
அமெரிக்கா விதித்துள்ள தடைகள், அபராத வரிகள் போன்றவற்றால் ரசியாவுக்குச் செல்லும் இந்தியப் பணியாளர்களின் எண்ணிக்கை 60 சதவீதமாக அதிகரித்துள்ளது.
உக்ரைன் போரையடுத்து இந்தியப் பணியாளர்களுக்கு குறிப்பாக புளூகாலர் வகை பணிகளுக்கு ரசியா இன்னொரு அரபு நாடாக உருவெடுத்துள்ளது. இந்த ஐரோப்பிய-ஆசிய நாட்டில் திறம்பட்ட வெல்டர்கள், தையலர்கள், இரும்பு பொருத்துநர்கள் ஆகிய பணிகளுக்கு அதிக அளவில் ஆட்கள் தேவை ஏற்பட்டுள்ளது. போர் தொடர்ந்து முறுக்கிக்கொண்டிருப்பதாலும் பணியாளர் எண்ணிக்கை குறைந்துவிட்டதாலும் ஆளெடுப்பு நிறுவனங்களுக்கு வேலை அதிகரித்துள்ளது. கடல்கடந்தும் ஆட்களைக் கொண்டுவர ரசிய நிறுவனங்கள் முனைப்பு காட்டுகின்றன.
இந்தியாவிலிருந்து ஆளெடுப்பது மட்டும் கடந்த நான்கு ஆண்டுகளில் 60 சதவீதம் அதிகரித்துள்ளது. இது மேலும் அதிகரிக்கக்கூடும் என்று ரசிய நிறுவனங்கள் எதிர்பார்க்கின்றன. நீண்ட காலமாக இணக்கமாக இருந்துவரும் இரு நாடுகளிடையே அண்மையில் ஒப்பந்தம் செய்துகொள்ளப்பட்டுள்ளது. அந்த ஒப்பந்தத்தின்படி பணியாளர் வரத்து கூடுதலாவது உறுதிசெய்யப்பட்டுள்ளது.
” ரசிய நிறுவனங்கள் தற்போது தையலர்கள், தச்சர்கள், இரும்பு பொருத்துநர்கள், பற்றவைப்புப் பணியாளர்கள், எஃகு கட்டுமானப் பணியாளர்கள், தகரப் பணியாளர்கள், மின்காப்பிடுதல் பணியாளர்கள் போன்றவர்கள் தேவைப்படுகிறார்கள். கடந்த 2018 முதல் 2020-21ஆண்டுவரை இந்தியாவிலிருந்து ஆண்டுக்கு 300 பற்றவைப்புப் பணியாளர்களை போர்களை ரசிய பெட்ரோலியம், எரிவாயுத் தொழிற்சாலைகளுக்கு அனுப்பிவைத்தோம். அதன்பின்னர் இது 500ஆக அதிகரித்துள்ளது. இனி தேவை இன்னும் கூடும்.” என ஊடகங்களிடம் கூறினார், குளோப்ஸ்கில் இண்டநேசனல் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் சித்தார்த்தா மாலிக்.
ரசியாவில் மக்கள்தொகை குறைந்துவருவதுடன் முதியோர் எண்ணிக்கையும் அதிகரித்துவருகிறது. இது மற்ற முன்னெறிய நாடுகளில் உள்ள நிலைமைதான். இந்தப் பின்னணியில் கடந்த ஜூலையில் அந்நாட்டுத் தொழிலாளர் துறை அமைச்சர் பேசுகையில், வரும் 2030-க்குள் 1.1 கோடி பணியாளர்கள் கூடுதலாகத் தேவை என்று தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.
இதனிடையே, உக்ரைன் போரை முன்னிட்டு ரசியா மீதான அமெரிக்க அரசின் தடை காரணமாகவும் அபராத வரிவிதிப்பாலும் இரு நாடுகளும் நெருங்கி வந்தன. இதில், பணியாளர்கள் தொடர்பாகவும் தில்லியும் மாஸ்கோவும் உடன்பாட்டில் கையெழுத்திட்டுள்ளன. கடந்த 5ஆம் தேதி தில்லிக்கு ரசிய அதிபர் புதின் வந்தபோது ஒப்பந்தமான இந்த உடன்பாட்டை, மையமான ஒன்று என அழுத்தமாகக் குறிப்பிட்டது, வாசகர்களுக்கு நினைவிருக்கலாம்.
