உலகத்திலேயே சிரமமான மூன்று செயல்கள் எவை என்று கேட்டால்…
நம்மை விட அறிவிலும் அதிகாரத்திலும் உயர்ந்தவர்களிடம், நம்முடைய கருத்திலும் நியாயம் உண்டு என்பதைப் புரியவைப்பது,
அவ்வப்போது மனைவியிடம் சொல்லும் வெள்ளைப் பொய்களில் கூட மாட்டிக்கொள்ளாமல் தப்பிப்பது,
மற்றும், நூலகத்தில் நாம் தேடும் நூலை, நூலகத்துக்குள் நுழைந்த உடனே கண்டுபிடிப்பது — என்று சொல்வேன்!
“The only thing that you absolutely have to know, is the location of the library.” — Albert Einstein
உலக நூலகங்களில் நூல்களை நிரல் படுத்தி, வகைப்படுத்தி வைப்பதற்காகப் பின்பற்றப்படும் முக்கியமான வகைப்பாட்டு முறைகள் என்னென்ன என்று ChatGPT, Perplexity என இரண்டு பேரிடமும் கேட்டபோது, ஒரே மாதிரி பதில் வந்தது:
1. Dewey Decimal Classification (DDC)
2. Library of Congress Classification (LCC)
3. Universal Decimal Classification (UDC)
4. Colon Classification (CC)
5. Bliss Bibliographic Classification (BC)
இவை ஒவ்வொன்றிலும் நிறையும் குறையும் உண்டு. இருப்பினும், உலகம் முழுவதும் இந்த ஐந்து முறைகளே பெரும் அளவில் பயன்பாட்டில் உள்ளன. நான்காவதாகச் சொல்லப்பட்ட முக்காற் புள்ளி வகைப்பாடு (Colon Classification) ‘இந்திய நூலகவியலின் தந்தை’ என்று போற்றப்படும் சீர்காழி எஸ்.ஆர். ரங்கநாதன் அவர்களால் உருவாக்கப்பட்டது.
அவரது பிறந்தநாளான ஆகஸ்ட் 12 இந்தியாவில் தேசிய நூலக தினமாகக் கொண்டாடப்படுகிறது.
அர்ப்பணிப்பு உணர்வு மிக்க நூலகர் அவர் — தனது திருமணத்திற்குக் கூட அரை நாள் விடுப்பு மட்டுமே எடுத்தார் என்பதே அவரது உழைப்பைச் சொல்வதற்கு போதுமானது!
ரங்கநாதனின் ஐந்து விதிகள்
நூலகங்களைப் பற்றிய அவரது புகழ்பெற்ற ஐந்து விதிகள் இன்று உலகம் முழுவதும் ஏற்றுக்கொள்ளப்படுகின்றன:
1. நூல்கள் பயன்படுத்துவதற்கே (Books are for use)
2. ஒவ்வொரு வாசகரும் அவருக்கான நூலைச் சென்றடைய வேண்டும் (Every reader - his or her book)
3. ஒவ்வொரு நூலும் அதற்கான வாசகரைச் சென்றடைய வேண்டும் (Every book - its reader)
4. வாசகர் நேரத்தை மிச்சப்படுத்த வேண்டும் (Save the time of the reader)
5. நூலகம் என்பது ஒரு வளரும் அமைப்பு (The library is a growing organism)
“A library is infinity under a roof.” — Gail Carson Levine
தமிழ்நாட்டின் நூலக முன்னேற்றம்
பெரிய நூலகங்களில் நூல்களை எடுப்பதும் திருப்பிக் கொடுக்குவதும் இன்று RFID முறையில் சுலபமாகிவிட்டாலும், சில கிராமப்புற நூலகங்களில் இன்னும் நூலைத் தேடுவது ஒரு சவாலாகவே உள்ளது.
