திசையன்விளை முத்தையா
திசையன்விளை முத்தையா

முத்துப்பட்டன் முதல் முத்தையா வரை... - ஆவணப்படமாக ஆணவக் கொலை!            

திருநெல்வேலியில் அண்மையில் வெளியிடப்பட்ட ’முத்துப்பட்டன் முதல் முத்தையா வரை’ என்ற ஆவணப்படம் மாநில அளவில் கவனத்தை ஈர்த்துள்ளது.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக் குழு உறுப்பினர் பெ. சண்முகம் வெளியிட்டார்.

வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் பதிவுசெய்யப்பட்ட வழக்கை, 16 மணி நேரத்தில் கொலை வழக்காக மாற்றி பதியப்பட்டது குறித்து இந்த ஆவணப்படம் பல்வேறு கேள்விகளை எழுப்புகிறது.

இந்த ஆவணப்படம் குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாவட்டச்செயலா் ஸ்ரீராமிடம் கேட்டோம்.

” திசையன்விளை அருகேயுள்ள அப்புவிளை பஞ்சாயத்து சுவாமிதாஸ் நகரைச் சேர்ந்த கன்னியப்பனின் மகன், முத்தையா. இவர் சங்கனான்குளத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலைபார்த்து வந்தார். இரவு நண்பரைச் சந்தித்துவிட்டு வருவதாகக் கூறிவிட்டு பைக்கில் சென்றவர், வெகு நேரமாகியும் வீடு திரும்பவில்லை. உறவினர்கள் அவரை பல்வேறு இடங்களில் தேடியபோது, அதே பகுதியில் உள்ள ஒரு காட்டுப் பகுதியில் குத்தி கொல்லப்பட்டுக் கிடந்தார், முத்தையா.

முத்தையா வேறு சமுதாயத்தைச் சார்ந்த ஒரு பெண்ணைக் காதலித்த விவகாரத்தால் ஏற்பட்ட பிரச்னையில் கொலை செய்யப்பட்டுள்ளார். தன் மகன் காதலித்த பெண்ணின் குடும்பத்தைச் சார்ந்தவர்கள் சாதி வெறியில் ஆணவக்கொலை செய்துள்ளதாகவும் உண்மைக் குற்றவாளிகளை கைதுசெய்ய வேண்டும் என முத்தையாவின் தந்தை கன்னியப்பன் புகார் கொடுத்தார். அதன்படி, முதலில் எஸ்.சி. எஸ்.டி. வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின்படி காவல்துறை எஃப்.ஐ.ஆர். பதிவு செய்துள்ளது. திடீரென்று போலீசார் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின்படி வழக்கு பதிவு செய்ததை நீக்கி விட்டனர்.

அப்பகுதியில் உள்ள பெண்ணை கேலி செய்ததாக அந்தப் பெண்ணின் உறவினர்கள் மது குடிக்க அழைத்துச் சென்று முத்தையாவை கத்தியால் குத்திக்கொலை செய்தனர் என்றும் அதன் அடிப்படையில் போலீசார் வழக்கு பதிந்தனர். அதே பகுதியைச் சேர்ந்த சதீஷ்,  மதியழகன் பிரகாஷ் ஆகிய 3 பேரைக் கைதுசெய்து சிறையில் அடைத்தனர்.

இந்த  சம்பவம் ஆணவக்கொலைதான்; ஆனால் போலீசார் கொலை வழக்காகப் பதிவுசெய்ததால் பொதுமக்கள் மத்தியில் சந்தேகம் அதிகரித்துள்ளது. இதை இந்த ஆவணப்படம் பல்வேறு சாட்சிகளின் வழியாக நிருபிக்கிறது.” என்று விவரித்தார், ஸ்ரீராம்.

முத்தையாவை இரவில் தனியாக அழைத்துச் சென்ற கார்த்திக் முதல் திராவிடத் தமிழர் கட்சி, தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி, மனிதம் அமைப்பு ஆகிய அமைப்புகளின் நிர்வாகிகள், வி.சி.க. தலைவர் தொல். திருமாவளவன்வரை, இந்தப் படத்தில் பேசியுள்ளனர். 

