உவட்டா உபதேசம்! விநாயகர் சதுர்த்தி சிறப்புக் கட்டுரை

காவலூர் தொலைநோக்கி
காவலூர் தொலைநோக்கி
Published on

இன்று விநாயகர் சதுர்த்தி. இது தொடர்பாக எனக்குள் ஏற்பட்ட எண்ண ஓட்டங்களால் தமிழுக்கு வந்த சோதனைதான் இப்போது நீங்கள் படிக்கும் இந்தக் கட்டுரை.

2017 அல்லது 2018.

இராணிப்பேட்டையில் உள்ள கால்நடை நோய்த் தடுப்பு நிலையத்துக்கு (IVPM) என்னுடைய தனிப்பட்ட வேலை ஒன்றுக்காகச் சென்றிருந்தேன்.

வேலை முடிந்ததும் நண்பர் மந்தித்தோப்பு மகாராசனை சந்தித்தேன்.

மந்தித்தோப்பு என்ற பெயரை வைத்துக்கொண்டு அதை ஒரு சிற்றூராக நினைத்துவிட வேண்டாம். கோவில்பட்டிக்கு மிக அருகில் அமைந்துள்ள ஒரு மாநகரம் அது.

இதை நான் சொல்வது உயர்வு நவிற்சி என்று நீங்கள் நினைத்தால், அது என் மீதான அநியாயம்.

Everest நவிற்சி!

இருந்தாலும் நவில்கிறேன்.

If not me, then who?

வழக்கமான நண்பர்களின் உரையாடலைப் போலத்தான் பேச்சு ஆரம்பித்தது. எந்தத் திட்டமும் இல்லாமல், எந்தத் தொடர்பும் இல்லாமல், ஒரு விஷயத்திலிருந்து இன்னொரு விஷயத்திற்குத் தாவிக்கொண்டே போவது.

அப்போது மகாராசன் திடீரென்று கேட்டார்:

“ஒன்பது கிரகங்களையும் ஒரே நேரத்தில் எங்கே பார்க்கலாம்?”

நான் உடனே அறிவியல் உலகத்திற்குள் நுழைந்துவிட்டேன்.

“பிர்லா கோளரங்கம் இருக்கிறது…”

“பெரியார் அறிவியல் நகரம் இருக்கிறது…”

“இல்லையென்றால், இந்திய வானியற்பியல் நிறுவனத்தின் வைனு பாப்பு தொலைநோக்கி, ஜவ்வாது மலையில் காவலூரில் இருக்கிறதே… அங்கே போகலாம்…”

என்று எனக்குத் தெரிந்த வாய்ப்புகளை எல்லாம் அடுக்கிக்கொண்டே போனேன்.

அவர் என் பதில் சரியா, தவறா என்று சொல்லவே இல்லை.

அதுவும் மகாராசனின் தனிச்சிறப்பு.

நாம் ஒரு கேள்விக்குப் பதில் சொல்லிக்கொண்டிருக்கும்போதே, அவர் அடுத்த கேள்விக்குச் சென்று விடுவார்.

சிறிது நேரத்தில் விஷயம் திடீரென்று விண்வெளியிலிருந்து விநாயகர் சதுர்த்திக்கு வந்துவிட்டது.

“விநாயகர் சதுர்த்தி வழிபாடு முடிஞ்சாச்சா?”

“முடிந்தது…”

“எனக்காக மோதகம் கொண்டு வந்தாயா?”

அதற்குப் பிறகு இன்னொரு கேள்வி:

“பாரதி பிள்ளையாரைப் பற்றி பாடியிருக்கிறாரா?”

“பாடியிருக்கிறாரே! விநாயகர் நான்மணிமாலை என்றே ஒரு நூல் இருக்கிறது.”-என்று ஆரம்பித்தேன்.

பாரதி புதுச்சேரியில் இருந்த காலத்தில் மணக்குள விநாயகரை மையமாகக் கொண்டு பாடியதாகக் கருதப்படும் விநாயகர் நான்மணிமாலை, அவர் மறைந்து எட்டு ஆண்டுகளுக்குப் பிறகு, 1929- இல் அச்சில் வெளிவந்தது என்றேன்.

அப்போது பாரதியின் வரிகளும் நினைவுக்கு வந்தன:

“நமக்குத் தொழில் கவிதை; நாட்டிற்கு உழைத்தல்; இமைப்பொழுதும் சோராதிருத்தல்.”

பாரதி விநாயகரை வணங்குகிறார். ஆனால் அந்த வணக்கம் அவரை உலகத்திலிருந்து விலக்கவில்லை.

