மோடி 3.0

மோடி 3.0

தேர்தல் முடிவுகள் சொல்வது என்ன?

வெறுப்பின் கடைவீதியில் அன்பின் கடையைத் திறக்கப்போகிறேன் என ராகுல்காந்தி முதலில் தேர்தல் பிரச்சாரத்தின் போது கூறியபோது ஆளும் தேசிய ஜனநாயகக் கூட்டணியினர் அதை ரசிக்கவில்லை.

யாருக்குத் தேவை அன்பின் கடை? தேவையே இல்லை என்றார் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங். மோடி தனக்கே உரிய பாணியில் ராகுலை விமர்சனம் செய்தார். எதிரணியினர் திறந்திருக்கும் கடை என்பது தன் அரசைப் பற்றிய போலி வீடியோக்களை பரப்புவதற்கானது என தான் சந்தேகப்படுவதாகக் கூறினார். இதைப் பற்றி நாங்கள்  பெரிதாகக் கவலைப்படப் போவதில்லை என்ற அவர் மக்களே கடையை மூட ஏற்பாடு செய்துவிடுவார்கள் என்றார்.

ஆனால் தேர்தல் முடிவுகள் அப்படி இல்லை. பாஜகவுக்கு தனிப்பெரும்பான்மை கிடைக்காத நிலையே ஏற்பட்டது. ராகுல் விரித்த கடையில் கணிசமான மக்கள் பொருள் வாங்கியிருப்பதாக அர்த்தம் கொள்ளலாமா?

பாஜகவின் வெற்றியை குஜராத், மத்திய பிரதேசம், ஒரிசா ஆகிய மாநிலங்கள் உறுதி செய்தன.  இந்தியா கூட்டணியில் இருந்து நிதிஷ்குமார் தேஜகூவுக்குள் கொண்டுவரப்பட்டதும், ஒதுக்கி வைக்கப்பட்டிருந்த சந்திரபாபு நாயுடுவுடன் கூட்டணி வைத்துக்கொண்டதும் கை கொடுத்திருப்பதால் இந்த ஆட்சி சாத்தியமாகி இருக்கிறது.

குஜராத்தைப் பொறுத்தவரை அது மோடியின் மாநிலம். மத்தியப்பிரதேசம் 2014-இல் இருந்தே பாஜகவுக்கு ஆதரவாக இருந்து வருகிறது. அங்கு சிவராஜ்சிங் சௌஹானை மாற்றிவிட்டு புதியவரான மோகன் யாதவ் என்பவரை முதல்வராக நியமித்தது பின்னடைவைத் தரலாம் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் சௌஹான் அம்மாதிரி எதிர்பார்ப்புகளுக்கு இடம் தரவில்லை. அம்மாநிலத்தில் இருக்கும் 29 இடங்களையும் பாஜக பெற்றது.

ஒடிசாவில் 24 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்த பிஜு ஜனதா தளத்துக்கு எதிராக இருந்த மனநிலையை பாஜக சரியாகப் பயன்படுத்தியதால் அங்கு வெற்றியை ருசிக்க முடிந்தது.

இதுவரை கால் வைக்க முடியாமல் இருந்த கேரளத்தில் திருச்சூர் தொகுதியை வென்றதன் மூலம் பாஜகவில் கேரள கனவு பலிக்கத் தொடங்கி இருக்கிறது. அக்கட்சியின் கேரள முகங்களில் ஒருவரான ஜார்ஜ் குரியன், புதிய எம்பி சுரேஷ் கோபி ஆகிய இருவருக்கு அமைச்சர் பதவி கொடுத்ததன் மூலம் 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான வேலைகளை இப்போதே தொடங்கிவிட்டது பாஜக. அந்த மாநிலத்தில் ஆழமாக காலடி எடுத்துவைப்பதற்கான நீண்ட காலத் திட்டத்தில் அக்கட்சிக்கு சற்று வெற்றி ஏற்பட்டிருப்பதாகவே கருதப்படுகிறது.

எதிர்பாராத இழப்பு ஏற்பட்டது உத்தரப்பிரதேசத்தில். அங்கு எட்டு சதவீத வாக்குகளை அது இழந்தது. இதன் காரணமாக 29 இடங்கள் பறிபோயின. 2014-இல் 72 இடங்கள், 2019-இல் 62 இடங்கள் என வாழ்ந்த இடத்தில் இந்தச் சரிவு. முந்தைய இரு தேர்தல்களிலும் மாயாவதியின் பகுஜன் சமாஜ் பிரித்த வாக்குகள் பாஜக வெற்றிக்கு உதவின. இந்தத் தேர்தலில் காங்கிரஸ்- சமாஜ்வாடி கூட்டணி அமைந்ததும் சமாஜ்வாடி தலைவர் அகிலேஷ் தலித், இஸ்லாமியருக்கு அதிக இடம் அளித்ததும் பொதுத் தொகுதியில் கூட தலித் வேட்பாளரை நிறுத்தியதும் அவர்களுக்கு உதவியதாகக் கணிக்கப்படுகிறது. பொதுவாக உத்தரப்பிரதேசத்தில் குறைவான இடங்களைப் பெறும்போதெல்லாம் பாஜக ஆட்டம் கண்டிருக்கிறது. 2004- இல் 10 இடஙகள், 2009-இல் பத்து இடங்கள் என்று மட்டுமே எடுத்தபோது ஆட்சியைப் பிடிக்க முடியவில்லை என்பதை ஞாபகம் வைத்துக்கொள்ளுங்கள். 1996-இல் 52 இடங்களை வென்றதன் மூலமே அதனால் தனிப்பெரும் கட்சி என்ற அந்தஸ்துடன் மக்களவையில் நுழைய முடிந்தது.

