புத்தகக் கடையில் புதையல் தேடுபவர்!

புத்தகக் கடையில் புதையல் தேடுபவர்!

பண்பாட்டு ஆய்வாளர் தொ.பரமசிவனால் ‘வரலாற்றியல் அறிஞர்' என்று புகழப்பட்டவர் செ.திவான். கடந்த 35 வருடங்களாக  எழுத்துத் துறையில் இயங்கி வரும் இவரது படைப்புகளை தமிழக அரசு சமீபத்தில் நாட்டுடைமை ஆக்கி அறிவித்துள்ளது. ஏராளமான ஆய்வு நூல்கள் எழுதியுள்ள அவருக்கு  சதக்கத்துல்லா அப்பா விருது, உமறுப்புலவர் விருது, பெரியார் விருது, காயிதே மில்லத் பிறை விருது வழங்கப்பட்டுள்ளது. அவரை சந்தித்தோம்.

‘பள்ளி மாணவனாக இருந்தபோதே ‘அறமுரசு' (1972) என்ற இதழில் ‘அத்தா' (தலைவன்) என்ற கட்டுரை எழுதிவிட்டேன். முரசொலி, செம்மலர், தினமலர் நம்நாடு போன்ற பத்திரிகைகளுக்கு கடிதங்கள் மற்றும் துணுக்குகள் எழுதி அனுப்புவேன். அப்படியே தொடர்ந்து தீவிர திராவிட இலக்கியத்துக்குள் பயணத்தில் நெல்லை திமுக அலுவலகத்தில் மேலாளராக பணியில் அமர்ந்தேன். 1989-இல் திமுக ஆளும்கட்சியாக ஆனபிறகு நிறைய பரிந்துரைகள், சிபாரிசுகள் வந்தவுடன். என்னால் சமாளிக்க முடியவில்லை. பொறுப்பைக் கட்சிக்காரர்களிடம் ஒப்படைத்துவிட்டு மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் எம்.பில்.படிக்கப்போய்விட்டேன். அப்போது எனக்கு வயது 36 இருக்கும். தினமும் கல்லூரிக்குச் சோற்றைக் கட்டிக்கொண்டு இப்படியே போகும்போது, என் மகள் ஒன்றாம் வகுப்பிற்கு அப்படியே போய்விடுவாள்,' என்று சொல்லிவிட்டு லேசாகச் சிரித்தார்.

‘தொலைதூரக்கல்வியில் எம்.ஏ. பயின்றபோது எனது ஆசிரியர், இந்திய விடுதலைப்போரில் முஸ்லீம்களின் பங்கு' என்ற கேள்வி வந்தால் சாய்ஸில் விட்டுவிடுங்கள். அப்படி யாரும் பங்களிப்பு செய்யவில்லை என்றார். ஆனால் என் பெரியப்பா மற்றும் தாத்தா சுதந்திரத்திற்காக கள்ளுக்கடை மறியலில் சிறையில் அடைக்கப்பட்டது எனக்கு நினைவுக்கு வந்தது. அப்போதுதான் ஙிடணி டிண் தீடணி ஊணூஞுஞுஞீணிட் ஊடிஞ்டtஞுணூண் என்ற நூலைத்தேடிப் படித்தேன். அதில் என்னுடைய தாத்தா அப்துல் மஜித் பெயர் இடம்பெற்றிருந்தது. அப்போதுதான் வரலாற்றின் மீது ஒரு பிடிப்பு ஏற்பட்டு அதுவே வாழ்க்கையானது.

தினமும் பாளையங்கோட்டை தெற்குபஜாரில் உள்ள பழைய புத்தகக்கடைக்கு சாயங்காலம் போய்விடுவேன். 1986 இல் இருந்து போய்க்கொண்டிருக்கிறேன். இந்தப் பழக்கம் நான் கல்லூரியில் படித்துக்கொண்டிருந்தபோது உருவானது. விடுதியில் உள்ள பணக்கார மாணவர்கள் படித்துவிட்டு தூரப்போட்ட வார இதழ்களைச் சேகரித்து பழையப் புத்தகக்கடையில் எடைக்குப் போடுவேன். அதில் கிடைத்த 2 ரூபாயை செலவுக்கு வைத்துக்கொள்ளுவேன். இந்த பழக்கம் என்னை புத்தக வாசிப்புக்குள் இழுத்துக் கொண்டு போய்விட்டது, இன்றும் புதியதாக பழைய புத்தகங்கள் வந்தால் என்னைத் தொடர்பு கொண்டு ‘ஐயா இரண்டு சாக்கு புத்தகம் வந்திருக்கு' என்று சொல்லுவார்கள். அப்படி தேடும்போதுதான் 1760-களில் கல்எழுத்தில் அச்சிட்ட வியாழக்கிழமை புதுமை என்ற நூலும் 1794-இல் ‘ஏ வார் வித் திப்பு' திப்புசுல்தானைப்பற்றி எழுதிய ஆங்கில நூல் உள்ளிட்ட பல நூல்கள் கிடைத்தன.