ஆவணப்படத்தில் முத்தையாவின் தந்தை கன்னியப்பன், தங்கள் மகன் வேறு சமூகத்தைச் சேர்ந்த பெண்ணைக் காதலித்ததை உறுதிசெய்கிறார். அந்தப் பெண்ணின் உறவினர் பெருமாள் என்பவர் ஏற்கெனவே முத்தையாவைத் தாக்கியதையும் அவர் தெரிவிக்கிறார்.

மேலும், தங்கள் மகனை அவரின் நண்பர் கார்த்திதான் கடைசியாக அழைத்துச் சென்றதாகவும், ஆனால், மகனைத் தேடியபோது அவர் கொல்லப்பட்டிருந்த இடத்திலிருந்து ஆறு பேர் வந்ததாகவும் சொல்கிறார்.

முத்தையா கொல்லப்பட்ட அன்று அவரை அழைத்துச் சென்ற கார்த்தி, ”போலீஸின் மிரட்டலால் பொய் சாட்சி சொன்னேன். உண்மையில் அன்று பெருமாளும், வேறு ஒருவரும் அங்கு வந்தனர். நான் அங்கிருந்து தப்பிவிட்டேன்.” என்று தெரிவித்துள்ளார்.   

இந்தக் கொலை வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள மதியழகனின் தாய், “என் மகனை காவல்நிலையத்தில் வைத்து கடுமையாகத் தாக்கி குற்றத்தை ஒப்புக்கொள்ளச் சொன்னார்கள்” என்று சொல்லி உடைந்துபோய் அழுகிறார்.

பிரகாஷின் மனைவி பேசும்போது, “கொலை சம்பவம் நடந்த அன்று என் கணவர் என்னுடன் வீட்டில்தான் இருந்தார்” என்கிறார்.

கொலைசெய்ததாக ஒப்புக்கொள்ளச் சொல்லி மூவரையும் காவல்துறை கடுமையாகத் தாக்கியதாக அவரின் குடும்பத்தினர் வேதனையுடன் சொல்கின்றனர். 

 சி.பி.எம். மாநிலச் செயற்குழு உறுப்பினர் கனகராஜ், ”எஃப்.ஐ.ஆர்.-ல் திருத்தம் செய்யப்பட்டுள்ளது. போலீஸும், பேரூராட்சித் தலைவரின் கணவரும் ஏன் நஷ்ட ஈடு குறித்து பேச வேண்டும் என பல்வேறு கேள்விகளுக்கு பதில் இல்லை.” என்று குறிப்பிட்டுள்ளார்.  

வி.சி.க. தலைவர் தொல்.திருமாவளவன், “இந்த ஆணவக் கொலை என முத்தையாவின் தந்தை சொல்லியுள்ளார். ஆனால் போலீஸ் ஆதிதிராவிடர் வகுப்பைச் சேர்ந்த மூவரை கைதுசெய்துள்ளது. கொல்லப்பட்ட முத்தையா குடும்பமும் கைதுசெய்யப்பட்ட குடும்பமும்  ஒரே பேருந்தில் அருகருகே அமர்ந்து பயணம் செய்து நீதிகேட்க நீதிமன்றத்திற்கு வருகிறார்கள்.” என்று கூறியுள்ளார்.

ஆணவக்கொலை செய்யப்பட்டு நாட்டார் தெய்வமாக வணங்கப்படும் முத்துப்பட்டன் முதல், இப்போது கொல்லப்பட்டுள்ள முத்தையாவரை என இந்த ஆவணப்படம் ஓர் இணைப்புக் கண்ணியைச் சொல்கிறது.

வில்லுப்பாட்டும் ஒப்பாரியுமாக இந்த ஆவணப்படம், ஒருவிதமாக மனதில் சலசலப்பை உண்டுபண்ணிவிடுகிறது!

Related Stories

No stories found.
logo
Andhimazhai
www.andhimazhai.com