இந்தியாவின் திறன்மிகு பணியாளர்கள் குறிப்பாக தகவல்நுட்பம், கட்டுமானம், பொறியியல் முதலிய துறைகளில் ரசியாவின் தேவைகளுக்கு உதவியாக இருப்பார்கள் என்றும் இருதரப்பு உறவுகள் இதன்மூலம் மேலும் வலுப்பெறும் என்றும் வெளியுறவுச் செயலாளர் விக்ரம் மிஸ்திரி குறிப்பிட்டார்.
இப்போது உடலுழைப்புப் பணியாளர்களுக்கான தேவை ரசியாவில் அதிகரித்திருக்கிறது. குறிப்பாக மீன்பிடி தொடர்பான தொழிலில் வரவேற்பு காணப்படுகிறது.
ஒரு காலத்தில் சவுதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம், குவைத் போன்ற அரபு நாடுகளுக்கு இந்தியப் பணியாளர்கள் பத்து இலட்சக்கணக்கில் குவிந்ததைப் போன்ற ஒரு தேவை ரசியாவில் இருப்பதாகக் கூறப்படுகிறது.
ரசியாவுக்குச் செல்பவர்கள் பெரும்பாலும் நன்கு தெரிந்த வலைப்பின்னலுடன் இருப்பவர்கள் மூலமாகவே அங்கு போகிறார்கள். பல பகுதிகளில் கிராமம்கிராமமாகச் செல்வதும் நடக்கிறது. மாதத்துக்கு குறைந்தபட்சம் 50 ஆயிரம் ரூபாய் கிடைப்பதாக பல்வேறு ஆளெடுப்பு நிறுவனங்களும் கூறுகின்றன. பெரும்பாலான ரசிய வேலைவழங்குநர்கள் உணவும் தங்குமிடமும் தந்துவிடுகிறார்கள் என்கின்றனர்.
ரசியாவுக்கான விமானப் போக்குவரத்து பெருகிவருகிறது என்பதைப் புள்ளிவிவரங்கள் காட்டுகின்றன. இரு நாடுகளுக்கும் இடையில் இன்னும் கூடுதலான விமான சேவைகள் இயக்கப்பட வேண்டும் என்கிறார், அந்தத் தொழிலில் ஆலோசனை வழங்கும் நிறுவனத்தின் தலைவர் மார்க் டி மார்ட்டின்.
தற்போதைக்கு இந்தியாவிலிருந்து ரசியாவுக்கு ஏரோஃப்ளோட் எனும் ஒரே நிறுவனம்தான் நேரடி விமானங்களை இயக்கிவருகிறது. இதேசமயம், உஸ்பெஸ்கிஸ்தான் ஏர்வேஸ், அஜர்பைஜான் ஏர்லைன்ஸ் ஆகிய நிறுவனங்கள் மாற்றுப் பாதையில் விமானங்களை இயக்குகின்றன என்றும் மார்ட்டின் கூறுகிறார்.
இந்தியாவிலிருந்து திறன்மிகு, குறைதிறன் பணியாளர்கள் ரசியாவுக்குச் செல்வதற்கு ஏராளமானோர் தயாராக உள்ளனர்; ஆனால் பெரும் நிறுவனங்கள் முதலீடு செய்வதற்கு முன்னர், அதனால் ஏற்படும் விளைவுகளைப் பற்றித் தீர யோசித்து முடிவுசெய்ய வேண்டும் என்கிறார்கள் நாடுகளிடை கொள்கை வல்லுநர்கள். ஏனென்றால், அமெரிக்கா, மேற்குலக நாடுகளின் தடையை எதிர்கொள்ள நேரிடலாம் என்கின்றனர் அவர்கள்.
இதைப் போலவே, பல ஆளெடுப்பு நிறுவனங்களும் இதில் திட்டவட்டமான முடிவை எடுக்காமல் நிலைமையை உன்னிப்பாக கவனித்து வருகின்றன; காரணம், அவற்றின் இப்போதைய அமெரிக்க வாடிக்கையாளர் நிறுவனங்கள் கைவிட்டுப் போய்விடக்கூடாது என்பது முக்கியம்.