதுமைப்பெண் திட்டத்தின் வாயிலாக பயனடைந்தவர் ராணிப்பேட்டையைச் சேர்ந்த சுப்புலட்சுமி. கணித ஆசிரியை ஆக வேண்டும் என்ற லட்சியம் கொண்டவர். அவர் ஆசையை கேட்டு நெகிழ்ந்து போன முதல்வர் ஸ்டாலின் தன்னுடைய பேனாவை சுப்புலட்சுமிக்கு பரிசாகக் கொடுத்தார். மேலும், அவரை உச்சிமோந்து வாழ்த்தினார். “பள்ளிப்படிப்பு முடித்ததுமே கல்லூரியில் சேர வீட்டில் கேட்டபோது ‘பெண்களுக்கு எதற்கு படிப்பு?’ என்ற எண்ணத்தோடுதான் இருந்தார்கள். ஆனால், நான் படித்தே தீர வேண்டும் என மூன்று நாள் வரை சாப்பிடாமல் அடம்பிடித்து கல்லூரியில் சேர்ந்தேன். என் அப்பா கூலி வேலைக்குச் செல்பவர். என் குடும்ப சூழல் அறிந்து கல்லூரி பேராசிரியர்கள் மூலம் புதுமைப்பெண் திட்டத்திற்கு விண்ணப்பித்தேன். இளங்கலை படிப்பிற்கு மட்டுமல்லாது முதுகலை படிப்பிற்கு இந்தத் திட்டம் விரிவடைந்தால் இன்னும் பலர் பயனடைவார்கள்” என்றார் அவர்.
அன்னயாவினும் புண்ணியம்கோடி ஆங்கோர் ஏழைக்கு எழுத்தறிவித்தல்…. சும்மாவா சொன்னான் பாரதி?