குமரி அனந்தன் மறைவுக்கு முதல்வர் உட்பட அரசியல் தலைவர்கள் இரங்கல்!

குமரி அனந்தன்
குமரி அனந்தன்
Published on

காங்கிரஸ் முன்னாள் தலைவர் குமரி அனந்தன் மறைவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உட்பட அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

தமிழ்நாடு காங்கிரஸ் முன்னாள் தலைவர் குமரி அனந்தன் (வயது 93) வயது மூப்பு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று காலமானார். அவரின் மறைவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உட்பட அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

காங்கிரஸ் பேரியக்கத்தின் மூத்த தலைவரும் தமிழின்பால் பெரும்பற்று கொண்டவருமான இலக்கியச் செல்வர் அய்யா குமரி அனந்தன் மறைவுற்றார் என்ற செய்தியறிந்து மிகுந்த துயருற்றேன். குமரி மாவட்டத்தில் பிறந்து, பெருந்தலைவர் காமராசரின் அடிபொற்றி, காங்கிரஸ் பேரியக்கத்துக்காகத் தன்னை ஒப்படைத்துக் கொண்ட அவரது மறைவு தமிழ்ச்சமூகத்துக்கு ஏற்பட்ட பேரிழப்பாகும்.

ஏராளமான நூல்களையும் எண்ணற்ற மேடைகளையும் கண்ட அவரது தமிழால் நம் நெஞ்சங்களில் அவர் என்றும் நிறைத்திருப்பார் என ஆறுதல் கொள்கிறேன். 'தகைசால் தமிழர் அய்யா குமரி அனந்தனின் மறைவால் வாடும் சகோதரி தமிழிசை சவுந்தரராஜன் உள்ளிட்ட அவரது குடும்பத்தினர், உறவினர்கள், காங்கிரஸ் பேரியக்கத் தொண்டர்கள், அரசியல் மற்றும் இலக்கிய வட்டங்களைச் சேர்ந்த சொந்தங்கள் என அனைவருக்கும் என்னுடைய ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை

தமிழக காங்கிரஸின் ஒரு தூண் சாய்ந்துவிட்டதாக கருதுகிறேன். செய்தி கேட்ட உடனே விமானம் மூலமாக சென்னைக்கு வருகை புரிந்து இன்று மாலை நடைபெறும் இறுதி ஊர்வலத்தில் பங்கேற்று அஞ்சலி செலுத்துகிறேன்.

இளமைப்பருவம் முதல் தேசியத்தையும், தமிழையும் இரு கண்களாக கருதி பெருந்தலைவர் காமராஜரின் தலைமையை ஏற்று காங்கிரஸ் இயக்கத்திற்கு அல்லும், பகலும் அயராது பாடுபட்டவர். தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸ் தலைவராக இவர் பொறுப்பு வகித்தபோது இவரது நாவன்மை காரணமாக எண்ணிலடங்காத இளைஞர்களை காங்கிரஸ் கட்சியில் இணைத்தவர்

இன்று (09.04.2025) புதன்கிழமை மாலை 5 மணியளவில் சென்னை, சாலிகிராமம், 4வது தெரு , 7/4 லோகய்யா காலனி வீட்டில் இருந்து புறப்படுகிற இறுதி ஊர்வலத்தில் நான் பங்கேற்பதோடு பெருந்திரளான காங்கிரஸ் கட்சியினர் மறைந்த ஒப்பற்ற தலைவருக்கு அஞ்சலி செலுத்த வருகை புரிய வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.

