மோகன்லாலுக்கு பால்கே விருது! தென்னிந்தியாவும் தேசிய விருதுகளும்!

மோகன்லாலுக்கு பால்கே விருது
மோகன்லாலுக்கு பால்கே விருது
Published on

தாதா சாகிப் பால்கே விருது 1969 முதல் வழங்கப்படுகிறது. முதல் முதலாக இந்த விருதைப் பெற்றவர் இந்தி நடிகை தேவிகா ராணி. இது இந்திய திரையுலகிற்குச் சிறந்த பங்களிப்புச் செய்த ஆளுமைகளுக்கு வழங்கப்படும் உயரிய மரியாதை ஆகும். இதுவரை 54 பேர் விருதைப் பெற்றுள்ளனர்.

தென்னிந்தியா (தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம்): 12 பேர்

வட இந்தியா / பிற மாநிலங்கள்: 42 பேர் .

விருதாளர்களில் வட இந்தியா மற்றும் தென்னிந்தியா இடையே நிலவும் கிட்டத்தட்ட 4:1 என்னும் இந்த விகிதாச்சார வேறுபாடு தென்னிந்திய திரைப்பட உலகின் பங்களிப்பு இன்னும் முழுமையாக தேசிய அளவில் கவனிக்கப்படவில்லை என்பதைக் காட்டுகிறது.

வட இந்தியா / பிற மாநில விருதாளர்கள்

இந்த 42 பேர் ஹிந்தி, பெங்காலி, மராத்தி, அசாமி திரைப்பட உலகினர் (அவர்களுள் சிலர்: ராஜ்கபூர், திலீப் குமார், தேவ் ஆனந்த், ராஜேஷ் கண்ணா, வஹிதா ரகுமான், அமிதாப்பச்சன், ஆஷா போன்ஸ்லே, லதா மங்கேஷ்கர், கவி பிரதீப், சத்தியஜித்ரே, மிருனாள் சென், பூபன் ஹசாரிகா)

🔹 தென்னிந்திய விருதாளர்கள்

பி.என். ரெட்டி – தெலுங்கு திரையுலகின் முன்னணி இயக்குநர்; பல தரப்பட்ட படங்களை இயக்கியவர்.

எல்.வி. பிரசாத் – தெலுங்கு, தமிழ் மற்றும் ஹிந்தி திரைப்படங்களில் பங்களிப்பு செய்தவர்; பிரசாத் ஸ்டுடியோக்களை நிறுவி திரையுலக வளர்ச்சிக்கு உதவியவர்.

பி. நாகி ரெட்டி – தெலுங்கு திரைப்பட தயாரிப்பாளர்; விஜயா வாகினி ஸ்டுடியோக்களை நிறுவி மிகப்பெரிய தயாரிப்பாளராக விளங்கினார்.

அகினேனி நாகேஸ்வர ராவ் – தெலுங்கு திரையுலகின் லெஜெண்ட் நடிகர்; 250க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தவர்.

ராஜ்குமார் – கன்னட திரையுலகின் பிரபல நடிகர்; பல பிரபல படங்களில் நடித்தவர்.

சிவாஜி கணேசன் – தமிழ் திரையுலகின் நடிகர் திலகம்; நுணுக்கமான நடிப்பு, வசன உச்சரிப்புக்குப் புகழ் பெற்றவர். புகழ்பெற்ற புராண,விடுதலைப்போராட்ட கதாபாத்திரங்களைத் தாங்கி நடித்தவர்.

அடூர் கோபாலகிருஷ்ணன் – மலையாள திரைப்பட இயக்குனர்; சமூகக் கதைகளை படங்களில் வெளிப்படுத்தியவர்.

டி. ராமானாயுடு – தெலுங்கு திரைப்பட தயாரிப்பாளர்; உலகில் அதிக படங்கள் தயாரித்தவர்; கின்னஸ் உலகப் பதிவில் இடம் பெற்றவர்.

