அன்றைய ஆய்வரங்குகளில் தமிழாய்வு!

வகுப்பறை வாசனை பாகம் -2
அன்றைய ஆய்வரங்குகளில்  தமிழாய்வு!
Published on

பல்கலைக்கழகம் என்ற உயர்கல்வி நிறுவனம், சமூகத்தின் ஆன்மாவாக விளங்குகின்றது.  சமூகமாகக் கூடி வாழ்கின்ற மக்களின் வாழ்க்கை வளமடைந்திட அறிவியல், சமூக அறிவியல், கலையியல் சார்ந்த துறைகளில் நடைபெறுகின்ற ஆய்வுகள் அடிப்படையாக விளங்குகின்றன. காலந்தோறும் குறிப்பிட்ட துறை சார்ந்து நடைபெறுகின்ற ஆய்வுகள் பற்றி வெளியிடப்படுகின்ற  ஆய்வுக் கட்டுரைகள் சமூக மாற்றத்தில் முக்கியப் பங்கு வகிக்கின்றன. துறை வல்லுநர்கள் ஒன்றுகூடிய அவையில் வாசிக்கப்படுகின்ற கட்டுரைகள் தனித்துவமானவை. மதுரை பல்கலைக்கழகத் தமிழ்த் துறையில்  வாரந்தோறும் நடைபெற்ற வியாழன் வட்ட  ஆய்வரங்குகளில் ஆய்வாளர்களும் பேராசிரியர்களும் உற்சாகத்துடன் பங்கேற்றுக் கட்டுரைகள் அளித்தனர். அப்பொழுது தீவிரமான தளத்தில் விவாதங்கள் நடைபெற்றன. சடங்குரீதியில் 'ஒப்புக்குக் கட்டுரை வாசித்தல்' என்பது அறவே இல்லை. வியாழன்தோறும் பல்கலைக்கழகத்திலிருந்த மு.வ. அரங்கில் மதியம் நடைபெற்ற ஆய்வரங்கு காத்திரமானது. பல்கலைக்கழகத் தமிழ்த்துறை மாணவர்களுடன், மதுரை பாத்திமா கல்லூரி, லேடிடோக் கல்லூரியில் பயின்ற தமிழ்த்துறை மாணவிகளும் பேராசிரியர்களும் கலந்து கொண்டனர். உண்மையில் சங்கப்பலகை போன்று குறைநிறைகள் அலசி ஆராயப்பட்டன. ஒவ்வொரு வாரமும் வாசிக்கப்பட்ட ஆய்வுக் கட்டுரைகளில் பெரும்பாலானவை புதிய கோணத்தில் பிரச்சினையை முன்வைத்து அலசி ஆராய்ந்தன. முதுகலை மாணவர்களாகிய நாங்கள் கட்டுரையைப் புரிந்திட  முயற்சி செய்தோம்.

ஆய்வாளராகச் சி.மோகன் (சிறுபத்திரிகைக்காரர்) மஞ்சள் சைனா சில்க் ஜிப்பா அணிந்து கவர்ச்சியான தோற்றத்துடன் கட்டுரை வாசித்த காட்சி, மனதுக்குள் பதிவாகியுள்ளது. ஆய்வாளரான ஏ.ஆதித்தன், 'வேற்றுமை என எதுவுமில்லை' என மொழியியல் நோக்கில் வாசித்த கட்டுரை, கடுமையான விவாதத்திற்குள்ளானது. ஏதேனும் அடிதடி நிகழுமோ எனத் தோன்றினாலும் அறிவுப்பூர்வமான விவாதம் மனதுக்கு நிறைவைத் தந்தது. பேராசிரியர்கள் கட்டுரை வாசித்த பின்னர் முதுகலை முதலாண்டு பயிலும் மாணவர்கூட எதிர்ப்பாகத் தனது கருத்தைப் பதிவு செய்யலாம். சின்னப்பையன் என யாரையும் மட்டம் தட்டாத சூழல் நிலவியது. வியாழ வட்டக்    கருத்தரங்கில் பேராசிரியர் சண்முகம் பிள்ளை வாசித்த கட்டுரையை முதுகலை மாணவனான நான் விமர்சித்தபோது, 'சரிதான் அடுத்துத் திருத்தி வெளியிடுகிறேன்' எனச் சொன்ன பெருமித உணர்வு, பேராசிரியர்களில் எத்தனை பேருக்கு இருந்தது?  ஆய்வாளர்களில் பலரும் சண்டைச் சேவலாகக் கொக்கரித்துத் தங்களுடைய கட்டுரைக்குச் சார்பாகக் கிளர்ந்தெழுந்தனர்.

