கொஞ்சம் சிரமப்பட்டு மனைவி பணி புரியும் ஊருக்கே மாறுதல் கிடைத்தது. புதிய ஊரின் அமைதி கொஞ்சும் அழகான சூழலில், கூட்டுக் குடும்பத்தின் இறுக்கத்திலிருந்து விடுபட்டு தனிக்குடித்தனத்தை ஏகப்பட்ட கனவுகளுடன், நம்பிக்கைகளுடன் ஆரம்பித்திருந்த சமயம். ஒரு பெண்குழந்தை பிறந்தது. `வெள்ளிக்கிழமை பெண் பிறந்திருக்கா திருமகளே பிறந்து விட்டாள், இனி வாழ்க்கை சிறப்பாக இருக்கும்’ என்று எல்லோரும் சொன்னார்கள். நாங்களும் நம்பினோம். ஆனால் `என்றும் மேடு பள்ளம் உள்ளதுதான் வாழ்க்கை என்பது’ என்று மாயவனாதன் பாடிய மாதிரி திடீரென்று ஒரு பெரிய பள்ளத்தில் தள்ளியது வாழ்க்கை. குழந்தை தவழத் தொடங்கும் முன் திடீரென்று இறந்து போனது.
புதிய ஊரென்றாலும் ஆறுதல் சொல்ல நிறையப் பேர் வந்தார்கள். அதில் ஒரு தாத்தா, `தலைப்பிள்ளை எல்லாருக்கும் தங்குமாங்கறது ஒரு சொலவடை மாதிரில்லா,’ என்று பொதுவாகச் சொல்கிற மாதிரி ஆரம்பித்தார். `யோசனை சொல்ல இம்புட்டு டாக்டர்கள் எல்லாம் இல்லாத அந்தக் காலத்தில் பெரும்பாலான வீடுகளில் தலைப்பிள்ளை குறைப்பிரசவமாகிப் போகறதெல்லாம் சகஜம், வயசில்லையா வாலிபமில்லையா, இன்னும் நிறையக் குழந்தைக பிறக்காமலா போயிரும்ன்னு கொஞ்சங் கொஞ்சமா கவலையக் கரைச்சிருவாங்க.’ என்றார். யாரோ அது ஏன் தாத்தா, அப்படி ஒரு சொலவடை என்று கேட்க அந்தத் தாத்தா தணிந்த குரலில், `பெரும்பாலும் புள்ளை உண்டாகியிருக்கிற சமயத்தில் `அகப்பத்தியமாக’ இருக்கணும் அதாம்ப்பா தாம்பத்திய உறவை குறைச்சிக்கிடணும், ஆனால் அது எங்கே நடக்கும். ஆசை, கவலையோ வெட்கமோ அறியாதுன்னு சும்மாவா சொன்னாங்க, அது காரணமாகவும் கர்ப்பம் `காய் விழுந்திரும்’ (அபார்ஷன் ஆகி விடும்). ஆனா இப்ப நடந்திருக்கற மாதிரி, பெத்து வளத்த புள்ளையப் பறி கொடுக்கறது கொஞ்சம் கூடுதல் துயரம்தான், என்ன செய்ய, கடவுள் கொடுத்தாரு கடவுள் எடுத்தாருன்னு சமாதானப் படுத்திக்கிடணும்,’ என்றார்.
அவர் சொல்வது அரைகுறையாக மூளையில் ஏறினாலும் மனது என்னவோ, இது என்ன குறைப்பிரசவமா, நிறைவாகப் பிறந்து, மடி மீதும் மார் மீதும் கிடந்து, கடக்கும் போதெல்லாம் தலை திருப்பி முகம் பார்த்துச் சிரித்து ஆறுமாதம் இருந்து, பிஞ்சு வயதில் பறி கொடுக்கறது கொடுமையில்லையா... என்றே அரற்றிக் கொண்டிருந்தது. அந்த நாள் மறுபடி மறுபடி நினைவில் சுழன்று கொண்டே இருந்தது.
