
"மழை - இவளைக் காதலிக்கத் தொடங்கிய காலத்து மழை
என்னைச்சுற்றி மீளவிடாமல் பெய்யும்…”
என்று என்னுடைய நீள் கவிதையான `ரிஷ்யசிருங்கம’ ஆரம்பிக்கும். வண்ணநிலவனுக்குப் பிடித்த கவிதை அது. அது என்னுடைய கவிதை நோட்டை வெறுமனே ஆக்கிரமித்துக் கொண்டிருந்தது. அவர்தான் இது அருமையான கவிதையாக இருக்கிறதே என்று கூறினார். அப்போது அது ஒரு காதல் கவிதையாகவே இருந்தது. அதன் பிறகே அதைச் சிற்சில மாறுதல்களுடன் `மற்றாங்கே’ தொகுப்பில் சேர்த்தேன். அதைப் பதிப்பித்த மீரா அதன் சமுதாயக் கருத்துக்களுக்காக வெகுவாக அதைப் பாராட்டினார். இவளைக் காதலிக்கத் தொடங்கிய காலத்தில்தான் அப்படி நீள் கவிதைகளாக எழுதிக் குவித்துக் கொண்டிருந்தேன். என்னவோ ஒரு மாயம், ``நான் அவள் பேரைத் தினம் பாடும் குயிலல்லவா, என் பாடல் அவள் தந்த மொழியல்லவா” என்று கண்ணதாசன் பாடுவாரே அது போல தினம்தோறும் அவளைத் தேடிப் போய்ப் பார்த்து விட்டு வந்த `விருத்தி’யில் கவிதைகள் எழுதத் தொடங்கி விடுவேன். ``கலா நானூறு” என்று எழுத ஆரம்பித்து, நூற்றுக் கணக்கில் அவையெல்லாம் ஒரு இரண்டு குயர் நோட்டைத் தனியே ஆக்கிரமித்துக் கிடந்தன. அந்த நோட்டு மட்டும் காணாமலே போய் விட்டது, பாராமலே போய் விட்ட அவளைப் போல.
அவள் என் இளம் பருவத்து தோழி. என்னுடன் ஐந்தாம் வகுப்பு வரை படித்தவள்.அதுவரைதான் அப்போதெல்லாம் ஆண்களும் பெண்களும் இணைந்து படிக்க முடியும். அதற்கு மேல் தனித்தனிப் பள்ளிகள். ஆண்கள் உயர்நிலைப்பள்ளி பெண்கள் உயர்நிலைப் பள்ளி, ஆண்கள் கல்லூரி பெண்கள் கல்லூரி என்று தனித்தனியேதான் படிக்க முடியும். சமூகமே இரு பாலாருக்குமிடையே அப்படி ஒரு கனத்த திரையைப் போட்டு வைத்திருந்தது. அப்போதைய முதிர்ச்சியுடன் பத்து வயது வரை என்னிடம் நிறையவே அன்பு பாராட்டினாள். அப்புறம் பெரிய இடைவெளி. பத்தாம் வகுப்பு படிக்கையில் என் சகோதரியின் திருமணத்திற்கு வந்து சற்று நேரம் இருந்து விட்டு இன்னொரு தோழியிடம், அங்குமிங்கும் உலவிக் கொண்டிருந்த என்னைப் பற்றி விசாரித்துப் போனவள், என்ன காரணத்தாலோ, பதினைந்து நிமிடங்கள் கழித்து மீண்டும் வந்தாள். நிச்சயம் உனக்காகத்தான் திரும்பியும் வந்தாள், `நீ இரண்டு வார்த்தை பேசியிருக்கலாம்,’ என்று அந்தத் தோழி கிண்டலும் அன்புமாகச் சொன்னாள். அதைக் கேட்டதும் இனம் புரியாத சந்தோஷம் வந்தது. அதுதான் வெகுநாட்களாக என் நினைவை ஆண்டு கொண்டிருந்தது. அந்தப் பதினைந்து வயதில் என்னை அவள் பால் மறு ஈர்ப்புக் கொள்ள வைத்ததும் அதுதான். அதன் பிறகு அவள் கண்ணில் படவில்லை. ஓரிரு முறை அந்தத் தோழியிடம் என் பள்ளியின் கணக்குப் பாட வினாத்தாளைக் கேட்டு விட்டு நானும் கொடுத்து அனுப்பி இருக்கிறேன். பெரிய பத்து என்கிற எஸ்.எஸ்.எல்.சி பரிட்சை முனைப்புகள், கல்லூரியில் சேர்தல் என்று வாழ்க்கை தன் போக்கில் இழுத்துப் போய் அவள் நினைவுக் கங்குகள் மீது நீறு பூக்கச் செய்திருந்தது.