1996- இல் சென்னை ஆவணக்காப்பக நூலகத்தில் இரண்டு கட்டு நூல்களைத் தந்தார்கள். அந்தக் கட்டைப் பிரித்து சுதந்திரப் போராட்ட வீரர் வ.உ.சி எழுதிய ‘அழகும் ஆரோக்கியமும்' தொடர் கட்டுரையைத் தேடினேன். ஏற்கனவே தமிழ்நாடு முழுவதும் பழைய புத்தகக்கடைகளில் தேடி இரண்டு தொடர்கள் எடுத்துவிட்டேன். மூன்றாவது தொடரைத் தேடித்தான் ஆவணக்காப்பகத்திற்கு வந்தேன். எப்படியாவது கண்டெடுத்து விடவேண்டும் என்ற ஆசையில் ஒவ்வொரு நூலாகப் பார்த்துக் கொண்டு வந்தேன். ஏமாற்றமே மிஞ்சும் என்றுதான் நினைத்தேன். ஆனால் ‘அழகும் ஆரோக்கியமும்' மூன்றாவது பகுதி கிடைத்தது. எனக்குப் புதையல் கிடைத்த மகிழ்ச்சி. அதுவரை அச்சில் வராத இந்த நூலைப் பதிப்பித்தேன். இன்றும் பல்வேறு திருமண நிகழ்ச்சிகளில் அந்த நூலை  அச்சிட்டு இலவசமாக வழங்கி வருகிறார்கள். இதேபோல். சதாவதானி செய்குதம்பி பாவலரின் ‘நபிகள் நாயக மான்மிய மஞ்சரி', 'ஷம்சுத்தா

சின் கோவை', வுசியின் ‘அரசியல் பெருஞ் சொல்', ‘அழகும் ஆரோக்கியமும்', ‘துன்பத்தின் கற்பனை' மற்றும் அவரின் பாடல்கள் போன்றவற்றைப் பதிப்பித்தேன்.

வரலாற்றை எழுதுவதில் மிகவும் கவனமாக இருப்பேன். வலுவான ஆதாரமின்றி எந்த செய்தியையும் எழுதியதில்லை. உதாரணத்திற்கு ஒன்று சொல்கிறேன். ஔரங்கஜேப் பற்றி தொடர் கட்டுரை ஜமாஅத்துல் உலமா இதழில் எழுதும்போது ‘ஔரங்கசீப்' என்றுதான் முதலில் எழுதினேன். அப்போது வேலூரிலுள்ள ஒரு ஹஸ்ரத் ஔரங்கசீப் அல்ல ஔரங்கஜேப் என்றும் அதன் அர்த்தம் அழகிய அரிய சிம்மாசனம். என்று விளக்கினார். அதன்பிறகு ஔரங்கஜேப் என்றே தலைப்பிட்டேன். ஔரங்கஜேப் மீது சுமத்தப்பட்ட 11 குற்றச்சாட்டுகளுக்குப் பதிலை அந்த நூலில் விளக்கியுள்ளேன். முதலில் இந்த நூலை எனது சொந்தப்பதிப்பாகதான் வெளியிட்டேன்.

பின்னர் விகடன் பிரசுரம் மூன்று பதிப்புகள் கொண்டுவந்தது. தற்போது ஐந்தாவது பதிப்பாக ஐஎப்டி வெளியிட்டுள்ளது. அதேபோல ‘மாலிக்காபூர்' நூலை முதல் பதிப்பாக என் சொந்தப்பதிப்பாகக் கொண்டுவந்தேன். பிறகு ஆனந்தவிகடன் மூன்று பதிப்பு வெளியிட்டது.

இன்னும் நிறைய நூல்கள் மறுபதிப்பிற்குச் சென்றிருக்கலாம். எனக்கு தெரியவில்லை. இப்போதுதானே எனது நூல்கள் அரசுடமையாக்கப்பட்டிருக்கிறது. ஆனால் எனது நூல்களை யார் பயன்படுத்தினாலும் எப்போதும் யாரிடமும் கேட்டதில்லை. யார் வேண்டுமானாலும் பதிப்பித்துக் கொள்ளுங்கள் என்ற மனப்பாங்கில்தான் இருந்தேன். ஆனால் இயற்கையாகவே எல்லோரும் பதிப்பிக்கும்படி நடந்துவிட்டது.

ஒருங்கிணைந்த நெல்லை மாவட்டத்தில் . ரா.பி.சேதுபிள்ளை முதல் நெல்லைகண்ணன் வரைக்கும் மறைந்த பின்புதான் அவர்களது நூல்கள் அரசுடமையாக்கப்பட்டிருக்கிறது.அடியேனுக்கு மட்டும்தான் வாழும் காலத்திலேயே நடந்தது எனக்கு பெருமைதான்,' என்று  சொல்லிக்கொண்டே தன் அருகில் வைத்திருந்த தண்ணீரை ஒரு மடக்குக் குடித்தார் செ.திவான். வாழ்த்துக் கூறி விடைபெற்றோம்.

பிப்ரவரி, 2023.

Related Stories

No stories found.
logo
Andhimazhai
www.andhimazhai.com