மராட்டியத்தில் பாஜக இழந்தது ஒரு சதவீத வாக்குகள்தான். ஆனால் முன்னைவிட 13 இடங்களை அது இழக்க நேர்ந்தது. அங்கு பாஜக மேற்கொண்ட அரசியல் சித்து விளையாட்டுகள் கைகொடுக்கவில்லை. அஜித் பவாரை எதிரணியில் இருந்து தங்கள் பக்கம் கொண்டுவந்து, சிவ சேனாவை உடைத்து ஏக்நாத் ஷிண்டேயைக் கொண்டுவந்து மாநில அரசைக் கைப்பற்றினாலும் இந்தத் தேர்தலில் பலன் இல்லை.

அதே போல் ஹரியானாவில் தங்களை எதிர்த்துப் போட்டியிட்டிருந்த துஷ்யந்த் சவுதாலாவை தங்கள் பக்கம் கொண்டுவந்த முயற்சியும் கைகொடுக்க வில்லை.

ராஜஸ்தானில் 9.2% வாக்குகளை பாஜக இழந்தது. இதனால் அதற்கு 10 இடங்கள் குறைந்தன. ஒதுக்கப்பட்ட முன்னாள் முதல்வர் வசுந்தரா ராஜேவின் மௌனப் புரட்சி இதற்குக் காரணமாக இருக்கலாம் என்பது கணிப்பு. கர்நாடகம், மேற்குவங்கம், பீஹார் ஆகிய மாநிலங்களில் கடந்த தேர்தலுடன் ஒப்பிடுகையில் 19 இடங்கள் இழப்பு. இங்கு ஒன்றரையிலிருந்து 5.2 சதவீதம் வரை வாக்குகள் சரிவைக் கண்டன. கர்நாடகத்தில் மதச்சார்பற்ற ஜனதா தளத்துடன் கூட்டணி வைத்த நிலையிலும் பெரிய வெற்றி இல்லை என்றே சொல்லவேண்டும்.

தமிழ்நாட்டில் பாஜக காட்டிய ஆர்வம் மிகப்பெரியது. ஆனாலும் கடந்த தேர்தலில் ஒரு இடம் அதன் கூட்டணிக் கட்சியான அதிமுகவுக்குக் கிடைத்திருந்தது. இந்த தேர்தலில் அதுவும் இல்லை.

இத்தேர்தலில் பாஜக தரப்பில்  பல மாநிலங்களில் எற்கெனவே பதவியில் இருக்கும் மாற்றுக் கட்சி எம்பிக்களை தம் பக்கம் இழுத்து வேட்பாளராக நிறுத்தும் முயற்சி மேற்கொள்ளப்பட்டது. ஆனால் அது எதிர்பார்த்த அளவுக்குக் கை கொடுத்ததாகத் தெரியவில்லை. பஞ்சாப்பில் லூதியானா தொகுதியில் ரவ்நீத் சிங் பிட்டு என்பவர் காங்கிரஸ் எம்பியாக இருந்தார். அவர் பாஜக எம்பி வேட்பாளராக களமிறக்கப்பட்டார். ஆனால் தோல்வியையே காணநேர்ந்தது. (ஆனாலும் அவருக்கு மத்திய அமைச்சர் பதவியை பாஜக தந்துள்ளது). ஜார்க்கண்டில் சிங்பும் தொகுதியில் காங்கிரஸ் எம்பியாக இருந்தவர் கீதா கோடா. அவர் பாஜக வேட்பாளராக நிறுத்தப்பட்டு, ஜேஎம்எம் கட்சி வேட்பாளரிடம் தோற்றார். ஆம் ஆத்மியில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்ட எம்பி சுஷில் குமார் ரிங்கு. இவரை பாஜக தன் வேட்பாளராக ஜலந்தர் தொகுதியில் களமிறக்கியது. ஆயினும் இவர் தோற்றுப்போனார். இது போல் மாற்றுக் கட்சியில் இருந்து செல்வாக்கு வாய்ந்த பிரமுகர்களை தம் கட்சிக்கு இழுக்க பாஜக தயங்கவே இல்லை. அதை ஓர் உத்தியாகவே பயன்படுத்திப் பார்த்திருக்கிறது என்பதைக் குறிப்பிட வேண்டும்.

