தெருவுக்கு வந்த நாய்கள்; நீதிக்குக் காத்திருக்கும் குடிமக்கள்!

தெருவுக்கு வந்த நாய்கள்; நீதிக்குக் காத்திருக்கும் குடிமக்கள்!
Published on

 ஜூலை 21 அன்று அந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. சென்னை உயர் நீதிமன்றம் கேட்டிருந்த நிலைத் தகவல் அறிக்கையை அரசு வழக்கறிஞரால் சமர்ப்பிக்க முடியவில்லை. வாய்தா வழங்கப்பட்டது. இந்த உயர் நீதிமன்ற விசாரணைக்குக் காரணமாக அமைந்தவை உச்ச நீதிமன்றத் தீர்ப்புகள்; ஒன்றல்ல, நான்கு, இவை ஒன்றுக்கு ஒன்று மாறுபட்டவை. அவற்றைக் குறித்துப் பின்னால் பேசலாம்.  

 முதலில் இந்த வழக்கின் பிரதிவாதிகளைப் பற்றிப் பேசலாம். அவர்களுக்கு வாய் பேச வராது. ஆனால் குரைக்க வரும். கடிக்கவும் முடியும். இவர்களால் இந்தியாவில் ஒவ்வொரு நாளும் ஆயிரக்கணக்கானோர் கடிபடுகின்றனர்; பலர் உயிரிழக்கின்றனர். நாடெங்கிலும் தெருக்களிலும் பொது இடங்களிலும் இவர்கள் வெகு இயல்பாகச் சுற்றித் திரிகின்றனர்.

 பிரச்சினை பெரிது

 இந்தியத் தெருக்களில் சுமார் ஆறு கோடி நாய்கள் உரிமையாளர் எவரும் இன்றி உலவுகின்றன. இது உலக சுகாதார அமைப்பு தரும் கணக்கு. அதாவது, சராசரியாக 25 இந்தியக் குடிநபர்களுக்கு ஒரு நாய் நமது தெருக்களில் சுற்றித் திரிகிறது. 2025ஆம் ஆண்டில் நாடெங்கிலுமாக 47.5 இலட்சத்துக்கும் மேற்பட்டோரை நாய்கள் கடித்திருக்கின்றன. இது அரசு தரும் கணக்கு. அதாவது, ஒவ்வொரு நாளும் 13,300 இந்தியர்களைத் தெரு நாய்கள் கடிக்கின்றன. இதில் 1700 பேர் தமிழர்கள் (12.7%). 2025இல் தமிழகத்தில் மட்டும் நாய்க்கடி பட்டவர்களின் எண்ணிக்கை 6.25 இலட்சம்.

 ரேபிஸ் நோய் பீடித்த நாய் கடித்தால் உடனே தடுப்பூசி போட்டுக்கொள்ளவேண்டும். ரேபிஸ் நோய் வந்தால் பிழைப்பது அரிது

ரேபிஸ் நோயால் பாதிக்கப்பட்டால் முதலில் காய்ச்சல் வரும்; கடிபட்ட இடம் மரத்துப் போகும்; தண்ணீரைக் கண்டால் அச்சம் வரும்; வலிப்பு வரும்; மருட்சி வரும்; மாயத் தோற்றங்கள் தெரியும்; இறுதியாக மரணம் வந்து தழுவும். ரேபிஸ் நோயால் இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் சுமார் 20,000 பேர் உயிரிழப்பதாக உலக சுகாதார அமைப்பு கணக்கிட்டிருக்கிறது. உலகெங்கும் சம்பவிக்கும் ரேபிஸ் மரணங்களில் 36% இந்தியாவில் நிகழ்வதாகவும் அதே கணக்கு தெரிவிக்கிறது.

 2022இல் ஒரு காப்பீட்டு நிறுவனம் வெளியிட்ட அறிக்கை, சாலை விபத்துகளின் இரண்டாவது பெரிய காரணி தெரு நாய்கள் என்கிறது. தவிர, தெரு நாய்களால் அவதிக்குள்ளாகும் பாதாசாரிகள், சைக்கிள்-ஸ்கூட்டர் ஓட்டிகள், விநியோகத்  தொழிலாளர்கள் (gig workers), குழந்தைகள், முதியவர்களின் எண்ணிக்கை குறித்து நம்மிடத்தில் எந்தப் புள்ளிவிவரமும் இல்லை.

 எப்படிப் பெரிதானது பிரச்சினை?

 இந்தத் தெரு நாய்களின் பிரச்சினை புத்தாயிரமாண்டிற்குப் பிறகுதான் பெரிதாகியது. அதற்கு முன்பு வரை வளர்ப்பு நாய்களுக்கு உரிமம் பெற வேண்டும். அவற்றை ஊராட்சிகள் வழங்கும். தெருக்களில் நாய்களின் நடமாட்டம் மிகுந்தால், ஒரு நாள் 'நாய் வண்டி' வரும். அது உரிமம் இல்லாத நாய்களைப் பிடிக்கும். அவை காப்பகங்களுக்குப் போகும், மிகுதியும் 'நாய்த் தொட்டி’க்குப் போகும். அதாவது, கருணைக் கொலைக்கு உள்ளாகும். மக்களின் பாதுகாப்பையும் நாய்கள் படும் அல்லல்களையும் கருதி இவற்றைச் செய்யும் அதிகாரம் ஊராட்சிகளுக்கு இருந்தது (விலங்கு வதை  பாதுகாப்புச் சட்டம், PCA Act, 1960).