கே. பாலசந்தர் – தமிழ் இயக்குனர்; சமூக கருத்துகள், தன்னம்பிக்கை ,நடுத்தர வர்க்க சிக்கல்கள், பெண்ணுரிமை, உறவு நிலை சிக்கல்கள் குறித்த கலைப்பாங்குள்ள படங்களை இயக்கியதோடு பிற்காலத்தில் நட்சத்திரங்களாக உயர்ந்த பல நடிகர்களை அறிமுகம் செய்தவர்.

காசிநாதுனி விஸ்வநாத் – தெலுங்கு இயக்குனர்; பாரம்பரிய கலை மற்றும் நடிப்பைப் படங்களில் வெளிப்படுத்தியவர். இவர் இயக்கிய சாகர சங்கமம், சுவாதி முத்தியம் ஆகிய படங்கள் முறையே சலங்கை ஒலி, சிப்பிக்குள் முத்து என்ற பெயரில் தமிழில் வெளிவந்து பெரும் வெற்றி பெற்றவை.

ரஜினிகாந்த் – தமிழ் சூப்பர் ஸ்டார்; தொடக்க காலத்தில் கதையம்சம் கொண்ட பல படங்களில் இயக்குனரின் நடிகராகவும் எதிர்மறை நாயகனாகவும் சிறப்பாக நடித்து படிப்படியாக உயர்ந்து பிற்காலத்தில் பொழுதுபோக்கு அம்சம் கொண்ட பல படங்களில் நடித்து தேசிய அளவில் புகழ்பெற்றவர்.

மோகன்லால் – மலையாள திரையுலகின் பிரபல நடிகர்; பல கதாபாத்திரங்களில் வித்தியாசமான நடிப்பை வெளிப்படுத்தி தேசிய அளவில் புகழ்பெற்றவர். நடிக்கிறார் என்னும் உணர்வே எழாத வண்ணம் ஏற்ற கதாபாத்திரத்திற்கு ஏற்றம் தரும் திரைக்கலைஞர் இவர் என்பதற்கு பல திரைப்படங்களை சான்று காட்டலாம்.

---

தேசிய விருதுகளின் எதிர்பாராத இயல்பு

நடிகர் திலகம் சிவாஜி கணேசனுக்கு சிறந்த நடிகருக்கான தேசிய விருது வழங்காமல் பலமுறை செய்த தவறை சரி செய்யும் விதத்தில் நிறைவாக அவருக்கு பால்கே விருது வழங்கப்பட்டது. தேவர் மகன் படத்தில் நடித்ததற்காக சிவாஜி கணேசனுக்கு நடுவர்கள் வழங்கும் சிறப்பு விருது (special jury award) வழங்கப்பட்ட போது, இது நம்ம பாலு (இயக்குனர் பாலு மகேந்திரா, தேசிய திரைப்பட விருதுகளுக்கு அந்த ஆண்டு நடுவராக இருந்தார்) கொடுத்த விருது என்று கனத்த வருத்தத்தோடும் மெலிதான ஆறுதல் தரும் வகையிலும் சொல்லிவிட்டார் நடிகர் திலகம். அதற்கு சில ஆண்டுகளுக்குப் பிறகுதான் அவருக்கு பால்கே விருது கிடைத்தது.

