என்னை பாடச் சொல்லாதே... பறந்துபோன கானகோகிலம் எஸ். ஜானகி!

janaki
எஸ்.ஜானகி
Published on

1985-இல் பத்து வயது சிறுவனாக பாளையங்கோட்டை அசோக் தியேட்டரில் ஆண்பாவம் பார்த்தேன். கதாநாயகி ரேவதி என் சமவயது குழந்தைகளோடு “என்னைப் பாடச் சொல்லாதே” என்று ஆடிப்பாடியபோது, ரேவதியின் அழகான முகம் வசீகரித்ததற்கு இணையாக பின்னணிக் குரலில் இருந்த உற்சாகமும் என்னை வசீகரித்தது. என்னோடு பேசி, சிரித்து விளையாடிக் கொண்டிருக்கும் என் கிராமத்து அக்காக்களும் திருமணமாகி வேறு ஊருக்குச் சென்றுவிடுவார்களோ என்ற அந்த வயதுக்கே உரிய அதி முக்கியக் கவலை மனதில் இடம்பிடித்திருந்ததால், அந்தப் பாடலும் மனதில் ஆழமாகப் பதிந்துபோனது.

போதாத குறைக்கு, அந்தப் பாடல் இடம்பெற்ற படம் ஆண்பாவம், பாடியவர் எஸ். ஜானகி என்று நெல்லை வானொலி என் மனதில் ஜானகியின் பெயரைப் பதிய வைத்துக்கொண்டே வந்தது. சில வருடங்களுக்குப் பின் ஒருநாள், தொலைக்காட்சியில் ஒளியும் ஒலியும் பார்த்துக்கொண்டிருந்தபோது, எனது தந்தைக்குப் பிடித்த பாடலான “சிங்கார வேலனே தேவா” கொஞ்சும் சலங்கை திரைப்படத்திலிருந்து ஒளிபரப்பானது. அந்தப் பாடலை சாவித்திரிக்காகப் பாடியவர் ஜானகி என்று தந்தையார் சொன்னபோது நான் அதிர்ந்து போனேன்.

“அவ்வளவு வயதானவரா ஜானகி? என்னால் நம்பவே முடியவில்லை! வயது கூடக்கூட குரலில் இளமை கூடிக்கொண்டே போகுமா? இது எப்படி எப்படி நியாயம்?”

எல்லாம் அவர் குரல் செய்த மாயம். அந்த மாயத்தின் காரணமாகத்தான் மௌன கீதங்களில் மலேசியா வாசுதேவனோடு இணைந்து 'டாடி..டாடி ஓ மை டாடி உன்னை கண்டாலே ஆனந்தமே! ' என்று குழந்தைக்குரலில் குதூகலிக்க முடிகிறது.. அவர் பாடத்தொடங்கி 68 வருடங்கள் ஆனபின்பும் 2025 ல் Dude படத்தில் மமிதா பைஜு ஆடும் ஒரு நடனத்திற்கு பின்னனிப் பாடலில் " பூட்டி வச்ச குதிரை ஒன்னு புட்டுக்கிச்சு மாமா" 2k kids ரசிக்கும் ஒரு குரலாகவும் அவர் குரல் இருக்கிறது. சாவித்திரி முதல் மம்தா பைஜு வரை முன்னணி பின்னணி பாடகியாக நிலைத்திருப்பது ஒரு சரித்திர சாதனைதான்.

இன்று தனது 88-ஆவது வயதில் கானகோகிலம் எஸ். ஜானகி மறைந்தார் என்ற செய்தியைக் கேட்கும் போது, எனக்கு முதலில் நினைவுக்கு வருவது “என்னைப் பாடச் சொல்லாதே” என்ற அந்தப் பாடல்தான்.

நான்கு முறை தேசிய விருது பெற்றவர். மிகவும் தாமதமாக வழங்கப்பட்ட பத்மபூஷண் விருதை பெற மறுத்த தன்மானக்காரர்.