 வியாழன் வட்டக் கருத்தரங்கில் பெரும்பாலும் கடைசி வரிசையில் முதுகலை மாணவர்கள் அமர்ந்திருப்போம். ஒருமுறை என்னருகில் நடுத்தர வயதானவர் வந்து உட்கார்ந்தார். கட்டுரை குறித்து என் வகுப்புத் தோழன் பாலகிருஷ்ணனுடன் பேசிக்கொண்டிருந்தேன். அருகில் அமர்ந்தவர் ஏதோ சொன்னார். எப்.ஐ.பி. யிலிருந்து வந்த கல்லூரிப் பேராசிரியர் என ஊகித்துக்கொண்டவன், அவர் எந்தக் கல்லூரியில் பணியாற்றுகிறார் எனக் கேட்டேன். 'மேலூர் அரசுக் கல்லூரி' என்று பதிலளித்தார். 'அப்ப கவிஞர் அபியை உங்களுக்குத் தெரியுமா? 'மௌனத்தின் நாவுகள்' கவிதைப் புத்தகம், எனக்குப் பிடிக்கும் என்று சொன்னேன். உடன் அவர் ’அது நான்தான்' என்றார். என்னவொரு இனிமையான சந்திப்பு. மனதில் பட்டாம் பூச்சி சிறகடித்தது. கவிஞர் பழமலய், க.பஞ்சாங்கம் போன்றவர்களை அங்குதான் சந்தித்தேன்.

எம்.ஃபிஎல்., மாணவர்கள் பங்கேற்றிடும் புதன் வட்டக் கருத்தரங்கு, நடைபெற்றபோது பேராசிரியர்களும் பங்கேற்றுக் கருத்துரைத்தனர். சில ஆய்வாளர்கள் கட்டுரை வாசித்து முடித்தவுடன் எந்தக் கேள்வியும் இல்லாமல் பேரமைதி நிலவும்.               

பேராசிரியர், பல்கலைக்கழகத்திற்குப் பாடத்திட்டக் குழு, முனைவர் பட்ட வாய்மொழித் தேர்வு போன்ற பணிகள் காரணமாக வருகின்ற பிற பல்கலைக்கழகப் பேராசிரியர்களை அழைத்துவந்து முதுகலை மாணவர்களுக்குச் சிறப்பு உரையாற்றிட  ஏற்பாடு செய்வார். அப்பொழுது முனைவர் பட்ட ஆய்வாளர்களும் எங்கள் வகுப்பில் அமர்ந்து உரையைக் கேட்பார்கள். தங்கள் துறையில் மாஸ்டர் ஆன பல்வேறு தமிழ்ப் பேராசிரியர்களை நேரில் பார்க்கவும் அவர்களுடைய உரைகளைக் கேட்கும் வாய்ப்பு அவரால்தான் கிடைத்தது.

  பேராசிரியர் பல்கலைக்கழக நிதியுதவியுடன் எட்டுநாட்கள் கருத்தரங்கு நடத்தினார். தமிழ் இலக்கிய உலகின் குறுக்கு வெட்டுப் பரப்பினை அறியுமாறு நடத்தப்பட்ட அக்கருத்தரங்கம், மாணவர்களுக்குப் பெரிதும் பயன்பட்டது.

பேராசிரியர் சண்முகம் பிள்ளையின் முயற்சியினால்  தமிழ்த் துறை மாணவர்களுக்காக நடைபெற்ற இருநாள் நாடகப் பயிலரங்கில் நானும் பங்கேற்றேன்.  நாடகப் பயிலரங்கைச் சீனிவாசன், இராமனுஜம் ஆகியோர் திறம்பட  நடத்தினர்.   அப்பயிற்சியில் பங்கேற்பாளராகளில் ஒருவராகக் கலந்துகொண்ட பேராசிரியரின் செயல்பாடு, எனக்கு வழிகாட்டியாக விளங்கியது. பயிலரங்கின் நிறைவாக இரு குறு நாடகங்கள் அரங்கேற்றப்பட்டன. ஒரு நாடகத்தில் நான் வில்லனாக நடித்தேன்.

 ( தொடரும்)

 வகுப்பறை வாசனை- இரண்டாம் பாகம் -1

 வகுப்பறை வாசனை- இரண்டாம் பாகம் -2

வகுப்பறை வாசனை- இரண்டாம் பாகம் -3

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடரFacebookTwitterYoutubeInstagram

logo
Andhimazhai
www.andhimazhai.com