இந்தக் காலகட்டத்தின் பின்னால் எங்களுடைய பதினெட்டாவது வயதில் ஒரு கார்த்திகை மாதப்பிறப்பு. முந்தின நாள் நல்ல மழை பெய்திருந்தது. ``விளக்கிட்டோ மழை கிழக்கிட்டோ,” என்று கார்த்திகை தீபத்திற்குப் பின், பின் வாங்கும் கடைசிப் பருவ மழை செமத்தியாகப் பெய்திருந்து. மென்மையான பனி வேறு. காலையில் பேப்பர் பார்க்கும் வழக்கத்திற்காக ரத வீதிக்குப் போனவனின் விதி, பாவாடை தாவணியில் பார்த்த அவளை சேலை கட்டி கல்லூரி செல்லும் மாணவியாகச் சந்திக்க வைத்தது. எங்கள் அந்தக் காலத்தில் ஆண்கள் வைத்த கண் வாங்காமல் பார்த்தாலும் பெண்களால் அப்படிப் பார்வைக் கணைகளைச் சந்திக்க முடியாது. பார்ப்பது தெரியாமல் பார்ப்பார்கள். நான் ஆசையும் அதிசயமுமாகப் பார்த்தாலும், அவள் தலை குனிந்தவாறு சென்று விட்டாள். ஒரே ஒரு நொடியில் நீறு பூத்த நெருப்பாய் என்னுள் சாம்பல் மூடிப் போயிருந்த அவள் மீதான அன்பு, காதலெனும் பெரு நெருப்பாய்க் கனலத் தொடங்கியது அந்த நொடியிலிருந்து.
அது செய்த ரஸவாதங்கள் பல. கல்லூரிக்கு மட்டம் போட்டு விட்டு சினிமா, ரசிகர் மன்றம் என்று அலைந்ததெல்லாம் மறைந்தே போயிற்று. பாடங்களை ஒழுங்காகப் படித்து கல்லூரி வகுப்பில் முதல் மாணவனானேன். தினமும் காலையில் எது தவறினாலும் கல்லூரி செல்லும் அவளைப் பார்க்கத் தவறாது. பாரதியும் பாரதிதாசனும் தனித்தமிழ் இயக்கங்களும், 1967 அரசியல் ஈடுபாடுகளைச் சற்றே குறைத்து கவிதை வாசிப்பின் பால் மனதை மடை மாற்றியிருந்த நேரத்தில்தான் அவள் புகுந்தாள். அவள் `முக லோபனம்’ மொழி வாழ்த்துகளாக, எழுதிக் கொண்டிருந்தவனைக் காதல் கவிதை எழுத வைத்தது. காலையில் கண்ணில் பட்டு விட்டால் கவிதை எழுதி விட்டுத்தான் கல்லூரிக்கே போவேன். ``சாயங்காலத்து சசி”க்கும் ஒரு கவிதை உண்டு.
அப்படி அர்த்த பூர்வமாக நகர்ந்த வாழ்க்கையில் திடீரென்று இருவருக்கும் பழக்கமான என்னை விட மூத்தவரான ஒருவர் பிரவேசித்தார். ரொம்ப அழகாக இருப்பார். அவளுக்கு ஒரு வகையில் உறவு. அவரை ஒரு திருமணத்தில் பார்க்க நேரிட்ட போது, போகிற போக்கில் தான் அவளைத் திருமணம் செய்து கொள்ள விரும்புவதாகவும் அவளுக்கும் அதில் விருப்பம் என்றும் ஒரு இடியைத் தலையில் போட்டு விட்டுப் போனார். அதில் எவ்வளவு உண்மை என்றெல்லாம் தெரியாது. ஆனால் அதன் சாத்தியங்கள் அதிகம். இருவருமே என்னை விடவும் வசதி மிக்கவர்கள். அங்கேயே ஒரு முறை என் ஆசைக் கனவுகள் முறிந்து போனது. ``கனவு கண்ட காதல் கதை கண்ணீராச்சே,” என்று கம்பதாசன் பாடல்களையும் ``என் ஏழ்மையினாலே பிரேம கபாடம் தானே மூடியதோ, விதிதான் விளையாடியதோ’’ என்று தேவதாஸ் பாடல்களையும், கலீல் ஜிப்ரானின் ``முறிந்த சிறகுகள்”, தாகூரின் `சிதைந்த கூடு’ போன்ற நாவல்களை எல்லாம் துணைக்கு அழைத்துக் கொண்டு, நான்,``அவள் நாடாளும் ராணியானாள் நான் அவளுக்காய் நடக்காத