ரஜினி, கமல் இருவரில் பால்கே விருது கமல்ஹாசனுக்கு தான் கிடைக்கும் என்று தமிழ்நாட்டில் பலரும் பரவலாக எதிர்பார்த்திருந்த நேரத்தில்... ரஜினிகாந்துக்கு வழங்கப்பட்டது நாடி நரம்பெல்லாம் ரஜினிவெறி ஏறிப் போயிருந்த ரஜினி ரசிகர்கள் சிலரையே ஆச்சரியத்திற்கு உள்ளாக்கியது. சூப்பர் ஸ்டார் நடிப்பு திறமை மிக்கவர் என்பதற்கு அவர் நடித்த 'முள்ளும் மலரும் ' உட்பட சில படங்கள் சான்று என்பதால் சிறந்த நடிகருக்கான தேசிய விருது அவருக்கு கிடைக்காமல் போனதை பெரிய அளவுக்கு ஈடு செய்யும் விதத்தில் பால்கே விருது அமைந்து விட்டதாக கருதினர் சிலர். இது உலக நாயகன் மனதில் எந்தவிதமான தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கும் என்பதை சூப்பர் ஸ்டாருக்கு பால்கே விருது வழங்கப்பட்ட போது உலக நாயகன் தெரிவித்த வாழ்த்துச் செய்தியைக் கூர்ந்து நோக்கினால் அறிந்து கொள்ளலாம். "திரையில் தோன்றுவதன் மூலமே பால்கே விருதை வென்றுவிட முடியும் என்று நிரூபித்த நண்பர் ரஜினிகாந்துக்கு வாழ்த்துக்கள்" என்பதே அந்த வாழ்த்துச்செய்தி.

சிறந்த நடிகருக்கான தேசிய விருது கூட சில சமயங்களில் இவருக்குத்தான் கிடைக்கும் என்று கிட்டத்தட்ட உறுதியாகிவிட்ட நிலையில் கடைசி நிமிடத்தில் மாறிவிடுவதை விருது போக்கை உள்ளிருந்து கவனித்த சில திரைபிரபலங்கள் சொல்லி இருக்கிறார்கள்.

1970 களில் ஒரு குறிப்பிட்ட ஆண்டில் 'பாபு' திரைப்படத்தில் நடித்ததற்காக சிவாஜி கணேசனுக்கு தேசிய விருது கிடைக்கும் என்று எதிர்பார்த்த போது, சில காரணங்களால் அது மாறிப்போனது; ரிக்க்ஷாகாரன் படத்திற்காக எம்ஜிஆருக்கு தேசிய விருது கிடைத்தது.

எழுத்தாளர் இந்திரா பார்த்தசாரதி எழுதிய உச்சி வெயில் நாவலை அடிப்படையாகக் கொண்டு இயக்குனர் சேது மாதவன் இயக்கிய 'மறுபக்கம்' படத்தில் நடித்ததற்காக நடிகர் சிவக்குமாருக்கு தேசிய விருது என்று கிட்டத்தட்ட உறுதியாகிவிட்ட நிலையில் அந்த ஆண்டு சிறந்த நடிகருக்கான தேசிய விருது அமிதாப்பச்சனுக்கு அறிவிக்கப்பட்டது. இதேபோல் கடைசி நேர அதிரடி மாற்றங்கள் பல நிகழ்ந்துள்ளன.

பொதுவாக , இந்த புள்ளிவிவரங்கள் தேசிய விருதுகளில் தென் இந்திய திரையுலகிற்கு இன்னும் அதிக கவனம் வழங்கப்படவேண்டும் என்பதைக் காட்டுகின்றன. அறிஞர் அண்ணா பிறந்தநாள் ஒட்டி வெளியாகி உள்ள இந்த தாதா சாகிப் பால்கே விருது பற்றிய இந்தப்பதிவு அண்ணாவின் புகழ் பெற்ற முழக்கமான 'வடக்கு வாழ்கிறது தெற்கு தேய்கிறது' என்பதை இன்னும் நினைவூட்ட வேண்டிய நிலையில் தென்னிந்தியா இருப்பதை சுட்டிக்காட்டுவதாகவும் கொள்ளலாம்.

நிறைவாக

நான் மம்முட்டி ரசிகன்; இருந்தாலும் மோகன்லாலையும் பிடிக்கும். அவருக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்!

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடரFacebookTwitterYoutubeInstagram

logo
Andhimazhai
www.andhimazhai.com