 இந்த அதிகாரம் 2001இல் பறிக்கப்பட்டது. பறித்தவர் மேனகா காந்தி. அப்போது அவர் வாஜ்பேயின் அமைச்சரவையில் கலாச்சாரத் துறை அமைச்சராக இருந்தார். விலங்கு நலமோ நோய்ப் பரவல் தடுப்போ அவரது துறை சார்ந்தவை அல்ல. எனினும் அவர் விலங்குக் கருத்தடை விதியை (Animal Birth Control, ABC Rules, 2001) அமலாக்கினார். இதன்படி நாய்களைப் பிடித்து, அவற்றுக்குக் கருத்தடை செய்வித்து, தடுப்பூசி செலுத்தி,  மீண்டும் அவற்றை அவை பிடிக்கப்பட்ட தெருக்களிலேயே விட்டுவிட வேண்டும் (CNVR- capture, neuter, vaccinate and release). நாய்களைப் பிடித்து காப்பகங்களில் அடைப்பதோ, அவசியமானால் கருணைக் கொலை செய்வதோ தடை செய்யப்பட்டது. அப்போது முதல், வீட்டு நாய்களுக்கு உரிமம் பெறுவதும் அவசியமில்லை என்றாகியது. இந்த விதி 2023இல் மேம்படுத்தப்பட்டது. இப்போது இது ABC Rules, 2023 என்று அறியப்படுகிறது. 

 நமது நாட்டில் வனவிலங்கு பாதுகாப்புச் சட்டம் (Wildlife Protection Act, 1972) கடுமையானது. விவாசய நிலங்களைப் பாழ்படுத்துகிற காடை, கௌதாரி, முயல், காட்டுப் பன்றி, மயில் முதலான விலங்கினங்களைக் கொல்வதைக்கூட அந்தச் சட்டம் தடை செய்கிறது. ஆனால் அதே சட்டம், ஒரு சிறுத்தையோ யானையோ ஆட்கொல்லியாக மாறினால், அதைக் கொல்ல வனத்துறையினரை அனுமதிக்கிறது. ஆனால் ABC சட்டத்தின்படி, எந்த நாயையும் கொல்ல முடியாது. 

 முதல் தீர்ப்பும் இரண்டாம் தீர்ப்பும்

 இந்தப் பிரச்சினை நீதிமன்றப் படியேறுவதற்குக் காரணமாக அமைந்தது ஒரு பத்திரிகைச் செய்தி. 2025 ஜூலை 28ஆம் நாள், தில்லி நாளிதழில் ஒரு செய்தி வெளியானது. தில்லி நகரத் தெருக்களில் 10 இலட்சம் நாய்கள் வசிக்கின்றன. அவற்றுள் ஒன்று சாவி ஷர்மா எனும் ஆறு வயதுச் சிறுமியைக் கடித்தது. சாவி இறந்து போனாள். உச்ச நீதிமன்ற நீதியரசர் இருவர் (ஜே.பி.பர்திவாலா, ஆர்.மகாதேவன்), இந்தப் பிரச்சினையைத் தாங்களே ஒரு வழக்காக எடுத்துக்கொண்டு விசாரித்தனர். தலைநகரிலுள்ள எல்லா நாய்களையும் அப்புறப்படுத்தி  ஒரு காப்பகத்தில் வைத்துப் பராமரிக்குமாறு 2025 ஆகஸ்ட் 11ஆம் நாள் மாநகராட்சிக்கு ஆணையிட்டனர். தெரு நாய்களால் குழந்தைகளும் முதியோரும் ஊனமுற்றோரும் நாள்தோறும் அனுபவித்து வரும் இன்னல்களையும் தீர்ப்பில் சுட்டிக் காட்டினர். 

 ஆனால் இந்தத் தீர்ப்பு விலங்கு ஆர்வலர்கள் பலருக்கு உவப்பாக இல்லை. அவர்கள் நமது தெருக்கள் நாய்களுக்கும் சொந்தம் என்றனர். அவற்றைத் தெருக்களிலிருந்து வெளியேற்றுவது ஜீவதயை ஆகாது என்றனர். அவர்கள் வீதிக்கு வந்தனர். சமூக ஊடக வெளியிலும் போராடினர். ஒரு விலங்கு ஆர்வலர் மாநகரத் தெருக்களில் புழங்கும் எல்லா நாய்களையும் பராமரிப்பதற்கு நகராட்சியில் காப்பகங்கள் உள்ளனவா என்று கேள்வி எழுப்பினார். இன்னொரு ஆர்வலர் இப்படி எழுதினார்: ‘இந்தத் தீர்ப்பு அறீவினமானது, அறிவியல் அடிப்படை அற்றது, சட்ட விரோதமானது, குரூரமானது’. அவர்கள் சமூகத்தில் செல்வமும் செல்வாக்கும் உள்ள பெரிய மனிதர்கள். அவர்களது குரல் சக்தி மிக்கது. அவர்கள் மீது எந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கும் பாயவில்லை. மாறாக, வழக்கு உடனடியாக மூன்று நிதியரசர்கள் கொண்ட பிறிதொரு அமர்வுக்கு மாற்றப்பட்டது. இந்த அமர்வு, ஆகஸ்ட் 22ஆம் நாள் முந்தையத் தீர்ப்பைத் திருத்தி எழுதியது. இனி, நாய்கள் தெருக்களில் தாராளமாக உலவலாம். நோயுற்ற நாய்களை மட்டும் காப்பகத்தில் பராமரித்தால் போதுமானது என்றது இரண்டாவது தீர்ப்பு.