விசிக தலைவர் தொல். திருமாவளவன்

குமரி_அனந்தன் அவர்களின் மறைவு மிகுந்த துயரமளிக்கிறது. தனது இறுதிமூச்சு வரையில் காந்தியடிகள் மற்றும் காமராசர் ஆகியோரின் கொள்கை வழியில் பயணித்தவர். மதுவிலக்கு கொள்கையை உயிர்மூச்சாகக் கொண்டு அதில் உறுதிகுலையாமல் நின்றவர். அண்மையில் விடுதலைச் சிறுத்தைகளின் மகளிர் அணி நடத்திய "மது மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு மாநாட்டுக்கு" ஆதரவு தெரிவித்து வாழ்த்துச் செய்தி அனுப்பியிருந்தார். அத்துடன், தொலைபேசியில் தொடர்பு கொண்டும் பாராட்டினார்.

அவருடைய இழப்பு தமிழ்ச் சமூகத்திற்கு நேர்ந்த பேரிழப்பாகும். அவரை இழந்து வாடும் காந்தி- காமராசர் வழிவந்த தொண்டர்களுக்கும் அவரது குடும்பத்தாருக்கும் எமது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ்

தமிழ்நாடு காங்கிரசின் முன்னாள் தலைவரும், பெருந்தலைவர் காமராசரின் அன்பைப் பெற்றவருமான குமரிஅனந்தன் உடல்நலக்குறைவால் காலமானர் என்பதையறிந்து அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன்.

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி கண்ட சிறந்த தலைவர்களில் குமரி அனந்தனும் ஒருவர். வாழ்நாள் முழுவதும் மக்கள் நலனுக்காகவும், தமிழகத்தின் நலனுக்காகவும் பாடுபட்டவர்.

என் மீதும், பாட்டாளி மக்கள் கட்சி மீதும் மிகுந்த அன்பு கொண்டவர். பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் நடத்தப்பட்ட மதுவுக்கு எதிரான போராட்டங்களில் குமரி அனந்தன் கலந்து கொண்டுள்ளார். அன்னைத் தமிழைக் காப்பதற்காக பாமக மேற்கொண்ட முயற்சிகளுக்கு ஆதரவு வழங்கியவர் அவர்.

குமரி அனந்தனை இழந்து வாடும் அவரது மகள் தமிழிசை சவுந்தரராஜன் உள்ளிட்ட குடும்பத்தினர், நண்பர்கள், காங்கிரஸ் பேரியக்கத்தினர் உள்ளிட்ட அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை

தமிழகத்தின் மூத்த அரசியல் தலைவர்களில் ஒருவரும், பெருந்தலைவர் காமராஜர் அவர்களுடன் இணைந்து பணியாற்றிய பெருமைக்குரியவரும், அக்கா தமிழிசை செளந்தரராஜனின் தந்தையாருமாகிய, இலக்கியச் செல்வர் குமரி அனந்தன் அவர்கள், இன்று நம்மிடையே இல்லை என்ற செய்தி மிகுந்த வருத்தமளிக்கிறது.

குமரி அனந்தன் அவர்களது மறைவு, தமிழகத்துக்கும், இலக்கிய உலகுக்கும் பேரிழப்பு. தகப்பனாரை இழந்து வாடும் அக்கா தமிழிசை செளந்தரராஜன் அவர்களுக்கும், அவரது குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும், ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவரது ஆன்மா, இறைவன் திருவடிகளை அடைய வேண்டிக் கொள்கிறேன்.

தவெக தலைவர் விஜய்

ஆசிரியராகத் தம் வாழ்க்கையைத் தொடங்கி, நம் கொள்கைத் தலைவர் பெருந்தலைவர் காமராஜர் அவர்களுடன் சேர்ந்து பயணித்து மக்கள் சேவையாற்றியவர்; மது ஒழிப்பிற்காகத் தம் வாழ்நாள் முழுவதும் போராடியவர்.

எளிமையாக மக்களோடு மக்களாக வாழ்ந்த அய்யா குமரி அனந்தன் அவர்கள் காலமான செய்தியறிந்து மிகவும் மன வேதனை அடைந்தேன். அவரைப் பிரிந்து வாடும் குடும்பத்தினர், உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக்கொள்கிறேன். அவரது ஆன்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கின்றேன்.

logo
Andhimazhai
www.andhimazhai.com