மாறாக,“நாட்டிற்கு உழைத்தல்”என்ற கடமையை நினைவுபடுத்துகிறது.

அத்தோடு மட்டுமல்ல… நான்மணிமாலை என்பது வெண்பா, அகவல், கலித்துறை, விருத்தம் என்று நால்விதப் பாக்களில் பாடுவது என்பது தொடங்கி புதுமைப்பித்தன் 'ஆற்றங்கரை பிள்ளையார்' என்று அருமையான உருவகச் சிறுகதை ஒன்றை எழுதியது , அவரே 'விநாயகர் சதுர்த்தி' என்ற இன்னொரு சிறுகதையில் தோரண மாவிலைக்கு விலையா? என மார்க்சிய வாதம் பேசியது என்று நான் ஒரு சிறிய சொற்பொழிவையே ஆற்றிவிட்டேன்.

ஆனால் மகாராசன்  அமைதியாக இருந்தார்.

நான் மீண்டும் கேட்டேன் “நீ கேட்ட முதல் கேள்விக்கு நீ இன்னும் எது சரியான பதில் என்று சொல்லவே இல்லையே! ஒன்பது கோள்களையும் ஒரே நேரத்தில் எங்கே பார்க்கலாம்?”

மகாராசன் சிரித்தார். இன்னொரு கேள்வியை அவரே என்னிடம் கேட்டார்:

“எல்லாக் கடவுளும் இருக்க, பெரியார் பிள்ளையார் சிலையை மட்டும் ஏன் உடைக்கச் சொன்னார்?... - என் பக்கத்து வீட்டுப் பொடியன் ஒருவன் நேற்று என்னிடம் கோபமாகக் கேட்ட கேள்வி இது. அவனை அவ்வளவு கோபமாகத் தூண்டிவிட்டது யாரென்று தெரியவில்லை " என்றார்.

“நீ என்ன பதில் சொன்னாய்?” என்று ஆவலுடன் கேட்டேன்.

மந்தித்தோப்பு மகாராசன் சிரித்துக்கொண்டே சொன்னார்:

“பிள்ளையார் அருளால் 48 மணி நேரத்துக்குள் அவனுக்கு நல்ல பதில் கிடைக்கும் என்று சொல்லி இருக்கிறேன்!”

நானும் சிரித்தேன்.

ஆனால் கேள்வி சுவாரஸ்யமானதுதான்.

எனக்குத் தெரிந்த வரையில், 1953-இல் பெரியார் நடத்திய பிள்ளையார் சிலை உடைப்புப் போராட்டம், ஒரு குறிப்பிட்ட கடவுளின் மீது கொண்ட தனிப்பட்ட பகையால் நடத்தப்பட்டதல்ல.

அவருடைய பகுத்தறிவு இயக்கத்தின் அடிப்படையில், சிலை வழிபாடு, மூடநம்பிக்கை, வருணாசிரமம் மற்றும் சாதிப் பாகுபாட்டை நியாயப்படுத்தும் மதக் கருத்துகள் ஆகியவற்றுக்கு எதிரான குறியீட்டுப் போராட்டமாகவே அது முன்வைக்கப்பட்டது. 1953 மே 27 அன்று அந்தப் போராட்டம் நடைபெற்றது; பின்னர் பெரியார் உள்ளிட்டோருக்கு எதிராக வழக்கும் தொடரப்பட்டது.

மேலும், பெரியார் கோயிலில் இருந்த மூலவர் சிலையை எடுத்து உடைக்கவில்லை. போராட்டத்தில் கடையிலிருந்து வாங்கப்பட்ட அல்லது அந்த நிகழ்ச்சிக்காகச் செய்யப்பட்ட பொம்மை/களிமண் சிலைகள் பயன்படுத்தப்பட்டன என்ற விவரமும் வழக்கின் பதிவுகளில் வருகிறது. அந்தச் சிலைகள் சட்டத்தின் பொருளில் “sacred object” அல்ல என்ற அடிப்படையிலேயே வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டதாகப் பதிவுகள் குறிப்பிடுகின்றன. மேலும், அந்தப் போராட்டம் குலக்கல்வித் திட்டத்திற்கு எதிரான குறியீட்டுப் போராட்டம் என்றும் சொல்லப்படுகிறது. அப்போது " நான் பிள்ளையாருக்குத் தேங்காயும் உடைக்க மாட்டேன் ; பிள்ளையார் சிலையையும் உடைக்க மாட்டேன் என்று அறிஞர் அண்ணா எடுத்த நிலைப்பாடும் முக்கியமானது.