 மூன்றாவது தீர்ப்பு

 2025 நவம்பர் 7ஆம் நாள் இந்த வரிசையில் மூன்றாவது தீர்ப்பு வெளியானது. அது முதல் இரண்டு தீர்ப்புகளுக்கும் இடைப்பட்டதாக அமைந்தது. கல்விச் சாலைகள், மருத்துவமனைகள், விளையட்டு அரங்கங்கள், பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்கள் முதலான பொது இடங்களிலிருந்து நாய்களை அப்புறப்படுத்தி, அவற்றைக் காப்பகங்களில் அடைத்துப் பராமரிக்க வேண்டுமென்று நீதியரசர்கள் ஆணையிட்டனர். அதே வேளையில் அவர்கள் தெருக்களில் திரியும் நாய்களைப் பற்றிப் பேசவில்லை. விலங்கு ஆர்வலர்கள் இந்தத் தீர்ப்பையும் ரத்து செய்யக் கோரினர். எனில், முதல் தீர்ப்பின் போது அவர்கள் வெளிப்படுத்திய உக்கிரம் இதில் இல்லை. அதற்குக் காரணம் இந்த மூன்றாவது தீர்ப்பு, பெருவாரியாகத் திரியும் தெரு நாய்களைத் தீண்டவில்லை என்பதும், அவை வீதிகளில் சுற்றித் திரிவதைத் தடை செய்யவில்லை என்பதும் காரணமாகலாம்.

 இந்தத் தீர்ப்பை வழங்குவதற்கு முன்னால் எல்லா மாநிலங்களின் தலைமைச் செயலர்களையும் உச்ச நீதிமன்றம் தில்லிக்கு அழைத்தது. ஊராட்சி அமைப்புகளின் கடமையை வலியுறுத்தியது. இந்தக் காப்பகங்களைக் கட்டவும் பராமரிக்கவுமான நிதி ஆதாரத்தைக் குறித்து யாரும் பேசியதாகத் தெரியவில்லை. 

 சாலையை மறிக்கும் மாடுகள்

 மூன்றாவது தீர்ப்பில் குறிப்பிடத்தக்க இன்னொரு அம்சம் மாடுகள் தொடர்பானது. இதற்கு எங்கள் ஊர் எடுத்துக்காட்டாக அமையும். தென் தமிழகத்தின் பேர் பெற்ற வைணவ ஆலயங்களில் ஒன்று இங்கிருக்கிறது. எல்லாக் கோயில்களையும் போல், இங்கும் கோயில் வாசலில் தேங்காய் பழக் கடைகள் இருக்கின்றன. கடந்த சில ஆண்டுகளாக இவற்றுக்கு இணையாக அகத்திக் கீரைக் கடைகளும் முளைத்திருக்கின்றன. இப்போது கோயிலின் முகப்புச் சாலையில் வாகனங்கள் போவதும், ஏன் நடப்பதுங்கூட சிரமமாகிவிட்டது. இரண்டுக்கும் காரணம் ஒன்றுதான். மாடுகள். பெருமாள் கோவில் வாசலில் மாடுகளுக்கு அகத்திக் கீரை புகட்டுவது புண்ணியம் என்று யாரோ கிளப்பிவிட்டார்கள். இப்போது முகப்புச் சாலையை நிறைத்து நிற்கும் மாடுகளுக்கும், அவற்றின் சாணத்திற்கும் இடையில் சாகசமாக நடந்துதான் கோயிலுக்குள் செல்ல வேண்டியிருக்கிறது.

 நீதியரசர்கள் இந்த மாடுகளை stray cattle என்ற பதத்தால் குறித்தார்கள். இதற்கு கைவிடப்பட்ட, உரிமையாளர் இல்லாத கால்நடை என்று பொருள். இந்த மாடுகள் கைவிடப்பட்டவை அல்ல. இவற்றுக்கு உரிமையாளர்களும் இருக்கிறார்கள். அவர்களை மாடுகள் அறியும். சரி கணக்காக அவர்தம் இல்லங்களுக்குச் சென்று பால் கறக்கும். இந்த உரிமையாளர்கள் நல்ல மேய்ப்பர்கள் அல்லர். இவர்கள் மாடுகளை மேய்ப்பதே இல்லை. அவை தாமே கோயில் வாசலுக்கு வந்துவிடும்.

