பி. சுசீலா
பி. சுசீலா

இசையரசி -2

பி.சுசீலா- ஒரு சாதனை சரித்திரம்

Voice of P Susila is so clear,

Her songs – I’m eager to hear.

Melodies ‘re up to a standard

As a songstress – she’s branded

Her lullaby songs has a fine tone,

Keeps me relaxed when I’m alone.

When she hums – I’m spellbound,

I like the tempo in every sound.

Her sad hits ‘re heartrending.

My liking for her songs is never-ending.

Live concerts of P Susila has a power

Every song is a Blossomed Flower,

Singing Style is her own,

The Crooning Queen who’s WELL KNOWN.

- ஸ்ரீ லங்காவைச் சேர்ந்த திரு. எம். ரெஸ்வி ஒமேர்தீன் (Mr. Rezvie Omerdeen) அவர்கள் தனது வலைப்பூவில் வரைந்த ஆங்கிலக் கவிதை

சென்னை திருவல்லிக்கேணியில் சுசீலாவின் மூத்த சகோதரி திருமணமாகி கணவருடன் வசித்து வந்தார்.

அவரது இல்லத்தில் தந்தையும் மகளும் வந்து தங்கினர்.

இசைக் கல்லூரியில் படித்துக்கொண்டிருந்த போதே அகில இந்திய சென்னை வானொலி நிலையத்தில் பாப்பா மலர் நிகழ்ச்சியில் ஒலிபரப்பான நிகழ்ச்சிகளில் பாடும் வாய்ப்புகள் குடும்ப நண்பர் ஞாயப்பட்டி ராகவராவ் என்பவற்றின் மூலமாகக் கிடைத்தன.

 கிடைத்த வாய்ப்புகளை விடாமல் பயன்படுத்திக் கொண்டார் பி. சுசீலா.

இள வயதில் இசை அரசி.
இள வயதில் இசை அரசி.

வருடம் 1951 .

இசையமைப்பாளர் திரு. பெண்டியாலா நாகேஸ்வரராவ் அவர்கள் தமிழ் தெலுங்கு ஆகிய இருமொழிகளில் தயாராகவிருந்த தான் இசை அமைக்கும் புதிய படத்தில் புதிய பெண் குரல் ஒன்றை அறிமுகப்படுத்த நினைத்தவர் சென்னை வானொலி நிலையத்தாரை அணுகி “நன்றாகப் பாடத்தெரிந்த பெண் யாராவது இருந்தால் சொல்லுங்கள்” என்று கேட்டுக்கொண்டார்.

வானொலி நிலையத்தார் பாப்பா மலரில் பாடிக்கொண்டிருந்த ஐந்து இளம் பாடகிகளின் பெயர்களைப் பரிந்துரைத்தனர்.

“அவர்களை அடுத்த நாள் ஆடிஷனுக்கு அனுப்பி வையுங்கள். வாய்ஸ் டெஸ்ட் செய்து ஒருவரை செலெக்ட் செய்துகொள்கிறேன்” என்று பெண்டியாலா கூற ..

அந்த ஐவருக்கும் தகவல் அனுப்பப்பட்டது.  அந்த ஐவரில் சுசீலாவும் ஒருவர்.

ஆனால்.. அவரது தந்தைக்கோ மகள் சினிமாவில் பாடகியாக ஆவதில் ஆரம்பத்தில் விருப்பமே இல்லை.

“எம்.எஸ். சுப்புலட்சுமி மாதிரி கர்நாடக இசையிலே மிகப்பெரிய மேதையாக வரணும்னு நான் ஆசைப்பட்டுக்கொண்டு இருக்கேன். சினிமா பாட்டெல்லாம் வேண்டாம்” என்றார் முகுந்தராவ்.

ஆனால் மகளுக்கோ சினிமாவில் பாட விருப்பம் இருந்தது.

அருமை மகளின் ஆசைக்கு குறுக்கே நிற்க முகுந்தராவ் விரும்பவில்லை.  அதற்குக் காரணம் இருந்தது. பள்ளியில் படிக்கும் காலத்திலேயே – சிறு வயதிலேயே தனது தாயை இழந்துவிட்டார் பி.சுசீலா.  ஆகவே அலாதிப் பாசம் வைத்து மகளை அருமையாக வளர்த்து வந்தார் முகுந்தராவ்..