நூலகத் துறையில் தமிழ்நாடு முன்னோடி. இந்தியாவில் பொது நூலகச் சட்டம் கொண்டு வந்த முதல் மாநிலம் தமிழ்நாடு தான் என்பதை, மூத்த குடிமைப் பணியாளர் திரு ஆர். பாலகிருஷ்ணன் அவர்கள் தனது உரைகளில் அடிக்கடி குறிப்பிடுவார்.
சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் நடந்த எனது நூல் வெளியீட்டு விழாவில் பேசிய மற்றொரு மூத்த குடிமைப் பணியாளர் திரு உதயச்சந்திரன் அவர்கள், “இந்த நூலகம் எனது மனதிற்கு மிக நெருக்கமான இடம். இதைக் காப்பாற்ற பலவிதங்களில் போராடி இருக்கிறோம்" என்று குறிப்பிட்டார்.
இன்று சென்னை, மதுரை ஆகிய நகரங்களில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலகம் மற்றும் கலைஞர் நூற்றாண்டு நூலகம், போட்டித் தேர்வு ஆர்வலர்கள், குழந்தைகள், முதியவர்கள், பெண்கள், பொதுவாசகர்கள் என அனைவரையும் ஈர்க்கும் அறிவுக் கோட்டைகளாக மாறியுள்ளன.
தமிழ்நாடு அரசு தொடர்ந்து திருச்சி, கோயம்புத்தூர், நெல்லை, கடலூர் போன்ற நகரங்களிலும் பெரிய நூலகங்களை அமைக்கும் பணியைத் தொடங்கியுள்ளது.
நூலக நிகழ்வுகள் — வாசகர்களை ஈர்க்கும் வழி
இந்த நூலகங்கள் ரங்கநாதனின் விதிகளை நடைமுறையில் செயல்படுத்தும் விதமாக, வாசகர்களுக்கான பல்வேறு நிகழ்வுகளை நடத்துகின்றன:
அண்ணா நூற்றாண்டு நூலகம்: பொன்மாலைப் பொழுது, சிங்கப் பெண்ணே, முகவரி, செந்தமிழ் சிற்பிகள் உரையரங்கம், செயற்கை நுண்ணறிவு பயிற்சி, குழந்தைகளுக்கான கோடை கொண்டாட்டம், சிறப்பு தின வினாடி வினா, எழுத்தாளர் பிறந்தநாள் கருத்தரங்குகள், ஆவணப்பட திரையிடல்.
கலைஞர் நூற்றாண்டு நூலகம் (மதுரை): நிலவொளியில், முத்தமிழ் முற்றம், யாதுமாகி நின்றாய் சக்தி, வேர்கள், கோடை கொண்டாட்டம், சிகரம் தொடு, இளையோர் களம், சதுரங்கப் பயிற்சி.
“When in doubt, go to the library.” — J.K. Rowling
புத்தகத் திருவிழாக்கள் & விழிப்புணர்வு
மாவட்ட அளவில் புத்தகத் திருவிழாக்கள், நதிக்கரை இலக்கிய விழாக்கள், மாணவர் போட்டிகள், சென்னை பன்னாட்டு புத்தகத் திருவிழா, வெளிநாட்டு புத்தகக் கண்காட்சிகள் — இவை அனைத்தும் வாசிப்பு பண்பை வளர்க்கும் முயற்சிகள்.
சமீபத்தில் தமிழ்நாடு அரசு எடுத்துள்ள நூலக புத்தகக் கொள்முதலில் வெளிப்படைத் தன்மைக் கொள்கை பாராட்டத்தக்கது.
“Without libraries, we have no past and no future.” — Ray Bradbury
“I have always imagined that Paradise will be a kind of library.” — Jorge Luis Borges
இந்த தேசிய நூலக தினம் நமக்கு நினைவூட்டுவது — ஒரு நூலகம் என்பது வெறும் கட்டிடம் அல்ல, அது ஒரு உயிருடன் வளர்ந்து வரும் அறிவுக் குடும்பம் என்பதே.