 நாடெங்கிலும் மாடுகள் சாலைகளை மறித்துக்கொண்டு நிற்பது சமீப காலங்களில் அதிகமாகிவிட்டது. காரணங்கள் பல. இந்த மாடுகளைச் சாலைகளிலிருந்து அப்புறப்படுத்த வேண்டுமென்று விதிக்கிறது இந்தத் தீர்ப்பு. மேலதிகமாக நெடுஞ்சாலைத் துறையினரை ரோந்துப் படைகள் அமைத்துக் கண்காணிக்குமாறும் அறிவுறுத்துகிறது.

 நான்காவது தீர்ப்பு

 கடைசியாக, இவ்வாண்டு மே 19 அன்று வெளியான நான்காவது தீர்ப்பு, விலங்கு ஆர்வலர்கள் கோரியபடி மூன்றாவது தீர்ப்பை ரத்து செய்யவில்லை. அதாவது, பொது இடங்களில் சுற்றித் திரியும் நாய்களைப் பிடித்து அவைகளை காப்பகங்களில் அடைக்க வேண்டும் என்கிற மூன்றாவது தீர்ப்பு இனியும் செல்லுபடியாகும். மேலதிகமாக, இப்போதைய நான்காவது தீர்ப்பு வெறிபிடித்த, பெரு நோய் பீடித்த நாய்களை, அவசியமானால் கருணைக் கொலை செய்யலாம் என்றும் விதிக்கிறது. 

 இந்தத் தீர்ப்பு நமது அரசமைப்புச் சட்டத்தின் 21ஆவது பிரிவையும் சுட்டிக் காட்டியது. ஒவ்வொரு குடிநபரும் கண்ணியத்தோடு வாழ உறுதியளிக்கும் பிரிவு இது. இந்த உறுதிப்பாட்டிற்கு மாறாக, குடிநபர்கள் நாய்கள் குறித்த அச்சத்துடனேயே பொது இடங்களில் புழங்க வேண்டியிருக்கிறது என்பதையும், இதை அரசாங்கங்கள் கண்டுகொள்ளாமல் இருக்க முடியாது என்றும் நீதியரசர்கள் தீர்ப்பில் குறிப்பிட்டனர். அதே வேளையில், இந்தத் தீர்ப்பு தெருக்களில் திரியும் நாய்களைப் பற்றிப் பேசவில்லை. தெருக்களிலும் மக்கள் அச்சத்துடன் உலவுவதைப் பற்றி விவாதிக்கவில்லை.

 உச்ச நீதிமன்றத் தீர்ப்புகளின் அடிப்படையில் சென்னை உயர் நீதிமன்றமும் ஜூன் 22 அன்று தெரு நாய்ப் பிரச்சினையை ஒரு வழக்காக எடுத்துக்கொண்டது. மாநில அரசின் கால்நடை, மக்கள் நல்வாழ்வு, ஊராட்சித் துறைகளிடம் ஒரு மாதத்திற்குள் நிலைத் தகவல் அறிக்கையொன்றைக் கோரியது. ஜூலை 21 அன்று நடந்த விசாரணையில் அரசால் அறிக்கையச் சமர்ப்பிக்க முடியவில்லை. எல்லா வழக்குகளையும் போல் வாய்தா வழங்கப்பட்டிருக்கிறது.

 வளர்ந்த நாடுகளில் என்ன நிலை?

 தெரு நாய்ப் பிரச்சினையில் நாம் அயல்நாட்டு நடைமுறைகளையும் கவனத்தில் கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தியது சென்னை உயர் நீதிமன்றம். இந்தப் பிரச்சினையால் அயல்நாடுகளில் இந்தியாவின் மதிப்புக் குறைகிறது என்றும் கவலை தெரிவித்தது. 

 வளர்ந்த நாடுகளில் 'தெரு நாய்கள்' என்றொரு சொற்றொடர் வழக்கில் இல்லை. அவர்கள் stray dogs என்பார்கள். அதாவது, கைவிடப்பட்ட, உரிமையாளர் இல்லாத நாய். ABC விதிகள் வந்தபோது stray dogsஐத் 'தெரு நாய்' என்கிற சொற்றொடர் பதிலீடு செய்தது. இதனால் இந்த நாய்களுக்கு சட்ட ரீதியான அங்கீகாரமும் தெருக்களில் குடியிருக்கும் உரிமையும் கிடைத்தது. வளர்ந்த நாடுகள் பலவற்றிலும் தெரு நாய்கள் இல்லை. மூன்று அயல்நாட்டு நகரங்களில் நான் பெற்ற அனுபவத்தைப் பகிர்ந்துகொள்வது இந்த இடத்தில் பொருத்தமாக இருக்கும்.