எனவே, இதையெல்லாம் புரிந்து கொள்ள அந்தப் பொடியனுக்கு என்ன வயது இருக்கும்? அவன் அறிவுக்கு என்ன வயது இருக்கும் ?நான் என்ன பதில் சொல்வது என்று யோசித்துக்கொண்டிருந்தேன்.

டி. எல். மகாராஜன்
டி. எல். மகாராஜன்

ஆனால் மகாராசன் என்னை யோசிக்க விடவில்லை. அவர் அப்போது அவர் கேட்ட முதல் கேள்விக்கு உண்மையான பதிலைச் சொன்னார்:

“டி. எல். மகாராஜன் சொல்லியிருக்காரே… ஒன்பது கோளையும் ஒன்றாய் காண பிள்ளையார்பட்டிக்குப் போகணுமாம்!”

அப்போது எனக்கு அந்தப் பாடல் தெரியாது.

அந்தப் பாடல் அப்போது டிஜிட்டல் உலகில் புதிதாகச் பிரபலமாகிக்கொண்டிருந்தது.

இன்று YouTube இல் 10 கோடி பார்வைகள் கடந்து அந்தப் பாடல் டி. எல். மகாராஜனது குரலுக்கான தனி அடையாளமாக மாறிவிட்டது.

டி. எல். மகாராஜன் — திருச்சி லோகநாதனின் மகன்.

திருச்சி லோகநாதன் என்றவுடன் பழைய தமிழ்த் திரைப்படப் பாடல்களை அறிந்தவர்களுக்கு நினைவுக்கு வருவது “கல்யாண சமையல் சாதம்”.

அறுபதுகளின் அந்தப் பாடலை 2K தலைமுறையைச் சேர்ந்த ஒருவர் பார்க்கவில்லை என்றால், தமிழ் சினிமாவின் பழைய இசைச் செல்வங்களில் ஒன்றைத் தவறவிட்டுவிட்டார் என்று சொல்லத் தோன்றும்.

அப்படிப் பழைய பாடல்களையும் புதிய தலைமுறையையும் இணைக்கும் ஒரு குரலாகத் திகழ்கிறார் மகாராஜன்.

“அந்திமழை மேகம்” — நாயகன்.

“நீ கட்டும் சேலை” — புதிய மன்னர்கள்.

இப்படிப் பல பாடல்கள் அவரது குரலைத் தமிழ்த் திரையிசை நினைவில் வைத்திருக்கச் செய்கின்றன.

ஆனால் அன்று நான் அறிந்திராத ஒரு விஷயம்  அது. அன்றைய உரையாடலில் நான் பகிர்ந்த மற்றொரு தகவல் ஒளவையாரின் “விநாயகர் அகவல்.”

அது குறித்து சொன்னால்தான் அந்தக்கால சினிமா போல கட்டுரைத் தலைப்பைக் கனெக்ட் செய்ய முடியும். விநாயகர் அகவல் பலரும் பாராயணம் செய்யும் 72 அடிப் பாடல்.

“கோடா யுதத்தால் கொடுவினை களைந்தே உவட்டா உபதேசம் புகட்டியென் செவியில் தெவிட்டாத ஞானத் தெளிவையும் காட்டி…”

என்று அடிக்கடி இப்பாடலைப் பாராயணம் செய்யும் என் மனைவி அவ்வப்போது என் செவிக்கும் தெவிட்டாத ஞானத் தெளிவு காட்ட முனைந்துள்ளார். இதில் வரும் “உவட்டா” என்ற சொல்லே இந்தக் கட்டுரையின் தலைப்பாகிவிட்டது. உவட்டா — அலுப்புத் தராதது; தெவிட்டாதது.

விநாயகர் தமக்குச் செய்த உபதேசம் காதுக்கு அலுப்பை ஏற்படுத்தவில்லை; மாறாக, “தெவிட்டாத ஞானத் தெளிவை”அளித்ததாக ஒளவையார் சொல்கிறார்.

அதுதான் என்னை யோசிக்க வைத்தது. ஒருவகையில், நண்பர்களின் உரையாடலும் அப்படித்தான். அவர்கள் கொடுக்கும் உபதேசம் சில நேரங்களில் நம்மை உவட்டச் செய்யலாம்.

ஆனால் சில கேள்விகள்?

அவை உவட்டவே உவட்டாது.

logo
Andhimazhai
www.andhimazhai.com