
" கவிதைகள் தடைசெய்யப்படுகின்றன
கட்டியக்காரனின்
தண்டோரா முழங்கியது
இதனால் எல்லோருக்கும்
தெரிவிக்கப்படுவது என்னவென்றால்
அரசின் ஆணைப்படி
இனி
சிந்தனைகள்.... படுகின்றன.
புதிய சிந்தனைகளில்
எமது பழம் பெருமைகளும்
பாரம்பரிய நம்பிக்கைகளும்
சிதைந்து சிதிலமாகிப் போகின்றன.
.... ..... ....."
- கனிமொழி (கனவு இதழ் 31)
இடம்பெயர்ந்து வாழும் இலக்கியவாதிகளும் இலக்கிய ஆர்வலர்களும் தம் கருத்துக்களையும் எண்ணங்களையும் மற்றவர்களிடம் கொண்டு சேர்க்க சிற்றிதழ் கருவியாகப் பயன்படுகிறது. புலம்பெயர்ந்து வாழும் ஈழத் தமிழர்கள் பல சிற்றிதழ்களை நடத்துவதைப் போல இந்தியாவின் பிற மாநிலங்களில் வேலை பார்க்கும் தமிழகத் தமிழர்களும் பல சிற்றிதழ்களை நடத்தி வருகின்றனர். இப்படி,ஆந்திர மாநிலத்தில் செகந்திரபாத்தில் வேலை பார்த்துக் கொண்டிருந்த எழுத்தாளர் சுப்ரபாரதிமணியனும் 'கனவு' எனும் காலாண்டிதழை கொண்டு வந்தார். 1987 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் இதழ் வெளிவந்தது.
32 பக்கத்தில் ஐந்து ரூபாயில் வெளிவந்தது.ஆந்திர மாநிலத்திலிருந்து தமிழுக்கு நல்ல இலக்கியத்தைக் கொண்டு வரும் நோக்கத்துடன் தொடங்கியதாகக் கூறுகிறார் எழுத்தாளர் சுப்ரபாரதிமணியன். 1987 ஆம் ஆண்டு முதல் செகந்திரபாத்திலிருந்து வெளிவந்து கொண்டிருந்த கனவு இதழ் 1993 ஏப்ரலிலிருந்து திருப்பூரிலிருந்து வெளிவந்து கொண்டிருந்தது.கடந்த 18 ஆண்டுகளாக வெளிவந்து கொண்டிருக்கும் கனவு இதுவரை 55 இதழ்கள் வெளிவந்துள்ளன. காலாண்டிதழ் என்றாலும் குறிப்பிட்ட காலத்தில் வராமல் எண் வழி இதழாக வந்து கொண்டிருக்கிறது.
கவிதைகள், சிறுகதைகள் , கட்டுரைகள், நேர்காணல்கள், மொழிபெயர்ப்புகள், விமர்சனங்கள்,போன்றவை இடம்பெற்று வருகின்றன. நவீன இலக்கியம் மட்டுமல்லாது நவீன நாடகங்கள் ,குறும்படங்கள் , திரைப்படங்கள் ,குறித்தும் முக்கியமான கட்டுரைகள் வெளியாகி வருகின்றன.
இரா.நடராசன் , யமுனா ராஜேந்திரன் , தேவதேவன் , கனிமொழி,ஜெயமோகன் , பாவண்ணன் , சிபிச்செலவன், பா.சத்தியமோகன், சு.வேணுகோபால்,செந்தூரம் ஜகதீஷ்,எஸ்.செந்தில்குமார், ப்ரிதிபா ஜெயசந்திரன் , அன்பாதவன் மதியழகன் சுப்பையா, வளவதுரையன், இளஞ்சேரல் , பாலைநிலவன், விக்கிரமாதித்யன் , யவனிகாஸ்ரீராம் , தமிழ்நாடன், மகுடேஸ்வரன், புவனராஜன், பாலா என அனைத்து தரப்பை சார்ந்த படைப்பாளிகளின் ஆக்கங்களுடன் சுப்ரபாரதிமணியன் ஆக்கங்களும் கனவில் இடம்பெற்று வருகின்றன.