 முதலாவது, ஹாங்காங். அங்கு தெரு நாய்கள் இல்லை. வளர்ப்பு நாய்கள் மட்டுமே. நகரம் அடுக்ககங்களால் ஆனது. சில அடுக்ககங்களில் நாய் வளர்க்க முடியாது. பல அடுக்ககங்களில் வளர்க்கலாம்; அது நிபந்தனைகளுக்கு உட்பட்டது. எந்த நேரத்தில் நாயை வீட்டிலிருந்து வெளியே கொண்டு வரலாம்; அடுக்கக வளாகத்திற்குள் எந்தெந்த இடங்களுக்கு நாய்களை அழைத்துச் செல்லலாம்; நாய்களை எப்படியான எவ்வளவு நீளமுள்ள பட்டியால் பிணைக்கலாம் என்பதெற்கெல்லாம் விதிகள் இருக்கும். தெருக்களுக்கு வந்தால் அரசு விதிகள் நாய் வளர்ப்போரைக் கட்டுப்படுத்தும். 

 நாய் வளர்ப்பவர்கள் மாலை நேரங்களில் அவற்றை தெருக்களில் நடத்திக்கொண்டு போவார்கள். அப்போது அவர்கள் கைகளில் கொத்தனார்கள் பயன்படுத்துவது போன்ற கரண்டியும், பழைய செய்தித்தாள்களும், தண்ணீர்ப் போத்தலும் இருக்கும். நாய் தெருவில் கழிந்தால், அதைக் கரண்டியால் எடுத்து செய்தித்தாளில் பொதிந்து கொள்வார்கள். அந்த இடத்தை நீரால் கழுவுவார்கள். கழிவுப் பொதியைப் போடுவதற்கென்று பிரத்தியேகக் குப்பைத் தொட்டிகள் இருக்கும். பொதுக் குப்பைத் தொட்டிகளில் போட முடியாது. யாரும் கழிவுகளை வீதியில் விட்டுவிட்டுப் போக மாட்டார்கள்.

மாறாக, நமது நகரங்களில் தெரு நாய்களின் கழிவு மட்டுமல்ல, வளர்ப்பு நாய்களின் கழிவும் தெருவிலேயே விட்டுச் செல்லப்படும். நடைப் பயிற்சிக்கு வளர்ப்பு நாயை அழைத்துச் செல்வோர் யாரும் தத்தமது நாயின் கழிவுகளைத் தீண்டமாட்டார்கள். அது அவர்கள் வேலையல்ல. அவர்கள் கனவான்கள். இந்தக் கழிவுகளை அப்புறப்படுத்துவதற்காகவே விதிக்கப்பட்ட சிலர் இந்த நாட்டில் இருக்கிறார்கள். அவர்கள் பார்த்துக்கொள்வார்கள். 

இரண்டாவது நகரம், சிட்னி. இங்கும் தெரு நாய்கள் இல்லை. இங்கு அடுக்ககங்கள் குறைவு, தனி வீடுகளே அதிகம். ஆகவே வளர்ப்பு நாய்கள் மிகுதி. நாய்களுக்கு தடுப்பூசி கட்டாயம். எல்லா நாய்களுக்கும் உரிமம் பெற வேண்டும். உரிமம் பெற்ற நாய்களின் காதுகளில் மைக்ரோ சிப் பொருத்துவார்கள். தெருவில் ஒரு குடிநபர் மைக்ரோ சிப் இல்லாத நாயைக் கண்டால், அதை அவர் உடனடியாக ஊராட்சி அலுவலகத்திற்குத் தெரிவிக்க வேண்டும். இது சட்டம். அதாவது, அப்படித் தெரிவிக்க வேண்டுமென்பது கட்டாயம். 

மூன்றாவது நகரம், சிகாகோ. இங்கும் தெரு நாய் இல்லை. வளர்ப்பு நாய்களுக்குத் தடுப்பூசி செலுத்திச் சான்று பெற வேண்டும். உரிமமும் பெற வேண்டும். இரண்டிற்கும் காலக்கெடு உண்டு. இரண்டில் எது முதலில் காலாவதியானாலும் உரிமம் முடிவுக்கு வந்துவிடும். நாய்களை உரிய பட்டியால் கட்டியிருக்க வேண்டும். அப்படிச் செய்யாதவர்களை கண்காணிப்புக் கருவி காட்டிக்கொடுத்து விடும். பொதுமக்களும் புகாரளிக்கலாம். நாடாச் சட்டத்தின்படி (Leash Law) தண்டத் தொகை: 300 டாலர். வளர்ப்பு நாய்கள் பாதசாரிகள் யாரையேனும் தாக்கினால், அல்லது பிறரது உடமைகளுக்கு ஊறு விளைவித்தால், நாய்த் தாக்குதல் சட்டத்தின்படி(Dog Attack Law) தண்டத் தொகை 1000 டாலர் வரை விதிக்கப்படலாம்.

இவையெல்லம் வளர்ந்த நாடுகளில் வளர்ப்பு நாய்கள் வீதிக்கு அழைத்து வரப்படும்போது குடிநபர்களுக்கு எந்த இன்னலும் வாராதிருக்க இயற்றப்பட்டிருக்கும் சட்டங்கள். முன்னேறிய நாடுகள் எவையும் நாய்களைத் தெருவில் சுற்றித் திரிய அனுமதிப்பதில்லை. 