17 மொழிகளில் நாற்பதாயிரத்திற்கும் மேற்பட்ட பாடல்களைப் பாடியுள்ளார். இவர் அதிகம் பாடியவை கன்னடப் பாடல்களே என்கிறது விக்கிபீடியா. மைசூர் பல்கலைக்கழகம் இவருக்கு மதிப்புறு முனைவர் பட்டம் வழங்கி சிறப்பித்துள்ளது.

1957-ல் ‘விதியின் விளையாட்டு’ என்ற தமிழ்த் திரைப்படத்தின் மூலம் தனது இசைப் பயணத்தைத் தொடங்கினார். 2016-ல் திரைப்பாடல்கள் மற்றும் மேடைக் கச்சேரிகளில் இருந்து விடைபெறுவதாக அறிவித்தாலும், 2018-ல் மீண்டும் பாடினார்.

தமிழில் இவர் பாடிய ‘செந்தூரப்பூவே செந்தூரப்பூவே’, ‘இஞ்சி இடுப்பழகா’ ஆகிய பாடல்களுக்காக தேசிய விருது பெற்றார். ‘தென்னிந்தியாவின் இசையரசி’ என்று அழைக்கப்படும் ஜானகி, நான்கு தேசிய திரைப்பட விருதுகளையும், 33 மாநில திரைப்பட விருதுகளையும் பெற்றுள்ளார். தமிழ்நாடு அரசு 1986 ஆம் ஆண்டு கலைமாமணி விருது வழங்கி அவரைக் கௌரவித்துள்ளது.

எஸ். பி. பாலசுப்பிரமணியம், இளையராஜா, பி. பி. ஸ்ரீனிவாஸ், கே. ஜே. யேசுதாஸ், பி. ஜெயச்சந்திரன், ராஜ்குமார் ஆகியோருடன் அதிக எண்ணிக்கையிலான திரைப்படப் பாடல்களைப் பாடியுள்ளார்.

இந்த உலகைவிட்டு அவரின் உயிர் பிரிந்தாலும், தனது இசையின் மூலம் மக்கள் மனதில் என்றும் நீங்காமல் நிலைத்திருப்பார்.

வைரமுத்து தனது இரங்கல் செய்தியில்,

“கானக் குயிலே காலமானாயா? அரைநூற்றாண்டு ஆறுதலே அடங்கிவிட்டாயா? ‘சிங்கார வேலனே தேவா’வில் நாதஸ்வரத்தை வென்றுகாட்டிய கீதவாணியே, முடிந்துவிட்டதா உன் மூச்சு? தாய்மையாய், தமிழாய், காதலாய், கருணையாய், கண்ணீராய், புன்னகையாய் எங்கள் வாழ்வோடு கலந்த பாட்டரசி, உனக்கும் மரணமா?” என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும்,

“‘நாதம் என் ஜீவனே’ என்றாயே... உன் நாதம் இருக்கிறது; ஜீவன் இல்லையே!” என்று, ‘காதல் ஓவியம்’ திரைப்படத்தில் தான் எழுதிய வரிகளை நினைவுகூர்ந்து வருந்தியுள்ளார்.

எஸ். ஜானகியின் தோற்றத்தை நம் கண்முன் கொண்டு வரும் விதமாக,

“சிரித்த முகமும் சிவப்பு நிலாப் பொட்டும், ஆடாமல் அசையாமல் சித்திரம் பாடுவதுபோல் செவ்வாய் அசைக்கும் அழகும் கண்களை விட்டுக் காணாமல் போகுமோ!” என்று அவரது இரங்கல் குறிப்பு விரிகிறது.

பிற்காலத்தில் அவரை நினைத்துப் பார்க்கும்போது வெண்புடவையும், விபூதி நிறைந்த நெற்றியும் நினைவுக்கு வரும். அதிலும் குறிப்பாக ஒரு விபூதிக்கீற்று, அதன் கீழ் ஒரு மஞ்சள் கீற்று நம் கண்களில் நிழலாடும்.