பாலும§¸ந்திரா, யமுனா ராமசந்திரன், பொன்னீலன் போன்றோரது நேர்காணல்களும் 'இந்து முஸ்லிம் பிரச்னையும் சினிமா எனும் காட்சி ஊடகமும்' (யமுனாராஜேந்திரன் இதழ் 41), 'பின் நவீனத்துவம் வளர்ச்சியடைந்து முதலாளித்துவத்தின் காலச்சார தர்க்கம்' பிரடெரிக் ஜேம்ஸனுடன் ஸ்டுவர்ட் ஹால்' (தமிழில் கேயார், இதழ் 41), ' மலைகளின் பாடல்' (சுப்ரபாரதிமணியன் , இதழ் 51) போன்ற பல முக்கியமான கட்டுரைகளும் கனவில் இடம்பெற்றுள்ளன.
பல சிறப்பிதழ்களையும் கனவு வெளியிட்டிருக்கிறது. சினிமா நூற்றாண்டும் சிறப்பிதழ்கள் 5 ( 41 முதல் 44 வரை 5 இதழ்கள்), தெலுங்கு கவிதைகள் சிறப்பிதழ், நவீன கன்னடக் கவிதைகள் சிறப்பிதழ், மலையாளக் கவிதை சிறப்பிதழ், சுந்தரராமசாமி சிறப்பிதழ், அசோகமித்திரன் சிறப்பிதழ், நோபல் பரிசுப் பெற்ற எழுத்தாளர் கதைகள் சிறப்பிதழ், இலங்கை சிறப்பிதழ், புலம்பெயர்ந்தோர் சிறப்பிதழ் 3 , சிறுகதை சிறப்பு இதழ்கள் 2 , என பல முக்கியமான சிறப்பிதழ்கள் வெளிவந்திருக்கின்றன.
கனவு இலக்கிய வட்டத்தின் சார்பில் மாதாந்திர கூட்டங்கள் நடத்தபப்ட்டு வருகின்றன. இதுவரைக்கும் ஏறக்குறைய 500 கூட்டங்கள் நடத்தப்பட்டிருக்கின்றன. உலகத்தில் திரைப்படங்கள் திரையிடம் நிகழ்ச்சிகளும் நடைபெற்று வருகின்றன.
இத்தகைய தீவிர செயற்பாட்டின் காரணமாக சில முக்கியமான பரிசுகளையும் கனவு இதழ் பெற்றிருக்கிறது. கி.ராஜநாராயாணனின் 80வது பிறந்தநாள் விழாவையொட்டி கனவு இதழுக்கு கரிசல் அறக்கட்டளை பரிசு வழங்கப்பட்டிருக்கிறது. தமிழ்ச்சிற்ப இதழ்கள் சங்கத்தின் (தாஸ்னா) ஏழாவது ஆண்டு விழாவில் சிறந்த சிற்றிதழுக்கான (மூன்றாவது பரிசு) பரிசு கனவுக்கு அளிக்கப்பட்டது குறிப்பிடத்தகக்து.
ஆசிரியர் பற்றி...
தற்போது திருப்பூரில் வசித்துவரும் எழுத்தாளர் சுப்ரபாரதிமணியன் BSNL- SUBDIVISIONAL ENGINEER ஆக பணியாற்றி வருகிறார்.' சாய்த்திரை' , 'தேநீர் இடைவேளை', 'சமையலறை கலையங்கள்' உள்ளிட்ட 6 நாவல்களும் ,'தொலைந்து போன கோப்புகள் உள்ளிட்ட 14 சிறுகதை நூல்களும் ,2 குறுநாவலும்' 1 நாடகமும் , 3 கட்டுரை நூல்களும் , எழுதியிருக்கிறார். உலகத்திரைப்படங்கள் குறித்துப் பல முக்கியமான கட்டுரைகள் எழுதியுள்ளார்.
இவரது 'சாயத்திரை ' நாவல் ஆங்கிலத்திலும் இந்தியிலும் மொழிபெயர்க்கப்பாட்டிருப்பது குறிப்பிடத்தìகது. 'கனவு' வெளியீடாக சில முக்கியமான புத்தகங்களையும் வெளியிட்டிருக்கிறார்.
நவீன கலை இலக்கியத்தளத்திலும் முக்கியமான இதழாக தீவிரத் தேடலுடன் வெளிவந்து கொண்டிருக்கிறது ' கனவு'.
செப்டம்பர் 01, 2006