நாய்க் காதலர் சொல்வதென்ன?

 உச்ச நீதிமன்றம் தில்லித் தெரு நாய்களை அப்புறப்படுத்த வேண்டும் எனக் கடந்த ஆண்டு ஆகஸ்டில் விதி எழுதியபோது நாடெங்கிலும் கிளர்ந்தெழுந்த விலங்கு ஆர்வலர்கள், இந்த விதிக்கு எதிராக சமூக வலைதளங்களில் பல வாதங்களை முன்வைத்தனர். அவற்றில் சிலவற்றை இங்கே பரிசீலிக்கலாம்.

 நாய்களின் உரிமை

 முதலாவது வாதம், தெரு நாய்களுக்கு ஜீவாதார உரிமையுண்டு என்பதாகும். வாழ்வுரிமை எல்லா உயிர்களுக்கும் உண்டு. ஆனால் நாய்கள் தெருவில் வசித்தால், அது நாய்களுக்கும் பாதுகாப்பில்லை, மனிதர்களுக்கும் பாதுகாப்பில்லை. சாலை விபத்துகளில் ஏராளமான தெரு நாய்கள் உயிரிழக்கின்றன; ஊனமுறுகின்றன. தவிர, இந்தத் தெருக்கள் மனிதர்களின் உழைப்பாலும் வரிப் பணத்தாலும் உருவாக்கப்பட்டவை. இந்தச் சாலைகளும், நடைபாதைகளும் அவற்றில் பதிப்பிக்கப்பட்டிருக்கும் குடிநீர்-கழிவுநீர்க் குழாய்களும், தொலைத் தொடர்பு-மின்சார வடங்களும் மனிதர்களின் நலனுக்காகப் போடப்பட்டவை. இந்த வெளியை நாய்களுக்கு விட்டுக்கொடுப்பது அறிவுடமையாகாது.   

 மேலும், நாய்களின் மீது காட்டப்படும் தயை வேறு பல உயிரினங்கள் அற்றுப்போவதற்குக் காரணமாகிறது. சென்னை கிண்டி தேசியப் பூங்காவிலுள்ள வெளிமான்கள், ராஜஸ்தானில் கானமயில்கள், அஸ்ஸாமில் தங்க மந்திகள் (Golden langur), கர்நாடகத்திற்கு வலசை வரும் பட்டைத்தலை வாத்துக்கள் முதலான பல அரிய வகை உயிரினங்களின் எண்ணிக்கை குறைந்து வருவதற்குத் தெரு நாய்களே காரணம் என்கிறார் சூழலியலாளர் தியடோர் பாஸ்கரன்.

 உணவும் கருணையும்

 தெரு நாய்களுக்கு உணவளிப்பது ஒரு கருணைச் செயல் என்பது இரண்டாவது வாதம். கருணையுள்ளவர்கள் நாய்களை வீட்டில் வளர்க்க வேண்டும், அல்லது காப்பகங்களில் பராமரிக்க வேண்டும். அவற்றை வீதிகளில் விட்டுவிடலாகாது. கருணையாளர்கள் வழங்கும் உணவு நாய்களுக்குப் போதுமானதாக இருப்பதில்லை. ஆகவே அவை தெருவில் வீசப்படும் கழிவுகளையும் குப்பைகளையும் உண்டு நடமாடும் நோய்க் கிடங்குகளாக உலவுகின்றன.

 காவல்காரன்

 அடுத்த வாதம், நாய்கள் தெருக்களின் காவலர்களாக விளங்குகின்றன, அவை குற்றவாளிகளைத் தெருக்களில் அனுமதிப்பதில்லை என்பதாகும். வீடுகளின் பாதுகாப்பில் தெருவாசிகளுக்கும் ஊராட்சிக்கும் காவல் துறைக்கும் கூட்டுப் பொறுப்பு இருக்கிறது. அதற்குத் தெரு நாய்களை நம்ப முடியாது. தவிர, தெரு நாய்கள் திருடர்களை மட்டுமில்லை, தெருவுக்கு அந்நியமான அனைவரை நோக்கியும் குரைக்கும், துரத்தும், சமயங்களில் கடிக்கும். அவர்கள் நம்மைக் காண வந்த நண்பர்களாகவோ விநியோகத்  தொழிலாளராகவோ இருக்கலாம்.

 வெற்றிடம்

 இன்னும் சில விலங்கு ஆர்வலர்கள் சொல்லும் காரணம் வினோதமானது. நாய்களை அகற்றினால் அந்தச் சூழலில் ஒரு வெற்றிடம் வந்துவிடும், அங்கே எலிகளும் பெருச்சாளிகளும் குரங்குகளும் வந்துவிடும் என்பதாகும். இப்படிச் சொல்வதற்கு எந்த அறிவியல் ஆதாரமும் இல்லை. தவிர, உலகின் பல வளர்ந்த நாடுகளில் தெரு நாய்கள் இல்லை. அங்கே எந்த வெற்றிடமும் உருவாகவில்லை.

