செல்வப்பெருந்தகை
செல்வப்பெருந்தகை

10 ஆண்டுகால ஆட்சியில் பா.ஜ.க. இதைத்தான் செய்தது! – செல்வப்பெருந்தகை எதை சொல்கிறார்?

பத்தாண்டு கால ஆட்சியில் சாதி, மத மற்றும் மொழி அடிப்படையிலான கலவரத்தைதான் பாஜக செய்துள்ளதாக தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவர் செல்வப்பெருந்தகை குற்றம்சாட்டினார்.

மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெறும் என அறிவிக்கப்பட்டு, இதுவரை நான்கு கட்டத் தேர்தல்கள் முடிந்துவிட்டன.

இந்த நிலையில், காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் மீது பிரதமர் நரேந்திர மோடி தனது பரப்புரையில் கடும் விமர்சனங்களை முன்வைத்து வருகிறார். இதற்கு காங்கிரஸ் சார்பில் பதிலடியும் தரப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் சென்னை சத்தியமூர்த்தி பவனில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை, “ஒவ்வொரு கட்டத் தேர்தலின்போதும் பாஜக தலைவர்களின் பேச்சு மாறுபடுவதை காண்கிறோம். இப்போது பாஜக ஆட்சி அமைக்க முடியாது என தெரிந்தவுடன் பிரதமர் மோடியும் அவரது அமைச்சரவை சகாக்களும் அதிதீவிர வெறுப்பு அரசியல் செய்ய ஆரம்பித்துவிட்டார்கள்.

தோல்வி உறுதியான உடன் தற்போது கலவர அரசியலில் ஈடுபட்டு வருகிறார்கள். ஆனால், தேர்தல் ஆணையம் இதனை வேடிக்கை பார்த்து வருவது அனைவரிடமும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. அரசியலமைப்புச் சட்டத்தையும் ஜனநாயகத்தையும் பாதுகாப்பது தான் தேர்தல் ஆணையம். ஆகவே, தேர்தல் ஆணையம் நியாயமாக தேர்தலை நடத்த வேண்டும்.வெறுப்பு அரசியல், கலவரத்தை தூண்டும் விதமாக, சாதி மதத்தை பற்றி பேசுபவரின் பரப்புரையை தடை செய்ய வேண்டும்” என்று வலியுறுத்தினார்.

தொடர்ந்து, “காங்கிரஸில் இருப்பவர்களும் ராமர் பக்தர்கள் தான். அப்படி இருக்கும்போது காங்கிரஸ் ராமர் கோயிலை இடிக்குமா? எங்களுக்கு எல்லா மதமும் சம்மதம் தான். கோயிலை 100 சதவிகிதம் கட்டிய பிறகுதான் பிரதிஷ்டை செய்ய வேண்டும் என இந்து மத ஐதீகம் சொல்கிறது. ஆனால், அரசியலுக்காக கட்டுமான பணிகள் முடிவடையும் முன்னரே பிரதமர் மோடி திறந்துவிட்டார் என சங்கராச்சாரியார்கள் கூறினர். கோயில்களை இடிப்பது காங்கிரஸ் கட்சியின் வழக்கம் அல்ல. கோயில்களை கட்டுவதுதான் எங்களின் வழக்கம்” என்றும் கூறினார்.

மேலும், “காமராஜர் பள்ளிக் கல்வியை வலிமைப்படுத்தினார். கலைஞர் கருணாநிதி உயர்கல்வியை வலிமைப்படுத்தினார். ஆனால், கல்வி குறித்து பாஜக பேச அருகதையில்லை. பாஜக குலக்கல்வியை வலியுறுத்தி வருகிறது. அதுதான் புதிய கல்வி கொள்கையிலும் இடம்பெற்றுள்ளது. 10 ஆண்டுகால ஆட்சியில் சாதிக் கலவரம், மதக் கலவரம், மொழிக் கலவரத்தை செய்ததுதான் பாஜக.” என்றும் குற்றம்சாட்டினார்.

logo
Andhimazhai
www.andhimazhai.com