
பழிவாங்குவதாக நினைத்து ஈரான் தாக்குதல் நடத்தினால், விளைவுகள் கடுமையாக இருக்கும் என்று ஈரானுக்கு அதிபர் டொனால்ட் டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
ஈரான் மீது அமெரிக்க-இஸ்ரேல் கூட்டுப் படைகள் அதிரடித் தாக்குதலை நேற்று தொடங்கிய நிலையில், ஈரானும் இஸ்ரேல் மற்றும் வளைகுடா பகுதியில் உள்ள அமெரிக்க ராணுவத் தளங்கள் மீது பதில் தாக்குதலைத் தொடங்கியது. இதனால், மத்திய கிழக்கில் போர் மூண்டுள்ளது.
ஈரான் அணு ஆயுதம் தயாரிக்கத் தேவையான யுரேனியத்தை செறிவூட்டி வருவதாகக் குற்றஞ்சாட்டி இந்தத் தாக்குதலை அமெரிக்காவும், இஸ்ரேலும் மேற்கொண்டன.
இந்தத் தாக்குதலில் ஈரான் தலைமை மதகுரு அயதுல்லா கமேனி உயிரிழந்ததாக உள்ளூர் செய்தி ஊடகம் செய்தி வெளியிட்டது. மேலும் கமேனியின் மகள், மருமகன் மற்றும் பேரனும் பலியானதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதனைத் தொடர்ந்து, ஈரானில் 40 நாள்கள் துக்கம் அனுசரிக்கப்படுவதுடன், 7 நாள்கள் பொது விடுமுறையும் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஈரான் தலைமை மதகுரு கமேனி கொலைக்கு எதிராக வலுவான பதிலடி கொடுக்கப்படும் என ஈரான் அதிபர் மசூத் பெஷேஷ்கியன் தெரிவித்திருந்தார்.
இதற்கு, எதிர்வினையாற்றி அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் பதிவிட்டுள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள பதிவில், ”முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு மிக கடுமையாக தாக்க போவதாக ஈரான் இன்று தெரிவித்துள்ளது.
அமெரிக்காவை ஈரான் தாக்காமல் இருப்பது நல்லது, பழிவாங்குவதாக நினைத்து அமெரிக்காவை தாக்கினால் விளைவுகள் கடுமையாக இருக்கும். முன்னெப்போதும் பார்த்திராத மோசமான தாக்குதல்களை நடத்துவோம்” என்று குறிப்பிட்டுள்ளார்.