 எல்லாப் பொறுப்பும் ஊராட்சிக்கே

 கடைசியாக, இந்த விலங்கு ஆர்வலர்கள் சொல்வது நாய்களுக்கு முறையாகக் கருத்தடை செய்வித்தால் அதன் இனப்பெருக்கத்தை கட்டுப்படுத்திவிடலாம் என்பது. இந்த வாதம் சரியனதா? ஓர் எடுத்துக்காட்டைப் பார்க்கலாம். பூடான் நமது அண்டை நாடு. அது CNVR முறையைத்தான் பயன்படுத்தியது. 2009இல் திட்டம் தொடங்கியது. 2023இல் முடிந்தது. அதாவது 14 ஆண்டுகள். கருத்தடை செய்வித்து, தடுப்பூசி செலுத்தப்பட்ட நாய்களின் எண்ணிக்கை ஒன்றரை இலட்சம். இந்தியா போன்ற பெரிய நாட்டில் கோடிக் கணக்கன நாய்களுக்கு இதைச் செய்ய இன்னும் எத்தனை ஆண்டுகள் வேண்டி வரும்? அதுவரை விபத்துகளும் நாய்க் கடிகளும் தொடர வேண்டுமா? இந்தியாவில் நாய்களின் எண்ணிக்கையைக் குறைக்க வேண்டுமென்றால் 70% நாய்களுக்கு மிகக் குறுகிய கால அவகாசத்தில் கருத்தடை செய்ய வேண்டும் என்கிறது ஓர் ஆய்வு. இது நடைமுறை சாத்தியமில்லை. 

 நாய் ஆர்வலர்களைப் போலவே ஒன்றிய அரசும் இப்போதைய முறையில் (CNVR) நாய்களைக் கட்டுப்படுத்தி விடலாம் என்று நம்புகிறது. ஆனால் அதை மாநில அரசும் ஊராட்சிகளும் செய்ய வேண்டும் என்று எதிர்பார்க்கிறது. தெரு நாய்ப் பிரச்சினை குறித்த ஒன்றிய அரசின் கால்நடைத் துறை வெளியிட்டிருக்கும் ஒரு சுற்றறிக்கை (Menace of Stray Dogs, PIB Circular dated 19.8.2025) இப்படித் தொடங்குகிறது: “தெரு நாய்ப் பிரச்சினை மாநில அரசாங்கங்களின் கீழ் வரும். இதைக் கையாளுகிற கடமை ஊராட்சிகளுக்கு உரியது.” அதாவது, ஒரு பொறுப்புத் துறப்பு வாசகத்துடன்தான் ஒன்றிய அரசு தனது அறிக்கையைத் தொடங்குகிறது.

 மேலும், இப்போது CNVR திட்டத்தை அமல்படுத்துவதில் ஊழல் நிலவுவதாக சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகிறார்கள். பல கருத்தடைகளும் தடுப்பூசிகளும் கணக்கில் மட்டும் எழுதப்படுவதாகவும், அவை நாய்களைச் சென்றடைவதில்லை என்றும் சொல்கிறார்கள். இதில் பல அரசு சாரா நிறுவனங்களும் ஈடுபடுகின்றன. அவர்களுக்கும் இந்த ஊழலில் பங்கு கிடைக்கும் என்கிறார்கள். இந்த ஊழலைக் கண்டறிந்து களைய வேண்டும்.

 இந்த இடத்தில் நாம் இன்னொன்றையும் கவனிக்க வேண்டும். தெரு நாய்கள் குறித்த விவாதம் மிகுதியும் நாய்க் காதலர்களுக்கும் சமூக ஆர்வலர்களுக்கும் இடையில்தான் நடக்கிறது. நீதிமன்றங்கள் விசாரிக்கின்றன; விதி எழுதுகின்றன. ஒன்றிய அரசு எல்லாப் பொறுப்பையும் மாநிலங்களின் மீது சுமத்துகிறது. ஆனால், மாநில அரசுகள் இந்தப் பிரச்சினையில் எந்தக் கருத்தையும் சொல்வதில்லை. நிதிப் பற்றாக்குறையைப் பற்றி மூச்சு விடுவதில்லை. இது தற்செயலாக இருக்க முடியாது. 

 மேலும், தெரு நாய்களால் செல்வந்தர்களுக்குப் பெரிய பிரச்சினைகள் இல்லை. ஆனால் எளிய மக்கள் படும் பாடு, 'நாய் படும் பாடு'தான். இந்தியாவில் தெரு நாய்களைப் ‘பாதுகாப்பதில்’ பல பன்னாட்டு மருந்து நிறுவனங்கள் குறியாக இருப்பதாகச் சொல்லப்படுகிறது. தெரு நாய்கள் இல்லாத மேலை நாடுகளில் இந்த மருந்துகளை விற்க முடியாது. இந்தியாவில் தெரு நாய்களைப் பாதுகாப்பதன் பின்னால் இப்படியொரு சதி இருப்பது உண்மையானால், அது கண்டறியப்பட்டுக் களையப்பட வேண்டும்.  

 என்ன செய்யலாம்?