அன்று ஒரு வேலையாக திருநெல்வேலிக்குப் போயிருந்தேன். அந்த வேலைகளெல்லாம் முடிந்ததும், பழைய அலுவலகத்திற்குப் போய் நண்பர்களைப் பார்த்துப் பேசிவிட்டு அம்மா வீட்டுக்கு வந்து கொண்டிருந்தேன். அலுவலகத்திலிருந்து சைக்கிளில் அவசரமாகப் பின்னாலேயே நண்பர்கள் வந்தார்கள். `இடைகாலில் உன்னுடைய குழந்தை இறந்து விட்டதாம் ஃபோன் வந்தது உடனே கிளம்பிப் போ’ என்றார்கள். `என்னப்பா சொல்கிறீர்கள் காலையில்தானே வழியனுப்புகிற மாதிரி முகம் மலர்ந்து சிரித்துக் கொண்டிருந்தது... எப்படிப்பா நல்லாக் கேட்டீங்களா, யார் பேசியது’ என்றேன். `இடைகால் போஸ்ட் மாஸ்டர் என்று ஒருவர் பேசினார், அடுத்த வீடுதானாமே போஸ்ட் ஆபீஸ், எப்படியும் நீ இங்கே நம்ம ஆபீஸுக்கு வருவே என்று கணக்குப் பண்ணித்தான் ஆஃபீஸுக்கு நம்பர் காலில் அழைப்பதாகச் சொன்னார்,’ என்றார்கள். அப்போதெல்லாம் ட்ரங்கால் புக் பண்ணி விட்டுக் காத்திருக்க வேண்டும். கால் கிடைப்பதே கஷ்டம். நம்பர் கால் என்றால் ஓரளவு எளிதில் கிடைக்கும். குறிப்பட்ட நபரை அழைக்கும் PP call கிடைப்பது வெகு கடினம்.
ஒரு டாக்ஸி பிடித்து, அண்ணன் ஒருவரையும் கூட அழைத்துக் கொண்டு கிளம்பினேன். வயிற்றில் ஏதோ ஒரு பயப்பந்து உருண்டு கொண்டேயிருக்க அறுபது கிலோ மீட்டர் தூரத்தையும் கடப்பது முள் மேல் நடப்பது போலிருந்தது. செய்தி பொய் என்று சொல்லக் கூடாதா என்று வழியில் தென்படும் கோயில்களிலெல்லாம் வேண்டிக் கொண்டே போனேன். எல்லாம் வீண். வீட்டை அடைந்த போது, தலைமாட்டில் விளக்கெரிய, குழந்தை ஜில்லிட்டுக் கிடந்தது. சுற்றிலும் அழுது ஓய்ந்திருந்தவர்கள் என்னைக் கண்டதும் இன்னொரு பாட்டம் அழத் துவங்கினார்கள். மடியில் எடுத்துப் போட்டுக் கொண்டு அழுதேன். என்னை சமாதானப்படுத்த வேண்டுமென்று குழந்தையைக் குளிப்பாட்டுவதாகச் சொல்லி வாங்கியவர்கள் அப்படியே கொண்டு போனார்கள். நானும் பின்னாலேயே ஓடினேன். கொஞ்ச வேண்டிய பிள்ளையைக் குழிப்பிள்ளை ஆக்கி விட்டுத் திரும்பினேன்.
