தமிழ்நாட்டில் இறுதி வாக்காளர் பட்டியல் வரும் 23ஆம் தேதி வெளியிடப்படும் என்று தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், இந்திய உச்சநீதிமன்றத்தால் WP(C) எண் 1072/ 2025 மற்றும் 1145/ 2025 ஆகிய வழக்குகளில் 29.01.2026 அன்று வழங்கப்பட்ட உத்தரவுகளின் அடிப்படையில், இந்தியத் தேர்தல் ஆணையமானது, 30.01.2026 அன்று வெளியிட்ட கடித எண் 23/ SIR/ 2026/ ERS இல், “முரண்பாடுகள்” (Logical Discrepancies) என்ற பிரிவில் இடம்பெற்றுள்ள நபர்களின் பெயர் பட்டியலை கிராமப் பஞ்சாயத்து அலுவலகங்கள், பொது இடங்கள் மற்றும் தாலுக்கா/ துணை பிரிவு அலுவலகங்கள், நகரப் பகுதிகளில் உள்ள வார்டு அலுவலகங்கள் உள்ளிட்ட இடங்களில் வெளியிட வேண்டும் என்று அறிவுறுத்தியது.
மேலும், இம்முரண்பாடுகள் பிரிவில் பாதிக்கப்படக்கூடிய நபர்கள், முரண்பாடுகளின் பட்டியல் வெளியிடப்பட்ட நாளிலிருந்து 10 நாட்களுக்குள், உரிய விளக்கத்துடன் தங்களது ஆவணங்களை / மறுப்புரைகளை நேரில் அல்லது தங்களது அங்கீகரிக்கப்பட்ட பிரதிநிதி (வாக்குச்சாவடி முகவர்கள் உட்பட) மூலமாக சமர்ப்பிக்க அனுமதி வழங்கப்பட வேண்டும் என்றும் ஆணையம் அறிவுறுத்தியது.
இதற்கமைவாக, இந்திய உச்சநீதிமன்றத்தின் உத்தரவுப்படி முரண்பாடுகளின் பட்டியல் வெளியிடப்பட்டு, அடுத்த 10 நாட்களுக்குள் தொடர்புடைய நபர்கள் தங்களது ஆவணங்களை / மறுப்புரைகளை சமர்ப்பிக்க அனுமதிக்கப்பட்டனர்.
தற்போது, 01.01.2026-ஆம் தேதியை தகுதி நாளாகக் கொண்டு மேற்கொள்ளப்பட்டு வரும் சிறப்பு தீவிர திருத்தம் (Special Intensive Revision - SIR) தொடர்பான இறுதி வாக்காளர் பட்டியல் 23.02.2026 அன்று வெளியிடப்படும். இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
முன்னதாக தமிழகத்தில் இறுதி வாக்காளர் பட்டியல் வரும் 17ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில் தற்போது பிப்.23ஆம் தேதிக்கு தள்ளிப்போய் உள்ளது.