தமிழ்நாட்டுப் பாடநூல் கழகம் சார்பில் எழுத்தாளர் இமையம் தொகுத்த ‘கலைஞர் படைப்புலகம்’ தொகுப்பு நூலை முதலமைச்சர் ஸ்டாலின் தலைமைச்செயலகத்தில் இன்று வெளியிட்டார்.
பள்ளி, கல்லூரி மாணவர்கள், போட்டித் தேர்வர்கள், ஆய்வாளர்களின் பயன்பாட்டுக்காக தமிழ்நாடு பாடநூல் கழகம் பல்வேறு நூல்களை வெளியிட்டுவருகிறது. இதில் நூற்றாண்டு காணும் அறிஞர்கள், எழுத்தாளர்களுக்குச் சிறப்பு செய்யும்படியாக அவர்களின் நினைவுத் தடங்கள் வெளியிடும் திட்டமும் அடக்கம்.
இதில் இதுவரை பேரா. அன்பழகன், தி. ஜானகிராமன், கி. ராஜநாராயணன், அழ. வள்ளியப்பா ஆகியோரின் நினைவுத்தடங்கள் கடந்த இரண்டு ஆண்டுகளில் வெளியிடப்பட்டுள்ளன.
தொடர்ந்து முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் நூற்றாண்டை முன்னிட்டு அவரது படைப்புகளை ஆய்வுசெய்து எழுத்தாளர் இமையம் ஒரு தொகுப்பு நூலை உருவாக்கினார்.
கலைஞர் படைப்புலகம் எனும் அந்தத் தொகுப்பை முதலமைச்சர் இன்று வெளியிட்டார்.
இதையடுத்து, கு. அழகிரிசாமி, தொ. மு. சி. ரகுநாதன், ராஜம் கிருஷ்ணன், புலியூர் கேசிகன், டி. கே. சீனிவாசன், குன்றக்குடி அடிகள், ஏ. வி. பி. ஆசைத்தம்பி ஆகியோரின் நினைவுதடங்கள் ஒவ்வொன்றாக வெளியிடப்படும் என்று பாடநூல் கழக அதிகாரிகள் தெரிவித்தனர்.