வாழ்வின் மீதான அத்தனை நம்பிக்கைகளும் பொய்த்துப் போனது. என்ன காரணம் என்று தெரியாமல், `பொட்டுப் பொடுக்’கென்று போனதுதான் மிகவும் பாதித்து விட்டது. ஒரு காய்ச்சல் நோவு வந்து ஒன்றிரண்டு நாள் சங்கடப்பட்டுப் போயிருந்தால் கூட இவ்வளவு வருத்தம் இருக்காது. ஒரு திங்கட் கிழமை, திருவாதிரை நட்சத்திரம். மறைந்து போன நாளையும் நட்சத்திரத்தையும் மறக்கவே முடியவில்லை. மேல்நாட்டில் திங்கட்கிழமை குழந்தைகளுக்கு ஆகாது என்று ஒரு நம்பிக்கை இருப்பதாகச் சொல்வார்கள். இதெல்லாம் நினைவில் வந்து கொண்டே இருந்தது.
ஆபீஸில் LTC விண்ணப்பித்து மனைவி, மைத்துனன், மருமகன் சகிதமாக சென்னைக்கு ஒரு பயணத்திற்குத் திட்டமிட்டேன். விண்ணப்பம் பரிசீலனை ஆக ஒரு மாதமாயிற்று. அதைக் கழிப்பது மிகவும் கஷ்டமாயிருந்தது. ஒரு வழியாய்க் கிளம்பினோம். அப்போது லாட்ஜில் தங்குவதெல்லாம் இயலாத காரியம். இயக்குநர் ருத்ரையா `கிராமத்து அத்தியாயம்’ படம் எடுத்துக் கொண்டிருந்த சமயம். அவரது அலுவலகத்தில் தங்குவதற்கு வண்ணநிலவன் ஏற்பாடு செய்தார். சமயவேலும் அங்கே தங்கி இருந்தார். விக்கிரமாதித்யன் காலையில் வந்து விடுவார். இருவருக்கும் சென்னையின் மூலை முடுக்கெல்லாம் அத்துப்படி. சென்னை முழுவதையும் சுற்றிக் காண்பித்தார்கள். மருமகனுக்கும் மச்சினனுக்கும் நல்ல பயணமாக அமைந்தது.
சுப்ரமணிய ராஜுவும் பாலகுமாரனும் சாவி பத்திரிகை அலுவலகத்திற்கு ஒரு நாள் கூட்டிப் போனார்கள். திரு. சாவி வெளிநாடு சென்றிருந்தார். மாலன், ராஜு, பாலகுமாரன் மூவரும் தான் ஆசிரியப் பொறுப்பில் இருந்தார்கள். அப்போது சில அழகான புகைப்படங்களைக் காட்டி அவைகளுக்குப் பொருத்தமாய்க் கவிதை எழுதச் சொன்னார்கள். நடிகர் எஸ்.வி.சேகர் எடுத்திருந்த படங்கள். அவர் மிக அற்புதமான புகைப்படக்காரர். அவரது சில புகைப்படங்களுக்கு ஏற்றாற்போல நான் கவிதைகள் (Photo Poem) எழுதிக் கொடுத்தேன். அதில் ஒன்றோ இரண்டோ பிரசுரமானது. அன்று மாலையில் அவர்களே எஸ்.வி சேகரின் `மகாபாரதத்தில் மங்காத்தா’ நாடகத்திற்குப் பாஸ் வாங்கித் தந்தார்கள். ஒருநாள் சங்கராபரணம், மறுநாள் மரோசரித்ரா என்று படங்கள் பார்த்தோம். நாடகமும் சினிமாவும் எங்கள் துயருக்கு பெரிய வடிகாலாக இருந்தது.
அடுத்த நாட்களில் திருப்பதி, திருத்தணி எல்லாம் போய் விட்டு ஊர் திரும்பும் போது, மனம் கொஞ்சம் விடுதலையாகி இருந்தது. ஆனாலும் இவ்வளவு காலமாகியும் ஏன் அல்லது எதற்காக அந்தக் கொடுத்ததை எடுத்துக் கொள்ளும் தண்டனை என்ற கேள்விக்குத்தான் விடையே கிடைக்கவில்லை. பதில் கிடைக்காத கேள்விகள் நிறைந்ததுதானே வாழ்க்கை!.