டி எம் கிருஷ்ணா
டி எம் கிருஷ்ணா

புயலைக் கிளப்பிய விருது!

கர்நாடக சங்கீதப் பாடகர் டிஎம்கிருஷ்ணாவுக்கு இந்த ஆண்டின் சங்கீத கலாநிதி பட்டம் வழங்க மியூசிக் அகாடமி முடிவு செய்து அறிவித்தது. அவருக்கு அளிக்கப்படும் இந்த கௌரவத்தைக் கண்டு ஒரு சாரார் மகிழ்ச்சி அடைந்தபோது இன்னொரு சாரார் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். பெரியாரையும் இந்த சர்ச்சையில் இழுத்துவிட்டனர் பாடகிகள் ரஞ்சனி- காயத்ரி. இதைத் தொடர்ந்து அரசியல்வாதிகள் தரப்பிலும் ஏகப்பட்ட சூடு. சித்ரவீணை ரவிகிரண் தான் பெற்ற சங்கீத கலாநிதி விருதை திருப்பி அளிப்பதாகக் கூறியுள்ளார். இது தொடர்பாக பொதுவெளியில் வைக்கப்பட்ட சில கருத்துகள் மட்டும் இங்கு சுருக்கமாக:

ரஞ்சனி காயத்ரி, இசைக்கலைஞர்கள்:

மியூசிக் அகாடமி நடத்தும் 2024 மாநாட்டிலும் 25 டிசம்பரில் நாங்கள் நடத்த இருந்த இசை நிகழ்ச்சியில் இருந்தும் விலகும் எங்கள் முடிவை அறிவித்துவிட்டோம். இந்த மாநாட்டுக்கு டி எம் கிருஷ்ணா தலைமை தாங்குவார் என்பதால் இந்த முடிவை எடுத்தோம்.

கர்நாடக இசை உலகுக்கு பெரும் சேதத்தை அவர் ஏற்படுத்தி உள்ளார். இந்த இசை சமூகத்தின் உணர்வுகளை மிதித்ததுடன் தியாகராஜர், எம்.எஸ்.சுப்புலட்சுமி போன்ற மேதைகளை அவமானப்படுத்தி உள்ளார். இசையில் பக்தியை அவர் தொடர்ச்சியாக இழிவுபடுத்துகிறார். பிராமணர்களை இனப்படுகொலை செய்யவேண்டும் என்ற, இழிவான சொற்களால் இச்சமூகப் பெண்களை வசைபாடிவந்த, சமூக சொல்லாடலில் இழிவான பேச்சுகளை சகஜமாக்க உழைத்தவரான ஈவேரா போன்ற மனிதரை அவர் பெருமைப்படுத்துவதை புறக்கணிப்பது ஆபத்து.

என்.முரளி, தலைவர் மியூசிக் அகாடமி

( மார்ச்21, 2024)

அன்புள்ள ரஞ்சனி- காயத்ரி,

உங்கள் கடிதம் மார்ச் 20 அன்று கிடைத்தது. அதில் இருந்த தேவையற்ற அவதூறு, சக மூத்த இசைக்கலைஞருக்கு எதிரான தீய எண்ணம் கண்டு அதிர்ச்சி அடைந்தேன். 1942-இல் சங்கீத கலாநிதி விருது, கர்நாடக இசையின் உச்சகட்ட விருதாக உருவாக்கப்பட்டது. ஆண்டுதோறும் கர்நாடக இசைக்கு மிகுந்த திறனுடன் நீண்ட காலம் பங்களித்தவர்களில் ஒருவரை மியூசிக் அகாடமி தேர்வு செய்துவருகிறது. இந்த ஆண்டு மியூசிக் அகாடமி செயற்குழு, டி.எம்.கிருஷ்ணாவை அவரது நீண்டகால இசைச்செயல்பாடு, திறமை ஆகியவற்றுக்காக இந்த விருதுக்குத் தேர்வு செய்தது. இதற்குப் புறம்பான எந்த காரணங்களும் இந்த முடிவைத் தீர்மானிக்கவில்லை.

 இந்தக் கடிதத்தை நீங்கள் சமூக ஊடகத்திலும் பகிர்ந்துள்ளீர்கள். அது இக்கடிதத்தின் நோக்கத்தை சந்தேகிக்கச் செய்கிறது.

கனிமொழி கருணாநிதி:

டி.எம்.கிருஷ்ணா தன் சமூக நம்பிக்கைகள், பெரியார் மீதான மதிப்பு ஆகியவற்றுக்காக வெறுக்கப்படுவது தேவையற்றது. பெரியாரை அடிப்படையாக வாசித்தால் உலகம் கண்ட மாபெரும் பெண்ணியவாதி அவர் என்பது தெரியும். அவர் இனப்படுகொலைக்காக அழைப்பு விடுத்தவர் அல்ல.

சாரு நிவேதிதா:

சங்கீதத்தைத் தவிர கிருஷ்ணா செய்யும் காரியங்கள் யாவையும் gimmicks வகையைச் சேர்ந்தவை. அவர் எழுதும் ஆங்கிலக் கட்டுரைகள் அரைவேக்காட்டுத்தனமும் விடலைத்தனமும் ஆனவை.