 மேற்கு நாடுகளிலும் ஹாங்காங், சிங்கப்பூர், ஜப்பான், தென்கொரியா முதலிய கிழக்காசிய நாடுகளிலும் தெரு நாய்களே இல்லை. இதை அவர்கள் சாதித்தது எங்ஙனம்? அவர்களது நடைமுறைகளிலிருந்து நமக்கு இசைவானவற்றை நாம் எடுதுக்கொள்ளலாம்.    

 முதலாவதாக வளர்ப்பு நாய்களுக்கு உரிமம் வழங்கும் நடைமுறையை மீண்டும் கொண்டு வரவேண்டும். அடுத்து, எல்லாத் தெரு நாய்களையும்  பிடிக்க வேண்டும். வெறி பிடித்த, பெரு நோய் பீடித்த நாய்களைக் கருணைக் கொலை புரிய வேண்டும். அடுத்து விலங்கு ஆர்வலர்கள், தங்கள் பாசத்தைக் காட்ட வாய்ப்பளிக்கும் முகமாக, பிடிக்கப்பட்ட  நாய்களிலிருந்து அவர்களுக்கு விருப்பமுள்ள நாய்களை தத்தெடுத்துக் கொள்ள வகை செய்யலாம்; அரசு இதை ஊக்குவிக்கலாம்; உதவித் தொகையும் நல்கலாம். எஞ்சிய நாய்களைக் காப்பகத்தில் வைத்துப் பராமரிக்க வேண்டும். 

 பொது இடங்களில் சுற்றித் திரியும் நாய்களின் எண்ணிக்கை குறித்து எந்த ஊராட்சியிடமும் விவரம் இருப்பதாகத் தெரியவில்லை. எந்தத் திட்டத்தையும் நடைமுறைப்படுத்தத் தரவுகள் அவசியமானவை. ஆகவே முதற் கட்டமாகப் பொது இடங்களிலும், இரண்டாம் கட்டமாக எல்லாத் தெருக்களிலும் உலவி வரும் நாய்களின் எண்ணிக்கையைக் கணக்கிட வேண்டும். இந்த நாய்களுக்குத் தடுப்பூசி செலுத்தவும் கருத்தடை செய்யவுமான உள்கட்டமைப்பு வசதிகளை (மருத்துவமனை, மருந்து, மருத்துவர், பணியாளர்) உருவாக்க வேண்டும். அந்தப் பகுதியில் உலவும் நாய்களின் எண்ணிக்கைக்கு ஏற்றவாறு அவசியமான காப்பகங்களைக் கட்ட வேண்டும். இந்தப் பணி பெரிது, அதிக செலவு பிடிக்கக்கூடியது. மாநில அரசுகளால் மட்டும் சுமக்க முடியாதது.

 ஆகவே, அறிவாளர்களும் சமூக செயல்பாட்டாளர்களும் அரசியல் இயக்கங்களும் இந்தப் பிரச்சினையைப் பொதுமக்களிடம் கொண்டு செல்ல வேண்டும். ஜல்லிக்கட்டைப் போல மக்கள் ஒன்றிணைந்து குரல் எழுப்பினால், அதிகாரம் செவி மடுத்துத்தான் ஆக வேண்டும்.

 இப்போதைய நாய்ப் பெருக்கத்திற்குக் காரணமான ABC விதிகளை இயற்றி, இன்றளவும் அதை வியந்து போற்றி வருகிற (கால்நடை வளர்ப்புத் துறையின் செய்திக் குறிப்பு, 1.4.2025) ஒன்றிய அரசுதான் தனது சேகரத்திலிருந்து மாநிலங்களுக்கு நிதி வழங்க வேண்டும். ஊராட்சிகளும் மாநில அரசுகளும் இதை முன்னெடுத்துச் செல்ல வேண்டும். பொதுமக்களை உள்ளடக்கிய கண்காணிப்புக் குழுக்களையும் ஏற்படுத்த வேண்டும். 

 ஒரு நகரின் உள்கட்டமைப்பு என்பது பாலங்கள், சாலைகள், மெட்ரோ ரயில்கள், மின்சாரம், தொழில்நுட்பம் என்பன மட்டுமல்ல. அந்த நகரம் பாதுகாப்பானதாக இருக்க வேண்டும். தெரு நாய்கள் அதற்குக் குந்தகம் விளைவிக்கும். நாய்களுக்குத் தெருக்கள் சொந்தமில்லை. அவற்றைத் தெருக்களிலிருந்து அப்புறப்படுத்த வேண்டும். அதற்கு அறிவியல் ரீதியான வழிகளைக் கைக்கொள்ள வேண்டும். அப்படிச் செய்தால், அது நமது நகரங்களை பாதுகாப்பாகவும் துப்புரவாகவும் மாற்றும். சாவி ஷர்மா போன்ற குழந்தைகளின் மரணங்கள் சம்பவிக்காது.

(மு இராமனாதன், எழுத்தாளர், பொறியாளர். தொடர்புக்கு: Mu.Ramanathan@gmail.com)

 

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடரFacebookTwitterYoutubeInstagram

logo
Andhimazhai
www.andhimazhai.com