“நீ பாடமுடியாத பாடலென்று எதுவும் இல்லை; உன் பாடல் கேளாமல் இரவுகள் விடிவதில்லை” என்கிறார் கவிப்பேரரசு. உண்மைதான்.

குழந்தையின் குதூகலம், குமரியின் கொண்டாட்டம், விரகதாபம், விரக்திசோகம், பக்திப்பரவசம், பாசப்போராட்டம், நாட்டுப்புற நளினம், நகர்ப்புற அலட்டல் என மனித மனத்தின் எல்லா பரிமாணங்களையும் தனது ஒற்றைக் குரலால் இசைரசிகர்களின் செவிகளில் வெற்றிகரமாக இறக்குமதி செய்தவர் எஸ். ஜானகி.

அவை என்னென்ன பாடல்கள்?

சிங்கார வேலனே தேவா,செந்தூரப்பூவே, செந்தூரப்பூவே, மச்சானைப் பாத்திங்களா?, இஞ்சி இடுப்பழகா, இந்த மன்றத்தில் ஓடிவரும், நாதம் என் ஜீவனே, மார்கழித் திங்களல்லவா, காற்றில் எந்தன் கீதம், மெளனமான நேரம், புத்தம் புது காலை, பொன்மேனி உருகுதே,மலரே மௌனமா?, ஓட்டகத்தைக் கட்டிக்கோ , ... பட்டியல் முடிவதில்லை.

ஒவ்வொரு ரசிகருக்கும் தனித்தனி ஜானகி இருக்கிறார். ஒவ்வொரு நினைவுக்கும் ஒரு ஜானகிப் பாடல் இருக்கிறது.

எஸ். ஜானகி அவர்களின் உச்சரிப்பு அழகை நினைவுகூர்ந்து நிறைய எழுத முடியும். என்றாலும் இரண்டே இரண்டு உதாரணங்கள் மட்டும்.

“மார்கழித் திங்களல்லவா?” பாடலில்,

“கலை என்னும் ஜோதியில் காதலை எரிப்பது சரியா? பிழையா? நீ சொல்லய்யா...”

என்ற வரிகளில், “சரியா? பிழையா?” என்ற சொற்களின் இறுதியில் வரும் “யா”வை அவர் உச்சரிக்கும் விதத்தில் தமிழின் இனிமையே குடிகொண்டிருக்கிறது.

அதேபோல,

“மொசக்குட்டி தேடிவந்த கோபாலா...”

என்ற வரியில் “மொசக்குட்டி” என்ற வார்த்தையை ஜானகி உச்சரிக்கும் பொழுது கிறங்கிப்போய், இனி “முயல்குட்டி” என்பது வழு; “மொசக்குட்டி” என்பதே வழாநிலை என்ற முடிவுக்கு ஒரு தமிழன்பர் வந்துவிடக்கூடும்.

அதுதான் எஸ். ஜானகி.

பாடல்களைப் பாடியவர் மட்டுமல்ல; வார்த்தைகளுக்கு உயிர் கொடுத்தவர். உணர்வுகளுக்கு குரல் கொடுத்தவர். மொழிகளுக்கு இசை கொடுத்தவர்.

இன்று அவர் விடைபெற்றுவிட்டார்.

ஆனால்,இரவு நேர வானொலியில் திடீரென ஒலிக்கும் ஒரு பாடலில், தொலைதூர பேருந்துப் பயணத்தில் காதில் விழும் ஒரு மெட்டில், மார்கழிக் காலையின் பனித்துளியில், கிராமத் திருவிழாவின் ஒலிபெருக்கியில், தனிமையின் நள்ளிரவில் — எங்கோ ஒரு மூலையில் எஸ். ஜானகி இன்னும் பாடிக்கொண்டுதான் இருக்கிறார்.

கானகோகிலம் பறந்துவிட்டது.

ஆனால் அதன் பாடல் இன்னும் நம் வானத்தில் ஒலித்துக்கொண்டிருக்கிறது.

logo
Andhimazhai
www.andhimazhai.com