அடுத்து, கிருஷ்ணாவின் நாத்திகவாதம். கடவுளை நம்புவதும் நம்பாததும் அவரவர் சுதந்திரம். அதில் தலையிட யாருக்கும் உரிமையில்லை. ஆனால் குருக்கள் பணிக்குச் செல்லும் ஒருவர் நாத்திகராக இருக்க சுதந்திரம் கிடையாது. அது மற்ற பக்தர்களை அவமதிக்கும் செயல். ஒரு நாத்திகன் குருக்கள் பணி புரிவதற்குச் சுதந்திரம் கிடையாது. அதேபோல, ஒரு கர்னாடக இசைக் கலைஞர் நாத்திகராக இருந்தால் அவர் கர்னாடக சங்கீத்த்தையே அவமதிக்கிறார் என்றுதான் பொருள். ஏனென்றால், கர்னாடக சங்கீதம் பக்தியையே தன் அடிநாதமாக்க் கொண்டிருக்கிறது. பக்திதான் கர்னாடக சங்கீதத்தின் உயிர்நாடி, ஆன்மா எல்லாம். தியாகராஜர் ராமா ராமா என்று உருகியிருக்கிறார். அப்படியிருக்கும்போது கடவுள் நம்பிக்கை இல்லாத கிருஷ்ணா எப்படி தியாகராஜர் கீர்த்தனைகளைப் பாட முடியும்? நாத்திகராக இருப்பவர் குருக்கள் வேலை செய்வது போலத்தான் அது.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்:

திரு. கிருஷ்ணா அவர்கள் கொண்டுள்ள முற்போக்கு அரசியல் நிலைப்பாடுகளினாலும், அவர் எளியோரைப் பற்றித் தொடர்ந்து பேசி வருவதாலும் ஒரு தரப்பார் காழ்ப்புணர்விலும் உள்நோக்கத்துடனும் விமர்சிப்பது வருத்தத்துக்குரியது. இதில் மனிதநேயத்தை அடிப்படையாகக் கொண்ட மானுட சமத்துவத்துக்காகவும் பெண்கள் சரிநகர் சமானமாக வாழ்ந்திடவும் முக்கால் நூற்றாண்டு காலம் அறவழியில், அமைதிவழியில் போராடிய தந்தை பெரியாரைத் தேவையின்றி வசைபாடுவது நியாயமல்ல. பெரியாரின் தன்னலமற்ற வாழ்க்கை வரலாற்றையும், அவரது சிந்தனைகளையும் படிக்கும் எவரும் இப்படி அவதூறு சேற்றை வீச முற்பட மாட்டார்கள்.

சின்மயி, பாடகர்:

ஏராளமான கர்நாடக இசை மாணவர்கள் பல இசை குருக்களால் பாலியல் கொடுமை செய்யப்பட்டதைப் பற்றி 2018-இல் பேசியபோது இதுபோன்ற தீவிரமான கருத்துகளைப்( ரஞ்சனி- காயதிரி கருத்தைக் காட்டி எக்ஸ் தளத்தில்) பார்க்கமுடியவில்லை. குழந்தைகளை பாலியல் ரீதியாக துன்புறுத்திய பலர் இவர்கள் சொல்வதன்படி பார்த்தால் இந்த கலையை குரு என்கிற ஸ்தானத்தை தவறாகப் பயன்படுத்தி அசிங்கப்படுத்தி்யபோது. இவர்கள் எல்லோரும் அமைதியாக இருந்தனர். பாதிக்கப்பட்டவர்களையே குற்றம்சாட்டினர்.

மாலன்:

ஒருவரின் தலைமையை ஏற்க மாட்டேன் என நிராகரிப்பதற்கு மற்றவருக்கு உரிமை உண்டு. அரசியலில் நாம் நாத்திகரின் தலைமையை ஏற்கமாட்டோம், பிரிவினை பேசுவோரை ஏற்க மாட்டோம் என்பதில்லையா, அது போல்தான் இது. Present conflict is between the value systems

கிருஷ்ணாவின் தலைமையை ஏற்க மறுக்கும் கலைஞர்கள் மட்டுமல்ல, ரசிகர்களும் அகாதெமியின் நிகழச்சிகளைப் புறக்கணிக்க வேண்டும். அவர் கச்சேரிகளை இணையத்தில் கேட்டு மகிழ்ந்து கொள்ளலாம்.

சிற்பி ராஜன்(கவிதாபாரதி முகநூல் பக்கம் வழியாக)

தமிழிசையை மேடையேற்றி தனது வெண்கல குரலில் பாடி பரப்பி வந்த சீர்காழி கோவிந்தராஜன் அவர்கள் தமிழில் பாடுகின்றார் என்ற ஒற்றைக் காரணத்தை வைத்து சபாக்களில் இசை நிகழ்ச்சி நடத்துவதற்கு தடைவிதித்தனர். இதை அறிந்த, தந்தை பெரியார் அவர்கள், நெற்றியில் சந்தனம், விபூதி பட்டையோடு பக்திப்பாடல்கள் பாடிவரும் சீர்காழியை அழைத்து தனது பகுத்தறிவு மேடைகளில் பக்திப்பாடல்களை பாடவைத்தார்.

Related Stories

No stories found.
logo
Andhimazhai
www.andhimazhai.com