மதுரை கமிஷனரை மாற்ற தேர்தல் ஆணையத்துக்கு சிபிஎம் கடிதம்!

மதுரை திருப்பரங்குன்றம் கோயில்
மதுரை திருப்பரங்குன்றம் கோயில்
Published on

மதுரை மாநகர காவல் ஆணையராக அபிஷேக் தீட்சித் நியமனத்தை ரத்து செய்திடவும் சமூக வலைதளங்களில் சட்டவிரோதமாக ‘கந்தன் முருகன் வாக்கு’ காணொளியை வெளியிட்டுள்ளவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பெ. சண்முகம் சார்பில் தலைமை தேர்தல் அதிகாரியிடம் இன்று (03.04.2026) மாநிலக்குழு உறுப்பினர்கள் ஐ. ஆறுமுக நயினார், வெ. ராஜசேகரன் ஆகியோர் நேரில் வலியுறுத்தினர்.

புகார் மனு விவரம்:

” ஏப்ரல் 23 அன்று நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலையொட்டி தமிழ்நாட்டில் ஒரு சில மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் காவல்துறை அதிகாரிகள் மாற்றப்பட்டு வருகின்றனர். அதன்படி, மதுரையில் தற்போது பணியாற்றி வரும் மாநகர காவல் ஆணையர்  திரு.ஜெ.லோகநாதன் அவர்கள் மாற்றப்பட்டு, அவருக்கு பதிலாக திரு அபிஷேக் தீட்சித் ஐபிஎஸ் (தமிழ்நாடு 2006) அதிகாரி பணியில் அமர்த்தப்பட்டுள்ளார். ஏற்கனவே பல்வேறு முறைகேடுகள் மற்றும் குற்றச்சாட்டுகள் அபிஷேக் தீட்சித் மீது சுமத்தப்பட்டுள்ளதோடு, நிர்வாக ரீதியாக நடவடிக்கைகளுக்கும் உள்ளாகியிருகிறார்.

               திரு. அபிஷேக் தீட்சித், கிருஷ்ணகிரி காவல் கண்காணிப்பாளராகவும், பின்னர், உத்தரப் பிரதேசத்தில் உள்ள பிரயாக்ராஜ் என்ற நகரில் மூத்த காவல் கண்காணிப்பாளராகவும் பணியாற்றிய இரண்டு பதவிக் காலங்களிலும் ஊழல் தடுப்பு வழக்குகள் மற்றும் ஒழுங்கு நடவடிக்கைகளை எதிர்கொண்டிருக்கிறார். கிருஷ்ணகிரி காவல் கண்காணிப்பாளராக இருந்தபோது பெரும் முறைகேடுகள், குறிப்பாக, இடமாற்றங்கள் மற்றும் நியமனங்கள் தொடர்பாக சட்டவிரோதமாக லஞ்சம் பெற்றார் எனும் குற்றச்சாட்டுகள் இவர் மீது இருந்துள்ளன. ஆதாயம் பெறும் நோக்கத்தோடு இவர் சுமார் 87 இடமாற்றங்களைச் செய்ததற்கான ஆதாரம் நிரூபிக்கப்பட்டுள்ளதோடு இடமாற்றம் தொடர்பான கொடுக்கல் வாங்கல்களில், தனக்குக் கீழ் பணிபுரியும் ஒரு உதவி அதிகாரியை (எஸ்.ஐ. தரம்) இடைத்தரகராகப் பயன்படுத்தினார் என்பதும் ஆவணங்களின் மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது.

               2012-ல் மாவட்ட ஊழல் தடுப்பு ஆணையம் (DVAC) அவர் மீது நடத்திய சோதனையில், கணிசமான சொத்துக்கள் (சுமார் 2 கிலா தங்கம், 15 கிலோ வெள்ளி மற்றும் நில ஆவணங்கள்) கண்டெடுக்கப்பட்டன. இத்தகைய திட்டமிட்ட நிதி முறைகேடுகளில் ஈடுபட்ட இவர், செப்டம்பர் 2020-ல் உ.பி. அரசால் இடைநீக்கம் செய்யப்பட்டார். மேலும், இடமாற்றங்கள் மற்றும் பதவி நியமனங்களில் ஊழல், மோசமான குற்றச்சாட்டுக்கள் மற்றும் உயர் அதிகாரிகளின் வழிகாட்டுதல்களைப் பின்பற்றாதது ஆகிய காரணங்களுக்காகவும், வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்தது தொடர்பாகவும் இவர் மீது ஊழல் தடுப்பு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதேபோல், உயர் அதிகாரிகளால் வழங்கப்பட்ட அறிவுறுத்தல்களைப் பின்பற்றத் தவறியது உள்ளிட்ட ஒழுங்கீனங்களுக்கான நடவடிக்கைகளுக்கு ஆளாகியுள்ளார். இத்தகைய குற்றச்சாட்டுகள் மற்றும் துறை ரீதியான நடவடிக்கைகளுக்கு உள்ளான பின்னர், சுமார் 18 மாதங்களுக்குப் பிறகு (மார்ச் 2022) இடைநீக்கம் ரத்து செய்யப்பட்டு, தமிழ்நாடு பணிகளுக்கு திருப்பி அனுப்பப்பட்டார்.

