
" .... .... .... ...
தாத்தா காலத்திலிருந்து
தொடர்ந்து நடந்தது.
ரெண்டு சாதி சண்டையினால்
நின்று போச்சு பண்டிகை
வருஷம் அஞ்சாயிடுச்சு
விவாதம் முடியல்ல
மாரியம்மனை பார்த்தாலே
மனசு துடிதுடிக்குது
மக்கள் குறை தீர்ப்பதில்
மகா சக்தி படைத்தவளே
வேண்டிய வரம் தருகின்ற
வீரியம் கொண்டவளே
எங்க கோரிக்கையெல்லாம்
ஒண்ணே ஒண்ணுதான்
உன் திருவிழா நடத்த
ஒரு வழிகாட்டு தாயே! ".
(பொன்குமார் - மெய்யறிவு ஆகஸ்ட் 2006)
தமிழ்ச்சூழலில் இலக்கியத்துக்காகவும் , அரசியல் கொள்கைக்காகவும் பல சிற்றிதழ்கள் வந்து கொண்டிருக்கின்றன. ஆனால் நாத்திகச் சிந்தனையை மையப்படுத்தி ஒரு சில இதழ்களே வெளிவந்து கொண்டிருக்கின்றன.அவற்றில் குறிப்பிடத்தகக்து 'மெய்யறிவு' மாத இதழ். முதல் இதழ் செப்டம்பர் 2003ல் வெளிவந்தது. இதன் ஆசிரியர் , கவிஞர் குடந்தையான் , இணை ஆசிரியர் , டாக்டர் சரோஜா.
ஆரம்பத்தில் 24 பக்கத்தில் 5.00 ரூபாயில் வெளிவந்தது. தற்போது அதே அளவில் 10.00 ரூபாயில் வளிவந்துகொண்டிருக்கிறது.
கவிதை , சிறுகதை ,கட்டுரை , நூல்விமர்சனம் ஆகியவை இடம் பெற்று வருகின்றன. இவ்விதழில் இடம்பெற்று வரும் படைப்புகள் அனைத்தும் சமூக விழிப்புணர்வைத் தூண்டும் விதமாகவே அமைந்துள்ளன.
" மூடநம்பிக்கையொழிப்பு , பகுத்தறிவுச் சிந்தனைகளைப் பரப்புதல், கடவுள் நம்பிக்கை , அது தொடர்பான மூட நம்பிக்கைகள் , வருணாசிரம பகுப்புகள் போன்ற கொடிய நோய்களைப் போக்குவதே மெய்யறிவின் நோக்கம். முக்கியமாக நோய்க்குக் காரணமானவர் யார் ? இந்த நோய் எதனால் ஏற்பட்டது என்றெல்லாம் சொல்லிக் கொண்டிருக்காமல், இருக்கும் நோயை தீர்ப்பதற்கான மருந்துகளைக் கொடுப்பதும் ,அந்த நோய் மற்றவர்களுக்கு வராமல் தடுப்பதுமே மெய்யறிவின் பணி ", என்கிறார் ஆசிரியர் குடந்தையான்.
பழனி எழில்மாறன் , டாக்டர் சரோஜா, கலையரசு, காவிரிச் செல்வன் , பெரணமல்லூர் சேகரன் , போன்றோரது படைப்புகள் இவ்விதழில் மெய்யறிவு என்பது உண்மையான அறிவு.
எப்பொருள் யார் யார் வாய்க்கேட்பினும் அப்பொருள்
மெய்பொருள் காண்ப தறிவு
எனும் வள்ளுவர் கூற்றுக் கேற்ப யார் எந்தக் கருத்தைக் கூறினாலும் அவற்றிலுள்ள பொய்மை நீக்கி உண்மைதனைக் கண்டறிவதே மெய்யறிவு என இதழுக்கான பெயர்க்காரணத்தை கூறுகிறார் ஆசிரியர்.
"அறிவை முதன்மைப்படுத்துவோம்!
மனிதர்களை ஒருங்கிணைப்போம்!"
எனும் கொள்கையை நோக்கமாகக் கொண்டு செயல்படுகிறது மெய்யறிவு.
இவ்விதழில் வெளியாகும் 'சித்தர்களைப் பற்றி சிந்திக்கிறேன் ' எனும் கலையரசுவின் தொடர்கட்டுரை சித்தர்களின் சித்து விளையாட்டுகள் குறித்த கட்டுக்கதைகளை உடைக்கிறது.
' தத்துவச் சிறைகளில் மனிதர்கள் ' எனும் காவிரிச் செல்வனின் தொடர்கட்டுரை , கடவுள் என்பது உண்மையா? என விஞ்ஞான பூர்வமான கருத்துக்களை ஆதாரப்பூர்வமான பேசுகிறது.
முன் பக்க - பின்பக்க அட்டையும் கூட ஏதோவொரு உண்மைச் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு வெளியாகிறது.
ஆசிரியர் குறிப்பு
65 வயதாகும் கவிஞர் குடந்தையான் , இதுவரை ஆய்வுக் கட்டுரைகள் , நாவல்கள் , கவிதை , சிறுகதை என 30 நூல்கள் வெளியிட்டிருக்கிறார். போக்குவரத்துத் துறையில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவர் தற்போது செயில் வசித்து வருகிறார். இந்த வயதிலும் தொடர்ந்து சமூகப் பணியாற்றிக் கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
' மெய்யறிவு' - சமூக மாற்றத்திற்கான கருவிகளில் ஒன்றாக வெளிவந்து கொண்டிருக்கிறது.
செப்டம்பர் 08, 2006