காங்கிரஸைப் பொறுத்தவரை அது தன் உச்சாணிக்கொம்பில் இருந்து சற்று இறங்கிவந்தது. 328 இடங்களில் மட்டுமே போட்டியிட்டது. அதன் வரலாற்றிலேயே குறைவாகப் போட்டியிட்டது இம்முறைதான்.  முடிந்த வரை மாநிலக் கட்சிகளுடன் கூட்டணி வைத்தது. அதன் விளைவே இந்தத் தேர்தலில் பெற்ற 99 இடங்களும் எதிர்க்கட்சி என்ற அங்கீகாரமும்.

மூன்றாவது முறையாக மோடி ஆட்சிக் கட்டிலில் தொடர்ச்சியாக அமர்கிறார். நவீன இந்திய வரலாற்றில் இது முக்கியமான நிகழ்வுதான். ஆனால் பாஜகவில் வாஜ்பாயிகூட மூன்றுமுறை பிரதமர் ஆகி இருக்கிறார். 1996, 1998, 1999 ஆகிய ஆண்டுகளில். ஆனால் ஐந்தாண்டுகளை ஒருமுறைதான் நிறைவு செய்தார். இதேபோல் இந்திரா காந்தியும் 1966, 1967, 1971 ஆகிய ஆண்டுகளில் தொடர்ச்சியாக மூன்று முறை பிரதமர் ஆகி இருக்கிறார். நான்காவது முறை 1980-இல் பிரதமர் நாற்காலியில் அமர்ந்துள்ளார்.

நேரு 1952, 1957, 1962 ஆகிய ஆண்டுகளில் மூன்றுமுறை பிரதமர் ஆனதுடன் மோடியின் இந்த சாதனை ஒப்பிடப்படுகிறது. ஆனால் 1947-இலிருந்து 1952 வரை தேர்தலுக்கு முன்பாக அவர் பிரதமர் பதவியில் இருந்ததையும் மறக்கக்கூடாது என்று சுட்டிக்காட்டுக்கிறார் மூத்த அரசியல் விமர்சகர் ஒருவர்.

 ‘இந்திய அரசியல்வரலாற்றில்  பவன்குமார் சாம்லிங் 24 ஆண்டுகள் சிக்கிம் முதல்வராக இருந்து சாதனை படைத்தார். 2001-இல் குஜராத் முதல்வராக பதவி யேற்ற மோடி, பிரதமராக இந்த ஐந்தாண்டு காலத்தையும் நிறைவு செய்யும்போது அதிகாரத்தில் தொடர்ச்சியாக நீண்ட நாள் இருந்தவர் என்ற சாதனைக்குச் சொந்தக்காரர் ஆவார்’ என்கிறார் மோடியின் டெல்லி அபிமானி ஒருவர்.

1977-இல் எமர்ஜென்சி காலத்தை முடித்து இந்திரா தேர்தலை சந்தித்தார். அப்போது ஆட்சியும் அதிகாரமும் முழுமையாக அவரிடம் இருந்தது. ஊடகங்கள் பணிந்துபோயிருந்தன. எப்ப அப்படியும் அவர் தோற்றுத்தான் போனார் என்பது இந்திய வரலாற்றில் அனைவரும் நினைவில்  வைக்கவேண்டிய பாடம். மூன்றாவது முறையாக காலம் ஒரு மகத்தான வாய்ப்பை நரேந்திர மோடிக்கு வழங்கி உள்ளது. வரும் ஐந்தாண்டுகள் எப்படிச் செல்கின்றன என பொறுத்திருந்து பார்ப்போம்.

இந்தத் தேர்தல் முடிவுகளிலிருந்து, தொடர் வெற்றிகளைக் குவிக்கும் திமுகவும் கற்றுக்கொள்ள பாடங்கள் உள்ளன. ஒரு சதவீத வாக்கு இழப்பும்கூட பாஜகவுக்கு 13 இடங்களை மராட்டியத்தில் இழக்க வைத்ததைப் பார்த்தோம்.

வரும் சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணிக்கு எதிராக இரண்டு முனைகளில் எதிர்க்கட்சிகள் குவியும் என எதிர்பார்க்கப்படுகிறது.  அதற்கான அறிகுறிகளை உணரமுடிகிறது. திமுக கூட்டணியிலும்கூட சடுகுடு்கள் நடக்கலாம். கள்ளக்குறிச்சிகள் அதன் ஆட்சி நிர்வாகத்துக்கான அபாய எச்சரிக்கைகள் என்பதை உணரவேண்டும்.  

மகிழ்ச்சியாகத் தோற்றமளிக்கும் காங்கிரஸ் கட்சிக்கு நாம் சொல்வதற்கு ஒன்று உண்டு. அக்கட்சி சந்தித்த 18 தேர்தல்களில் இது மூன்றாவது மோசமான தோல்வி என்பதே!

(குறிப்பு: இந்த இதழில் இருக்கும் அரசியல் கட்டுரைகள் அனைத்தும் அரசியல் கொள்கை நோக்கில் அல்லாமல் நிர்வாகக் கண்ணோட்டத்தில் மட்டுமே எழுதப்பட்டுள்ளன.)

logo
Andhimazhai
www.andhimazhai.com