“பாவம் தாயில்லாப் பொண்ணு.  அவ ஆசைக்கு நாம ஏன் குறுக்கே நிக்கணும்? ஆடிஷனுக்குப் போயிட்டுதான் வரட்டுமே.” என்று அரை மனதாக அனுப்பி வைத்தார் அவர்.

மறுநாள் காலை பிரகாஷ் ஸ்டூடியோவில் குரல் தேர்வில் கஜேந்திர மோக்ஷத்தில் இருந்து ஒரு சமஸ்கிருத ஸ்லோகத்தை விருத்தமாக சுத்தமான கர்நாடக சங்கீதத்தில் பாடினார் சுசீலா.  அவரது குரலில் வெளிப்பட்ட சங்கதிகள், உணர்வு பூர்வமான சுநாதம் பெண்டியாலாவை மிகவும் கவர்ந்துவிட குரல் தேர்வில் தேர்வானார் சுசீலா.

இசை அரசியை அறிமுகப்படுத்திய 
பெண்டியாலா நாகேஸ்வரராவ்
இசை அரசியை அறிமுகப்படுத்திய பெண்டியாலா நாகேஸ்வரராவ்

விளைவு..  பெண்டியாலா  நாகேஸ்வரராவ் அவர்கள் இசையில் 1953-இல் இரு மொழித் தயாரிப்பாக வெளிவந்த “பெற்ற தாய்” (தெலுங்கில் “கன்ன தல்லி”) என்ற படத்தில் கவிஞர் எம்.எஸ். சுப்பிரமணியம் எழுதிய “ஏதுக்கு அழைத்தாய் ஏதுக்கு” என்ற டூயட் பாடலை ஏ.எம். ராஜா அவர்களுடன் இணைந்து பாடியபடி தென்னகத் திரை உலகில் வலது காலெடுத்து வைத்து  இசைப்பயணத்தை தொடங்கினார் பி.சுசீலா

படத்தில் இரண்டாவது கதாநாயகனாக வரும் எம்.என். நம்பியாரும், டி.டி. வசந்தாவும் இணைந்து பாடும் பாடல் இது.  அந்த வகையில் பி. சுசீலாவின் குரலுக்கு இரு மொழிகளிலும் வாயசைத்து நடித்த முதல் நடிகை டி.டி. வசந்தாதான்.

பாடல் இன்றும் யு-டியூபில் காட்சியாகக் காணவும் கேட்கவும் கிடைக்கிறது.

(2985) P SUSEELA'S FIRST SONG--Ethukku azhaithaai ethukku(vMv)--PETRA THAAI 1953 - YouTube

முதல் பாடலிலேயே நமது இசை அரசியின் திறமை சுடர்விடுகிறது.  குரலில் எத்தனை பாவங்கள்.

இந்தப் பாடலைப் பாடும்போது அவருக்கு தமிழில் சுத்தமாக ஒரு வார்த்தை கூட தெரியாது.  சென்னை வந்தும் இசைக்கல்லூரியில் படித்தும் கூட அவர் தமிழ் பேசவே தெரியாமல் இருந்தார்.  இயல்பாகவே யாருடனும் அதிகம் பேசாத சுபாவம் கொண்ட அவர் வகுப்பில் தான் உண்டு தன் பாடல் உண்டு என்று இருந்தவர்.

இந்தப் பாடலுக்கு இசை அமைத்த பெண்டியாலா அவர்களும் ஆந்திரத்தை சேர்ந்தவர் என்பதால் சரளமாகத்  தெலுங்கில் பி. சுசீலாவுடன் உரையாடி அவருக்குப் பயிற்சி அளித்தார்.

முதலில் “எந்துக்கு பிலிச்சேவு எந்துக்கு” என்று தெலுங்கில் பாடும்போது காட்சி அமைப்பும் பாடலும் இலகுவாக மனதில் பதிந்த காரணத்தால் தாய்மொழியில் சரளமாகப் பாட அவரால் முடிந்தது.

