பட்டாசு விபத்தில் பலியானோர் 25 பேராக அதிகரிப்பு!

பட்டாசு விபத்தில் பலியானோர் 25 பேராக அதிகரிப்பு!
Published on

விருதுநகர் மாவட்டம் கட்டனார்பட்டியில் நேற்று நிகழ்ந்த பட்டாசு ஆலை விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 25ஆக அதிகரித்துள்ளது. 

பெரும்பாலான உடல்கள் அடையாளம் காணமுடியாத அளவுக்கு கருகிப்போய் உள்ளன. பலரின் உடல்களையும் அவர்கள் அணிந்திருந்த நகைகளை வைத்தே கண்டுகொள்ள முடிந்தது.

உயிரிழந்தவர்களில் 22 பேர் பெண்கள், மூவர் ஆண்கள்.

இவர்களில் சேர்வைக்காரன்பட்டியைச் சேர்ந்தவர்கள் மட்டும் 20 பேர். ஒரே ஊரைச் சேர்ந்தவர்கள் இப்படி கொல்லப்பட்டிருப்பதால் அந்த கிராமமே பெரும் சோகத்தில் மூழ்கியுள்ளது.

பொதுவாக, ஞாயிற்றுக்கிழமைகளில் பட்டாசு ஆலைகளுக்கு விடுமுறை விடப்படும்.

ஆனால் முத்துமாணிக்கம் என்பவருக்குச் சொந்தமான இந்த வனஜா பட்டாசு மட்டும் ஞாயிறன்று விதிமுறையை மீறி இயங்கியுள்ளது. இதைப் போல அவ்வப்போது பட்டாசு ஆலைகள் விதிகளை மீறிச் செயல்படுவது விபத்துகளின்போதுதான் உறுதியாகிறது.

விபத்து ஏற்பட்டதும் உரிமையாளர் தலைமறைவாகிவிட்டார். அவரை உடனே கைதுசெய்ய வலியுறுத்தி சுற்று வட்டார கிராமத்தினர் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

முதலில் விபத்தில் இறந்தவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டிருந்தபோது, இரவு 7.20 மணியளவில் இன்னுமொரு வெடிப்பு நேர்ந்தது. அதில் வருவாய்த் துறையினர், காவல்துறையினரும் காயம் அடைந்தனர்.

முன்னதாக ஏற்பட்ட விபத்தில் எட்டு பெண்கள் 60சதவீதத்துக்கும் மேற்பட்ட காயங்களுடன் உயிருக்குப் போராடிக் கொண்டிருக்கின்றனர். அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

logo
Andhimazhai
www.andhimazhai.com