
“கொஞ்சம் ஏமாந்தால் நம்ம எல்லோருக்கும் வாக்களிக்கும் உரிமை இல்லாமல் போகும்” என்று எஸ்.ஐ.ஆர். குறித்து வெளியிட்டுள்ள வீடியோவில் தவெக தலைவர் விஜய் கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள வீடியோவில், “இந்திய அரசியல் சாசனம் நம் தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொருக்கும் கொடுத்திருக்கும் உரிமைகளில் மிக முக்கியமானது வாக்குரிமை. ஒரு மனிதன் உயிரோடு இருக்கிறார் என்பதற்கு அடையாளமாக இருப்பது வாக்குரிமை.
இதைப்பற்றி நான் முதலில் கேள்விப்பட்ட உடனே, எனக்கு ரொம்ப அதிர்ச்சியாகத்தான் இருந்தது. இப்போது நான் பேசிக் கொண்டிருக்கும் இந்த நேரத்தில், தமிழ்நாட்டில் இருக்கும் நம் யாருக்குமே ஓட்டு போடும் உரிமையே இல்லை என்று கூறினால் நம்புவீங்களா? நான், நீங்கள் உட்பட யாருக்குமே அது இல்லை. நான் பயமுறுத்துகிறேன் என்று நினைக்க வேண்டாம். அதுதான் நிஜமும் கூட. கொஞ்சம் ஏமாறினால் கூட இன்னும் லட்சக்கணக்கான பேருக்கும் இதே நிலைமைதான். ஓட்டு போடும் உரிமையே இல்லாத மாதிரி ஒரு நிலைமை வந்தாலும் வரலாம். இதற்கு முக்கிய காரணம் அந்த எஸ்.ஐ.ஆர். சிறப்பு தீவிர திருத்தம்.
இப்போது இந்த எஸ்ஐஆர் தமிழ்நாட்டில் எப்படி செய்யப்போகிறார்கள்? கடந்த ஜனவரி மாதம் எடுத்த அந்த கணக்கெடுப்பில் 6 கோடியே 36 லட்சம் வாக்காளர்கள் நம் தமிழ்நாட்டில் இருக்கிறார்கள். ஆனால் அவர்கள் யாருக்குமே இந்த ஓட்டு போட்டு உரிமையே இல்லை.
சிறப்பு தீவிர திருத்த படிவத்தை நாம் பூர்த்தி செய்து, பி.எல்.ஓ.விடம் கொடுக்க வேண்டும். அதை தேர்தல் ஆணையம் சரிபார்க்கும். அதன் பிறகு வாக்காளர் பட்டியலை வெளியிடுவார்கள். அந்த வாக்காளர் பட்டியலில் நமது பெயர் இருக்க வேண்டும். அப்போது தான் நாம் ஓட்டு போட முடியும்.
இதில் நிறைய குழப்பங்களும் இருக்கின்றன. மேலும் புதிய வாக்காளர்களுக்கு படிவம் -6 என்று ஒன்று இருக்கிறது. அதை பூர்த்தி செய்து, சம்மந்தப்பட்ட அலுவலத்தில் நேரடியாக கொடுக்க வேண்டும். அதற்கான ஆதாரங்களையும் வைத்துக் கொள்ளுங்கள். அதன்பின் செல்போனில் குறுஞ்செய்தி வரும்.
முதலில் உங்கள் பகுதியின் பி.எல்.ஓ. யாரென்று தெரிந்து வைத்திருக்க வேண்டும். தேர்தல் ஆணையத்தின் இணையதளத்தில் சென்று அதை பார்த்துக் கொள்ளலாம். குறிப்பாக அவர்களின் செல்போன் எண்ணையும் தெரிந்து கொள்ளலாம்.
இதையெல்லாம் சரியாக செய்தாலும் எஸ்.ஐ.ஆர். மீது சில சந்தேகம் இருக்கிறது. 6 கோடியோ 36 லட்சம் வாக்காளருக்கு எப்படி இந்த ஒரே மாதத்தில் படிவத்தை தருவீர்கள். நீங்கள் வரும்போது வேலைக்கு சென்றிருந்தால் என்ன செய்வீர்கள்? இதில் அதிகம் பாதிக்கப்படப்போவது உழைக்கும் மக்கள், ஏழைகள், வேலைக்குப் போகும் பெண்கள். இவர்களுக்கு யார் சரியான பதிலை சொல்லப்போவது?
போலி வாக்காளர்கள் இருந்தால் மார்க் செய்து அவர்களை நீக்கிவிடலாம். ஏற்கெனவே வாக்குரிமை இருப்பவர்களுக்கு எதற்கு ரெஜிஸ்ட்ரேஷன் என்ற பெயரில் இவ்வளவு குழப்பங்கள்? இதற்காகத்தான் எஸ்.ஐ.ஆரை எதிர்க்கிறோம்.
இப்போது சில புகார்கள் வருகிறது. தவெகவினருக்கு அந்த படிவத்தை தரவில்லை என்கிறார்கள். இதை யார் செய்வார்கள் என்று உங்களுத்தெரியும். இப்போதுள்ள ஆட்சியாளர்களும் அவர்களுக்கு கைப்பாவையாக இருப்பவர்களும் செய்கிறார்கள்.
படிவம் எல்லோருக்கும் கிடைக்க வேண்டும். எல்லோருக்கும் உதவி செய்யுங்கள் ஜென் சி தலைமுயினர், முதல் தலைமுறை வாக்காளர்கள் கவனத்துடன் இருக்க வேண்டும். படிவம் 6ஐ சரியாக பூர்த்தி செய்து ஒப்படையுங்கள். வரும் தேர்தலில் ஜென் சி தலைமுறையினர் தான் மிக முக்கியமான சக்தியாக இருக்கப்போகிறார்கள். அதனால் உங்கள் பெயரை பட்டியலில் இடம்பெறாமல் இருக்க செய்ய என்னவெல்லாம் செய்ய முடியுமோ அதையெல்லாம் செய்வார்கள்.
வரும் தேர்தலில் நாம் யார் என்று காட்ட வேண்டும். நம் பலத்தை காட்ட வேண்டும். அதற்காக வாக்கு, ஜனநாயகம் என்ற ஆயுதத்தை கையிலெடுக்க வேண்டும்.
தமிழ்நாடு வாக்குச்சாவடி முன் திரண்டு நிற்க வேண்டும். அதை பார்த்து தமிழ்நாடே தவெகவா? அல்லது தவெகதான் தமிழ்நாடா என்பது மாதிரி இருக்க வேண்டும். வாக்கு என்ற ஒன்று இருந்தால்தான் நாட்டையே நாம் காக்க முடியும்.” என்றார்.