அதே காட்சி அமைப்புக்குத் தமிழில் பாடும்போது  பாடல் வரிகளை தெலுங்கில் எழுதி வைத்துக்கொண்டு பாடினாலும் உச்சரிப்பில் – வார்த்தைகளைக் கொஞ்சம் கூடக் கடித்துத் துப்பாமல் – சரியான உச்சரிப்புடன் பாடவேண்டும்  என்பதில் அன்றே அவர் காட்டி இருக்கும் உள்ளார்ந்த ஈடுபாடு இன்றைய வேற்று மொழிப் பாடகர்கள் அவசியம் கற்றுக்கொள்ள வேண்டிய ஒன்று.

அதே வருடம் வெளிவந்த இன்னொரு படம் பி. பானுமதியின் தயாரிப்பு, இயக்கத்தில் வெளிவந்த “சண்டி ராணி”.

படத்தின் இசை அமைப்பாளர் பிறவி இசை மேதை சி.ஆர்.சுப்பராமன்.

பாடல்களுக்கான இசைக் கோர்வைகளை எல்லாம் தயார் செய்து விட்ட சி.ஆர். சுப்பராமன் “அன்பாய் தேசமெங்கும் ஒன்றாய்க் கூடி” என்ற கே.டி. சந்தானம் அவர்கள் எழுதிய பாடலைத் தானே பாடிப் பதிவும் செய்துவிட்ட நிலையில் சற்றும் எதிர்பாராத விதமாக நேர்ந்த அவரது அகால மரணம் அனைவரையும் ஸ்தம்பிக்க வைத்துவிட்டது. (தெலுங்கில் இந்தப் பாடலை ஏற்கெனவே கண்டசாலா – ஏ.பி. கோமளா இணைந்து பாடி இருந்தார்கள்.)

அந்தப் பாடலை நீக்கவும் முடியாது. ஏனென்றால் காட்சி அமைப்பின் படி நாட்டின் அரசர் இரவில் மாறுவேடம் தரித்து நகர்வலம் வரும்போது மக்கள் சந்தோஷமாக ஆடிப்பாடுவதைக் கண்டும் கேட்டும் மனம் நிறைவடையும் காட்சி.

சி.ஆர். சுப்பராமன் விட்டுச் சென்ற பணியைப் பூர்த்தி செய்யும் நோக்கத்தில் அவரது அருமைச் சீடர்கள் விஸ்வநாதன் – ராமமூர்த்தி மற்ற பாடல்களுக்காக அவர் விட்டுச் சென்றிருந்த இசைக் கோர்வைகளின் படியே இசை அமைத்தார்கள்.

சி.ஆர்.சுப்பராமன் பாடி இருந்த பாடலுக்காக இணைப்பிசையில் பெண் குரலின் ஹம்மிங் தேவைப்பட பி.சுசீலாவை அந்தப் பாடலுக்காக ஹம்மிங் செய்ய வைத்தார்கள்.

மெல்லிசை மன்னரின் இசையில் பி. சுசீலா முதல் முதலாக ஹம்மிங்தான் பாடினார்.  சரியாக எட்டு நொடிகள் மட்டுமே நம் செவிகளில் தேன் பாயவைக்கும் அந்த ஹம்மிங் கேட்பவரின் மனங்களை நிறைத்து விடத் தவறாது.

தொடர்ந்து அதே வருடம் வெளிவந்த படம் “அன்பு.”

இந்தப் படத்தில் இசை அமைப்பாளர் டி.ஆர்.பாப்பா அவர்கள் இசையில் “என்ன என்ன இன்பமே வாழ்வினில் எந்நாளும்” என்ற பாடலைப் பாட வாய்ப்பு கிடைத்தது.

ஆனால் பாடச் சென்றவரை அவரது தமிழ் உச்சரிப்பு திருப்திகரமாக இல்லை என்று திருப்பி அனுப்பிவிட்டார் டி.ஆர். பாப்பா.