               தனிப்பட்ட முறையில் அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தும் போக்கை கடைபிடிப்பது, இடமாற்றங்கள் / பதவி நியமனங்கள் மூலம் சட்டவிரோத ஆதாயங்களைத் தேடுவது மற்றும் சமூக விரோத சக்திகளுடன் கூட்டு சேர்ந்து சட்டவிரோத நடவடிக்கைகள் பெருக வழிவகுப்பது போன்ற தொடர்ச்சியான குற்றச்சாட்டுகளுக்கும், நடவடிக்கைகளுக்கும் ஆளான ஒருவரை மதுரைக்கு பணியிட மாற்றம் செய்திருப்பது எந்த வகையிலும் ஏற்றுக் கொள்ள முடியாததாகும். இத்தகைய ஒரு அதிகாரியை தேர்தல் பணியில் ஈடுபடுத்தினால், நியாயமான, வெளிப்படையான பணிகளை பெருமளவு பாதிக்கச் செய்யும் என்பதோடு, மக்கள் மற்றும் வாக்காளர்கள் மத்தியில் அவநம்பிக்கையை உருவாக்கும்.

               எனவே, அபிஷேக் தீட்சித் அவர்களின் பணி மாற்றல் உத்தரவை உடனடியாக ரத்து செய்வதோடு, ஏற்கனவே பணியில் உள்ள சிறந்த முன் அனுபவம் மற்றும் நிர்வாகத் திறன் கொண்ட முனைவர் திரு. ஜெ.லோகநாதன், இ.கா.ப. அவர்களை பணியில் நீட்டிப்பதற்கான உத்தரவை பிறப்பிக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.” என்றும்,

மேலும், “ சாதி, மத, சமூக அல்லது மொழி ரீதியான பிரச்சனைகளை உருவாக்கவோ, ஏற்கனவே இருக்கும் பிரச்னைகளை அதிகப்படுத்தவோ காரணமாகும் செயல்களில் கட்சிகள் அல்லது வேட்பாளர்கள் ஈடுபடக்கூடாது எனவும், சாதி, மத அடிப்படையில் வாக்குகள் கோரக் கூடாது எனவும் இந்திய தேர்தல் ஆணையத்தின் தேர்தல் நடத்தை விதிமுறைகள் தெளிவாக கூறுகின்றன.

               இந்நிலையில் மதுரை, திருப்பரங்குன்றம் பிரச்சனையை மையப்படுத்தி ‘கந்தன் முருகன் வாக்கு’ என்ற காணொளி சமூக வலைதளங்களில் வெளியிடப்பட்டுள்ளது. இந்தக் காணொளியில் பக்தர் ஒருவர் முருக கடவுளிடம் வேண்டிக் கொள்வது போன்றும், அதற்கு முருக கடவுளின் பதிலாக பாரதிய ஜனதா கட்சியின் தாமரை சின்னத்திற்கு வாக்களிக்க வேண்டுமென்று கூறுவது போலவும் செயற்கை நுண்ணறிவு மூலம் தயார் செய்யப்பட்டு வெளிப்படையாக பரப்பப்பட்டு வருகிறது. மத உணர்வுகளைத் தூண்டிவிட்டு வாக்கு சேகரிக்கும் இந்த ஏற்பாடு சட்டவிரோதமானது மட்டுமின்றி, தேர்தல் நடத்தை விதிமுறைகளுக்கு முற்றிலும் முரணானதாகும்.

               எனவே, “கந்தன் முருகன் வாக்கு” என்று சமூக வலைதளங்களில் காணொளி வெளியிட்டுள்ளவர்களை கண்டுபிடித்து அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கவும், இந்த காணொளி தாமரை சின்னத்திற்கு வாக்களிக்க வேண்டுமென்று  தெரிவிப்பதால் பாரதீய ஜனதா கட்சி தலைமை மீது உரிய நடவடிக்கை எடுக்கவும், இந்த காணொளியை உடனடியாக சமூக வலைதளங்களிலிருந்து நீக்கவும் வேண்டும்” என்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

logo
Andhimazhai
www.andhimazhai.com