“சரியான உண்மையான வாக்காளர் பட்டியல் தான் நியாயமான தேர்தலுக்கு அடிப்படை. ஏனவே வாக்காளர் பட்டியல் திருத்தம் செய்யப்படுவதை நாம் எதிர்க்கவில்லை.” என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் இன்று தன்னுடைய எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டுள்ள வீடியோவில், “நம்முடைய தொடர் எதிர்ப்புகளையும் மீறி எஸ்.ஐ.ஆர். பணிகள் தொடங்கிவிட்டது. நிறைய பேருக்கு எஸ்.ஐ.ஆர். பத்தி முழுமையாக தெரியவில்லை.
சரியான உண்மையான வாக்காளர் பட்டியல் தான் நியாயமான தேர்தலுக்கு அடிப்படை. ஏனவே வாக்காளர் பட்டியல் திருத்தம் செய்யப்படுவதை நாம் எதிர்க்கவில்லை. ஆனால் போதுமான கால அவகாசம் தராமல், தேர்தலுக்கு சில மாதங்களே இருக்கும் சூழலில் இதை அவசர அவசரமாக செய்வது சரியாக இருக்காது.
தேர்தல் ஆணையத்தோடு கூட்டு சேர்ந்து பாஜக எப்படி எல்லாம் மோசடி செய்திருக்கிறது என்பதை ராகுல் காந்தி விளக்கி இருக்கிறார். பினராயி விஜய், மம்தா பானர்ஜி போன்றவர்களும் எதிர்கிறார்கள். நாமும் தொடக்கம் முதலே எதிர்த்து வருகிறோம்.
எஸ்.ஐ.ஆர். பணிக்காக வழங்கப்படும் கணக்கீட்டு படிவத்திலேயே எத்தனை பிரச்னை. எனக்கும் அந்த படிவத்தை கொடுத்திருக்கிறார்கள். முதலில் நம்முடைய விவரங்களை கேட்கிறார்கள். முந்தைய வாக்காளர் திருத்தப் பட்டியலில் உள்ள வாக்களரின் உறவினரின் பெயர் கேட்கப்பட்டிருக்கிறது. உறவினர் என்றால் யார்? அப்பா, அம்மா?. எல்லோரும் தானே வாக்காளர் பட்டியலில் இருப்பார்கள். இதில் எதாவது தெளிவு இருக்கா? சின்ன தவறு இருந்தால் கூட வாக்காளர் பட்டியலில் இருந்து பெயரை நீக்கும் ஆபத்து உள்ளது. படித்து பெரிய பொறுப்புகளில் இருக்கின்றவர்கள் கூட இந்த கணக்கீட்டு படிவத்தை பார்த்தால் தலைசுத்தி போவார்கள்.” என்றவர் வாக்காளர் படிவத்தில் ஏராளமான குழப்பங்கள் இருப்பதாக கூறினார்.
தொடர்ந்து பேசியவர், “எஸ்.ஐ.ஆர் பணிகளை மாநில அரசு ஊழியர்கள் தானே மேற்கொள்கிறார்கள், எதற்காக இதை திமுக எதிர்க்க வேண்டும் என எதிர்க்கட்சியினர் கேள்வி எழுப்புகின்றனர். மாநில அரசு பணியாளர் தான் இந்த பணிகளை மேற்கொண்டாலும் அவர்கள் தேர்தல் ஆணையத்தின் உத்தரவுக்குத்தானே கட்டுப்பட்டு பணிகளை செய்ய முடியும். மக்களை திசை திருப்ப தவறான தகவலை பரப்ப கூடாது. பொய்யை சொல்லி எஸ்.ஐ.ஆரை நடத்தி ஏழை, எளிய மக்களின் வாக்குகளை பறித்துவிடலாம் என எதிர்க்கட்சியினர் நினைக்கின்றனர்.
போகிற போக்கை பார்த்தால் இந்த பணிகளை எப்படி செய்து முடிப்பார்கள் என்று தெரியவில்லை. உங்கள் வாக்கு நீக்கப்படுமா என்று கேட்டால், அப்படியொரு அபாயம் இருக்கு, இல்லையென்று உறுதியாக சொல்ல முடியாது. அதை தடுக்க வேண்டும் என்றால் உங்கள் பகுதியின் முகவர் யாரென்று கேட்டு, அவரிடம் கணக்கீட்டு படிவத்தை வாங்கி சரியாக எழுதி சமர்பிக்கப்ப வேண்டும். அதற்கான ஒப்புகை சீட்டையும் வாங்க வேண்டும்.
எஸ்.ஐ.ஆர் ஒட்டுமொத்த தமிழக மக்களுக்கும் ஏற்பட்டிருக்கும் பாதிப்பு. இதற்காக திமுக சார்பில் உதவி மையம் அமைத்திருக்கிறோம்.
தமிழ்நாட்டு மக்களின் வாக்குரிமையை காக்க திமுக உங்கள் தோழனாக துணை நிற்கும். வாக்குரிமையை பாதிக்கும் ஆபத்து வாசல் வரை வந்துவிட்டது. அனைவரும் ஒன்றிணைந்து, விழிப்போடு இருந்த ஜனநாயகத்தை காப்போம்” என்றார்.