(பின்னாளின் இதே டி.ஆர். பாப்பா - தான் இசை அமைத்த படங்களில்  முதல் பாடலை எப்போதும் பி.சுசீலா அவர்களையே பாடவைத்துப் பாடல் பதிவைத் தொடங்குவதை வழக்கமாகக் கொண்டார்  என்பது குறிப்பிடப்பட வேண்டிய விஷயம்!)

அடுத்த 1954 ஆம் ஆண்டு தெலுங்கிலும் சுசீலாவை வெற்றிப்படிகளில் மெதுவாகத்தான் ஏற வைத்தது.

அறிமுகப்படுத்திய பெண்டியாலாவின் இசையில் கூட சுசீலா இந்த வருடம் அதிகம் பாடவில்லை.

அதே நேரத்தில் அவருக்கு ஒரு திருப்புமுனையான ஆண்டாக இந்த வருடம் அமைந்தது.  இந்த வருடத்தில்தான் புகழ் பெற்ற ஏ.வி.எம். நிறுவனத்தில் பாடகியாக மூன்று வருட ஒப்பந்த முறையில் பாட வந்தார் பி. சுசீலா.

அவருக்கு தமிழ் உச்சரிப்பு சரியாக அமைய வேண்டும் என்ற நல்ல எண்ணத்தில் திரு.ஏ.வி.எம். அவர்கள் லட்சுமி நாராயணன் என்ற தமிழ் ஆசிரியரை நியமித்து அவரிடம் பி. சுசீலாவை தமிழ் மொழியைக் கற்றுக்கொள்ள வைத்தார்.

எந்த எந்த வார்த்தையை எந்த எந்த முறையில் எப்படி எப்படி உச்சரிக்க வேண்டும் என்று லட்சுமி நாராயணன் கற்றுக்கொடுக்க அதை நன்றாகக் கவனித்து உள்வாங்கிக்கொண்டார் பி. சுசீலா.

சுதர்சனம் மாஸ்டர் – கோவர்த்தனம் மாஸ்டர் இருவரின் இசையில் வெளியான ஏ.வி.எம். நிறுவனத் தயாரிப்பான  “பேடர கண்ணப்பா” என்ற ராஜ்குமார் நடித்த கன்னடப் படத்தில் ஒரு பாடலைப் பாடி கன்னடத் திரை உலகிலும் தனது கணக்கை ஆரம்பித்தார் பி. சுசீலா.  இந்தப் படத்தை  “வேடன் கண்ணப்பா” என்ற பெயரில் தமிழில் மொழிமாற்றம் செய்து ஏ.வி.எம். வெளியிட அதிலும் ஒரு பாடலைப் பாடினார் பி.சுசீலா.  “காளஹஸ்தி மகாத்மியம்” என்ற பெயரில் தெலுங்கில் ரீ-மேக் செய்யப்பட மேலும் ஒரு பாடல் சுசீலாவின் கணக்கில் சேர்ந்தது.

தொடர்ந்து ஏ.வி.எம். தயாரித்த “பெண்” படத்தில் “வாள்முனையிலே சக்தியினாலே உலகம் செய்வோம்” என்ற ஒரே ஒரு பாடலை டி.எஸ்.பகவதி, எம்.எஸ். ராஜேஸ்வரி ஆகியோருடன் இணைந்து பாடினார். ஆனால் இதன் தெலுங்குப் பதிப்பான “சங்கம்” படத்தில் நான்கு பாடல்கள் இவருக்கு.

தொடர்ந்து ஏ.வி.எம். நிறுவனத்தின் “செல்லப்பிள்ளை” படத்தில் “ஆராரோ ஆராரோ ஆ...ரா...ரோ” என்று தொடங்கும் பாடலை இரண்டு ஆண் பாடகர்களுடன் இணைந்து பாடினார் பி.சுசீலா.

(2985) Chella Pillai 1955 -- Araaro Araaro - YouTube

ஒருவர் ஏ.எல்.ராகவன். மற்றவர் அறுபது முதல் எண்பதுகளின் இறுதிவரை அவரது இணைக்குரலாக விளங்கிய டி.எம்.சௌந்தரராஜன்.

(இசையின் பயணம் தொடரும்..)

முதல் அத்தியாயம்: இசையரசி

Related Stories

No stories found.
logo
Andhimazhai
www.andhimazhai.com