போர்க்களத்தில் வீரனானேன்..”, ``நான் தாகமும் தீராமல் கண்ணீரும் வற்றாமல் மெழுகுவர்த்தியாய் எரிகிறேனே, விளக்குத்திரியாகும் வரமாவது தாயேன்’’ என்றெல்லாம் நவீன துயரக் காதல் கவிதைகள் எழுதினேன். அதை வண்ணநிலவன் நடத்திய கையெழுத்துப் பத்திரிகையிலும் வெளியிட்டு தோல்வித் தீயை விசிறி விட்டார். கவிதை ஊற்றைத் திறந்து விட்டார். அவள் பேசினால்தானே, அந்த நண்பர் சொன்னது உண்மையா என்று கேட்க முடியும். அப்போதெல்லாம் பெண்கள் தங்களை எப்படியும் வெளிப்படுத்த முடியாது. நான் அவளைப் பின் தொடர்வதை அவள் வெறுக்கவில்லை, வெளிப்படையாய் மறுக்கவில்லை என்பது மட்டும்தான் எனக்கான ஒரே ஆறுதல் அந்த மெல்லிய நம்பிக்கையைத்தான் வலுவாகப் பற்றிக் கொண்டு என் காதல் கொடி வளர்ந்து கொண்டிருந்தது. இடையிடையே,“தன்னை மறுக்கின்ற பசும்புல்லின் காதலுக்காய் வலிய பாலைகள் எரிந்து சாகின்றன, என்னைப் போல” என்று தாகூரின் சோக பவங்களைக் கடன்வாங்கி கவிதைகள் எழுதிக் கொண்டிருந்தேன். அவை பத்திரிகைகளுலும் பிரசுரமாயின.
சொல்லாமலே எத்தனை நாள் வைத்திருப்பது என்று கல்லூரியில் நடைபெற்ற வள்ளுவர் ஈராயிரத்தாண்டு கொண்டாட்டங்களுக்கான அழைப்பிதழை. நண்பர்கள் பெண்கள் கல்லூரியில் படிக்கும் அவரவர் `புறாக்களுக்கு’ அனுப்பும் போது நானும், என் பெயரை எழுதி ஒன்றைக் கொடுத்து விட்டேன். அது என்ன ஆயிற்று என்று தெரியவில்லை. கிணற்றில் போட்ட கல்லாகிப் போயிற்றோ என்று நினைக்கையில் இல்லை இல்லை அது தலையில் போட்ட கல் என்று தெரிந்தது.
அந்த விழாவெல்லாம் முடிந்து எங்கள் கல்லூரியே முடிகிற கடைசி நாளன்று ஒரு தூதுவன் போல நண்பர் ஒருவர் வந்தார். அவர் சிறுவயதில் மூக்கு பீறி மூக்குவாளி போட்டிருப்பார். குழந்தையே இல்லையென்றால் அப்படி நேர்ந்து கொள்வார்கள். குழந்தை பிறந்தால் மூக்கு பீறி (மூக்கு குத்தி) மூக்கன் என்று பெயர் வைக்கிறோம் என்று வேண்டிக் கொள்வார்கள். அவர் மோகன் என்று பெயரை மாற்றிக் கொண்டு ஒரு பெண்ணிடம் காதலாய் இருந்தார். அவள்தான் பெயரை மாற்றிக் கொள்ளச் சொன்னதாகச் சொல்வார். அவள் சொன்னதாக என்னிடம் சொன்னார், `நான் அனுப்பிய அழைப்பிதழ் பலர் மத்தியில் கொடுக்கப்பட்டதால் அதை அவள் கிழித்து எறிந்து விட்டதாகவும் என்னிடம் கொடுத்திருந்தால் தன் காதலி மூலம் தனியே கொடுக்க ஏற்பாடு செய்திருப்பேனே,’ என்று சொன்னார்.அந்த அதிர்ச்சி கொஞ்சங்கொஞ்சமாக என் மனதினை அரித்து தூக்க மாத்திரைகள் வரை போயிற்று. உண்மையில் மோகன் காதலுமே பிய்த்துக் கொண்டது. நான் கேள்விப்பட்ட முதல் `முறிந்த காதல்’ அதுதான். அவர் பெயரைச் சட்ட பூர்வமாக மாற்றுவதற்குக் கூட என்னிடம் ஆலோசனைகள் கேட்டார். நான் ஒரு வக்கீலைப் பார்க்கச் சொன்னேன். பார்த்தாரா தெரியவில்லை. ஆனால் காதல் முறிந்ததால்அப்புறம் பெயரையும் மாற்றவில்லை. அதே பெயரில் ஒரு நல்ல வேலைக்குப் போய் விட்டார்.
