மோடி, செல்வப்பெருந்தகை
மோடி, செல்வப்பெருந்தகை

பிரதமர் மோடிக்கு எதிராக தமிழக காங்கிரஸ் நீதிமன்றத்தில் வழக்கு!

பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை வழக்கு தொடர்ந்துள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடி தேர்தல் பிரச்சாரத்தின் போது வெறுப்புணர்வு பேச்சுக்களைப் பேசி வருவதாக தொடர்ந்து எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டிவருகின்றன.

இந்தநிலையில், சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை சார்பில் அவசர வழக்கு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. தேர்தல் பிரச்சாரத்தில் வெறுப்புணர்வை தூண்டும் வகையில் பிரதமர் மோடி பேசி வருவதாக மனுவில் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

குறிப்பாக ராஜஸ்தானில் தேர்தல் பிரச்சார கூட்டத்தில் பிரதமர் மோடி பேசும் போது, இந்துக்களின் சொத்துக்களை பிடிங்கி இஸ்லாமியர்களுக்கு வழங்கி விடுவார்கள். அதிக குழந்தைகளை அவர்கள் பெற்றுக்கொள்கிறார்கள். அவர்கள் ஊடுருவல்காரர்கள் என்று பேசி வருவதாக தெரிவித்திருக்கிறார். அதேபோல தேர்தல் அறிக்கையை முஸ்லீம் லீக் கட்சியின் தேர்தல் அறிக்கை என்று பிரதமர் விமர்சித்திருப்பதாகவும் மனுவில் சுட்டிக்காட்டியுள்ளார்.

இவ்வாறு ஒவ்வொரு இடத்திலேயும், வெறுப்புணர்வை பேசி மதக்கலவரத்தை தூண்டும் வகையில் பிரதமர் மோடியின் பேச்சு இருப்பதாகவும், இதுகுறித்து முறையாக தேர்தல் ஆணையத்திடம் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றும் மனுவில் குற்றம்சாட்டியுள்ளார். எனவே தேர்தல் ஆணையம் உடனடியாக நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என்று செல்வப்பெருந்தகை சார்பில் கேட்டுக் கொள்ளப்பட்டிருந்தது.

இந்த மனு நீதிபதிகள் ஜெகதீஷ் சந்திரா, கலைமதி ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, காங்கிரஸ் கட்சி சார்பில் வழக்கறிஞர்கள் சூரியபிரகாசம், விக்டர் ஆகியோர் ஆஜராகி, பிரதமர் பெயரை சேர்த்துள்ளதால் வழக்கை எண்ணிட மறுப்பதாக புகார் தெரிவித்தனர்.

எனவே இந்த வழக்கை எண்ணிட்டு உடனடியாக விசாரணைக்கு எடுத்துக்கொள்ள வேண்டும் என்றும் குறிப்பிட்டனர். இதையடுத்து நீதிபதிகள், உடனடியாக குறைகளை நிவர்த்தி செய்து மீண்டும் மனு தாக்கல் செய்யுங்கள், விசாரணைக்கு எடுத்துக்கொள்கிறோம் என தெரிவித்திருக்கிறார்கள்.

Related Stories

No stories found.
logo
Andhimazhai
www.andhimazhai.com