என்னுடைய இன்னொரு கல்லூரி நண்பன், ராஜன். பள்ளியில் படிக்கும் ஒரு பெண்ணுடன் காதலில் இருந்தான். மனோ என்று பெயர். காதல் என்றால் பார்வைப் பரிமாறலில் தொடங்கி கடிதங்கள் பரிமாறிக் கொள்வது வரை சென்றது. நான் உங்களுடன் ஓடி வந்து விடுகிறேன் என்றெல்லாம் கடிதம் எழுதியதை என்னிடம் காண்பிப்பான். அப்படி அவள் வந்திருந்தால், இப்போதைய காலமென்றால் அவனை போக்ஸோவில் உள்ளே தள்ளியிருப்பார்கள். அந்தப் பெண்ணின் சித்திக்கு விஷயம் தெரிந்து படிப்பை நிறுத்தி விட்டுக் கல்யாணம் செய்து வைத்து விட்டார்கள். ஜம்மென்று கல்யாணம் முடிந்து ஜோடியாகக் கோயிலுக்கு வந்திருந்தார்கள். ராஜன் தாடி வைத்துக் கொண்டு பின்னாலேயே போய் பிரகாரம் சுற்றி வந்து பத்திரமாகப் பஸ் ஏற்றி விட்டு வந்தான்.
இன்னொருவன் கதை நேர் மாறானது அவனுக்கு கன்னி ராசி என்பார்கள். பல பெண்களுக்கு அவன் மேல் ஈர்ப்பு. பெரிய பணக்காரன். காம்பவுண்ட் சுவர் ஏறி விழுந்து சினிமா போகிறான் என்று தெரிந்து கல்லூரி விடுதியிலிருந்து வெளியேற்றி விட்டார்கள். தனியே வீடெடுத்து பெண்கள் கல்லூரிக்கு அருகே தங்கியிருந்தான். கல்லூரி விடுதியில் இடம் கிடைக்காத பெண்கள் சிலரும் அவன் வீட்டருகே வீடு எடுத்துத் தங்கியிருந்தார்கள். அதில் இரண்டு மூன்று பெண்கள் அவன் மேல் உயிரையே வைத்திருந்தார்கள். அவன் ஒவ்வொன்றாக பிரேக் அப் சொல்லிக் கொண்டே வந்தான். அவனை ஒரு பெண் உயிருக்கு உயிராக விரும்பினாள். ஒரு பெட்டி நிறைய, கிலோ கணக்கில் நகையை எடுத்துக் கொண்டு வந்து, வா, உன் வீட்டில் நான் வேலைக்காரியாகவாவது இருக்கிறேன், நாம் எங்காவது போய் விடலாம் என்றாள். அவனோ ரகசியமாக அவள் வீட்டுக்குத் தகவல் கொடுத்துப் பத்திரமாக அனுப்பி வைத்து விட்டான். அவள் அப்பாவும் பெரிய கோடீஸ்வரர். அவளுக்கு அடியும் உதையும் விழுந்து கையோ காலோ முறிந்ததுதான் மிச்சம்.
இதெல்லாம் கிளைக்கதைகள். என்னுடைய கதையே வேறு. அது ஆரம்பிக்காமலே முடிந்த கதை. அவள் விரும்பினாளா விரும்பவில்லையா என்றே தெரியாமல், நான் விரும்பினேன் அது சத்தியம் என்றே இத்தனை காலமும் கழித்து விட்டேன். ``காலம் மாறினும் தேகம் அழியினும் கதையில் கவிதையில் கலந்தே வாழுவோம்’’ என்று தொடர்ந்து கொண்டிருக்கிறாள். கடைசியாகத் தெரிந்த ஒரு தகவலின் படி அவள் இறந்து விட்டாள் என்ற அதிர்ச்சியை நம்பகமான ஒருவர் சொன்னார். யாரிடமும் கேட்டு உறுதிப்படுத்த முடியவில்லை. உறுதிப்படுத்த விரும்பவில்லை என்பதும் உண்மை. என்னைப் பொறுத்தவரை, அந்தச் சந்தேகத்தைப் பகிர்ந்து கொண்ட போது வண்ணதாசன் சொன்னது போல அவள் என்றும் ``இல்லாது போகாதவள்”.